September 25, 2022

சிவபெருமானின் சிறப்புகள்

சிவபெருமானின் சிறப்புகள்

சிவபெருமானின் சிறப்புகள்

சிவபெருமானின் சிறப்புகள் பற்றிய ஓர் பார்வை

சிவம் என்றால் அன்பு. கடவுள் சிவனை சிவம் என்றும் சிவபெருமான் என்றும் பரவலாக அழைக்கின்றனர்.

இந்து சமயத்தில் கூறப்பட்டுள்ள மும்மூர்த்திகளுள் ஒருவர். இவர் தனது ஒரு பகுதியிலிருந்து அன்னை பராசக்தியை உருவாக்கினார். பின்னர் இருவரும் சேர்ந்து ஆனந்த தாண்டவமாடி அண்ட சராசரங்களை உருவாக்கினார். தனது உடுக்கையிலிருந்து படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் என்னும் ஐந்து பணிகளுக்கும் அடிப்படையான ஓம் என்ற பிரணவ மந்திரத்தை உருவாக்கினார்,

சிவன் என்றால், தமிழில் சிவந்தவன். வடமொழியில் சிவம் என்றானது. யோகநிலையில் ஆழ்ந்திருப்பதால் யோகி என்றும் அழைக்கின்றனர். அஷ்டமா சித்திகளில் வல்லவர் என்பதால் இவரைச் சித்தன் என்றும், சுடுகாட்டில் மனம் பேதலித்துப் பேய்களுடன் ஆடுபவராகச் சித்தரிக்கப்படுவதால் பித்தன் என்று குணங்களின் அடிப்படையில் அழைக்கப்படுகிறார்.

சிவபெருமான் பிறப்பும் இறப்பும் இல்லாதவர். மும்மூர்த்திகளையும், தேவர்களையும், அசுரர்களையும் உலகினையும், உலக உயிர்களையும் தோற்றுவிப்பதாகவும், பிரளய காலத்தில் அனைத்தையும் அழித்துத் தன்னுள் ஒடுக்கிச் சிவன் மட்டும் நிலையாக இருப்பதாகச் சைவ சமய இலக்கியங்கள் தெரிவிக்கின்றன.

பிருங்கி முனிவர் வண்டு வடிவெடுத்துச் சிவ பெருமானை வழிபட்டதால் சிவ லிங்கத்தில் வண்டு துளைத்த அடையாளம் ஏற்பட்டது. இந்த அரிய வடிவினை நாம் திருநல்லூரில் காணலாம். இங்கு இறைவன் பஞ்சவர்ணேஸ்வரர் என்ற திரு நாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

கயிலையில் பார்வதி தேவி ஒரு குழந்தையைத் தோற்றுவிக்கிறார். சிவபெருமானை அறியாத அக்குழந்தை அவருடன் சண்டையிட்டு தலையை இழக்கிறது. பார்வதி தேவியின் வேண்டுகோளை ஏற்று யானை முகம் பொருத்தி அம்மகனை மீட்பதாக இந்து சமய நூல்கள் தெரிவிக்கின்றன.

சூரன் என்ற அரக்கனை அழிக்கச் சிவபெருமான் தனது ஆறுமுகங்களிலுள்ள நெற்றிக் கண்களிலிருந்து நெருப்புப்பொறியை உருவாக்கினார். அந்த ஆறு நெருப்புப் பொறிகளையும் வாயு பகவான் சரவணப்பொய்கை எனும் ஆற்றில் விட்டார்.

அந்த நெருப்புப் பொறிகள் ஆறு குழந்தைகளாக மாறின. அவற்றைக் கார்த்திகைப் பெண்கள் வந்து வந்தனர். அந்த ஆறு குழந்தைகளையும் பார்வதி அரவணைத்த பொழுது ஆறு முகங்களைக் கொண்ட முருகனாக அக்குழந்தை மாறியது என்று இந்து சமய நூல்கள் தெரிவிக்கின்றன.

அன்பாக அருட்பெருஞ்ஜோதியாக, இன்பமாக மங்களமாக மறைபொருளாக எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அந்தப் பரமனைக் கடல் கொஞ்சும் குமரி முதல் கைலைப்பனிமலை வரை ஆலயங்கள் அமைத்து வழிபட்ட பெருமை நமது புண்ணிய பூமிக்கு உண்டு.

சிவ வழிபாட்டின் சிறப்புகளை வேதங்கள் விளக்குகின்றன. வேதங்களில் சிவபெருமான் ருத்ரன் என்று அழைக்கப்படுகிறார். ருத்ரன் என்றால் துன்பங்களைத் துடைப்பவன் என்று அர்த்தம். பசுபதி, பூதபதி பூதநாதர் என்ற சிறப்புப் பெயர்களும் உண்டு.

சிவபெருமான் அருவம், அருவுருவம், உருவம் என மூன்று வடிவங்களில் உள்ளார்.

அருவத்திருமேனி சித்தர் என்றும், அருவுருவத்திருமேனி பரம்பொருள் என்றும், உருவத்திருமேனி பிரவிருத்தர் என்றும் அழைக்கப்படுகிறது.

தடத்தநிலையில் ஈசன் கொள்ளும், அறுபத்து நான்கு வடிவங்கள் ஆகமங்களில் விளக்கப்பட்டுள்ளன. அவற்றில் சிறப்பான இருபத்தைந்து சிவமூர்த்தங்கள் மகேஸ்வர  மூர்த்தங்கள் என அழைக்கப்படுகின்றன.

சர்வேஸ்வரனைச் சரணடைவோம், கிருமித் தாக்குதலின்றி விடுபடுவோம்

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி