September 06, 2011

யார் ஞானியாகிறார்?பழனி மலையின் மற்றொரு வடிவமான 'தபசுமலை'

அஷ்டபைரவர்
 மதுரையிலிருந்து புதுக்கோட்டை செல்லும் வழியில் லேனாவிளக்கு என்னும் இடத்திலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் இருக்கிறது தபசுமலை. ஒரு காலத்தில் இந்த பகுதியில் மக்கள் யாரும் இருக்கவில்லை. இங்குள்ள சிறிய மலை தான் தபசுமலை. தாமரை தடாகங்கள் சுற்றியிருக்க நடுவில் காணப்படுகிறது மலை. மலைக்கே உரிய ஒரு நிசப்தமான அமைதி. இந்த மலைக்கு கடந்த 26 ஆண்டுகளுக்கு முன் வந்து சேர்ந்தார் ஒரு மகான். மனிதர்களான அவதாரம் எடுத்து  நடுவில் ஞானம் பெற்ற சித்தர்களை போலத்தான் இவரும்.இவர் பெயர் தற்போது கௌசிகஸ்வாமிகள்.

1933 ம் ஆண்டில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் இந்த மகான். வெள்ளைக்காரன் இந்தியாவை ஆண்ட காலத்தில் ஆங்கில கல்வியில் புலமை பெற்று பிறகு சுதந்திர இந்தியாவில் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட போது இந்தியன் வங்கியில் முதுநிலை மேலாளராக பணிபுரிந்து வந்தவர். திடீரென கிடைத்த ஒரு மகானின் சந்திப்பால், சென்னையை விட்டு விட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் இந்த தபசு மலைக்கு வந்து தங்கி விட்டார். தற்போதைய இவரது பெயர் கெளசிக சுவாமிகள். ஆள்அரவமற்று கவனிப்பாரற்று கிடந்த தபசுமலை இன்றைக்கு இவரது வசிப்பால் அருள் தோய்ந்து காட்சியளிக்கிறது.
தபசுமலை
 கடினமான கற்பாறைகள் நிறைந்த இந்த மலையில் முன்பு பெயரளவுக்கு கூட தாவரங்கள் முளைத்திருக்கவில்லை. கெளசிக சுவாமிகளின் வருகைக்கு பிறகும், அவசியம் ஆன்மீக மலை தரிசன குழுவின் செயலாளரான ராமுஜி உள்பட சிலரின் கைங்கரியத்தால் தபசு மலை தற்போது பசுமை பெற்று வருகிறது. பொங்கி வந்த வைகை ஆற்றின் வெள்ளத்தை கட்டுப்படுத்த அந்த சிவன் இறங்கி வந்து புட்டுக்கு மண் சுமந்தார். ஆனால் தபசு மலையின் அமைதிக்கும்,அழகுக்கும் சுற்றியுள்ள கிராம மக்களும் தங்கள் பங்கிற்கு வந்து உழைப்பை கொடுத்து மரங்களை வளர்க்க மண்சுமந்தனர். வழக்கமாக ஆன்மீக ஞானத்தை சிந்திக்காதவர்களுக்கு இந்த மலை இங்கிருப்பதை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த நிலையில் இதுபோன்ற அருள் பெற்ற இடங்களை உங்களுக்கு அறிமுகம் செய்வதற்காகவே இந்த பதிவை இங்கு தொடங்குகிறோம்.
மலையில் உள்ள அழகான தாமரை குளம்

