தவமொன்று மில்லையொரு சாதனையு மில்லையடா, சிவமொன்றே யுள்ளதென சிந்தைசெய்தார் போதுமடா. --- பாரதியார்
அர்த்தநாரீஸ்வரர் கோவில்,திருச்செங்கோடு
திருசெங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் ஒரு பாடல் பெற்ற ஸ்தலம்.சம்பந்தர் இந்த சிவ ஸ்தலம் பற்றி பதிகம் பாடியுள்ளார்.அருணகிரிநாதரும் செங்கோட்டு வேலவன் குறித்து பதிகம் பாடியுள்ளார்.நாமக்கல் மாவட்டத்தில் உள்ளது திருச்செங்கோடு ஈரோடில் இருந்து 18கி.மீ தொலைவில் உள்ளது. நமகல்லில் இருந்து 32 கி.மீ தொலைவில் உள்ளது . சேலத்தில் இருந்து 27 கி.மீ தூரத்தில் உள்ளது. அடிவாரத்தில் இருந்து கோவில் வரை 1200 படிகள் கொண்ட நடை பாதை உள்ளது. வாகனங்கள் மேலே செல்வதற்கு மலை பாதையும் உள்ளது .சுமார் 2 .5 கி.மீ உள்ளது இந்த மலை பாதை .இந்த கோவிலில் சிவன் ஆண் பாதியாகவும் பெண் பாதியாகவும் காட்சி தருகிறார்.வலப்பக்கம் பார்வதியாகவும் இடப்பக்கம் சிவன் ஆகவும் காட்சி தருகிறார்.அதனால் இறைவனுக்கு உமையொருபாகன் என்ற காரண பெயரும் உண்டு.இங்குள்ள மூலவர் சிற்பம் உளி படாத சுயம்பு சிற்பம் என்று சொல்லபடுகிறது.தலையில் ஜடாமகுடம் தரித்து, பூர்ண சந்திரன் சூடி, கழுத்தில் ருத்ராட்சம், தாலி அணிந்து, கையில் தண்டாயுதம் வைத்திருக்கிறார். அம்பிகையின் அம்சமாக உள்ள இடது பாக காலில் கொலுசு உள்ளது. சிவன், சக்தி சேர்ந்த வடிவம் என்பதால் வலதுபுறம் வேட்டியும், இடப்புறம் சேலையும் அணிவிப்பர். மூலவரின் காலடியில் இருக்கும் தேவதீர்த்தம் எக்காலத்திலும் வற்றாமல் சுரந்து கொண்டே இருக்கும். மூலவரை தரிசிக்க வருபவர்களுக்கு இந்த தீர்த்தம் வழங்கப்படுகிறது.படிக்கட்டுகள் வழியே மலைக்குச் செல்லும் வழியில் பாறையில் செதுக்கப்பட்டுள்ள நாகர் சந்நிதி மிகவும் பிரசித்தி பெற்றது. நாக தோஷங்கள் நீங்குவதற்காக இங்கு பக்தர்கள் அதிக அளவில் வருகிறார்கள்.ஆதிசேஷன் மஹாவிஷ்னு ஆகியோர் இங்குள்ள சிவபெருமானை வழிபட்டுள்ளனர். ஆதிகேசவப் பெருமாள் என்ற பெயரில் மஹாவிஷ்னு தனிக்கோயிலில் காட்சி தருகிறார். வைகாசி பிரம்மோற்ஸவத்தின் போது இவருக்கு தனியே கொடியேற்றி 10ம் நாளில்திருக்கல்யாணமும்பின் தேரோட்டமும் நடக்கும். சிவராத்திரியன்று இரவில் இவருக்கு 4 கால பூஜை நடப்பது விசேஷம். ஏகாதசி நாட்களில் கருடசேவை சாதிப்பார்.இந்த கோவிலில் ஆதி சேஷனுக்கு தனி சன்னதி உள்ளது. தவிர , ஆதிகேசவ பெருமாளுக்கு ஒரு சன்னதி ,பெருமாள் சன்னதி முன் கருடாழ்வார் மற்றும் ஆஞ்சநேயர் உள்ளார். மீனாக்ஷி அம்மன்,குபேர லக்ஷ்மி,விஷ்ணு துர்கா,நரசிம்மர்,மல்லிகார்ஜுனர், ஆகியோருக்கும் இங்கு சன்னதி உள்ளது. நாகலிங்கம் என்று நாகேஸ்வரருக்கு ஒரு தனி சன்னதி உள்ளது. கோவில் மிகவும் சுத்தமாக உள்ளது. மலை மேலிருந்து திருச்செங்கோடு நகரின் அழகிய தோற்றம் காணலாம். நிறைய மண்டபங்கள் உள்ளது .பக்தர்கள் அமர்ந்து இளைப்பாற்ற வசதியாக உள்ளது. கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு கோவில்.