February 03, 2012



சதுரகிரி பயணத்தை வணிகரீதியாக நடத்தி வரும் நண்பர் ஒருவர் 24 டிசம்பர் அன்று பயண ஏற்பாட்டினை தெரிவித்தார்.  இரவு 11.30 க்கு திருப்பூரில் இருந்து வேனில் கிளம்பினோம். 14 பேரில் பாதி வயதான பெண்கள், மீதி ஆண்களுமாக கிளம்பினோம். வேன் டிரைவர் அந்த வேனுக்கு புதியவர் ஆதலால் பொறுப்பாக மெதுவாக ஓட்டிச் சென்று, போகும் வழியில் இரவு விருதுநகர் இரயில் நிலையத்தில் சென்னையிலிருந்து வந்த இரண்டு பெண்களையும் பயணத்தில் இணைத்துக்கொண்டு காலை 6 மணி அளவில் திருவில்லிப்புத்தூர் சென்று சேர்ந்தார். முன்னதாக கிருஷ்ணன்கோவில் பிரிவில் நாங்கள் பிரிந்து தாணிப்பாறை போயிருக்கவேண்டும்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் போகக் காரணம் கோவில் அருகில் இருக்கும் மடத்தில் காலைக்கடன்களை முடிக்கவும், குளிக்கவும், மகளிருக்கு வசதியாக இருக்கும் என்பதற்ககவும் காலைச் சிற்றுண்டி அருந்தவுமே. தனிப்பட்ட பிரயாணம் வருபவர்கள் தங்கள் வசதிப்படி செய்துகொள்ளலாம்.

அங்கு கோவிலுக்கு உள்ளே சென்றால் சுமார் இரண்டு மணி நேரம் தேவை என்பதால் கோபுர தரிசனத்துடன் திரும்பிவிட்டோம். காலை ஏழரை மணிவாக்கில் குளித்து தயாரானோம். திரு(ஸ்ரீ)வில்லிப்புத்தூரில் பால்கோவா இனிப்பு பிரசித்தம்:)  சிலர் வாங்கிக்கொள்ள, அங்கேயே சிறு ஓட்டலில் காலை உணவை முடித்துக்கொண்டு கிளம்பினோம். கிருஷ்ணன்கோவில் பிரிவில் திரும்பி வத்ரா யிருப்பு வழியாக தாணிப்பறை என்கிற சதுரகிரி மலையின் அடிவாரம் வந்து சேர்ந்தோம். நேரம் காலை  9.30 மணி....

இங்கு வந்து சேர்ந்தவுடனே முதல்வேலையாக நாங்கள் கொண்டு வந்த போர்வை, மற்றும் உடைகள் முதலியவற்றை அவரவர் பைகளுடன் ஒன்று சேர்த்தனர். அவற்றை மேலே எடுத்துச்செல்ல சுமைதூக்கிகளாக அங்கு இருக்கும் கிராமவாசிகளிடன் மொத்தமாக ஒப்படைத்து கூலி பேசினார்கள். சுமைதூக்குவோர் ஒருவர் சராசரியாக முப்பது கிலோ எடை வரை தூக்குவார்கள். அதற்கு 200 முதல் 250 வரை ரூபாய் கொடுக்கவேண்டும் எங்கள் வேனில் வந்தவர்களின் சுமைகள், மற்றும் சமையற்பொருள்கள் மூன்றுபேருக்கு தலைச்சுமை ஆயிற்று. பணம் மற்றும் மதிப்புள்ள பொருள்களை எங்கள் வசம் எடுத்துக்கொண்டு மற்றவற்றை அவர்களிடம் கொடுத்துவிட்டோம்.

அடிவாரத்தில் அனைவரும் ஒன்று கூடி சந்தனமகாலிங்கத்துக்கு அரோகரா, சுந்தரமகாலிங்கத்திற்கு அரோகரா என்ற சரணத்தை சொல்லிக்கொண்டே நடக்க ஆரம்பித்தோம்.  நடந்த கொஞ்ச நேரத்தில் வந்தது கருப்பண்ணசுவாமி கோவில்....

