August 21, 2011


கேள்வி: நடராஜர் வடிவத்தின் தத்துவம் என்ன? 

பதில்: நடராஜ வடிவத்தின் தத்துவம் உலகைப் படைத்து, அதை தனது பொற்கரத்தால் காத்து, அக்கினி தாங்கிய கரத்தால் தீமைகளை எரித்து, ஊன்றிய திருவடியின் அடியில் அநுக்கிரகம் செய்வதுமாகும்
கேள்வி: தட்சினாமூர்த்தி திருக்கோலத் தத்துவம் என்றால் என்ன?

பதில்: சிவனின் தட்சிணாமூரத்திக் கோலம் என்பது பிரம்ம நிலையை துலங்க வைப்பது அங்கே செயல் இல்லை. ஒரே மௌனம்தான்.வெளியில் சகல காரியங்களும் செய்யும் ஈசுவரன் எப்போதும் உள்ளே அடங்கி பிரமமாக இருக்கின்றார். பேசாமல் புரிவைக்கும் ஆதிகுரு தட்சிணாமூர்த்தி அவருக்கு முனனால் கீழே அமர்ந்துள்ள முனிவர்கள்  சனதர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர்  நால்வரும் மௌன உபதேசம் பெறுகின்றார்கள் என்பதாகும்.
கேள்வி: மானின் தத்துவம் என்றால் என்ன?

பதில்:சிவபெருமானின் கையில் உள்ள மான் என்ன தத்துவத்தை நமக்கு உணர்த்துவது என்றால். மானின் நான்கு கால்களும் நான்கு வேதங்கள். சிவபெருமான்தாம் வேதப்பொருளாக உள்ளவர். இதை உலகிற்கு உணர்த்துவதற்காகவே மானை கையில் ஏந்தினார். வேதநாயகன் ஈசன் என்பதை அவரின் கையில் உள்ள மான் உணர்த்துகின்றது.
கேள்வி: பாம்பு புலித்தோல் ஆகியவவை உணர்துகின்ற தத்துவங்கள் என்ன?
பதில்.சிவனின் கழுத்தை சுற்றியுள்ள பாம்பு. நம்மை ஒவ்வொரு நிமிடமும் பாவப் படுகுழியில்தள்ள சந்தற்பம்பார்த்தபடி நச்சுப்பாம்பாக நம்மைச்சுற்றி வளைத்துக்கொள்ள காத்திருக்கின்றது என்பதையும், ஆடையாக அணிந்திருக்கும் புலித் தோல் நம்மனம் மிருக உணர்சிக்கு இணங்கக் கூடாது. உயர்வான குணத்துடன் இருக்கவேண்டும் என உணர்த்துகின்றன.
கேள்வி:-பிறை உணரத்தும் தத்துவம் என்ன?

சிவனின் ஜடாமுடியில் இருக்கும் சந்திரன் நம் வாழ்வில் இன்பமும் துன்பமும் மாறி மாறி வளர்பிறையாகவும் தேய்பிறையாகவும் வரும் என்ற தத்துவத்தை சொல்லுகின்றது.
கேள்வி: கங்கை உணர்த்துகின்ற தத்துவம் என்ன?

பதில்: ஜடாமுடியில் இ;ருக்கும் கங்கை சொல்லும் தத்துவமானது எப்பொழுதும் தன்னைப்போல் தூய்மையாக உள்ளம் இருக்க வேண்டும் என்பதை விளக்குகின்றது.
கேள்வி ஐந்து நாகங்களை அணிந்திருக்கும் தத்துவம் என்ன.?

பதில்: சிவபெருமான் ஐந்து நாகங்களை ஆபரணமாக அணிந்திருப்பதின் தத்துவம் யாதெனில் நம்மைச்சுற்றி நாகங்களைப்போல் நிற்கும் ஐந்து புலன்களை அடக்கி நிறுத்துவதை விளக்குயாகும்.
கேள்வி: அர்த்தநாதீஸ்வர தத்துவம் என்பதின் விளக்கம் என்ன..?

புதில்: சிவன் அர்த்தநாதீஸவராக நிற்பது எமக்கு எதை உணர்துகின்றது என்றால் அவர் காமத்தை வென்றவர் என்பதையும். பெண்ணுக்கு சரிபாதி இடம் உண்டு என்பதையும் உணரவைக்கவே யாகும.;
கேள்வி: பஞ்சாட்சர மந்திர தத்துவம் என்றால் என்ன?

பதில்: சைவசமயத்துகே உரித்தான பதி,பசு,பாசம் என்னும் தத்துவமும் இதனுள் அடங்கும்.
“நமசிவாய” என்பதில் நம- பசுவையும் சி-பதியையும் வய-பாசத்தையும் குறிக்கும். அதாவது பசுவாகிய ஆன்மாக்கள் பாசமாகிய சுகங்களை தொலைத்துப் பதியாகிய பரம்பொருளுடன் இணைதல் வேண்டும் என்ற பரமானந்த தத்துவத்தையும் இந்த நமசிவாய நமக்கு உணர்த்துகின்றது.

கேள்வி: ரிஷப வாகனத் தத்துவ விளக்கமென்ன.?

பதில்: தரும தேவதையானவள் தான் அழியாது என்றும் நித்தியமாக இருக்க விரும்பி ரிஷப உருவம்கொண்டு சிவனிடத்தில் வேண்டினாள். சிவனும் அவள் வேண்டுதலை ஏற்று ரிஷபத்தைவாகனமாக ஏற்றுக் கொண்டார்.தருமத்துக்கு அழிவில்லை. தருமத்தையே வாகனமாக கொண்டவன் இறைவன் என்பதையே சிவபெருமானின் ரிஷபவாகனம் உணரத்துகின்றது.
விநாயகரின் தத்துவ விளக்கம்

கேள்வி : விநாயகப் பெருமான் அரவத்தை தனது இடுப்புக் கச்சையாக
அணிந்திருக்கும் தத்துவம் என்ன.!?

பதில்: மாயையினைத்  தமது விருப்பம்போல இயக்கும் வல்லமை பெற்றவர் என்பதாகும்.
கேள்வி . விநாயகரின் பெருச்சாளித் தத்துவத்தின் விளக்கம் என்ன..?
பதில்:  பெருச்சாளி இருளை விரும்பும், கீழறுத்துச் சென்று கேடு விளைவிக்கும். அதனால் அது அறியாமை அல்லது ஆணவ மலத்தைக் குறிக்கும். எனவே அப் பெருச்சளியைப் பிள்ளையார்  தமது காலின்கீழ்  கொண்டிருப்பது அவர் அறியாமையையும், செருக்கையும் அடக்கி ஆட்கொள்பவர் என்பதை உணர்த்துகின்றது.
கேள்வி  -  காகவடிவாக வந்து கமண்டல தணணீரை தட்டி ஊத்திய தத்துவம்
உணர்துவது எதனை!?


புதில்: அகத்தியரின்  கமண்டலத்தில் உள்ள காவிரி நதியினை காகவடிவத்தில் வந்த விநாயகப் பெருமான் கவிழ்த்துவிட இந்த நதி பெருகி பலசோலைகளைக் கடந்து  இறுதியில் கடலுடன் கலந்தது என்றகதை என்ன தத்துவத்தை விளக்குகின்றது என்றால், கமண்டலம் மனித உடல் அதற்கள் இருந்த காவிரிநீர் ஆனமசக்தி. ஆன்மா அறியாண்மை காரணமாக இவ்வுடலே நிலையானது என்று நினைத்திருக்கின்ற காலத்தில் குரு வந்து நினைப்பது பிழை நீ போகவேண்டிய தூரம் வெகுதொலைவு என்பதைப்போல காக வடிவத்தில் வந்த விநாயகர் கமண்டலத்தை கவிழ்த்துவிட. வெறும் உடம்புக்குள் இருந்த ஆன்மா இறுதியில் இறைவனைப்போய் சேருவது போல காவிரி  நீரானது இறைவனைப்போய் சேருகின்றது. என்ற பரந்த ஆழமான தத்துவத்தை அர்த்தப்புடுத்தி விளக்குகின்றது.
கேள்வி :  விநாயகநின் பெருவயிற்றின் தத்துவ விளக்கம் என்ன..?

பதில: பிரபஞ்சம் முழுவதும் இறைவனுக்குள் அடக்கம் என்பதை உணர்த்துகின்றது விநாயகருக்கு அமைந்துள்ள பெருவயிற்றின் தத்துவம்.
கேள்வி :  இருபெருங் காதுகளின் விளக்கம் என்ன.!?

பதில்: பலகோடி உயிர்களின் முறையீடுகளைக்  களைவதற்காகப் பெருங்ம் இரு காதுகளை கொண்டுள்ளார் என்பதாகும்.
கேள்வி  : பஞ்சபூத தத்துவத்தின் விளக்கம் என்ன..!?

