August 02, 2011

எல்லாம் சிவன் செயல்!


அன்பு ஆச்சாரம் எது பெரியது – சிவதாத்தா கதை – 2

மறுமொழியவும்
சிவதாத்தா கிராமத்தில் உள்ள மடத்தின் திண்ணையில் அமர்ந்திருந்தார். அருகிலிருந்த குலத்தில் சில சிறுவர்கள் குதித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். அதே நேரம் சுவாமிக்கு அபிசேகம் செய்ய தண்ணீர் எடுக்க வந்த பிராமணன், அந்தக் குழந்தைகளை விரட்டத் துவங்க. சிவதாத்தா வெகுண்டு எழுந்தார்.
“டேய் மடையா, யாரை விரட்டுகின்றாய்”
“என்ன சித்தரே!, குழந்தைகளை விரட்டினால் கோபம் வருகிறதோ!. சுவாமிக்கு அபிசேகம் செய்ய கலங்கிய நீரை எடுத்துச் செல்ல முடியுமோ. ஆச்சாரம் என்னாவது.”
“மடயனே, அன்பை விடவும் ஆச்சாரம் ஒன்றும் பெரியதல்ல.”
“யார் அப்படியெல்லாம் சொன்னது”
“அந்த ஈசனே சொல்லியிருக்கிறான். கேள்,.”
“திருநீலநக்க நாயனார் தம்பதியர் சிவபெருமான் மீது அபரிமிதமான பக்தி கொண்டவர்கள். நாயனாரின் மனைவி பெருமானைத் தம் குழந்தையாகவே பாவித்து அன்பு செலுத்துபவர். இருவரும் தினமும் ஆலயம் சென்று இறைவனை வணங்கிய பின்தான் தமது அன்றாட வேலைகளைச் செய்வார்கள்.”
“ஒருநாள் பெருமானை தரிசிக்கச் சென்றார்கள். அது சமயம் சிவலிங்கத்தின் மீது ஒரு சிலந்திப்பூச்சி விழுந்துவிட்டது. அதைக்கண்ட நாயனார் மனைவியின் தாயுள்ளம் பதறியது. லிங்கத்தின்அருகில் சென்று, வாயால் ஊதி அப்பூச்சியை அகற்றினார். இதைக்கண்ட நாயனாருக்கு கடுமையான கோபம் வந்துவிட்டது.”
“பெருமானின் மீது பட்ட சிலந்திப் பூச்சியை கையால் அகற்றாமல் எச்சில் படுமாறு வாயால் ஊதி அகற்றியது எத்தனை பெரிய அபச்சாரம்? ஏன் இப்படிச்செய்தாய்? என கோபத்துடன் கேட்டார். ஸ்வாமி! வேண்டுமென்றேதான் அப்படிச் செய்தேன்.”
“எம்பெருமானின் திருமேனியில் விழுந்த சிலந்திப் பூச்சியைக் கையால் அகற்ற முயன்றால் அது ஆங்காங்கே ஓடும். அப்போது அது பெருமானின் மேனியில் எரிச்சலை ஏற்படுத்தும். சிலந்தியின் விஷம் மிகக்கொடியது. விஷம்பட்ட இடமெல்லாம் கொப்பளங்கள் வந்துவிடும். அதனால்தான் வாயினால் ஊதி அகற்றினேன்.
எச்சில்பட்டால் ஒன்றும் தவறு கிடையாது, என்றார் மனைவி. “