இது நேர்த்திக்கடனாக வேண்டியவர்கள் அனைவரும் கிடாய் வெட்டி சாமி கும்பிடும் இடமாகும். அங்கேயே கிடாய், கோழி என சமைத்து சாப்பிட இடம் இருக்க மக்களுக்கு கொண்டாட்டம்தான். இன்னும் சற்று தூரம் சென்றால் சிறு அருவி ஒன்று இருப்பது இன்னும் வசதி. :))

ஆக தாணிப்பாறை என்கிற மலை அடிவாரம் கிராமத்தில் உள்ள சிறுதெய்வ வழிபாடு நடக்கும் இடமாக இருந்தது. எனக்கு அந்த இடம் சற்று பொருந்தா உணர்வைத் தோற்றுவிக்க புகைப்படம் எடுப்பதையும் தவிர்த்து தாண்டிச் சென்றேன். தொடர்ந்து நடக்க சுமார் அரை கிமீ தூரத்தில் இடதுபுறம் அருவி.

பதினைந்து அடி உயரத்தில் இருந்து தண்ணீர் கொட்டிக்கொண்டு இருக்க, அதைத் தாண்டி நடந்தோம். எங்களுக்கு முன்னதாக சுமைதூக்கிகள் சென்றனர். மலைஏற பொதுவாக சிரமமாக இருக்கும். அதிலும் சுமையுடன் ஏறுவது கடினம். இதில் பெண்களின் பங்களிப்பைப் பாருங்களேன்.

 
பயணம் தொடரும்.
நிகழ்காலத்தில் சிவா

தமிழகத்தில் பஞ்சபாண்டவர்கள் வழிபட்ட சிவத்தலங்கள்


சேலம் மாவட்டம் சேர்வராயன் மலையில் உற்பத்தியாகின்ற திருமணிமுத்தாறு என்ற அழகிய நதி சேலம் மாவட்டம் நாமக்கல் மாவட்டங்களில் ஒடுவது நாம் அறிந்த ஒன்றாகும் .

தமிழகத்தில் பல சிவலாயங்கள் ஒவ்வொரு சிறப்பு பெற்று இருப்பினும் கீழே குறிப்பிடப்பட்டுள்ள சிவாலயங்கள் ஐந்தும் "பஞ்சபாண்டவர்களால் வழிபட்ட ஸ்தலம் " என்னும் சிறப்பை பெற்ற அழகிய ஸ்தலங்களாகும் .

அவை

1. சேலம் ஸ்ரீ சுகவனேஷ்வரர் திருக்கோவில்
2. சேலம் கொண்டலாம்பட்டி பைபாஸ் சங்ககிரி ரோட்டில் பெரியூரில் அமைந்துள்ள உத்தமசோழபுரம் ஸ்ரீகரபுரநாதர் திருக்கோவில்
3.நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகேயுள்ள பில்லூர் ஸ்ரீ வீரட்டீஷ்வரர் திருக்கோவில்
4. நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வட்டத்தில் மாவுரட்டி என்னும் ஊரில் அமைந்துள்ள ஸ்ரீ பெருவுடையார் திருக்கோவில் 
5.நாமக்கல் மாவட்டம் நஞ்சை இடையாரில் அமைந்துள்ள ஸ்ரீ திருவேலீஸ்வரர் திருக்கோவில்

எங்கும் நிறைந்துள்ள சிவபெருமான் திருமணிமுத்தாரின் மேற்குகரையில் மேற்கூறிய ஐந்து ஆலயங்களும் அமைந்துள்ளது மிகச்சிறப்பான ஒன்றாகும் .

அழகிய இந்த ஐந்து சிவாலயங்களில் ஒன்றை ரசித்து அடுத்த இடுகையில் எழுதியுள்ளேன் .படித்துப்பாருங்கள் .மேற்கூறிய ஐந்து ஆலயங்கள் ,அமைப்புகள் பற்றி விபரங்கள் தேவைப்படுபவர்கள் கீழ்கண்ட அலைபேசியில் உள்ள சிவனடியாரை தொடர்பு கொண்டு விபரம் பெறலாம் . 