பதில்: பஞ்சபூதங்களை தம்முள் அடக்கி ஆள்பவர் என்பதைக் காட்டுவதற்காக. அவர் மடித்து வைத்தள்ள ஒருபாதம் பூமியையும், சரிந்த தொந்தி நீரையும், அவருடைய மார்பு நெருப்பையும், இரண்டு புருவங்களும் சேர்ந்த அரைவட்டம் காற்றையும், அதன் நடுவில் வளைந்திருக்கும் கோடு அகாயத்தையும் உணர்தி நிற்கின்ற னஎன்பதாகும்.
கேள்வி -  அவர் வைத்திருக்கம்  ஆயுதங்கள் எதை விளக்குகின்றன.!?

பதில்: விநாயகப் பெருமான் திருக்கரங்களில் ஏந்தியுள்ள ஆயுதங்கள் ஐந்தொழிலை உணர்த்துகின்றன. அவரது பாசம் படைத்தலையும், அங்குசம் அழித்தலையும், ஒடிந்த தந்தம் காத்தலையும், துதிக்கை மறைத்தலையும், மோதகம் அருளலையும் உணர்த்தி நிற்கின்றன.
கேள்வி : கணபதி தத்துவம் என்றால் என்ன..!?

பதில்:கணபதி தத்துவ விளக்கம் யாதெனில்  கணபதி
என்ற சொல்லில் உள்ள (‘க்’) என்ற எழுத்து
ஞானத்தைக் குறிக்கின்றது. ‘(ந’)  என்ற எழுத்து மோட்ஷத்தை குறிக்கின்றது.(‘பதி’) என்பது பரம்பொருளைக் குறிக்கின்றது. அதாவது தன்னை வழிபடுவோருக்கு ஞானத்தையும் மோட்ஷத்தையும் கொடுப்பவர் கணபதியாவார் என்பதேயாகும்.

கேள்வி :  விநாயகருக்குமுன் நெற்றிப்பொட்டில் குட்டிக்கொள்வது, தோப்புக்கரணம்
போடுவதின் விளக்கம் என்ன?


பதில்: விநாயகருக்கு முன் நெற்றிப்பொட்டில் குட்டிக் கொள்வதற்கான தத்துவ விளக்கமானது நெற்றிப் பொட்டில் குட்டிக்கொள்வதால் குண்டலினி சக்தி தட்டி எழுப்பப் படுகின்றது. தொடர்ந்து இறைவழிபாட்டில் ஈடுபடுவதற்கு எற்ற முறையில் மனதைக் கட்டுப்படுத்துகின்றது இதைவிட மனிதரின் நெற்றிப்பொட்டில்தான் உடலின் சகல நரம்புகளும் ஒன்றிணைவதால் ஞாபக சக்தியும் பலப்படுகின்றது. உடலுக்கும் உற்சாகம் தருகின்றது. தோப்புக் கரணம் போடுவதற்கான காரணம.; அகந்தையும், ஆணவமும்  அழிவதைக் காட்டுவது என்பதும், உடல் இயக்க ரீதியாக பெரும்பயன் தருகின்றது என்பதுவும் ஆகும்.
கேள்வி :  விநாயகரின் திருக்கரங்கள் உணர்த்துகின்ற தத்துவங்கள் என்ன?


பதில்:சிவாய நம” என்ற திருவைந்தெழுத்தை உணர்த்துவதாக விநாயகரின் அங்குசம் தாங்கிய வலக்கை, சிகரம், பாசம் பற்றிய இடக்கை வகரம், தந்தம் ஏந்திய வலக்கை யகரம், மோதகம் உள்ள இடக்கை நகரம், துதிக்கை மகரம், இவ்வாறு “சிவாய நம” என்ற திருவைந்தெழுத்தை விநாயகரின் ஐந்து திருக்கரங்களும் உணர்த்துகின்றன.


கேள்வி : சிதறுதேங்காய் உணர்த்தும் தத்துவம் என்ன?

பதில்: விநாயகருக்கு முன் சிதறு தேங்காய் உடைப்பது என்பது இரண்டு தத்துவங்களை கொண்டுள்ளது. ஒன்று மனிதருக்குள் இருக்கின்ற தான் என்ற அகம்பாவ உணர்ச்சி தேங்காயின் ஓட்டைப்போல உறுதியானது. அது தேங்காயைப்போல உடைந்து சிதறிவிட்டால் இனிய நீரும், வெண்மையான தேங்காயும், கிடைப்பதைப் போல. பக்குவமான ஞான உணர்வு நமக்குள் கிடைக்கின்றது. இப்படி நாம் விநாயகருக்கு முன் நாம் பக்குவம் பெற முயலுவதாக உணர்த்துவது ஒரு தத்துவம். இரண்டாவதாக இறை சன்னிதானத்தில் தேங்காய் உடைக்கும் போது தேங்காய் சிதறுவதுபோல்  நம் மனக் கவலைகளும் சிதறிப்போகும் என்பதாகும்.


கேள்வி : அறுகம்புல்லின் தத்துவம் என்ன ?


பதில்: தான் என்ற அகங்காரம் இல்லாமல் இருக்கவேண்டும் என்பதற்காகவே விநாயகப்பெருமான் எளிதான அறுகம் புல்லை விரும்பி ஏற்கின்றார். மேலும் அந்த அறுகம்புல் ஒரே காம்பில் மூன்று முனைகள் உடையதாக இருக்கவேண்டும் என்றும். மனம், வாக்கு, காயம். ஆகிய மூன்றையும் கூர்மைப்படுத்தி இறையருளை பெறவேண்டும் என்பதை காட்டவேயாகும்.


தொடரும்:
தொகுப்பு: பொன்னண்ணா

கேள்வி: நடராஜர் வடிவத்தின் தத்துவம் என்ன?
பதில்: நடராஜ வடிவத்தின் தத்துவம் உலகைப் படைத்து, அதை தனது பொற்கரத்தால் காத்து, அக்கினி தாங்கிய கரத்தால் தீமைகளை எரித்து, ஊன்றிய திருவடியின் அடியில் அநுக்கிரகம் செய்வதுமாகும்

சிவனின் வருகை...

மந்திரங்களைப்பற்றி தற்சமயம் நான் கொண்டுஇருக்கும் எண்ணம் வேறு, இருப்பினும் நான் கடந்து வந்த பாதையை தான் இங்கு எழுதுகிறேன், "

"யாரும் தவறாக என்னை எண்ண வேண்டாம். "

எமக்கு கிடைத்த அமான்ஷ்ய சக்தியைப்பற்றி எழுத முயற்சித்த போது, பல தரப்பட்ட பழைய நினைவுகள் எம்மைசுற்றிசுற்றி வந்து.. ஒரு மாதிரியாகி போய்விட்டது. சித்தர்களின் உத்தரவு கிடைக்கவில்லைபோலும் என உள்மனது கூறுகிறது.

இருப்பினும், எம் வாழ்வில் அந்த ஆதி சித்தன் எம்மை தேடி வந்ததை இன்று  பகிர்ந்து கொள்கிறேன்.

இது நடந்தது 2004  ம் ஆண்டு.
எங்கள் ஊரில் உள்ள சிவனாலயம் மிகச்சிறப்பு வாய்ந்தது. கைலாசநாதர் மற்றும் காமாட்சி அம்மனுடன் உள்ள ஒரு சின்ன கோவில் ஆகும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்ப்பட்டது , சோழர்களின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக இது விளங்கியது .

சதா காலம் சிவனின் திருவிளையாடல்கள் பற்றி பேசிக்கொண்டு இருந்ததொரு காலம்( வேலை வாய்ப்பு இல்லாததனால் ) . நன்று படித்தும் ,வேலை கிடைக்காத விரக்தியால் ஆன்மிகத்திற்கு ஈர்க்கப்பட்ட காலம் அது.   எமது நண்பர்கள் ஈசா யோகத்தில் பயிற்சி பெற்றவர்கள் நானோ எதுவும் தெரியாத ஆனால்  சிவன் மேல் மட்டும் பித்து கொண்டவனாக இருப்பவன். பல நல்ல ஆத்மாக்களின் நட்புறவு கிடைத்தால் எங்கள் மனம் எப்போதும் சிவனை நோக்கியும் , சத்சங்கத்திலும் இருக்கும்.


அன்று தான், வாழ்க்கையின் மிக சிறந்த நாளாக கருதுகிறேன், எம்மை எம்பெற்றோர்கள் இந்த தரணிக்கு அறிமுகப்படுத்திய(பிறந்தநாள்) நாளாகும்.
வழக்கம் போல் எல்லாரும்( நண்பர்களுடன் ) சாயங்காலம் கோவிலுக்கு சென்றோம்.   எப்போதும் எம் தந்தையை சுத்த தமிழால் அர்ச்சனை செய்வது வழக்கம்.  அன்றும் அதுப்போல் நடந்தது.  அந்த அர்ச்சனைக்கு நிகர் இந்தவுலகில் எதுவும் கிடையாது . அவனே வந்து வழிய கேட்கும் மந்திரம் அது .  இதனை பல இடங்களில்( இமய மலையிலும் கூட) பரிச்சித்து பார்த்தவன் என்ற முறையில் கூறுகிறேன்.