“மனைவியின் பதில் அவரைச் சமாதானப்படுத்தவில்லை. என்னதான் இருந்தாலும் அவள் பெருமான் மீது எச்சில்பட வாயால் ஊதியது தவறுதான். இதுமன்னிக்க முடியாத பெரும் தவறு.வேண்டுமென்று தான் வாயால் ஊதினேன் என்று எத்தனை துணிவாகக் கூறுகிறாள்? இனி இவளை மனைவியாக ஏற்கக்கூடாது என்று எண்ணி, அவளைக் கோயிலிலேயே விட்டுவிட்டு வீட்டுக்கு போய்விட்டார்.”
“இறைவன் விட்டவழி என்று எண்ணியபடி நாயனாரின் மனைவி கோயில் மண்டபத்திலேயே புடவைத் தலைப்பை கீழே விரித்துக் கையை தலைக்கு வைத்துக் கொண்டு படுத்துவிட்டார். நாயனாரின் கனவில் பெருமான் தோன்றி, திருநீலா! என்னைப் பார். என் மேனியைப் பார் என்றார். ஆண்டாண்டு காலம் தவம் செய்திருந்தாலும் காண இயலாத ஈஸ்வரனின் திருமேனி எங்கும் கொப்புளங்கள் படிந்திருந்தன.”
“நாயனார் துடித்தார். ஐயனே! இது என்ன கொப்புளங்கள்? என்று பதற்றத்துடன் கேட்டார். சிலந்திப்பூச்சி என்னைக் கடித்ததால் உண்டான கொப்புளங்கள். இங்கே பார்! உன் மனைவி வாயால் எச்சில்பட ஊதிய இடம் எல்லாம் கொப்புளங்கள் மறைந்திருப்பதைப் பார். தனது எச்சிலால் எனக்கு மருந்திட்ட அன்னையை நீ தண்டித்துவிட்டாய்! சிலந்தி கொட்டியதால் என் உடலில் மட்டும்தான் எரிச்சல்.”
“ஆனால், ஆசாரம் என்று கூறி ஒரு உத்தமித் தாயின் அன்பை புரிந்து கொள்ளாமல் அவளை வார்த்தையால் கொட்டினாயே! அந்த உன் செயலால் என் உள்ளத்தில் ஏற்பட்ட எரிச்சலைத் தாங்க முடியவில்லை, என்று கூறி மறைந்தார். கனவில் ஈசனைக் கண்ட நாயனார் துள்ளி எழுந்தார்.”
“எத்தனை பெரிய தவறு செய்துவிட்டேன்? ஆசாரத்தைவிட அன்பே சிறந்தது, பெரியது என்பதை நான் உணரத்தான் எம்பெருமான் இந்நிகழ்ச்சியை நடத்திக் காட்டினார் போலும், என்று புலம்பியபடி கோயில் மண்டபத்திற்குச் சென்று அன்புடன் மனைவியை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்தார். அன்று முதல் ஆசாரம் பார்க்காமல், ஆசாரத்தை விட்டுவிட்டு அன்பே பெரிதென நினைத்து வாழ்ந்தார்.”
“இப்போது என்னச் செய்யப் போகிறாய் ” என்று கேளியாகப் பார்த்தார் சிவதாத்தா.
“மன்னித்துவிடுங்கள் சித்தரே, ஆச்சாரத்தை மட்டுமே பெரிதாக எண்ணியே அன்பை மறந்துவிட்டேன்” என்று சிவதாத்தாவிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு வேறு இடத்தில் தண்ணீரை எடுக்கச் சென்றார் அந்த பிராமணன்.