திரு. கார்த்திக்ராஜா 94434-62072 .

பெருமை வாய்ந்த பஞ்சபாண்டவர்களால் வணங்கப் பெற்ற பழங்கால சிவத்தலங்கள் ஐந்தையும் தரிசனம் செய்து நலம் பெற அன்புடன் விழையும்

அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியர் திருக்கோவில் சிவன்மலை காங்கேயம் 







சிவன்மலை அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோவில் ,காங்கேயம் 

SIVANMALAI SRI SUBRAMANIYAR TEMPLE, GANGAYAM

கொங்கு நாட்டில் ஏராளமான திருக்கோவில் புகழ் பெற்றவை அதில் சிவன் மலை குறிப்பிடத்தக்க ஓர் ஆலயமாகும் சிவன் மலை என்றதும் சிவனே மூலவராக இருப்பார் என்று நினைத்து சென்றால் அங்கே இருப்பது ஸ்ரீ முருகப்பெருமான் ஸ்ரீ சுப்பிரமணியராக வரும் பக்தர்கள் துயர்போக்கும் கடவுளாய் அருள் பாலித்து அழகு செய்கிறார் .

திருக்கோவில் முன்பு ஈரோடு மாவட்டத்தில் இருந்தது.திருப்பூர் மாவட்டம் பிரிக்கப்பட்ட பின்பு சிவன் மலை திருப்பூர் மாவட்டத்திற்கு சொந்தமானது .

குன்றுகள் தோறும் குமரன் இருக்குமிடம் என்னும் வாக்கிற்கு இணங்க காங்கேயத்திலிருந்து திருப்பூர் செல்லும் வழியில் 7 வது கி.மீட்டரில் அமைந்த அழகிய குன்று சிவன் மலையாகும் . திருக்கோவில் குன்றின் மேலே செல்ல படிகட்டு வழி மற்றும் எல்லா வகையான வாகனங்களில் செல்லும் விதமாக தார் சாலை அழகாக அமைத்துள்ளார்கள் .மலைப்பாதை வழியில் சுமார் 2 கி.மீட்டர் பயணித்தால் திருக்கோவில் முகப்பை அடையலாம் . 

சுமார் 20படிக்கட்டுக்கள் ஏறிச்சென்றால் நாம் காண்பது பெரிய வளாகமும் அங்கு பெரிய அரசமரத்தடி விநாயகர் அருகே பெரிய வேப்ப மரமும் அமைந்துள்ளது. விநாயகர் வணங்கி விட்டு அடுத்து 10
படிக்கட்டுகளை கடந்தால் நாம் இராஜகோபுரத்தை அடையலாம் (இராஜகோபுரம் புதிதாக தயராகி வருகிறது).

பின்பு உள்ளே சென்றால் கொடிமரம் அதைத்தாண்டி நீண்ட தூரத்தில் அமைந்த வளாகத்தில் ஸ்ரீ முருகப்பெருமான் சிவன்மலையில் அருள்மிகு சுப்பிரமணியராக திருக்கோவில் மூலவராக அருள்புரிகிறார் .

திருக்கோவில் மூலவர் அழகாக சிலை அமைந்த சிலை பக்தர்களை அடிக்கடி தரிசிக்க தூண்டும் விதத்தில் அழகாக அமைந்திருப்பது சிறப்பு. தரிசனம் செய்த பின்பு அருகே ஸ்ரீவள்ளி தெய்வானை உடனமர் ஸ்ரீசுப்பிரமணியர் சன்னதி உள்ளது .அதை தரிசனம் செய்து வெளியே வந்தால் சுற்றுப்பிரகாரத்தில் ஸ்ரீதட்சிணாமூர்த்தி நவகிரகங்கள் என சிவாலயத்தை நினைவு செய்யும் விதமாக தனிச்சன்னதிகள் பல உள்ளன.