மனதில் எம்தந்தை நினைத்து , பின்வருமாறு கூறினேன்.
ஐயா,
  எனக்கு இன்னைக்கு பிறந்த நாள்,   வாழ்த்து சொல்ல எல்லாரும் வந்தார்கள் உம்மை தவிர.
என் மேல் உங்களுக்கு எண்ண கோபம், என்னை ஏன் வந்து பார்க்க மாற்றிங்க ,இருந்தாலும் நீங்க ரொம்ப பெரியவங்க , உலக மக்களை காக்கும் மிகப்பெரிய பொறுப்பு உங்களிடம் இருக்கிறது. இருப்பினும் இந்த பிள்ளையை பார்க்க ஒரு முறை  வாங்க என்று கூறினேன்,  உங்களால் நேரில் வர முடியலனா கூட  பரவாயில்லை  கனவிலாவது வாங்க என்று கூறினேன்,


பிரார்த்தனை முடிந்து , என் நண்பர்களிடம் கூறினேன் , இன்று எம் தந்தை எம்மை பார்க்க வருவார் என்று.

எல்லாரும் சிரித்தார்கள் , இந்த சிலை (சிவலிங்கம்) எப்படி வரும் என்று நன்றாக நக்கலடித்தார்கள் . என் மனமோ சித்தனை நோக்கி , அப்பா இவர்களுக்கு நல்ல என்ணத்தை கொடுக்க வேண்டும் , அதுக்காவது வாங்க என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்து விட்டேன்  .

 
உலகின் சிவன் கோவில்கள்

சைவ சமயம் இமயம் முதல் குமரி வரை பரவியிருக்கி ன்றது. தமிழ்நாட்டில் சைவசித்தாந்தம் என்றும், கன்னட நாட்டில் சைவசித்தாந்தம் என்றும், கன்னட நாட்டில் வீரசைவம் அல்லது இலிங்காயதம் என்றும், காஷ்மீரில் காஷ்மீரசைவம் அல்லது பிரத்ய பிக்ஞா சைவம் என்றும் சைவசமயம் ஆங்காங்கே தனிச்சிறப்பாக நிலவி வருகின்றது.

சைவசமயம் மிகத் தொன்மை வாய்ந்த்து ஹரப்பா, மொகஞ்சதாரோ என்னும் இடங்களில் அகழ்வு ஆராய்ச்சிகள் நிகழ்த்திய சர்ஜான் மார்ஷல் போன்ற பேரறிஞர்கள் சைவசமயமானது உலகத்திலேயே மிகவும் பழைமையான உயிர்ப்பாற்றல் மிக்க சமயமாக இருந்து வருகின்றது என்று ஆராய்ந்து கூறியுள்ளனர்.

ஆராய்ச்சியா ளர்கள் மனித வரலாற்றைப் பல காலங்களாகப் பிரித்துள்ளனர். அவை பழைய கற்காலம், புதிய கற்காலம், இரும்புக் காலம், வெண்காலம் எனப் பலவகைப்படும். "பழைய கற்காலம்" என வழங்கப்பெறும் அக்காலத்திலேயே சிவலிங்க வழிபாடு இருத்திருக்கிறது.

வட அமெரிக்காவில் கொலரடோ என்னும் இடத்தில் உள்ள ஒரு குன்றின் மீது ஒரு சிவன் கோயிலும் அதில் ஒரு சிவன்கோயிலும் அதில் ஒரு பெரும் சிவலிங்கமுக் 1937 ஆம் ஆண்டில் ஆராய்ச்சியாளர்க ளால் கண்டுபிடிக்கப் பட்டன. இந்த கோயில் 10,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று ஆராய்ச்சியா ளர்கள் நிருபித்துள்ளனர்

சிந்து சமவெளி திராவிடர்களின் கடவுள் முருகர் அஸ்கோ பர்போலா தகவல்

மறுமொழியவும்

கோவை செம்மொழி மாநாட்டில் திராவிக் கடவுளான சிவனின் மைந்தன் முருகனையும், சிவனை ருத்திரன் எனவும் வழிபட்டிருப்பதை அறிஞர்கள் வெளியிட்டார்கள். அதைப் பற்றிய தொகுப்பு.
சிந்து சமவெளி எழுத்துக்களை ஆய்வு செய்ததில், முருகன், ஆரிய கடவுள் ருத்ரா -ஸ்கந்தா ஆகியோர் திராவிடர் வணங்கிய கடவுள்களாக இருந்தார்கள் என்று ஆய்வில் தெரியவருகிறது, என்று “செம்மொழி தமிழ்’ விருது பெற்ற பின்லாந்து பேராசிரியர் அஸ்கோ பர்போலா, சிந்துசமவெளி எழுத்துக்கள் குறித்த ஆய்வு கட்டுரையில் கூறியுள்ளார். கோவையில் நடைபெறும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் வெளிநாட்டு அறிஞர்கள், பேராசிரியர்கள் பங்கேற்று, தமது ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிக்கின்றனர். பின்லாந்து நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் அஸ்கோ பர்போலா, சிந்து சமவெளி நாகரிகம், திராவிடர்களின் நாகரிகம் பற்றி ஆய்வு செய்து வருகிறார். இவருக்கு மாநாட்டு முதல் நாள் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் “செம்மொழி தமிழ்’ விருது வழங்கினார். இவர் “சிந்து சமவெளி எழுத்துக்களுக்கான திராவிட தீர்வு’ என்ற தலைப்பில் 35 பக்கம் ஆங்கிலத்தில் எழுதிய ஆய்வுக் கட்டுரையை, முதல்வர் கருணாநிதி முன்னிலையில் மாநாட்டில் சமர்ப்பித்தார்.
அவர் தமது ஆய்வு குறித்து பேசியதாவது: சிந்து சமவெளி நாகரிகம் நிலவிய ஹரப்பா பகுதியில், 1870 மற்றும் 1890ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், எந்த மொழி என்று அறிதியிட்டு கூற முடியாத, கற்களில் பொறிக்கப்பட்ட எழுத்து வடிவங்கள் கண்டெடுக்கப்பட்டன. மேலும் அகழாய்வு செய்ததில் மெசபடோமியா பகுதியில் பல எழுத்து வடிவங்கள் கண்டெடுக்கப்பட்டன. அதன் அடிப்படையில் சிந்து சமவெளி நாகரிக காலம் கி.மு. 2600 -1900 என்பதை ஆய்வுகள் மூலம் உறுதியானது. இக்கல்வெட்டு, எழுத்துக்கள் வளைகுடா கடல் வாணிபர்களால் அந்த பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. ஆனால் அவர்களால் அந்த எழுத்துக்களை புரிந்து கொள்வதில் சிரமம் இருந்துள்ளது. சிந்து சமவெளி நாகரிகம் அழிந்தபோதே, சிந்து சமவெளி எழுத்து வடிவங்கள் சேர்ந்து அழிந்து விட்டது. ஆனாலும் பாதுகாக்கப்பட்ட சில எழுத்து வடிவங்கள் ஆய்வுக்கும், ஹரப்பாவில் பயன்படுத்தப்பட்ட மொழியினை அறிய உதவுவது திராவிட மொழிகளேயாகும், அவற்றின் மூலம் பல்வேறு தகவல்களை தெரிந்து கொள்ள முடிகிறது. மத்திய மற்றும் தென்னிந்தியாவில் 26 திராவிட மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. எனினும், கி.மு. 1100 -600ம் ஆண்டுகளில், வடமேற்கு பகுதியில் காணப்பட்ட இந்தோ-ஆரிய உருவ வடிவ எழுத்துக்களில்,முகம்,பலம், காணா, கியாம்பு ஆகிய திராவிட மொழி எழுத்துக்கள் இருப்பதை அறிய முடிகிறது.
வரலாற்று மொழிகள் வாயிலாக நாம் அறிய முடிவது என்னவென்றால், சிந்து சமவெளி பகுதி மக்கள் (ஹரப்பா) திராவிட மொழியைத்தான் பேசியிருக்க வேண்டும் என்று தெரியவருகிறது. சிந்து சமவெளி மதங்களை பற்றி படிக்க பழந்தமிழ் இலக்கியங்கள் உதவிக்கு வருகின்றன. போர் மற்றும் காதலில் சிறந்து விளங்கிய “இளமை’ கடவுளை வணங்கினர். அக்கடவுள் வடஇந்தியர்கள் வணங்கிய போர்க்கடவுளான “ஸ்கந்தா’வோடு ஒத்து காணப்படுகிறது. அக்கடவுளுக்கு இளமை, இளைஞன் எனும் பொருள்பட முருகு அல்லது முருகன் என்ற திராவிட பெயர்கள் வழங்கப்பட்டன. வேதங்களில் ஸ்கந்தாவுக்கு முன்னோராக குறிப்பிடப்படும் “ருத்ரா’ என்னும் கடவுள், பச்சிளங்குழந்தையாக உருவாக்கப்பட்டும், சமஸ்கிருதத்தில் “குமாரா’ என்றும் அழைக்கப்படுகிறார். முருகனும், ஸ்கந்தாவும், சிவப்பு நிறம் அல்லது உதிக்கும் சூரியன் எழுத்துவடிவ குறியீடுகளால் குறிப்பிடப்படுகிறார்கள்.
இதன் மூலம் திராவிட கடவுள் முருகன் மற்றும் ஆரிய கடவுள் ருத்ரா-ஸ்கந்தா ஆகியோர், திராவிடர் வணங்கிய கடவுள்களாக இருந்தார்கள் என்று தெரியவருகிறது. சிந்துசமவெளி நாகரிக காலத்தைய எழுத்து வடிவங்கள் திராவிட மொழியே பின்னணியில் உள்ளதை தெளிவாகி உறுதியுடன் கூறமுடிகிறது. உருவக எழுத்துக்களின் அர்த்தங்களை கண்டுபிடிக்க, திராவிட மொழியாற்றல் மிக்க பேச்சாளர்கள் தேவையில்லை. இந்திய கலாசாரம் மற்றும் தெற்காசிய தன்மையை பற்றி நன்கு அறிந்திருந்தாலே போதும். இவ்வாறு பேராசிரியர் பர்போலோ பேசினார்.

