மதுரை பக்தர் கனவில் உத்தரவு : சிவன்மலை முருகன் கோவிலில் ஆற்று மணலை வைத்து பூஜை
சென்னிமலை: சிவன்மலை முருகன் கோவில் ஆண்டவர் உத்தரவுப்படி தற்போது ஆற்று மணலை வைத்து பூஜை நடக்கிறது. இதனால், மணல் விலை பல மடங்கு அதிகரிக்குமென பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.திருப்பூர் மாவட்டம் சிவன்மலையில் மலை மீது எழுந்தருளியுள்ள ஸ்வாமி சுப்பிரமணியர், பக்தர்களின் கனவில் தோன்றி கூறும் பொருட்களை கோவிலில் வைத்து, அதற்கு சிறப்பு பூஜை நடத்துவது தொற்றுதொட்டு நடக்கும் வழக்கம்.
கடந்த இரண்டு மாதங்களாக வெள்ளோடு மேட்டுப்பாளையத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் கனவில் வந்த முருகப்பெருமான், 500 ரூபாய் பணத்தை வைத்து பூஜிக்குமாறு ஆணையிட்டார். மூலஸ்தானத்தில் பூ உத்தரவு கேட்கப்பட்டு, டிசம்பர் 11ம் தேதி முதல் 500 ரூபாய் பணத்தை கோவிலில் வைத்து பூஜை நடந்து வந்தது.
மதுரை ஆண்டாள் புரத்தை சேர்ந்தவர் ராஜராம். இவர் பொங்கலுக்கு முதல் நாள் ஜனவரி 13ம் தேதி கோவிலுக்கு வந்தார். “தன் கனவில் தோன்றிய சிவன்மலை முருகப்பெருமான், ஆற்று மணல் வைத்து பூஜை நடத்துமாறு உத்தரவு கொடுத்துள்ளார்’ என்று கூறினார்.கோவில் வழக்கப்படி, திருக்கோவில் நிர்வாகத்தினர் மூலஸ்தானத்தில் ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, பூ உத்தரவு கேட்டனர். ஸ்வாமியின் உத்தரவு கிடைத்ததால், 13ம் தேதி முதல் ஆற்று மணலை சிறிய மூட்டையாக கட்டி வைத்து தினமும் பூஜை நடந்து வருகிறது. இதனால், நாட்டில் வீடு கட்டுவதற்கு மணல் பற்றாக்குறை ஏற்பட்டு, விலை பல மடங்கு அதிகரிக்குமென பக்தர்கள் கருதுகின்றனர்.
இப்படித்தான் இதற்கு முன் வெற்றிலைப் பாக்கு வைத்து பூஜை நடந்த போது, சுபகாரியங்கள் அதிகம் நடந்தன. அதற்கு முன் விபூதி வைத்து பூஜை நடந்த போது, நாட்டில் அதிகப்படியான கோவில்களில் குடமுழுக்கு நடந்தது; மக்களிடம் ஆன்மிக ஈடுபாடு அதிகரித்தது.அதற்கு முன் மண்ணை வைத்து பூஜை நடந்த போது, ரியல் எஸ்டேட் தொழில் செழித்து பூமி விலை பல மடங்கு அதிகரித்தது. அதற்கு முன் ஒரு படி அரிசியும்; 100 ரூபாய் பணமும் வைத்து பூஜை நடந்தது. அதனால், அரிசி விலை பல மடங்கு உயர்ந்தது; தற்போதும் உயர்ந்து வருகிறது.தற்போது மணல் வைத்து பூஜை நடப்பதால் மணல் பற்றாக்குறை ஏற்பட்டு, ஆற்று மணல் விலை பல மடங்கு அதிகரிக்குமென சிவன்மலை முருக பக்தர்கள் பெரிதும் நம்புகின்றனர்.
No comments:
Post a Comment