August 06, 2011

ஒப்பில்லாச் சிறப்புடைய சிவராத்திரி


ஒப்பில்லாச் சிறப்புடைய சிவராத்திரி



பக்தி சிரத்தையுடன் ஆண்டுதோறும் கோவில் வழிபாடு, உபவாசம், நித்திரை துறத்தல் என மிகவும் உணர்ச்சி பூர்வமாகக் கொண்டாடப்படும் சைவத் திருநாளே சிவராத்திரி. நல்லவை எல்லாம் நடந்திடட்டும் எம் வாழ்விலே என்ற அயராத அன்புடன் இறையுணர்வு வளர்த்துக் கொண்டாடப்படும் பண்டிகைகளின் பின்னணியில் ஆன்மீக உண்மையும் பிழிந்தெடுத்த சாராம்சமும் இரண்டறக் கலந்து காணப்படும் என்பது யாவரும் அறிந்த உண்மையாகும். அந்த வகையில் சிவராத்திரி நன்னாளின் பின்னணியில் உள்ள உண்மைகளைச் சிறிது நோக்குவோம்.

சிவராத்திரிக்கு மற்றைய எல்லா சைவப் பண்டிகைகளையும் விட ஒப்பில்லாத் தனிச் சிறப்புண்டு. வரலாற்று அடிப்படை, புதைபொருளாராய்ச்சி, சாஸ்திர இதிகாசங்கள் மற்றும் தொன்றுதொட்டுக் கடைப்பிடிக்கப்படும் பழக்கவழக்கங்கள் என சிவராத்திரியின் மகிமையின் வாசத்தினைப் பறைசாற்றிடவென பல மலர்களுண்டு. ஆதாரமாக... ஸ்ரீ இராம பிரான் மற்றும் ஸ்ரீ கிருஷ்ண வழிபாடுகளுக்கு முற்பட்ட காலந்தொட்டே சிவ வழிபாடு நிலவியதற்கான தொல்பொருட் சான்றுகளாய் மொஹஞ்சதாரோ மற்றும் ஹரப்பா நகரங்கள் விளங்குகின்றன. துவாபர யுகத்தில் பக்தி மார்க்கத்தின் ஆரம்பத்தில் லிங்க வழிபாடு மிகவும் பிரபல்யமாக இருந்தது. சிவபுராணம், லிங்கபுராணம், ஸ்கந்த புராணம் என பலவகையான புராண இதிகாசங்கள் சிவமகிமையை எடுத்துச் சொல்லுகின்றன. பதஞ்சலி மற்றும் கெளசல்யர் போன்ற பிரசித்தமான முனிபுங்கவர் களின் சாஸ்திரங்களும் சிவனின் புகழ் பாடுகின்றன.

புராதன இந்திய வரலாற்றில் சிவன் மாத்திரமின்றி சிவ அடியார்களும் பிரத்தியேகமான இடத்தினைக் கொண்டிருந்தார்களென்பது வெளிப்படையாகவே தெரிகின்றது. வடக்குப் பகுதியில் விக்கிரமாதித்த மன்னனே சிவ வழிபாட்டுக்கு வித்திட்ட ஆரம்ப கர்த்தாவாக விளங்குகின்றான். இந்தியத் தேசம் பூராக பல்லாயிரக் கணக்கான சிவாலயங்கள் மற்றும் மடங்கள் கட்டப்பட்டும் விசேடமான வழிபாட்டுச் சம்பிரதாயங்கள் செழிப்படைந்துள்ளதைக் கண்கூடாகக் காணக்கூடியதாக உள்ளது. இவற்றுள் 12 ஜோதிர்லிங்க ஆலயங்கள் உச்ச தானத்தைப் பிரதிநிதித்துவம் செய்கின்றன. இந்தியா மட்டுமே சிவ வழிபாடு இடம்பெற்ற தானம் எனக் குறிப்பிடுவதற்கல்ல. இந்திய எல்லைகளைத் தாண்டி, புராதன நாகரிகங்கள் சிறப்பாக விளங்கிய எகிப்து, கிaஸ், ரோம் போன்ற ஐரோப்பிய தேசங்களிலும் அகழ்ந்தெடுக்கப்பட்ட அடையாள எச்சங்கள் சிவ வழிபாட்டின் புராதனத் தன்மைக்குச் சான்று பகருகின்றன. ஆயினும் இந்தியாவிலும் சரி, அதற்கு அப்பாலும் சரி லிங்கம் போன்ற ஓர் உருவத்தின் அடிப்படையே வழிபாட்டின் பிரதான கருப்பொருளாய் அமைந்திருத்தலானது, சிவனின் ஜோதிப் பிழம்பு வடிவத்தின் பிரதிபலிப்பினை ஆழமாக நிரூபிக்கின்றது. ஆரம்ப காலத்தில் தூய சிவ வழிபாடு மாத்திரமே நிலவினும், அதனைத் தொடர்ந்து ஏனைய தேவர்களை வழிபடும் நடைமுறை ஆரம்பித்தது. ஆரம்பத்தில் நடைமுறையிலிருந்த அவ்லிங்க வழிபாடானது பின்னர் படிப்படியாக ஏனைய மூர்த்திகளின் உருவ வழிபாட்டுக்கு விஸ்தரிக்கப்பட்டது.