சாந்தம் அருளும் சரபேஸ்வரர்

மறுமொழியவும்

இரணிய வதம் -
தானே கடவுள் என்று சொல்லித் திரிந்த இரணியகசிபுவை அழிக்க அவதாரமெடுத்தார் விஷ்னு. அவனை அழிக்க சிங்க முகமும், மனித உடலும் கொண்டு “நரசிம்மராக” பூமியில் தோன்றினார். அவனைக் கொன்று தின்றார். அவனுடைய அசுர ரத்தம் விஷ்னுவை ஆட்கொண்டது. அவனை அழிக்க வந்த கோபம் அவரை ஆட்கொண்டது. உயிர்களுக்கும், தேவர்களுக்கும் அச்சம் ஏற்பட்டது. எல்லோரும் சிவனிடம் வேண்டச் சென்றனர்.
சரபேஸ்வரர் தோற்றம் -
மனைவியாக இருந்தாலும் லட்சுமிக்கும் நரசிம்மர் மேல் பயம் வந்தது. எங்கே தன்னையும் கொன்று விடுவாரோ என பயந்து எல்லாம் வல்ல ஈசனின் திருவடிகளில் சமர்ப்பனமானாள். எல்லையில்லாத அன்புடையவனும், கருனைக்கடலுமான ஈசனுக்கு கோபம் வந்தது.
ஒரு பெண் தன் காலடியில் விழுந்து வணங்கி, நற்கதி அருள வேண்டும் என வேண்டுவதைப் பார்த்தார். எட்டுக் கால்களும், நான்கு கைகளும்,இரண்டு இறக்கைகளும், கூர்மையான நகங்கள், பற்கள், யாளிமுகமும் கொண்ட சரபேஸ்வரராக மாறினார். பாதி உருவம் அகோர பறவையாகவும், மீதியுருவம் அகோர மிருகமாகவும் இருந்தது. அப்படியே நரசிம்மர் முன் தோன்றினார்.
நரசிம்மருடன் சண்டை -
மிக அகோரமாக எல்லா மிருகங்களும் இணைந்த உருவம் திடீரென தன் முன் தோன்றியவுடன் நரசிம்மருக்கு ஒன்றும் புரியவில்லை. தன்னை அழிக்க ஒரு சக்தி வந்திருப்பதாக எண்ணினார். சரபேஸ்வரரோ “ஹா” என்று ஒரு சத்தம் எழுப்பியவுடன், அண்டங்கள் அதிர்ந்தன. மேலோகங்கள் ஆடின, நரசிம்மருக்கு கோபம் போய் பயம் வந்தது. அந்தப் பயத்தினால் சரபேஸ்வரை தாக்க முற்பட்டபோது, சரபோஸ்வரின் ஸ்பரிசத்தால் நரசிம்மர் நாராயணானார்.
லட்சுமி நரசிம்மர் -
பயந்து போய் நின்று கொண்டிருந்த லட்சுமியுடன் சேர்ந்து ஈசனை வணங்கினார். ஈசனும் லட்சுமி நரசிம்மராக இந்த உலகில் மக்களுக்கு அருள் செய் என கட்டளையிட்டார்.
திருபுவனம் -
திருபுவனம் சிவபரத்துவத்தை விளக்கி நிற்கும் உயர்பெருந்தலம். சுவாமி நடுக்கம் தீர்த்த பெருமான் என்ற பொருளில் கம்பகரேஸ்வரர் என்ற திருப்பெயருடனும், அம்பாள் அறம்வளர்த்தநாயகி, தர்மசம்வர்த்தினி என்ற திருப்பெயருடனும் அருள் வழங்கும் சிறப்புடையது. இத்தலத்தின் பழம்பெயர் திருபுவனவீரபுரம் என்பதாகும்.
அசுவக்கிரீவன், விருஷபக்கிரீவன், வியாளக்கிரீவன், பிரமன், இலக்குமி, வருணன், விஷ்ணு, சித்ரரதன், சுகோஷன், மாந்தாதா, நாரதர், வரகுணர் முதலியோர் வழிபட்ட பெருமை உடையது இத்தலமாகும். இரணியனுடைய குருதியைப் பருகிய நரசிம்மம் அறிவு திரிந்து உலகம் அனைத்தையும் அழிக்கத் தொடங்கியபோது இத்தலப் பெருமான் சரபப் பறவை உருக்கொண்டு அதன் கொடுமையை அடக்கியதால் சரபேஸ்வரர் என்ற பெயருடன் இவ்வாலயத்தில் தனி மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார்.
பிரத்யங்கரா தேவி -
சக்தியின் உக்கிரமான வடிவம்தான் மஹா பிரத்யங்கரா. இந்த பிரத்யங்கரா நான்கு சிங்கங்கள் பூட்டிய ரதத்தில் சிம்ம முகத்தோடு எட்டு கைகளோடு, மிகக் கோபமான பார்வையோடும், உக்கிரமான வேகத்தோடும் காட்சி தருபவள். சரப வடிவத்தின் இறக்கைப் பக்கம் இருப்பவள் இந்த பிரத்யங்கரா தேவி.இந்த பிரத்யங்கரா சிவனின் ஒரு பக்க சக்தி.

புத்திரகாமேட்டிஸ்வரர் –

மறுமொழியவும்

“குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள் மழலைச் சொல் கேளாதவர்” என்றார் நம் சைவ வள்ளுவப் பெருந்தகை. பணம், பொருள், சுற்றம் என எல்லாம் இருந்தாலும் மழலைக்காக வருத்தம் கொள்பவர்கள் ஏறாளம். அந்தக் குறையை நீக்க ஈசன் குடிகொண்டிருக்கும் அவதார ஊரைப் பற்றியும், புத்திரகாமேட்டிஸ்வரர் பற்றியும் படித்து அருள் பெருவோம்.
குழந்தை இல்லாதோரின் தோஷம் நீக்கும் புத்திரகாமேட்டீஸ்வரர், ஆரணியில் அருள் பாலிக்கிறார்.
தல வரலாறு -
தசரத சக்கரவர்த்திக்கு, நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லை. குழந்தைப்பேறு உண்டாக குல குரு வசிஷ்டரிடம்
ஆலோசனை கேட்டார்.
“குருவே எனக்கு வாரிசு எதுவும் பிறக்கவில்லை. அதனால் பெருமாளிடம் வேண்டலாமென நினைக்கின்றேன். நீங்கள் ஆலோசனை சொல்ல வேண்டும்” என்றார் தசரதர்.
“அட மூடனே, குழந்தை பிறக்க வேண்டும் என்பது சாதாரண விசயமா. விஷ்னுவை வணங்குவதனால் உனக்கு குழந்தை பேரு கிடைக்க வாய்ப்பில்லை. பக்தர்களுக்கு துன்பமென்றால் ஓடிவரும் ஈசனை வணங்கு. பாற்கடலில் பள்ளி்க் கொண்டிருக்கும் விஷ்னுவையே உனக்கு சிவன் குழந்தையாக வரச் சொல்லிக் கட்டளையிடுவார்” என உலகை காத்தருளும் சிவனை வழிபட அந்த பாக்கியம் கிடைக்குமென்றார்.