திருக்கோவில் ஸ்தலமரங்களாக துரட்டிமரமும் .பழங்கால புளிய மரமும் உள்ளது. திருக்கோவில் வளாகம் நல்ல அகலமுடையது.சிவன் மலையில் இருந்து பார்த்தால் சென்னிமலை திருக்கோவில் மலை அமைப்பும் , காங்கேயம் சுற்றுபுற அழகும் , திருப்பூர் சாயக் கழிவால் உயிரிழந்த நொய்யல் ஆற்றின் அழகிய அமைப்பும் தெரிகிறது. பழங்கால திருக்கோவில் ஆயிரம் ஆண்டுகால வரலாறு இருக்கலாம் .

சென்னி மலைக்கு வரும் வெளியூர் பக்தர்கள் அவசியம் சுமார் 12 கி.மீட்டர் தொலைவே உள்ள சிவன்மலை ஸ்ரீ சுப்பிரமணியரையும் தரிசனம் செய்து விட்டு செல்லலாம். திருக்கோவில் மேலே பக்தர்கள் சென்று வர பஸ் வசதி உள்ளது. பார்க்கவேண்டிய ஆலயம் முருகர் ஆலயமாகும் .

முருகருக்குரிய சஷ்டி,கிருத்திகை, செவ்வாய் கிழமை மற்றும் அம்மாவசை போன்ற விஷேச நாட்களில் ஆறுகாலபூஜை நடைபெறுகிறது. வந்து தரிசித்து ஸ்ரீ முருகப்பெருமான் அருள் பெற்று எழுதுங்கள் .

"ஓம் முருகா சரணம் முருகா " 

பழனி 

முருகன் கோயிலுக்குப் படையெடுக்கும் 


Palani Murugan Temple
பழனி: பழனி மலை முருகனை தரிசிக்கும் கேரள பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அறுபடை வீடு

முருகனின் அறுபடை வீடுகளுள் ஒன்று பழனி. இங்கு முருகப்பெருமான், ஆண்டிக்கோலத்தில் தண்டாயுதபாணியாக பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இத்தலத்தில் உள்ள மூலவர் சிலை நவபாஷணத்தால் ஆனது. அதனை அகத்தியரின் தலைமைச் சீடரான போகர் எனும் முனிவர் உருவாக்கினார் என்கிறது தலபுராணம்.

கொங்கு மண்டல பக்தர்கள்

இங்கு தைப்பூசம், பங்குனி உத்திரம், சூரசம்ஹாரம் போன்ற முருகனுக்கு உகந்த விசேஷ தினங்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். தைப்பூசத்தினையொட்டி நாடெங்கிலும் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக பழனிக்கு வருவது மிகவும் பிரசித்தம். 

முன்பெல்லாம் பொதுவாக பழனி என்றாலே கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் தான் அதிகம் வருவார்கள். வீட்டிற்கு வீடு பழனிச்சாமி என்ற பெயரில் ஒருவராவது இருப்பார்கள். 'பழனிச்சாமின்னு கூப்பிட்டா பத்து பேராச்சும் திரும்பி பார்ப்பாங்க..." என கொங்கு மண்டலத்தில் நகைச்சுவையான சொலவடை கூட உண்டு. அந்த அளவிற்கு கொங்குமண்டலத்தில் பழனி மலை முருகனுக்கு பக்தர்கள் அதிகம்.

படையெடுக்கும் கேரள பக்தர்கள்

ஆனால் கடந்த சில வருடங்களாக பழனி மலை முருகனைத் தரிசிக்க வரும் கேரள பக்தர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது. சபரிமலை ஐய்யப்பனை தரிசிக்க பலரும் கேரளா செல்வதைப் போல கேரள மக்கள் பலரும் பழனிக்கு சாரை சாரையாக வருகிறார்கள். இதனால் சீசன் எனப்படும் விசேஷ காலங்கள், கோடை விடுமுறை காலங்கள் தவிர்த்து வருடம் முழுவதும் பழனி மலையில் கூட்டம் இருந்து கொண்டே இருக்கிறது. 