இதயமே இல்லாதவர் – சிவதாத்தா கதைகள் – 1

மறுமொழியவும்
அன்பானவன் எடுத்த அவதாரங்கள் ஏராளம். இந்த சிவதாத்தாவும் அதிலொன்றாக, “எல்லாம் சிவன் செயல்!” வாசகர்களுக்காக, என் சிவன் எடுக்கும் அவதாரம்.
கொல்லிமலைக்கு அருகில் இருக்கும் பசுமை கொஞ்சும் கிராமம் அது. மலையிலிருந்து இறங்கிய சிவதாத்தா தன் தாடியை வருடிய படி கிராமத்திற்குள் நுழைந்தார். உழைத்து உழைத்தே உறுதியான உடல், எட்டடிக்கு முன்னால் வருகின்றவரையே அளந்துவிடும் பார்வை, முகத்தை மறைத்துநிற்கும் தாடி மீசைக்குள் எப்போதும் சிறு புன்னகை. இதுதான் சிவதாத்தா.
சிவதாத்தாவை கிராமத்தின் நுழைவுவாயிலில் கம்பீனமான தோற்றத்துடன் முனீஸ்வரன் வரவேற்றான். எல்லை காவல்தெய்வமான அவன் அனுமதியின்றி கிரமத்திற்குள் யாரும் நுழைய முடியாது. சிவதாத்தா அவனை வணங்கிவிட்டு, சாம்பலை எடுத்துப் பூசினார்.
இனி இந்த கிராமத்தில் தான் வேலை என மனதுக்குள் சொல்லிக்கொண்டு, அருகில் யாரேனும் தென்படுகின்றார்களா என பார்வையை செலுத்தினார். ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த பரமனைக் கண்டார். மெதுவாக அவனை நோக்கி அடியெடுத்து வைக்களானார். அவருடைய வருகையை கவணித்த பரமன், அவரிடம் ஓடினான்.
“தம்பி, உன்னுடைய முதலாளியை சந்திப்பதற்காக கொல்லிமலையில் இருந்து வருகிறேன். வா என்னுடன்” என்றார்.
“ஐயா ஆடுகள் மேய்கிறதே, அவைகளை விட்டுவிட்டு எப்படி வருவது”
“இதோ இங்கே இருக்கானே முனி, அவன் பார்த்துக் கொள்வான். வா என்னுடன் ” என்று சொல்ல, பரமனுக்கும் நம்பிக்கை ஏற்பட்டது. அவன் சிவதாத்தாவை முதலாளியிடம் கூட்டிச் சென்றான்.
கொல்லிமலைச் சித்தர் ஒருவர் முதலாளியை காப்பாற்ற வந்திருக்கின்றார் என தெரிந்து கொண்டு, வழியிலேயே அவரை மக்கள் தடுத்தனர்.
“உயிர் வலியோடு துடித்துக் கொண்டிருக்கும் எதிரிக்கும் அருள் செய்வதே, அவனுக்கு தரும் பெரும் தண்டனை. அதைக் கொடுக்கவே நான் வந்துள்ளேன். ” என்றார் சிவதாத்தா.
“சித்தரே, அவனுக்கு இதயமே இல்லை. அவனைக் காப்பாற்றி எங்களுக்கு தீமை செய்து வீடாதீர்கள் ” என்றார் கூட்டத்திலிருந்த ஒரு முதியவர்.
“இதயமில்லாதவன் என்றால் என்றோ அவன் இறந்துவிட்டான். அந்தப் பிணத்திற்கு புது உயிர் கொடுக்கவே வந்துள்ளேன். நோயுற்றிருப்பது ஒரு உயிர் என்பதை மறந்து, நீங்களும் பாவத்தினை சேர்த்துக் கொள்ளாதார்கள் ” என்று சித்தர் சொல்லவும், எல்லோரும் அமைதியாக வழிவிட்டார்கள்.
முதலாளியின் மனைவி அவரை வரவேற்றாள். பரமன் அவளிடம் முதலாளியை காண வந்திருப்பதாக சொல்லவும், அவளுக்கு முதலில் புரியவில்லை. கொல்லிமலையிலிருந்து வந்திருக்கிறார் என்றவுடனே, அவளுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.
சாந்தம் தவழும் சிவதாத்தாவை வணங்கி “ஐயனே, தங்களைப் பார்த்தால் சித்தர் போல இரு்கிறது. என் கணவன் பல மாதங்களாய் கடும் நோயால் அவதிப்படுகின்றார். தாங்கள் தான் தயவு செய்து காப்பாற்ற வேண்டும் ” என மன்றாடினாள்.
“பெண்ணே, கணவன் வழிதவறும் போது, கண்டிப்பதற்கான உரிமை உன்னிடம் இருக்கிறது என்பதை மறவாதே!. இத்தனை துன்பங்களுக்கும் தீர்வு உன் எண்ண வெளிபாடுகலிருந்தே கிடைக்கிறது” என்றபடி சிவதாத்தா முதாலாளியின் அறைக்கு சென்றார்.
“உன்னைச் சுற்றி இருப்பவர்கள் வாழ்த்தினால், நீ இன்பமாக இருக்கலாம். உன்னைச் சுற்றி இருப்பவர்களின் உள்ளம் நோக நீ நடந்து கொண்டாய் அதனால் அவர்கள் உன்னை சபித்தார்கள். அந்தப் பலனை இப்போது அனுபவிக்கின்றாய்!”
முதலாளியின் கைகளில் சாம்பலைக் கொடுத்து, “தினமும் இதை இடு, அப்போதெல்லாம் இதைப் போல நானும் சாம்பலாக போயிருக்க வேண்டியவன். இனிப் போகப் போகிறவன். வாழும் குறைந்த நாட்களிலாவது உடனிருப்பவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் உனக்குள் இருக்கட்டும்.” என்று சொல்லி வெளியேறினார்.
திருநீர் அணிவதன் தத்துவம் -
இந்த உடல் எபபோது வேண்டுமானாலும் சாம்பலாகலாம். உயிர் வாழும் காலத்திலாவது மற்ற உயிர்களுக்கு இன்பம் தர வேண்டும் என நினைக்கவே உடலெங்கும் சாம்பலை அணிகின்றார்கள் சைவர்கள்.

No comments:

Post a Comment