August 10, 2011

சிவ... சிவ.... ராத்திரி சிவராத்திரி




சிவராத்திரி என்பதற்கு மங்களகரமான இரவு, இன்பம் தரும் இரவு என்பது பொருள். இந்த உலகம் முழுவதும் மகா பிரளயத்தில் சிவபெருமானிடம் ஒடுங்கிய நாளே மகா சிவராத்திரி என்று சைவ சமயம் கூறுகிறது. சிவராத்திரி ஐந்து வகைப்படும். அவை

நித்திய சிவராத்திரி: ஒவ்வொரு சதுர்த்தியிலும் சிவபூஜை செய்து ஒரு வருடத்தில் 24 சிவராத்திரி பூஜை செய்ய வேண்டும்.

பட்ச சிவராத்திரி: தை மாதம் கிருஷ்ணப் பிரதமை முதல் தொடங்கி 13 நாட்கள் தினமும் ஒருவேளை உணவு உட்கொண்டு சதுர்த்தசியில் பூஜை செய்யவேண்டும்.

மாத சிவராத்திரி: மாசி கிருஷ்ண சதுர்த்தசி, பங்குனி மாதத்தில் முதலில் வரும் திருதியை, சித்திரை கிருஷ்ண அஷ்டமி, வைகாசி முதல் அஷ்டமி, ஆனி சுக்ல சதுர்த்தி, ஆடி கிருஷ்ண பஞ்சமி, ஆவணி சுக்ல அஷ்டமி, புரட்டாசி முதல் திரயோதசி, ஐப்பசி சுக்ல துவாதசி, கார்த்திகை முதல் சப்தமியும், அஷ்டமியும், மார்கழி இருபட்ச சதுர்த்தசிகள், தை சுக்ல திருதியை இவை அனைத்தும் மாத சிவராத்திரி எனப்படும்.

யோக சிவராத்திரி: சோமவாரத்தன்று பகல், இரவு இரு பொழுதுகளிலும் அமாவாசையாக இருப்பின் அது யோக சிவராத்திரி எனப்படும். மஹா சிவராத்திரி:மாசி மாதம் கிருஷ்ண பட்சம் சதுர்த்தசி இரவு மஹா சிவராத்திரி புண்ணிய காலமாகும்.

அன்றைய தினம் இரவு கடைசி 14 நாழிகை (5 மணி 36 நிமிடங்கள்) லிங்கோத்பவ காலம் எனப்படும்.

சிவமகாபுராணம், லிங்க புராணம், ஸ்காந்த பாத்மம் முதலிய பத்து புராணங்கள், மற்றுத் வாதூலம் முதலிய ஆகமங்கள் ஆகியவற்றில் சிவராத்திரியின் சிறப்பு சொல்லப்பட்டிருக்கிறது.

சிவராத்திரியில் சிவனருள் பெற்ற வேடன்


வேடன் ஒருவன் காட்டிற்கு வேட்டையாடப் போனான். பகலில் விலங்கு ஒன்றும் கிடைக்காததால், இரவில்நிச்சயமாக வேட்டை ஆடலாம் என்று ஒரு மரத்தில்ஏறி அமர்ந்தான். இரவு தூங்காமல் இருக்க மரத்தில் உள்ள இலைகளைப் பறித்துப் போட்டுக் கொண்டே இருந்தான்.

இரவு கழிந்தது. சூரிய உதயம் ஆனது. பொழுது விடிந்ததும் மரத்திலிருந்து கீழே இறங்கினான். அவன் உறங்காமல் விழித்திருந்த நாள் மகா சிவராத்திரி. அவன் அமர்ந்திருந்த மரம் வில்வமரம். அவன் இலைகளைப் பறித்துப் போட்ட இடம் சிவலிங்கம் இருந்த இடம்.

அவனை அறியாமல் அவன் சிவபூஜை செய்தாலும், மறுபிறவியில் அவன் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்து சுகமாக வாழ்ந்தான்.

இது போன்று இன்னும் பல வேடன் திருக்கதைகள் சொல்லப்படுவதுண்டு.




சிவராத்திரி விரத பலன்கள்



* சிவராத்திரி மகிமையை திருநந்திதேவர் உபதேசிக்க சூரியன், முருகன், மன்மதன், யமன், இந்திரன், அக்கினி, குபேரன் முதலியவர்கள் அனுஷ்டித்து பல வரங்கள் பெற்றார்களாம்.