நம்பிக்கை

கேரள பக்தர்கள் இங்கு வருவதற்கு பல்வேறு நம்பிக்கைகளைக் காரணம் சொல்கிறார்கள். மலையில் தண்டாயுதபாணி கேரள மாநிலத்தை பார்த்தபடி அருள் பாலிக்கிறார். அதனால் தான் கேரள மாநிலம் எல்லா இயற்கை வளங்களும் பெற்று செழிப்பாக இருக்கிறது என்கிறது அவற்றுள் முக்கியமான நம்பிக்கை. ஓணம் பண்டிகை போன்ற கேரளத்தின் முக்கிய பண்டிகை தினங்களில் பழனியில் கேரள பக்தர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கிறது. 

வியாபாரிகள் மகிழ்ச்சி

இங்கு வரும் பக்தர்களுக்காக பழனியில் ஏராளமான கடைகள், தங்கும் விடுதிகள், உணவகங்கள் உள்ளன. சீசன் தவிர பிற மாதங்களில் ஈயாடிக்கொண்டிருந்த நிலை மாறி வருடம் முழுவதும் நல்ல வியாபாரம் நடப்பதால் வியாபாரிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். அகல ரயில் பாதை பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் முடிவுற்றால் பழனிக்கு வரும் பக்தர்களின் கூட்டம் இன்னும் அதிகரிக்கும் என்கிறார்கள்.


Sivan Malai Temple

ஒரு நிகழ்வு குறித்து உலகம் அறியும் முன்பே சொல்லும் ஒரு சக்தி வாய்ந்த மலைக் கோவில் குறித்து அறிந்து அதைக் காண ஆவலுடன் சென்றோம். 

சிந்தையை அடக்கி சும்மா இருக்கின்ற திறம் அரிது. பஞ்ச பூதங்களின் சக்தியை உணர்ந்து சித்தத்தை அடக்கி செயற்கரியன செய்து வென்றவர்கள் தான் சித்தர்கள். அவ்வகையைச் சேர்ந்தவர்களில் ஒருவரான சிவ வாக்கிய சித்தர் பூஜித்த மலை தான் சிவன்மலை.

எங்கும் வளம் பொங்கும் கொங்கு நாட்டின் சிங்க நகரான காங்கயத்திற்கு அருகில் காங்கயம்-திருப்பூர் நெடுஞ்சாலையில் சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சிவன்மலை.

இம்மலை மீது கோவில் கொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடந்த பல வருடங்களுக்கு முன்பு, பட்டாலிமலை என்று வழங்கப்பட்டதாகவும், அதன் பின் அங்கு வந்து சித்தர் சிவவாக்கியர் முன்நின்று முயன்று சான்றோர்களின் பெருந்துணையுடன் பக்தர்களின் ஒத்துழைப்பாலும் பல திருப்பணிகள் செய்துள்ளார். அது முதல் இந்த மலை சிவன் மலை என்று பெயர் பெற்றதாம்.

மேலும், அக்காலத்தில் இந்த மலையை சுற்றி பசுக்கள் சூழ்ந்தும் மேய்ந்தும் வர வளம் பெற்றுள்ளது. பசுக்களை சேய் என்று கூறுவது தமிழ் வழக்கில் உள்ளது. இதனால் சிவனின் சேயான குகன் வந்து அமர்ந்து அருள்பாலிப்பதாலும் சேமலை என்று அழைக்கப்பட்டது. கால சுழற்சியில் அது சிவன்மலை என மருவியதாகவும் ஒரு தகவல் உண்டு. 