அதன்படி தசரதர், மகா சக்திப் பொருந்திய சிவலிங்கத்தினைப் பிரதிஷ்டை செய்து, ரிஷ்ய சிருங்க மகரிஷியின் தலைமையில் புத்திர காமேஷ்டி யாகம் நடத்தி சிவனை வழிபட்டார். தசரதனின் நான்கு மனைவிகளும், மக்களும் விரதமிருந்து புத்திர பாக்கியம் கிடைக்க சிவனிடம் வேண்டினார்கள்.
பக்தர்களின் வேண்டுதல்களை உடனே நிறைவேற்றிடும் சிவன், தசரதனுகக்கு அருள் செய்தார். அதுவும் தன்னுடைய படைகளின் தளபதியான விஷ்னுவை ராமான பிறக்க கட்டளையிட்டார்.
இதன் பின், அவர் ராமர், பரதன், லட்சுமணன், சத்ருக்கனன் என நான்கு பிள்ளைகளைப் பெற்றார் தசரதன். சிவனுக்கு “புத்திரகாமேட்டீஸ்வரர்’ என்று பெயர் சூட்டினார். இந்த நிகழ்வின் அடிப்படையில் இங்கு கோயில் எழுப்பப்பட்டுள்ளது.
தசரதர் சன்னதி –
ஜமதக்னி மகரிஷியின் கமண்டலத்தில் இருந்து கொட்டிய தீர்த்தம் நதியாக பெருக்கெடுத்தது. கமண்டல நதி எனப்பட்ட, இத் தீர்த்தக் கரையில் அமைந்த கோயில் இது. கோயில் எதிரே இந்த நதி வடக்கில் இருந்து கிழக்காக திரும்பி சுழித்துக் கொண்டு ஓடுகிறது. மழைக்காலங்களில் இந் நதியில் தண்ணீர் அதிகமாக ஓடும்.
புத்திரகாமேட்டீஸ்வரர், ஒன்பது தலை நாகத்தின் கீழ் காட்சியளிக்கிறார். பவுர்ணமியன்று இவருக்கு விசேஷ பூஜை நடக்கும். அன்று, சுவாமி புறப்பாடும் உண்டு. அம்பாள் பெரிய நாயகிக்கு கொடி மரத்துடன் கூடிய சன்னதி உள்ளது.
கோயிலுக்கு வெளியில் தசரதர் சன்னதி இருக்கிறது.
இவர் சக்கரவர்த்தியாக இல்லாமல், யாகம் நடத்தியபோது இருந்த அமைப்பில் முனிவர் போல காட்சியளிப்பது வித்தியாசமான தரிசனம். கைகளில் ருத்ராட்ச மாலை, கமண்டலம் வைத்திருக்கிறார்.
குழந்தை பாக்கிய வழிபாடு -
குழந்தை வேண்டி புத்திரகாமேட்டீஸ்வரரை வணங்குபவர்கள், ஏழு திங்கள்கிழமைகள் விரதமிருக்க வேண்டும். விரதம் துவங்கும் நாளன்று மதியம் ஒரு குழந்தைக்கு நெய்ச்சோறோ, தயிர்ச்சாதமோ, கறிவகைகளுடன் சாதமோ அவரவர் தகுதிக்கேற்ப கொடுத்து, பிறகு தாங்கள் சாப்பிட வேண்டும். இரண்டாம் வாரத்தில் 2 குழந்தைகள், மூன்றாம் வாரத்தில் 3 என்ற அடிப்படையில், ஆறாவது திங்களன்று ஆறு குழந்தைகளுக்கு அன்னம் பரிமாற வேண்டும்.
ஏழாவது திங்களில் புத்திர காமேட்டீஸ்வரருக்கு செவ்வரளி மற்றும் பவள மல்லி மாலை (கோயிலில் இந்த மாலை கிடைக்கும்) அணிவித்து, மிளகு சேர்த்த வெண்பொங்கல் நைவேத்யம் செய்து வணங்க வேண்டும். ஆனி பவுர்ணமியன்று கோயில் சார்பில் நடக்கும் புத்திர காமேஷ்டி யாகத்திலும் கலந்து கொள்ளலாம்.
புத்திர தோஷம், நாக தோஷம் நீங்க கோயில் வளாகத்திலுள்ள வேம்பு, ஆலமரத்தடியில் தங்கள் நட்சத்திர நாளில் நாக பிரதிஷ்டை செய்து வேண்டி கொள்ளலாம்.
முதலும் முடிவும் -
கமண்டல நதிக்கரையில் வடக்கு நோக்கி விநாயகரும், எதிரே ஆஞ்சநேயரும் உள்ளனர். ஒரு செயலைத் துவங்கும்போது, இந்த விநாயகரை வணங்கி துவங்குகின்றனர். அச்செயல் சிறப்பாக முடிந்ததும் ஆஞ்சநேயருக்கு நன்றி சொல்கின்றனர். ஆஞ்சநேயர் சிலையில் சங்கு, சக்கரம் உள்ளது.
திருவிழா –
ஆடி சுவாதியில் லட்ச தீபம், நவராத்திரி, சிவராத்திரி.
இருப்பிடம் -
திருவண்ணா மலையில் இருந்து 58 கி.மீ., தூரத்தில் ஆரணி உள்ளது (வேலூரில் இருந்து 41 கி.மீ.,). பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம். ஆட்டோ உண்டு.
திறக்கும் நேரம் -
காலை 7- 11 மணி, மாலை 4.30- இரவு 7.30 மணி.

தெய்வ நடராஜர் வரலாறு

மறுமொழியவும்

சிவ வடிவங்களில், நடராஜர் உருவம் முக்கியமானது. இது உருவான வரலாறைக் கேளுங்கள்:
சோழ மன்னன் ஒருவன், சிவபெருமானின் நடனம் பற்றிய தகவலைப் படித்தான்; அந்தக் காட்சியை, சிலையாக வடிக்க எண்ணம் கொண்டான். தன் நாட்டிலுள்ள சிறந்த சிற்பிகளைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடம் நடராஜர் சிலை யைச் செய்யும்படி வேண்டினான்; அவர்களும், ஒரு நல்ல நாளில் பணியைத் துவங்கினர். சிலைக்கான அச்சை வார்த்து, உலோகக் கலவையை அதில் கொட்டினர்; ஆனால், சிலை சரியாக வரவில்லை. பலமுறை முயற்சி செய்தும், இதே நிலை நீடித்தது. அவர்கள், மன்னனிடம் தங்கள் இயலாமையைத் தெரிவித்தனர். மன்னனுக்கு கோபம் வந்துவிட்டது.
“என்ன செய்வீர்களோ தெரியாது… சிலை செய்தாக வேண்டும். அதுவும் இன்று மாலைக்குள் செய்தாக வேண்டும்; இல்லாவிட்டால், உங்கள் அனைவரையும் கொன்று விடுவேன்…’ என, எச்சரித்து விட்டு போய் விட்டான்.
அவர்கள் எவ்வளவோ முயற்சித்தனர்; சிலை செய்ய முடியவில்லை. தங்கள் வாழ்வு இறுதிக் கட்டத் திற்கு வந்துவிட்டது என்று பயந்து போயிருந்த நிலையில், ஒரு முதியவரும், மூதாட்டியும் அவர்கள் இருந்த இடத்திற்கு வந்தனர். அப்போது, சிற்பிகள் ஐந்து வகை உலோகங்களை கொதிக்க வைத்துக் கொண்டிருந்தனர்.
அந்த பெரியவர்கள், அதைக் கஞ்சி என நினைத்து, தங்களுக்கு பசிப்பதாகவும், கஞ்சியை ஊற்றும்படியும் கேட்டனர். எரிச்சலில் இருந்த சிற்பிகள், “குடியுங்கள்… நிறைய குடியுங்கள். நாங்கள் சாகப் போகிறோம்; போகும் போது, உங்களுக்கு தானம் செய்த புண்ணியத்தைச் சேர்த்துக் கொண்டு போகிறோம்…’ என்று சொல்லி, ஒரு செம்பில், நாலு அகப்பை உலோகக் கலவையை ஊற்றிக் கொடுத்தனர்.
முதியவர்கள் அதை குடித்தனர். உடனே நடராஜ மூர்த்தியும், சிவகாமி அம்மையுமாக மாறி, சிலை வடிவில் காட்சியளித்தனர். தங்கள் உயிரைக் காக்க வந்த முதியவர்கள் சிவனும், பார்வதியும் என்றறிந்த சிற்பிகள், ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். சிலை அமைந்த வரலாற்றை மன்னனுக்கு எடுத்துக் கூறினர். மன்னனும், இறைவனின் திருவருளை வியந்து, சிதம்பரத்தில் கோவில் கட்டி, பிரதிஷ்டை செய்தான்.
அந்நியர் படையெடுப்பின் போது, கோவில்களில் உள்ள சிலைகள் நொறுக்கப்பட்டன. அபூர்வமான நடராஜர் சிலை பாழ்பட்டு விடக் கூடாது என்பதால், தில்லை வாழ் அந்தணர்களும், ஆயிரத்தெட்டு மடாதிபதிகளும் சிலையைஎடுத்துக் கொண்டு, ஊர் ஊராகச் சென்றனர். கடைசியாக, மலையாள தேசத்துக்கு எடுத்துச் சென்று, ஒரு ஆலமரப்பொந்தில் ஒளித்து வைத்தனர்.
இதனால், அந்த ஊருக்கு, “ஆலப்புழை’ என்று பெயர் ஏற்பட்டது. அந்நியர்கள் சென்றதும், அந்தச் சிலையை அவ்வூரிலுள்ள அம்பலத்தில் (கோவிலில்) வைத்து பூஜை செய்தனர். அந்த இடத்துக்கு, “அம்பலப்புழை’ என்று பெயர் ஏற்பட்டது. இவ்வாறு பல்வேறு சிரமங்களைக் கடந்து, நடராஜர் சிலை உருவானது.
சிவாலயங்களில் உள்ள நடராஜர் சன்னதிகளில், ஆண்டில் ஆறு நாட்கள் அபிஷேகம் நடத்தப்படும். அதில், ஆனி உத்திர நாளும் ஒன்று. இந்த நன்னாளில், நடராஜப் பெருமானை வணங்கினால், பிறப்பற்ற நிலை கிடைக்கும்.