தபசுமலை
தபசுமலை-தவசிகள் தவம் செய்த மலை. சப்தமுக்தி மலை மருவி என்ற பெயர் மருவி தத்துமுக்தி மலை எனப்பெயர் பெற்றதாக தெரிகிறது. இது தபசு மலை என்ற வழக்காடலாகி இருக்கலாம். சப்த என்றால் ஏழு-ஏழு மகான்கள் முக்தி பெற்ற மலை.அருகில் உள்ள சிறிய குக்கிராமத்திற்கு தத்து முக்திப்பட்டி என்ற பெயர்-அமைதியான சூழ்நிலையில் இருக்கும் ஊர். மதுரையிலிருந்து புதுக்கோட்டை செல்லும் வழியில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு முன்னதாக 5 கி.மீ தொலைவில் லேனாவிலக்கு என்னும் பிரிவு கொண்ட பாதை பிரிந்து செல்கிறது. இந்த லேனாவிலக்கிலிருந்து 10 கி.மீ தொலைவில் தபசுமலை அமைந்திருக்கிறது.
வித்தியாசமான நவகிரகங்கள்


இந்த மலையை பற்றி கெளசிக சுவாமிகள் வெளியிட்டுள்ள ஒரு சிறிய ஏட்டில் தந்துள்ள விளக்கத்தை இங்கு காணத்தருகிறேன்.
'ரிஷிகள், ஞானிகள், மகான்களுக்கு ஆய்வுக்கூடம் என்பது காடுகளும், மலைகளும் தான். இந்த தபசு மலைக்கு அருகில் உள்ள தத்துமுக்திபட்டி கிராமத்தில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து வந்த காளிராமத்தேவர் என்பவர் பழனி மலை தண்டாயுதபாணி சுவாமி பக்தர். இவர் ஒவ்வொரு ஆண்டும் பழனி மலைக்கு சென்று அந்த கோவணான்டியை தரிசித்து வருவார். முருகனின் கட்டளைப்படி தன்னுடைய சிறிய சொத்துக்களை விற்று தபசு மலையில், பழனிமலையை போன்று ஒரு கோவில் அமைக்க முடிவு செய்தார். பழனி கோவிலை போல் மேற்கு நோக்கிய நிலையில் இங்கு ஒரு கோவிலையும் அமைத்தார். ஆனால் போதிய பணம் இல்லாத நிலையில் இந்த கோவில் பணிகள் பாதியில் நின்று போயிருக்கலாம். இந்த கோவிலை கட்டியே முடிக்க வேண்டும் என்பதற்காக அவர் வெளிநாட்டுக்கு சென்று பணம் திரட்ட முடிவு செய்தார்.
ஏழுசித்தர்கள் முக்தி ஆன இடத்தில்
 ஆனால் அப்படி போனவர் திரும்பி வரவில்லை. நான் 1985 ஆம் ஆண்டுகளில் வடநாடுகளில் உள்ள புண்ணிய தலங்களுக்கு சென்று புண்ணியநதிகளையும், கோவில்களையும் தரிசித்துக் கொண்டிருந்தேன். அப்போது ரிசிகேசத்தில் இருந்த ஒரு மகானால் ஈர்க்கப்பட்டேன். அவர் எனக்கு பல ஞானக்கருத்துக்களை சொன்னார். ஆனால் அவற்றையெல்லாம் உணரக்கூடிய ஞானம் எனக்கு இருக்கவில்லை. சென்னையை பூர்வீகமாக கொண்ட எனக்கு புதுக்கோட்டை அருகில் இருக்கும் இந்த தபசு மலை பற்றியெல்லாம் தெரியாது. ஆனால் எங்கோ வடமாநிலத்தில் இருந்து கொண்டிருக்கும் ஒரு மகான், ஆன்மீகத்தில் எந்த தொடர்பும் இல்லாத என்னை அழைத்து பேசிய போது என்னையறியாமல் எனக்குள் ஒரு மாறுதல் ஏற்பட்டது.