இந்த மலையின் சிறப்பு குறித்து அங்கு சாமி கும்பிட வந்த ஈரோட்டைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி பிரமுகர் ராஜேஷ் என்பவரிடம் பேச்சு கொடுத்தோம். அவர் நம்மிடம், சிவன்மலை முருகப் பெருமானின் சிறந்த திருத்தலமாகும். இது கொங்கு நாட்டின் புகழ்ப் பெற்ற திருத்தலங்களில் ஒன்றாகும். இங்குள்ள முருகன் சக்தி வாய்ந்த தெய்வமாகும். தான் தெரிவிக்க விரும்புவதை பக்தர்களின் கனவில் வந்து கூறி கட்டளையிட்டு பின் நடப்பதை முன் கூட்டியே தெரிவி்க்கும் அபூர்வ சக்தி கொண்டவர்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு கோயில் பெட்டியில் சொம்பில் தண்ணீர் வைக்க உத்தரவு வந்தது. இதனால் நாட்டில் என்ன நடக்கப் போகின்றது என அது பற்றி அப்போது யாருக்கும் தெரியவில்லை. ஆனால் சில நாட்களிலேய தமிழகத்தில் மக்களின் மனங்களில் மாறாத வடுவை ஏற்படுத்திய பேரழிவு அரக்கன் என்ற சுனாமி வந்து அப்பாவிகள் பலர் உயிரையும் பலிவாங்கிவிட்டது. அப்போது தான் இந்த பெட்டியில் உள்ள பொருளுக்கு மதிப்பு இன்னும் அதிகமானது. 

அடுத்து மஞ்சள் வைத்து கோயிலில் பூசை செய்தனர். முன்பு காட்டில் சும்மா கிடந்த மஞ்சள் தங்கத்தின் விலையை விட அதிக அளவுக்கு மார்க்கெட்டில் விற்பனையானது. அப்போது விண்ணை முட்டும் அளவு உயர்ந்த விலை இப்போது வரை பழைய நிலைக்கு திரும்பிவே இல்லை என்றார்.

அடுத்து அங்கிருந்த கரூரைச் சேர்ந்த தேமுதிக முன்னாள் மாவட்டத் தலைவர் விஸ்வநாதன் என்பவர் கூறுகையில், நான் இந்த கோவிலின் மகிமை தெரிந்து அடிக்கடி வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றேன். இங்கு வந்துவிட்டு சென்றாலே ஒரு மாற்றம் நிச்சயம். இந்த கோவிலின் சக்தி ஆபூர்வமானது. முன்பு ஒரு பக்தரின் கனவில் வந்து மண் வைத்து பூசை செய்யச் சொன்னதாம். அது முதல் இந்த பகுதியைச் சுற்றி நிலத்தின் மதிப்பு கண்ணாபிண்ணா என உயர்ந்து வி்ட்டதாம். அவ்வளவு ஏன் தமிழகத்தில் பல இடங்களில் இதே நிலை தான். இப்போது கூட சாமானிய மக்கள் நிலம் வாங்குவது குதிரைக் கொம்பாக உள்ளது. 

அதே போன்று மற்றொரு பக்தரின் கனவில் வந்து 500 ரூபாய் பணம் வைக்கச் சொல்லி உத்தரவு வந்ததாம். அதன் பின்பு மக்கள் மத்தியில் 10, 20, 50 ரூபாய்க்கு மதிப்பு குறைந்து போனது. ஏன் 100 ரூபாய்க்கு கூட மதிப்பு குறைந்து, தற்போது பலரிடம் ரூ. 500 சரளமாக புழக்கத்தில் உள்ளது. இது தான் முருகனின் அருள் என பெருமை பொங்கச் சொன்னார். 

கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரு பக்தரின் கனவில் வந்து அரைப் பவுன் தங்கத்தை வைத்து பூசை செய்யச் சொன்னதாம். 

சாமிக்கு கூட தங்கத்தின் மீது காதலா என பலரும் வியந்து கிடக்க, அடுத்த சில நாட்களிலேயே அதன் உண்மை நிலவரம் உலகிற்கு தெரிய வர ஆரம்பித்தது.

அது என்ன வென்றால் தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்ததே அப்போது தான். பெண்ணைப் பெற்றவர்கள் முருகா இது என்ன சோதனை என குரலை உயர்த்தியவர்கள் இப்போது வரை முருகா நீ தான் எங்க பெண்ணை கரை சேர்க்க வேண்டும் என பிராத்தனை செய்து வருகின்றனர்.