அன்பு ஆச்சாரம் எது பெரியது – சிவதாத்தா கதை – 2

மறுமொழியவும்

சிவதாத்தா கிராமத்தில் உள்ள மடத்தின் திண்ணையில் அமர்ந்திருந்தார். அருகிலிருந்த குலத்தில் சில சிறுவர்கள் குதித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். அதே நேரம் சுவாமிக்கு அபிசேகம் செய்ய தண்ணீர் எடுக்க வந்த பிராமணன், அந்தக் குழந்தைகளை விரட்டத் துவங்க. சிவதாத்தா வெகுண்டு எழுந்தார்.
“டேய் மடையா, யாரை விரட்டுகின்றாய்”
“என்ன சித்தரே!, குழந்தைகளை விரட்டினால் கோபம் வருகிறதோ!. சுவாமிக்கு அபிசேகம் செய்ய கலங்கிய நீரை எடுத்துச் செல்ல முடியுமோ. ஆச்சாரம் என்னாவது.”
“மடயனே, அன்பை விடவும் ஆச்சாரம் ஒன்றும் பெரியதல்ல.”
“யார் அப்படியெல்லாம் சொன்னது”
“அந்த ஈசனே சொல்லியிருக்கிறான். கேள்,.”

“திருநீலநக்க நாயனார் தம்பதியர் சிவபெருமான் மீது அபரிமிதமான பக்தி கொண்டவர்கள். நாயனாரின் மனைவி பெருமானைத் தம் குழந்தையாகவே பாவித்து அன்பு செலுத்துபவர். இருவரும் தினமும் ஆலயம் சென்று இறைவனை வணங்கிய பின்தான் தமது அன்றாட வேலைகளைச் செய்வார்கள்.”
“ஒருநாள் பெருமானை தரிசிக்கச் சென்றார்கள். அது சமயம் சிவலிங்கத்தின் மீது ஒரு சிலந்திப்பூச்சி விழுந்துவிட்டது. அதைக்கண்ட நாயனார் மனைவியின் தாயுள்ளம் பதறியது. லிங்கத்தின்அருகில் சென்று, வாயால் ஊதி அப்பூச்சியை அகற்றினார். இதைக்கண்ட நாயனாருக்கு கடுமையான கோபம் வந்துவிட்டது.”
“பெருமானின் மீது பட்ட சிலந்திப் பூச்சியை கையால் அகற்றாமல் எச்சில் படுமாறு வாயால் ஊதி அகற்றியது எத்தனை பெரிய அபச்சாரம்? ஏன் இப்படிச்செய்தாய்? என கோபத்துடன் கேட்டார். ஸ்வாமி! வேண்டுமென்றேதான் அப்படிச் செய்தேன்.”
“எம்பெருமானின் திருமேனியில் விழுந்த சிலந்திப் பூச்சியைக் கையால் அகற்ற முயன்றால் அது ஆங்காங்கே ஓடும். அப்போது அது பெருமானின் மேனியில் எரிச்சலை ஏற்படுத்தும். சிலந்தியின் விஷம் மிகக்கொடியது. விஷம்பட்ட இடமெல்லாம் கொப்பளங்கள் வந்துவிடும். அதனால்தான் வாயினால் ஊதி அகற்றினேன்.
எச்சில்பட்டால் ஒன்றும் தவறு கிடையாது, என்றார் மனைவி. “
“மனைவியின் பதில் அவரைச் சமாதானப்படுத்தவில்லை. என்னதான் இருந்தாலும் அவள் பெருமான் மீது எச்சில்பட வாயால் ஊதியது தவறுதான். இதுமன்னிக்க முடியாத பெரும் தவறு.வேண்டுமென்று தான் வாயால் ஊதினேன் என்று எத்தனை துணிவாகக் கூறுகிறாள்? இனி இவளை மனைவியாக ஏற்கக்கூடாது என்று எண்ணி, அவளைக் கோயிலிலேயே விட்டுவிட்டு வீட்டுக்கு போய்விட்டார்.”
“இறைவன் விட்டவழி என்று எண்ணியபடி நாயனாரின் மனைவி கோயில் மண்டபத்திலேயே புடவைத் தலைப்பை கீழே விரித்துக் கையை தலைக்கு வைத்துக் கொண்டு படுத்துவிட்டார். நாயனாரின் கனவில் பெருமான் தோன்றி, திருநீலா! என்னைப் பார். என் மேனியைப் பார் என்றார். ஆண்டாண்டு காலம் தவம் செய்திருந்தாலும் காண இயலாத ஈஸ்வரனின் திருமேனி எங்கும் கொப்புளங்கள் படிந்திருந்தன.”
“நாயனார் துடித்தார். ஐயனே! இது என்ன கொப்புளங்கள்? என்று பதற்றத்துடன் கேட்டார். சிலந்திப்பூச்சி என்னைக் கடித்ததால் உண்டான கொப்புளங்கள். இங்கே பார்! உன் மனைவி வாயால் எச்சில்பட ஊதிய இடம் எல்லாம் கொப்புளங்கள் மறைந்திருப்பதைப் பார். தனது எச்சிலால் எனக்கு மருந்திட்ட அன்னையை நீ தண்டித்துவிட்டாய்! சிலந்தி கொட்டியதால் என் உடலில் மட்டும்தான் எரிச்சல்.”
“ஆனால், ஆசாரம் என்று கூறி ஒரு உத்தமித் தாயின் அன்பை புரிந்து கொள்ளாமல் அவளை வார்த்தையால் கொட்டினாயே! அந்த உன் செயலால் என் உள்ளத்தில் ஏற்பட்ட எரிச்சலைத் தாங்க முடியவில்லை, என்று கூறி மறைந்தார். கனவில் ஈசனைக் கண்ட நாயனார் துள்ளி எழுந்தார்.”
“எத்தனை பெரிய தவறு செய்துவிட்டேன்? ஆசாரத்தைவிட அன்பே சிறந்தது, பெரியது என்பதை நான் உணரத்தான் எம்பெருமான் இந்நிகழ்ச்சியை நடத்திக் காட்டினார் போலும், என்று புலம்பியபடி கோயில் மண்டபத்திற்குச் சென்று அன்புடன் மனைவியை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்தார். அன்று முதல் ஆசாரம் பார்க்காமல், ஆசாரத்தை விட்டுவிட்டு அன்பே பெரிதென நினைத்து வாழ்ந்தார்.”
“இப்போது என்னச் செய்யப் போகிறாய் ” என்று கேளியாகப் பார்த்தார் சிவதாத்தா.
“மன்னித்துவிடுங்கள் சித்தரே, ஆச்சாரத்தை மட்டுமே பெரிதாக எண்ணியே அன்பை மறந்துவிட்டேன்” என்று சிவதாத்தாவிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு வேறு இடத்தில் தண்ணீரை எடுக்கச் சென்றார் அந்த பிராமணன்.

பஞ்ச குண சிவ மூர்த்திகள்

மறுமொழியவும்

பஞ்ச குணம் -
சாந்தம், ஆனந்தம், ருத்திரம், வசீகரம், கருணை என ஐந்து குணங்களையும் பஞ்ச குணம் என்கிறோம். மனிதர்களுக்கு இருப்பதைப் போல இந்தக் குணங்களை இறைவனுக்கும் பொருத்திப் பார்த்து மகிழந்தார்கள் சைவர்கள். நாமும் அந்த பஞ்ச வடிவ குண மூர்த்திகளை ரசிப்போம்.
ஆனந்த மூர்த்தி -
ஆனந்தம். உலகில் வாழுகின்ற எல்லா உயிர்களுக்கும் உரியது. சிவன் தன்னுடைய ஆனந்தத்தினை வெளிபடுத்த நடனமாடும் வடவம் நடராஜர். எல்லையில்லா பெருமைகளை உடைய இந்த வடிவத்தில், சிவ ஆனந்தத்தையும், சிவ தத்துவத்தையும் ஒரு சேர உணர முடியும்.
காலமூர்த்தி -
மக்களைக் காக்கும் பொறுப்பு கடவுடையது. அந்த மக்களைக் காக்கும் பொருட்டு ஈசன் எடுத்த வடிவமே கால பைரவர். அழகிய கோலத்துடன் காவலுக்கான மிருகம் நாயை வாகணமாகக் கொண்ட அற்புதக் கோலம். முழு சிவ வடிவத்தினை கால பைரவர் என்று வாழ்த்தி வணங்குகின்றனர்.
வசீகர மூர்த்தி -
பிச்சாண்டவர் கோலம் வசீகரத்தின் சிகரம். தருகாவனத்தில் இருந்த முனிவர்களின் ஆணவம் அடக்க, அழகே உருவாய் முனிபத்தினிகளை பித்துபிடிக்க வைத்த வடிவம். பிக்ஷாடணர், பிச்சாண்டவர், பிச்சாண்டி, பிச்சை தேவன் என்றெல்லாம் அழைக்கப்படும் வடிவம் இது.
கருணா மூர்த்தி -
உமையோடும், கந்தனோடும் இறைவன் குடும்ப சமேதராய்க் காட்சி அளிக்கும் திருவுருவே சோமாஸ்கந்த மூர்த்தி. இறைவன் ஒரு இனிய அன்பான கணவனாய், பாசமிக்க தந்தையாய் இருக்கும் உருவம். குடும்ப உறவுகளின் மேன்மையை உலகிற்கு உணர்த்துவதற்கான ஈசன் எடுத்த வடிவம்.
சாந்த மூர்த்தி -
தட்சணாமூர்த்தி வடிவத்தை குரு என்று சைவர்கள் வணங்குகிறார்கள். தென் திசையை நோக்கி ஞான வடிவினில் ஆலமரத்தின் கீழ் அமர்ந்திருப்பது இந்த வடிவின் சிறப்பு. முனிவர்களுக்கும், மக்களுக்கும் ஞான அறிவை போதிக்கும் போதகராக ஈசன் இருக்கிறார்.

