February 03, 2012


பழனி 

முருகன் கோயிலுக்குப் படையெடுக்கும் 


Palani Murugan Temple
பழனி: பழனி மலை முருகனை தரிசிக்கும் கேரள பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அறுபடை வீடு

முருகனின் அறுபடை வீடுகளுள் ஒன்று பழனி. இங்கு முருகப்பெருமான், ஆண்டிக்கோலத்தில் தண்டாயுதபாணியாக பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இத்தலத்தில் உள்ள மூலவர் சிலை நவபாஷணத்தால் ஆனது. அதனை அகத்தியரின் தலைமைச் சீடரான போகர் எனும் முனிவர் உருவாக்கினார் என்கிறது தலபுராணம்.

கொங்கு மண்டல பக்தர்கள்

இங்கு தைப்பூசம், பங்குனி உத்திரம், சூரசம்ஹாரம் போன்ற முருகனுக்கு உகந்த விசேஷ தினங்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். தைப்பூசத்தினையொட்டி நாடெங்கிலும் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக பழனிக்கு வருவது மிகவும் பிரசித்தம். 

முன்பெல்லாம் பொதுவாக பழனி என்றாலே கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் தான் அதிகம் வருவார்கள். வீட்டிற்கு வீடு பழனிச்சாமி என்ற பெயரில் ஒருவராவது இருப்பார்கள். 'பழனிச்சாமின்னு கூப்பிட்டா பத்து பேராச்சும் திரும்பி பார்ப்பாங்க..." என கொங்கு மண்டலத்தில் நகைச்சுவையான சொலவடை கூட உண்டு. அந்த அளவிற்கு கொங்குமண்டலத்தில் பழனி மலை முருகனுக்கு பக்தர்கள் அதிகம்.

படையெடுக்கும் கேரள பக்தர்கள்

ஆனால் கடந்த சில வருடங்களாக பழனி மலை முருகனைத் தரிசிக்க வரும் கேரள பக்தர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது. சபரிமலை ஐய்யப்பனை தரிசிக்க பலரும் கேரளா செல்வதைப் போல கேரள மக்கள் பலரும் பழனிக்கு சாரை சாரையாக வருகிறார்கள். இதனால் சீசன் எனப்படும் விசேஷ காலங்கள், கோடை விடுமுறை காலங்கள் தவிர்த்து வருடம் முழுவதும் பழனி மலையில் கூட்டம் இருந்து கொண்டே இருக்கிறது. 

நம்பிக்கை

கேரள பக்தர்கள் இங்கு வருவதற்கு பல்வேறு நம்பிக்கைகளைக் காரணம் சொல்கிறார்கள். மலையில் தண்டாயுதபாணி கேரள மாநிலத்தை பார்த்தபடி அருள் பாலிக்கிறார். அதனால் தான் கேரள மாநிலம் எல்லா இயற்கை வளங்களும் பெற்று செழிப்பாக இருக்கிறது என்கிறது அவற்றுள் முக்கியமான நம்பிக்கை. ஓணம் பண்டிகை போன்ற கேரளத்தின் முக்கிய பண்டிகை தினங்களில் பழனியில் கேரள பக்தர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கிறது. 

வியாபாரிகள் மகிழ்ச்சி

இங்கு வரும் பக்தர்களுக்காக பழனியில் ஏராளமான கடைகள், தங்கும் விடுதிகள், உணவகங்கள் உள்ளன. சீசன் தவிர பிற மாதங்களில் ஈயாடிக்கொண்டிருந்த நிலை மாறி வருடம் முழுவதும் நல்ல வியாபாரம் நடப்பதால் வியாபாரிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். அகல ரயில் பாதை பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் முடிவுற்றால் பழனிக்கு வரும் பக்தர்களின் கூட்டம் இன்னும் அதிகரிக்கும் என்கிறார்கள்.

No comments:

Post a Comment