இது இப்படி என்றால் மற்றொரு பக்தரின் கனவில் வந்த முருகன், தேங்காயை வைக்கச் சொல்லி உள்ளார். அது போலவே தேங்காயை வைத்து பூசையும் நடைபெற்றது. அப்போது தான் தேங்காய் விலையும் கூட அதிகரித்தது. கொப்பறை தேங்காய்க்கும் ஒரு மவுசு வந்து அது கொப்பறை தேங்காய் ஊழல் வரை சென்று நின்றது என்கின்றனர்.

தற்போது திருப்பூரைச் சேர்ந்த கோடீஸ்வரன் என்ற பக்தரின் கனவில் தோன்றி பச்சை அரிசி வைக்கச் சொல்லி உத்தரவு வந்ததாம். அதன்படியே அந்த பெட்டியில் தற்போது பச்சை அரிசி வைக்கப்பட்டுள்ளது. மேலும், இதைச் சொன்ன கோடீஸ்வரன் என்ற பக்தரின் பெயரும், அவர் கோயிலில் வந்து சொன்ன தேதியும் மறவாமல் குறிப்பிட்டுள்ளனர். 

கடவுள் கனவில் சொல்லுகின்ற அந்த பொருளை அந்தப் பெட்டியில் எப்போது வைப்பார்கள் என்று கோயில் ஊழியர் ஒருவரிடம் கேட்ட போது,

காங்கயத்திற்கு அருகில் உள்ள திருப்பூர், வெள்ளக்கோயில், தென்னிலை, பரமத்தி, பல்லடம், கோவை மற்றும் பல சுற்றுப்புற கிரமங்களில் உள்ள தனது பக்தர் ஒருவரின் கனவில் சாமி தோன்றி பெட்டியில் வைக்க வேண்டிய பொருள் பற்றி கூறுவார். 

மறுநாள் அருள் வந்த நிலையில், அந்த நபர் தனது கனவில் சுவாமி தோன்றி சொன்னது குறித்து கோயில் நிர்வாகியிடம் வந்து தெரிவிப்பார். அவர் சொன்னது உண்மை தானா என்று தெரிந்து கொள்ள கோயில் நிர்வாகிகள் பூக்களை பொட்டலத்தில் வைத்து அதை சாமி முன்பு போட்டு பூச்சயனம் கேட்பார்கள். 

அதில் முதல் எடுப்பிலே வெள்ளைப் பூ வந்தால் முருகன் கனவில் தோன்றி கூறியது உண்மை தான் என உறுதி செய்து கொண்டு அந்த பொருளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து அந்த பெட்டியில் வைத்து விடுவார்கள். கூடவே அருள் வந்து சொன்னவர் பெயர், அவரது ஊர், அவர் கோயிலில் வந்து சொன்ன தேதி என அனைத்தையும் அந்த பெட்டியின் கீழ் எழுதி வைத்துவிடுவார்கள். இது தான் நடைமுறை என விளக்கம் கொடுத்தார். 

தற்போது பச்சை அரிசி வைத்துள்ளது பற்றி கோயில் குருக்கள் ஒருவரிடம் கேட்ட போது அவர் நம்மிடம் பேசும் முன்பு, சில மந்திரங்களை வாயில் முணுமுத்தபடி பின்பு குரலை உயர்த்தி தம்பி பச்சை அரிசி வைத்துள்ளது நல்ல சகுனம் தான். நாட்டில் விவசாயம் செழிக்கும். அரிசிப் பஞ்சம் வராது. சுபிச்சமாக இருக்கும் போங்கோ என அருள்வாக்கு கூறினார்.

நாட்டில் நடப்பதை முன்கூட்டியே மக்களுக்கு சொல்லும் இந்த கடவுளின் அருள் வாக்கை நினைத்து மெய் மறந்தபடி அங்கிருந்து புறப்பட்டோம்.