இதயமே இல்லாதவர் – சிவதாத்தா கதைகள் – 1

மறுமொழியவும்

அன்பானவன் எடுத்த அவதாரங்கள் ஏராளம். இந்த சிவதாத்தாவும் அதிலொன்றாக, “எல்லாம் சிவன் செயல்!” வாசகர்களுக்காக, என் சிவன் எடுக்கும் அவதாரம்.
கொல்லிமலைக்கு அருகில் இருக்கும் பசுமை கொஞ்சும் கிராமம் அது. மலையிலிருந்து இறங்கிய சிவதாத்தா தன் தாடியை வருடிய படி கிராமத்திற்குள் நுழைந்தார். உழைத்து உழைத்தே உறுதியான உடல், எட்டடிக்கு முன்னால் வருகின்றவரையே அளந்துவிடும் பார்வை, முகத்தை மறைத்துநிற்கும் தாடி மீசைக்குள் எப்போதும் சிறு புன்னகை. இதுதான் சிவதாத்தா.
சிவதாத்தாவை கிராமத்தின் நுழைவுவாயிலில் கம்பீனமான தோற்றத்துடன் முனீஸ்வரன் வரவேற்றான். எல்லை காவல்தெய்வமான அவன் அனுமதியின்றி கிரமத்திற்குள் யாரும் நுழைய முடியாது. சிவதாத்தா அவனை வணங்கிவிட்டு, சாம்பலை எடுத்துப் பூசினார்.
இனி இந்த கிராமத்தில் தான் வேலை என மனதுக்குள் சொல்லிக்கொண்டு, அருகில் யாரேனும் தென்படுகின்றார்களா என பார்வையை செலுத்தினார். ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த பரமனைக் கண்டார். மெதுவாக அவனை நோக்கி அடியெடுத்து வைக்களானார். அவருடைய வருகையை கவணித்த பரமன், அவரிடம் ஓடினான்.
“தம்பி, உன்னுடைய முதலாளியை சந்திப்பதற்காக கொல்லிமலையில் இருந்து வருகிறேன். வா என்னுடன்” என்றார்.
“ஐயா ஆடுகள் மேய்கிறதே, அவைகளை விட்டுவிட்டு எப்படி வருவது”
“இதோ இங்கே இருக்கானே முனி, அவன் பார்த்துக் கொள்வான். வா என்னுடன் ” என்று சொல்ல, பரமனுக்கும் நம்பிக்கை ஏற்பட்டது. அவன் சிவதாத்தாவை முதலாளியிடம் கூட்டிச் சென்றான்.
கொல்லிமலைச் சித்தர் ஒருவர் முதலாளியை காப்பாற்ற வந்திருக்கின்றார் என தெரிந்து கொண்டு, வழியிலேயே அவரை மக்கள் தடுத்தனர்.
“உயிர் வலியோடு துடித்துக் கொண்டிருக்கும் எதிரிக்கும் அருள் செய்வதே, அவனுக்கு தரும் பெரும் தண்டனை. அதைக் கொடுக்கவே நான் வந்துள்ளேன். ” என்றார் சிவதாத்தா.
“சித்தரே, அவனுக்கு இதயமே இல்லை. அவனைக் காப்பாற்றி எங்களுக்கு தீமை செய்து வீடாதீர்கள் ” என்றார் கூட்டத்திலிருந்த ஒரு முதியவர்.
“இதயமில்லாதவன் என்றால் என்றோ அவன் இறந்துவிட்டான். அந்தப் பிணத்திற்கு புது உயிர் கொடுக்கவே வந்துள்ளேன். நோயுற்றிருப்பது ஒரு உயிர் என்பதை மறந்து, நீங்களும் பாவத்தினை சேர்த்துக் கொள்ளாதார்கள் ” என்று சித்தர் சொல்லவும், எல்லோரும் அமைதியாக வழிவிட்டார்கள்.
முதலாளியின் மனைவி அவரை வரவேற்றாள். பரமன் அவளிடம் முதலாளியை காண வந்திருப்பதாக சொல்லவும், அவளுக்கு முதலில் புரியவில்லை. கொல்லிமலையிலிருந்து வந்திருக்கிறார் என்றவுடனே, அவளுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.
சாந்தம் தவழும் சிவதாத்தாவை வணங்கி “ஐயனே, தங்களைப் பார்த்தால் சித்தர் போல இரு்கிறது. என் கணவன் பல மாதங்களாய் கடும் நோயால் அவதிப்படுகின்றார். தாங்கள் தான் தயவு செய்து காப்பாற்ற வேண்டும் ” என மன்றாடினாள்.
“பெண்ணே, கணவன் வழிதவறும் போது, கண்டிப்பதற்கான உரிமை உன்னிடம் இருக்கிறது என்பதை மறவாதே!. இத்தனை துன்பங்களுக்கும் தீர்வு உன் எண்ண வெளிபாடுகலிருந்தே கிடைக்கிறது” என்றபடி சிவதாத்தா முதாலாளியின் அறைக்கு சென்றார்.
“உன்னைச் சுற்றி இருப்பவர்கள் வாழ்த்தினால், நீ இன்பமாக இருக்கலாம். உன்னைச் சுற்றி இருப்பவர்களின் உள்ளம் நோக நீ நடந்து கொண்டாய் அதனால் அவர்கள் உன்னை சபித்தார்கள். அந்தப் பலனை இப்போது அனுபவிக்கின்றாய்!”
முதலாளியின் கைகளில் சாம்பலைக் கொடுத்து, “தினமும் இதை இடு, அப்போதெல்லாம் இதைப் போல நானும் சாம்பலாக போயிருக்க வேண்டியவன். இனிப் போகப் போகிறவன். வாழும் குறைந்த நாட்களிலாவது உடனிருப்பவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் உனக்குள் இருக்கட்டும்.” என்று சொல்லி வெளியேறினார்.
திருநீர் அணிவதன் தத்துவம் -
இந்த உடல் எபபோது வேண்டுமானாலும் சாம்பலாகலாம். உயிர் வாழும் காலத்திலாவது மற்ற உயிர்களுக்கு இன்பம் தர வேண்டும் என நினைக்கவே உடலெங்கும் சாம்பலை அணிகின்றார்கள் சைவர்கள்.