அவர் தபசுமலையின் மகிமையையும், ஏழுமகான்கள் அங்கு முக்தி அடைந்திருப்பதும், அந்த மலையில் நிரம்பி கிடக்கும் அருள்சக்தி பற்றியும் சொன்னார். மேலும் மலைமேல் உள்ள பழனி ஆண்டவர் விக்கிரகம் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு உன்னால் நிறுவப்பட்டு, பூர்த்தி செய்ய இயலாமல் மூன்று ஜென்மங்களாக முயற்சி செய்து வருகிறாய்! இந்த ஜென்மத்தில் அதற்கு உண்டான நேரம் வந்து விட்டது. உன்னுடைய கர்ம வினைகளை போக்கி, முருகனை இறுகப்பற்றிக் கொள்' என்று அருளாசி வழங்கினார்.
அவருடைய ஆணைக்கு இணங்க அடியேனும் 1988 ஆம் ஆண்டு தபசுமலைக்கு வந்து முருகன் அருளால் எல்லா விதமான செளகரியங்களையும் பெற்று தபசுமலைக்கு இயன்ற தொண்டினை செய்து வருகிறேன். முருகனின் அருளால் தற்போது தபசுமலையில் கோவில் பணிகள் நடந்து மேம்பட்டு வருகின்றன. எனது வங்கி பணியை விட்டு வந்து கடந்த 26 ஆண்டுகளாக இந்த மலையில் இருந்து வருகிறேன். ஆன்மீகத்தில் எந்த தொடர்பும் இல்லாமல் இருந்த எனக்கு கடந்த 26 ஆண்டுகளாக ஆன்மீகம் மட்டுமே உரியதாகி இருக்கிறது. கடவுள் உண்டா? ஜென்மங்கள் உண்டா? மனிதனுக்கு வரும் இன்பத்திற்கும், துன்பத்திற்கும் காரணங்கள் என்ன? நம்முடைய வேதங்கள், உபநிஷத், திருமந்திரம், திருக்குறள், தேவாரம், திருவாசகம், திருஅருட்பா மற்றும் புராணங்கள், இதிகாசங்கள் என பல புத்தகங்கள் மூலம் நான் படித்த ஆன்மீக தேடலை (From darkness to Light-value based indian knowledge) உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

யார் ஞானியாகிறார்?
பிரபஞ்சத்தின் ரகசியத்தை நமது நாட்டில் வாழ்ந்த சித்தர்கள், ஞானிகள், நாயன்மார்கள், ஆழ்வார்கள், மகரிஷிகள் அனுபவித்து வழங்கி வந்திருக்கிறார்கள். நான் புதிதாக ஒன்றும் சொல்ல போவதில்லை. இருந்தாலும் கால்நூற்றாண்டு காலமாக தபசுமலையில் வாழ்ந்த இந்த காலகட்டத்தில் நான் உறவு கொண்ட அந்த இறைவன் கடவுள் என்ற இந்த பிரபஞ்ச சக்தி ஒரு வழிகாட்டியாக இருக்கிறான் என்பதே எனது அனுபவம். ஒருவர் ஞானியாக ஆவதற்கு கண்ட எவற்றையும் விழுந்து படிக்க வேண்டும் என்பதில்லை. மாடு மேய்ப்பவனும் மகானாக முடியும். அதற்கு வேண்டியதெல்லாம், குருவிடம் விசுவாசம் கொண்ட சீடன் வளைந்து கொடுத்தால் அந்த குரு அவனை ஞானியாக்கி விடுவார். இங்கு நாம் தேட வேண்டிய குரு இறைவன் தான்.
'உடையார் முன் இல்லார் போல் ஏக்கற்றும் கற்றார்
கடையரே கல்லா தவர்'-குறள் 395