* விஷ்ணு இந்த விரதம் இருந்து சக்கராயுதத்தையும், லட்சுமியையும் பெற்றார்.


* பிரம்மஹத்தி தோஷத்தையும் நீக்க வல்லது சிவராத்திரி விரதம்.


* சிவராத்திரி விரதம் அனுஷ்டிப்பவருக்கு அசுவமேத யாகம் செய்த பலன்கிடைக்கும்.


* சிவராத்திரி விரதம் மேற்கொண்டால் புத்தி, முக்தி ஆகியவை கிடைக்கும்.

சிவராத்திரி ஏற்பட்டதற்கான ஒரு கதை



ஒரு யுகம் முடிந்தபோது பிரளயம் உண்டாகி உலகம் அழிந்தது.

ஆதலால் சகல உயிரினங்களும் ஒடுங்கியிருந்தன. எங்கும் இருள்மயமாகக் காட்சி அளித்தது. எஞ்சியிருந்தவர்கள் சிவனும் உமையவளும் மட்டுமே. அப்போது,

உயிர்கள் உய்யும் பொருட்டு நான்கு யாமங்களிலும் பார்வதி தேவி, சிவபெருமானைப் பூசித்து வேண்டிக்கொண்டார். சிவபெருமான் பிரம்ம தேவருக்கு ஆணையிடவே சிருஷ்டி உருவாகத் தொடங்கியது.

உமையவள் சிவபெருமானிடம், இந்த இரவைச் சிவராத்திரியாக அங்கீகரியுங்கள்.

சிவராத்திரியன்று தங்களை வழிபடுபவர்களுக்கு எல்லா நன்மைகளையும் தந்தருளுங்கள் என்று வேண்டிக்கொண்டார்.

ஒருசமயம் பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும் தங்களில் யார் பெரியவர்?

என்று போட்டி ஏற்பட்ட போது ஆணவ இருள் தோன்றியது.

தேவர்கள் அஞ்சி நடுங்கினார்கள். சிவன் ஜோதி வடிவமாக நின்றார். அப்போது தேவர்கள் சிவனைப் பூஜித்த காலமே சிவராத்திரி எனப்பட்டது.

தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது அதில் வெளிப்பட்ட ஆலகால விஷத்தை சிவபெருமான் உட்கொண்டார்.

விஷத்தின் கொடுமை அவரைப் பாதிக்காமல் இருக்கும் பொருட்டு தேவர்கள் இரவு முழுவதும் சிவபெருமானைப் பூஜித்தார்கள்.

அந்த நாளே சிவராத்திரி என்று ஆயிற்று. ஒரு முறை சக்தி விளையாட்டாகச் சிவபெருமானின் மூன்று கண்களையும் மூடினாள். அதனால் சர்வலோகங்களும் இருட்டில் மூழ்கின. அந்த நேரத்தில் தேவர்கள் ஒளி வேண்டி சிவபிரானை வழிபட்டனர். அந்த நாளே சிவராத்திரியாக ஆயிற்று.

சிவராத்திரி புண்ணிய கதைகள்

கொடியவன் புனிதம் பெற்ற நன்னாள்


சுகுமாரன் என்ற கொடிய கொள்ளைக்காரனை அரசனின் காவலர்கள் பிடிக்க வந்தார்கள். சுகுமாரன் பயந்து காட்டில் மறைந்து வாழ்ந்தான்.

ஒரு நாள் இரவு. அங்குள்ள சிவாலயத்தில் இரவு முழுக்க சிவ வழிபாடுகள் நடைபெற்றன. அதை ஆவலலுடன் சுகுமாரன் கண்ணுற்றான். அந்த நாள் சிவராத்திரி ஆகும். கொடியவனான அவன் ஆயுள் முடியும் பொழுது கூட சிவ... சிவ... என்று சொல்லிக் கொண்டே உயிர் விட்டான். சிவராத்திரி அன்று பூஜையைக் கண்டதாலும் உயிர் போகும் தறுவாயில் சிவ... சிவ... என்று சொன்னதாலும்அவன் பேறுகள் பல பெற்று சிவனடி சேர்ந்தான்.

குணந்தியை குபேரனாக்கிய சிவராத்திரி


கலிங்க நாட்டை ஆட்சி செய்து வந்த குணந்தி என்ற மன்னன், சிவராத்திரி நாளில் சிவாலயங்களில் விளக்குகள் ஏற்றி ஒளிமயமாக விளங்கச் செய்து வழிப்பட்டான். அதன் பயனாக அவன் அடுத்த பிறவியில் குபேரனாகப் பிறந்தான். அவனை இறைவன் தனக்கு தோழனாக இருக்கும்படி அருளினார்.