பஞ்ச பூத தளங்கள் – நீர் – திருவானைக்காவல்

ஏன் நீர் தளம் -
சிவன் கட்டளைக்காக அம்பிகை, பூலோகத்தில் மானிடப்பெண்ணாக பிறந்தாள். இங்கு காவிரி நீரில் லிங்கம் பிடித்து வழிபட்டாள். சிவன் அந்த லிங்கத்தில் எழுந்தருளி அவளுக்குக் காட்சி தந்தார். அம்பிகையால் நீரில் லிங்கம் உருவாக்கப்பட்ட தலம் என்பதால் இது, பஞ்ச பூத தலங்களில் “நீர்’ தலமானது.
ஜம்புகேஸ்வரர் -
இந்த திருவாநைக்காவல் தளத்தில் இறைவன் பெயர் “ஜம்புகேஸ்வரர் “. ஜம்பு என்னும் முனிவர் சிவனை வேண்டி இங்கு தவமிருந்தார்.
சிவன் அவருக்கு காட்சி கொடுத்து, நாவல் பழ பிரசாதம் கொடுத்தார். பழத்தை உண்ட முனிவர், அதன் புனிதம் கருதி விதையையும் விழுங்கி விட்டார். அவர் விழுங்கிய விதை வயிற்றுக்குள் முளைத்து, தலைக்கு மேலாக மரமாக வளர்ந்தது. அவர் சிரசு வெடித்து முக்தி பெற்றார்.
நாவல் மரத்துக்கு “ஜம்பு’ என்றும் பெயருண்டு. அம்பிகையால் அமைக்கப்பட்ட நீர் லிங்கம் இந்த மரத்தின் கீழ் அமைந்தது. பக்தராகிய ஜம்புவுக்கு முக்தி தந்தததால், சுவாமி “ஜம்புகேஸ்வரர்’ என பெயர் பெற்றார்.
அகிலாண்டேஸ்வரி -
இங்கிருக்கும் இறைவியின் பெயர் “அகிலாண்டேஸ்வரி “. அகிலம் என்றால் உலகம். அகிலத்தை ஆளுகின்ற சக்தி படைத்தவள் என்பதே இதன் உட்பொருள்.
மாறுவேடம் –
பிரம்மா, ஒருமுறை தான் படைத்த பெண்ணையே அடைய விரும்பினார். இதனால் அவருக்கு “ஸ்திரீ தோஷம்’ உண்டானது. தோஷ நிவர்த்தி பெற சிவனை வேண்டினார். அவருக்கு அருள சிவன் கைலாயத்திலிருந்து கிளம்பினார். அப்போது அம்பிகை, தானும் வருவதாக கூறினாள். சிவன் அவளிடம், பிரம்மா பெண்கள் மீது மோகம் கொள்பவர் என்று சொல்லி அவளை உடன் அழைத்துச் செல்ல மறுத்தார்.
ஆனால், அம்பிகை சிவனிடம், “”நான் உங்களது வேடத்தில் வருகிறேன், நீங்கள் சேலை அணிந்து என் வேடத்தில் வாருங்கள்!” என்றாள். சிவனும் ஏற்றுக்கொள்ள இருவரும் மாறுவேடத்தில் சென்றனர். சிவமும், சக்தியும் ஒன்று என்பதன் அடிப்படையிலும் இந்த திருவிளையாடல் நிகழ்ந்தது. பின்னர் பிரம்மாவுக்கு இருவரும் பாவமன்னிப்பு வழங்கினர்.
கோச்செங்கட்சோழன் -
கைலாயத்தில் சிவனுக்கு சேவை செய்த சிவகணங்களான புட்பதந்தன், மாலியவான் என்னும் இருவர் தங்களில் யார் அதிகமாக சேவை செய்கிறார்கள் என்பதில் போட்டி வந்தது.
ஒரு கட்டத்தில் இருவருக்கும் இதுவே பிரச்னையாகி, ஒருவரையொருவர் சிலந்தியாகவும், யானையாகவும் பிறக்கும்படி சபித்துக் கொண்டனர். இதனால் மாலியவான் சிலந்தியாகவும், புட்பதந்தன் யானையாகவும் பிறந்தனர். இவ்விருவரும் இத்தலத்தில் சிவனை வழிபட்டனர். இதிலும் இவர்களிருவருக்கும் போட்டி உண்டானது.
இதில் சிலந்தி, யானையில் தும்பிக்கைக்குள் புகுந்தது. இதில் சிவன், யானைக்கு மட்டும் முக்தி கொடுத்தார். சிலந்தி, யானையைக் கொல்ல முயன்றதற்காக மீண்டும் பிறக்கும்படி செய்தார்.
சிலந்தி, சோழ மன்னர் சுபவேதர், கமலாவதியின் மகனாகப் பிறந்தது. இவரே, கோச்செங்கட்சோழ மன்னர் ஆவார். இம்மன்னரே தனது முற்பிறவிப் பயனால், யானைகள் புக முடியாதபடி சிவனுக்கு மாடக்கோயில்கள் கட்டினார். இக்கோயிலையும் யானை புகாதபடி திருப்பணி செய்தார். இம்மன்னனுக்கு இங்கு சன்னதி இருக்கிறது.

ஆபத்தாண்டவனின் அரிய தாண்டவம்

2 மறுமொழிகள்

சிவ தாண்டவங்கள் -
சிவ தாண்டவங்களை எண்ணிக்கையில் அடக்க இயலாது.
ஆனந்த தாண்டவம் -
சிவன் நடனமாடும் தளங்களில் முதன்மையானது தில்லை என்றழைக்கப்படும் சிதம்பரம். இந்த தளத்தி்ல் சிவன் பதஞ்சலி, வியாக்ரபாதர் போன்றோர்களுக்காக ஆனந்த தாண்டவம் ஆடினார். இந்த தாண்டவம் பிரபஞ்ச இயக்க நடனம் என்று போற்றப்படுகிறது.
அனைத்து நடத்திற்கும் உள்ள ஏக தத்துவத்தை விளக்கும் வடிவமாக நடராஜர் நடனம் விளங்குகிறது. மிகையில்லாத உண்மையை வெளிப்படுத்தும் இந்த நடத்தை, பரத கலையின் சின்னமாக மக்கள் போற்றுகின்றனர். இது ஆனந்த தாண்டவம் எனவும் வழங்கப்படுகிறது.
இந்த ஆனந்த தாண்டவத்தை குற்றாலத்திலும், சிதம்பரத்திலும் காணலாம்.
காளிகா தாண்டவம் -
பிரம்மாவுக்கு படைத்தல், விஷ்னுவுக்கு காத்தல், சிவனுக்கு அழித்தல் என பொதுவாக சொன்னாலும், படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என ஐந்து தொழில்களை ஈசன் செய்கிறார். இதைக் குறித்து ஆடும் நடனம் காளிகா தாண்டவம் எனப்படுகிறது.
இந்தக் காளிகா தாண்டவத்தை திருநெல்வேலியில் காணலாம்.
சந்தியா தாண்டவம் -
பாற்கடலிருந்து வெளிவந்த விஷத்தை குடித்துவிட்டு சிவன், உரைந்து நின்றார். தேவர்களும், மூவரும் வணங்கி நிற்க, அப்போது சிவன் ஆடிய நடனம் சந்தியா தாண்வம் எனப்படுகிறது. இந்த நடனத்தின் நேரத்தைதான் பிரதோசம் என்று சைவர்கள் கொண்டாடுகின்றார்கள்.
மற்ற தாண்டவங்களைப் போல இடதுகாலை தூக்கி ஆடாமல் சிவன், வலது காலை தூக்கி ஆடுவது மேலும் சிறப்பு.
இந்த சந்தியா தாண்டவத்தை மதுரையில் காணலாம்.
ஊர்த்துவ தாண்டவம் –
சிவனுக்கும், சக்திக்கும் இடையே நடனப் போட்டி நடந்தது. அந்தப் போட்டியில் ஒரு காலை தலைக்கு மேல் தூக்கி நடமாடினார் சிவன். அதைப் போல சக்தியால் நடனமாட இயலவில்லை. இந்த தாண்டவத்தை ஊர்த்துவ தாண்டவம் என்கின்றனர்.
இந்த ஊர்த்துவ தாண்டவத்தை திருவாலங்காட்டில் காணலாம்.
கஜ சம்ஹாத் தாண்டவம்
தருகாணவனத்து முனிவர்கள் ஆணவத்தினால் இறையருளைப் பெறாமல் இருந்தார்கள். அவர்களின் ஆணவத்தினை யானையாக மாற்றி சிவன் வெற்றிக் கொண்டார். ஆணவம் அழிந்த முனிவர்கள் சிவ பெருமானை வணங்கி முக்தி பெற்றனர். இந்த தாண்டவத்தில் சிவன் யானையின் மீது ஆடுவார்.
இந்த கஜ சம்ஹாத் தாண்டவத்தை நன்னிலம் அருகேயுள்ள திருச்செங்காட்டாக்குடியில் காணலாம்.
அரிய தாண்டவம்

அதிசயம் அற்புதம் – நாகலிங்கப்பூ

மறுமொழியவும்

ஆன்மீக அதிசயம் -
ஒரு லிங்கம் அதைச் சுற்றி தவம் புரியும் ஆயிரக்கணக்கான முனிவர்கள், அவர்களுக்கும் மேல் பல ஆயிரம் தலைகளையுடைய பாம்பு. என்ன மர்மக்கதை போல இருக்கிறதா. நான் இது வரை சொன்னது ஒரு பூவைப் பற்றி…
இதன் பெயர் நாகலிங்கப் பூ,.
அறிவியல் அதிசயம் -
இதனை அதிசியப் பூ என்றே சொல்ல வேண்டும். அமைப்பில் சிவ லிங்கம், முனிகள், நாகம் என வினோதமாக இருப்பதைப் போலவே, நடைமுறை அறிவியலிலும் அதிசயமாக இருக்கிறது. இந்தப் பூ செடிகளில் பூப்பதில்லை. மரத்தில் பூக்கிறது. அதுவும் வேர்ப்பகுதிக்கு மேலேயும் கிளைகள் இருக்கும் பகுதிக்குக் கீழேயும் உள்ள இடைவெளிப் பகுதியில் தனியாகக் கிளை பரப்பி அதில் பூக்கின்றது.
தன்மை -
மென்மையான கவர்ச்சிகரமான பூக்களாக இருந்தாலும், உலகமுழுவதும் சைவர்களால் சிவ அம்சமாக இந்தப் பூ பார்க்கப் படுகிறது. இதனுடைய காயின் அமைப்பு பந்து போலவே இருப்பதால், Cannon ball என்று வெளிநாட்டினர் அழைக்கின்றனர்.
மருத்துவத்திலும் அதிசயமே -
ஆன்மீகம் மற்றும் அறிவியலில் இதன் அதிசியங்களைப் பார்த்துவிட்டோம். இந்த நாகலிங்க பூவும், மரமும் மருத்துவ உலகில் நோய் தீ்ர்க்க பெரிதும் உதவுகின்றன. இந்த நாகலிங்கப்பூ சில மூலிகை மருந்துகள் தயாரிக்கப் பயன்படுகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. குளிர் மற்றும் வயிற்று உபாதைகளுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.இதன் இளம் இலைகள் தோல் நோய்களுக்கு மருந்தாக உதவுகிறது.
காணப்படும் இடங்கள் -
இந்த அதிசயமான பூக்கள் தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சில சிவாலயங்களிலும், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் சில இடங்களிலும் இருக்கிறது.