அருள்மிகு சப்தரிஷீஸ்வரர் திருக்கோயில்
ஏழு ரிஷிகள் தவமிருந்த இடமே திருத்தவத்துறை ஆயிற்று. ஏழு முனிவருக்கும் அருள் செய்ததால் பெருமானுக்கு சப்தரிஷீஸ்வரர் என்றும், இத்தலத்துக்கு சப்தரிஷீஸ்வரர் திருக்கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.
சுவாமி : சப்தரிஷீஸ்வரர் (சிவன்)
அம்பாள் : பெரிய நாயகி, மகாலட்சுமி, பைரவி (காளி).
மூர்த்தி : தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், பிட்சாடனர்.
தலச்சிறப்பு : மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவாக எழுந்தருளியுள்ளார் சப்தரிஷீஸ்வரர். அழகிய சுயம்பு லிங்கம் மேற்கு பார்த்த சந்நதி. திருத்தவத்துறை நாதர் மற்றும் தேஜோவிடங்கர் ஆகிய திரு நாமங்களும் உண்டு. அம்பாள் மஹா சம்பத் கௌரி எனப்படும் பெரிய நாயகி கிழக்கு பார்த்து எழுந்தருளி, தனி சந்நதி கொண்டுள்ளார். மகாலட்சுமி, பிட்சாடனர், அர்த்தநாரீஸ்வரர், பைரவி எனப்படும் காளி ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம்.
இத்தலத்தில் வீணையைக் கையிலேந்தி, சற்றே வித்தியாசமான கோலத்தில் அருள்பாலிக்கின்றார் தட்சிணாமூர்த்தி. இவரை "வீணா தட்சிணாமூர்த்தி” என்றே தலபுராணம் குறிப்பிடுகின்றது. சிவன் இசையின் தலைவன். அதை உணர்த்தும் வகையில் அழகிய சடை முடியோடும், கைகளில் வீணையோடும், நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார் தட்சிணாமூர்த்தி. இத்தல தட்சிணாமூர்த்திக்கு விசேஷ அபிஷேகம் செய்து, குருப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடக்கிறது. வினை தீர்க்கும் வீணை ஏந்திய தட்சிணாமூர்த்தியை வணங்கினால் வளங்கள் பலவும் பெறலாம்.
தல வரலாறு : ஒரு காலத்தில் தாரகன் என்னும் அசுரனைக் கொன்று தேவர்களைக் காக்க வேண்டி சிவபெருமான் திருவருளால் முருகக் கடவுள் அவதாரஞ்செய்து குழந்தையாகத் தோன்றினார். சப்தரிஷிகள் அத்திரி, பிருகு, புலஸ்தியர், வசிட்டர், கௌதமர், ஆங்கீரசர், மரிசி ஆகியோர் அந்த ஏழு முனிவர்கள் ஆவர்கள். சப்த ரிஷிகளின் ஆசிரமம் அருகே உள்ள தாமரைப் பொய்கை அருகே, தனித்து விடப்பட்ட குழந்தை ஒன்று அழுது கொண்டு இருந்தது. அந்த குழைந்தைக்கு பாலுட்டுமாறு தனது பத்தினியான அருந்ததியிடம் வசிஷ்டர் கூறினார்.
பூஜைக்கு மலர் பறிக்க சென்று கொண்டு இருந்ததால், அருந்ததி குழந்தைக்கு பால் கொடுக்கவில்லை. கோபம் கொண்ட வசிஷ்டர் தனது மனைவியை தனிமைப்படுத்தி தண்டித்தார். மற்ற ரிஷி பத்தினிகள் அனைவரும் அருந்ததியை சார்ந்தும், ரிஷிகள் வசிஷ்டரை சார்ந்தும் வாதிட்டார்கள். ரிஷி பத்தினிகளுள் ஒருவரான அருந்ததி குழந்தைக்குப் பால் கொடுக்க மறுக்கவே கார்த்திகை பெண்கள் அறுவரும் குழந்தைக்குப் பால் கொடுத்தனர். இச்செய்தியை ஏழு முனிவர்கள் கேட்டு மனைவிமார்களைச் சபித்து விட்டார்கள்.
குழந்தை ஆறுமுகனாக மாறி முனிவர்களைச் சபித்தார். இதனால் முனிவர்கள் தன் சாபம் நீங்கும் பொருட்டுத் இத்தலத்துக்கு வந்து தவம் செய்தனர். ஏழு ரிஷிகள் கடுந்தவம் புரிந்ததால், அவர்களுக்கு அருள் செய்ய தன் சிவப்பேரொளியில் அவர்களை ஐக்கியப்படுத்திக் கொண்டார் ஈசன். தன் லிங்கத் திருமேனியில் ஏழு ரிஷிகளும் ஐக்கியமானதால், இத்தலத்திலுள்ள சிவலிங்கத் திருமேனியில் ஏழு புள்ளிகள் தோன்றின. மேலும் ஏழு ரிஷிகள் தவமிருந்த இடமே திருத்தவத்துறை ஆயிற்று. ஏழு முனிவருக்கும் அருள் செய்ததால் பெருமானுக்கு சப்தரிஷீஸ்வரர் என்றும், இத்தலத்துக்கு சப்தரிஷீஸ்வரர் திருக்கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.
நடைதிறப்பு : காலை 5.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
No comments:
Post a Comment