விபரிசன் பெற்ற திருவருள்


விபரிசன் என்ற மன்னன் முன் பிறவிகளை அறியும் ஆற்றல் பெற்றவன். இந்தச் சக்தி தங்களுக்கு எப்படி வந்தது? என்று அவன் மனைவி குமுதவல்லி கேட்டாள். அதற்கு அவன். நான் முற்பிறவியில் ஒரு நாயாக இருந்தேன். அப்பொழுது ஒரு நாள் சிவன் கோவியில் இரவு முழுக்க வழிபாடுகள் நடந்து கொண்டிருந்தன. அந்த நாள் சிவராத்திரி.

நான் ஒன்றும் அறியாமல் ஏதேச்சையாக அந்தக் கோயிலை பூஜை வேளையில்சுற்றி சுற்றி வந்தேன். அதுவே எனக்கு இப்பிறவியில் முற்பிறவிகளை அறியும் சக்தியும், அரசப் பதவி கிடைப்பதற்கும் காரணமானது என்று விளக்கினான்.
மஹா சிவராத்திரி


பன்னிரு இருள் ராத்திரிகளில் அருள் சிவனின்-சுப
நல் அருளாய் ஒளிக்கும் அருள் மஹா சிவராத்திரி-பாரில்
ஆறிரு இருள் ராத்திரிகளில் அருள் சிவனின்-சுப
நல் அருளாய் ஒளிக்கும். அருள் மஹா சிவராத்திரி,

பற்றியத் துயரிருகல பாருலகில் பரமசிவனின்-அருள்
நெற்றிக் கண்ணொளிக்கும் மஹா சிவராத்திரி-பாரில்
முற்றியப் பகைப் பினி. மனத் துயரகழ அருள் சிவனின்-அருள்
வெற்றித் திருச் சூழமொளிக்கும் அருள் மஹா சிவராத்திரி

தில்லையிலாடிய சிவ சம்போ சங்கரனின் அருள்-கைச்
சிற்றுடுக்கை ஒலித்து வரும் அருள் மஹா சிவராத்திரி-சிலாபம்
முன்னையிலாடிடும் முக்கண்ணன் மஹேஸ்வரன்.-பாரின்
முட்டறுக்கல் தீர்க்க வரும் அருள் மஹா சிவராத்திரி.

இமயமலை மீதினிலருள் ஈஸ்வரியாள் சக்தியுடன் இணைந்தாடிய-அருள்
ஈசன் இதயமிரங்கியருள வரும், இம் மஹா சிவராத்திரி-மாந்தர்
இதய நிலைக் கண்டு தேவி மஹா சக்தியன்னையுடன்-அருள்
ஈசன் அபயமளித்தருள்வான் இம் மஹா சிவராத்திரியில்

சிவன் ஜோதியாய் எழுந்த திருநாள்


பிரம்மனுக்கும் விஷ்ணுவிற்கும் தங்களில் யார் பெரியவர்? என்ற அகந்தை ஏற்பட்டு மோதல் ஏற்பட்டது. அப்பொழுது சிவபெருமான் அவர்களின் ஆணவ இருளை நீக்க ஜோதி வடிவாய், லிங்கோத்பவராய் சுடர் விட்டார். அந்த ஜோதி வடிவைக் கண்டு பிரம்மனும் விஷ்ணுவும் வியப்படைந்தனர்.

அப்போது, இதன் முடிவையும் அடியையும்காண்பவர்களே பரம் பொருள் ஆவர் என்ற அசரீரி ஒலித்தது. விஷ்ணு பன்றியாகவும், பிரம்மன் அன்னமாகவும் மாறி அடி முடி காண முயன்று தோற்றனர்.

இப்படி சிவபெருமான் ஜோதியாய் காட்சியளித்த இரவு சிவராத்திரி ஆகும். நிகழ்ச்சி நடைபெற்ற இடம் திருவண்ணாமலை. இதை உணர்த்தும் பொருட்டே சிவராத்திரி இரவு நடைபெறும் நான்கு கால பூஜைகளில் 3 ஆம் கால பூஜையில் ஆலயத்தில் சிவச் சந்நிதி பின்புறம் இருக்கும்லிங்கோத் பவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.





நன்றி!

No comments:

Post a Comment