செல்வந்தர்களின் முன் வறியவர்கள் ஏங்கி நின்று அவர்களிடமிருந்து பொருளை கேட்டு பெறுதல் போல கற்றார் முன் தாழ்ந்து நின்று ஏங்கி கல்வி ஞானம் பெற்றவரே கல்வி கற்றவர்கள் ஆவர். கல்வியை அங்ஙனம் கற்றவர்கள் வாழ்வியலில் மிகவும் சிறப்பர். செவ்வண்டு இனப்பெருக்கம் செய்யும் முறை வித்தியாசமானது. அந்த வளர்ந்த தாய் வண்டு எங்கிருந்தவாது ஒரு புழுவை பிடித்து வந்து தனது கூட்டுக்குள் வைத்து வாசலை மூடிவிடுமாம். புழு உயிர் பயத்துடன் அந்த கூட்டுக்குள் சுருண்டு கிடக்கும். அந்த செவ்வண்டு கூட்டுக்குள் வலிவான ஒரு ரீங்காரத்தை கிளப்பிக் கொண்டே இருக்குமாம். அந்த ரீங்காரத்தின் பொருள், 'நீ புழு அல்ல' என்னை போல் ஒரு செவ்வண்டு என்பதே'. இப்படி தொடர்ந்து 21 நாட்கள் இப்படி ரீங்காரமிடும் வேலையை அந்த செவ்வண்டு செய்து வரும் போது, உள்ளே அடைத்து வைக்கப்பட்டிருந்த அந்த புழுவுக்கு இறக்கை முளைத்து கால்கள் உருவாகி, உணர்வு நரம்புகள் உண்டாகி அழகான செவ்வண்டாக அந்த புழு வெளியே வருமாம்!'.
ஆக..இது போல் தான் மாணவனுக்கும்-ஆசிரியனுக்கும், சீடனுக்கும்- ஆசிரியருக்கும் உள்ள உறவு இருக்க வேண்டும். ஞானத்தை ஓதி ஓதி ஒருவரை (புழு செவ்வண்டாக மாறுவது போல்) ஞானம் பெற்றவராக மாற்ற முடியும். கம்யூனிச சித்தாந்தங்களால் ஈர்க்கப்பட்டவர் கம்யூனிஸ்டாக மாறுகிறார். நாத்திகவாதத்தை கேட்டவர் நாத்திகராகிறர். மதவெறியூட்டும் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டவன் மதவெறியனாகிறான். தீவிரவாதம் பற்றியே கேட்டவன் தீவிரவாதியாகிறான்.
ஆனால் எந்த வாதத்தை கேட்டாலும் அந்த வாதத்திற்கு உள்ளே சென்று அடிமையாகமால் நடுநிலையில் நன்று சுயமாய் சிந்திப்பவன் ஞானியாகிறான்.
இன்னும் சொல்வேன்.

காப்பு
காப்பான கருவூரார் போகநாதர்
கருணையுள்ள அகத்தீசர் சட்டைநாதர்
முப்பான கொங்கணரும் பிரம்ம சித்தர்
முக்கியமாய் மச்சமுனி நந்திதேவர்
கோப்பான கோரக்கர் பதஞ்சலியார்
கூர்மையுள்ள இடைக்காடர் சண்டிகேசர்
வாப்பான வாதத்திற்கு ஆதியான
வாசமுனி கமலமுனி காப்புதானே
(இந்த காப்பு பாடலை நாள்தோறும் அதிகாலை எழுந்தவுடன் தியானம் செய்யவும். ஆபத்து, விபத்துக்கள் இன்றி வாழவும் உதவும் மந்திரம் இது)



கெளசிக ஆசிரமத்தின் முகவரி
கெளசிக ஆசிரமம், தபசுமலை, வி.லெட்சுமிபுரம், புதுக்கோட்டை-622 412
சிவன் மலை
 
 
வருவதை முன்கூட்டியே சொல்லும் அபூர்வ சிவன் மலை
வருவதை முன்கூட்டியே சொல்லும் அபூர்வ சிவன் மலை
ஒரு நிகழ்வு குறித்து உலகம் அறியும் முன்பே சொல்லும் ஒரு சக்தி வாய்ந்த மலைக் கோவில் குறித்து அறிந்து அதைக் காண ஆவலுடன் சென்றோம். சிந்தையை அடக்கி சும்மா இருக்கின்ற திறம் அரிது. பஞ்ச பூதங்களின் சக்தியை உணர்ந்து சித்தத்தை அடக்கி செயற்கரியன செய்து வென்றவர்கள் தான் சித்தர்கள். அவ்வகையைச் ...