சிறந்த உதாரணமாக ஸ்ரீ இராமர் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணர் போன்ற திருமூர்த்திகளின் உருவ வழிபாடு நிலவியமை மிகவும் தெட்டத் தெளிவான தற்போதும் நடைமுறையிலிருக்கின்ற ஒரு விடயமாகும். இத் தெய்வீக மூர்த்திகள் வழிபடத் தகுதிவாய்ந்தவர்கள் என்பதில் ஐயமேதுமில்லை. ஆயினும், சிவனுக்கும் இம்மூர்த்திகளுக்கும் ஓர் அடிப்படை வேறுபாடுண்டு. அவர்கள் தாய் வயிற்றில் சுமக்கப்பட்டு பிறப்பெடுத்து வளர்ந்து, சிறுவர்களாயிருந்து குருவிடம் பயின்று வாழ்ந்து சென்ற வரலாற்றைக் கொண்டுள்ளவர்கள். ஆயினும் சிவ பகவானுக்கு இத்தகைய வாழ்வு வரலாறு எதுவும் கிடையாது. அவர் ஒளியுருவமாகக் கருதப்பட்டதாலேயே ஜோதிலிங்க வழிபாடு நிலவியது, நிலவுகின்றது. ஆலயங்களில் அர்ச்சனைகளின் போது கூட, பிரம்ப தேவதாய நமஹ, விஸ்ணு தேவதாய நமஹ; சங்கர தேவதாய நமஹ” என அர்ச்சிக்கப்படினும், “சிவ ‘பரமாத்மாய’ நமஹ” எனவே வழங்கப்படுகின்றது. இந்நடைமுறை உதாரணமாவது, பரமாத்மா மற்றும் இதர தேவர்களுக்கிடையிலான வேறுபாட்டைத் தெளிவாக புலப்படுத்துகின்றது. அதாவது, தேவர்களனைவரும், தெய்வாம்சமுள்ள ஜீவாத்மாகளாக உள்ள அதே சமயம், பரமாத்மா எனப்படுபவர், சகல தெய்வாம்சங்களும் நிறையப்பெற்றதோடன்றி, அவற்றினை நிரந்தரமாக நிலையாகக் கொண்ட ஒப்பற்ற சக்தியாவார் என்பதே பொருத்தமான விளக்கமாகும். இன்னும் சிறப்பாகக் கூறுவதாயின் தெய்வீக அம்சங்களினை தேவர்கள் பெற்றமையானது, அத்தகைய தெய்வீக அம்சங்களை நிலையாகவும் சாகரமாகவும் கொண்ட பரமாத்மாவிடமிருந் தேயாகும் என்பதே சாலப்பொருத்தமானதாகும்.

இத்தகைய பெரும் புகழ்வாய்ந்த ஆத்மாக்களுக்கெல்லாம் தந்தையாகிய ஸ்ரீ ஸ்ரீ சிவபகவானின் புனித அவதார தினமே சிவ இராத்திரி என வழங்கப் பெறுகின்றது. சிவபகவானுடைய பூலோக வருகையானது சிவ இராத்திரி எனச் சிறப்பிக்கப் படுவதற்கான காரணம் யாதென்ற வினா எழுகின்றது. ஆம், சிவனின் பூலோகத் திரு அவதாரம் இடம்பெறும் காலம், பூவுலகு அஞ்ஞானம் என்ற இருள் கவிந்து அல்லலுறும் கரிக் காலமாகும். அஞ்ஞானத்தின் வியாபகத்துக்குள் அனைத்தையும் தொலைத்துவிட்ட மனிதன், இறுதியாக தன் மனிதத்தின் அதாவது சுயத்தின் இருப்பையும் தொலைத்துவிட்டு தான் யார் என்ற வினாவுக்கே விடை புரியாது அலையும் காலமே கரிய இருள் சூழ் கலிகாலமாகும். தன்னைப் பற்றிய அடையாளத்தையே தொலைத்துவிட்ட மனிதன், தன் ஆத்ம தந்தை தொடர்பான அறிவையும் சேர்த்தே தொலைத்து விட்டான். அதனாலேயே கட்டுங்கடங்காத அதர்மம் தலைவிரித்து நிற்கிறது. பூமியிலே அதர்மம் வியாபிக்கின்ற நேரமதில், தர்மத்தின் வாழ்வினைச் சூது கவ்வும் காலமதில், புண்ணிய அவதாரமெடுக்கிறார் பரமாத்மா. மீண்டும் தர்மத்தினைச் செழிக்கச் செய்து மானுடத்துக்குள் குடிபுகுந்துள்ள அரக்க குணங்களைச் சம்ஹாரம் செய்து புதிய உலகு படைப்பதே ஸ்ரீ ஸ்ரீ சிவபமாத்மாவின் திவ்ய குறிக்கோளாகும். தனது அறியாமை இருளினின்று விடுபட வேண்டுமென பகீரதப் பிரயத்தனம் செய்தும் மானுடனால் அதிலிருந்து விடுபட முடியவில்லை. எனவே மனிதனை விடுவிக்கும் பொறுப்பை, பிறவிச் சக்கரத்துக்கு அப்பாற்பட்ட கடவுளின் காரியமாக ஆகின்றது.

இத்தகைய உயரிய குறிக்கோளுடன் திவ்ய அவதாரம் புரியும் பகவான், சாதாரண ஜீவாத்மாக்களைப் போன்று கருப்பைக்குள் புகுந்து, கர்ப்பவாசம் புரிந்து, சாதாரண பிரசவ வட்டத்துக்குள்ளே அன்றி, அவரது பிறப்பானது, திவ்ய அவதாரமாகவே நிகழப்பெறுகின்றது. எந்தவிதமான கர்ம பந்தனங்களுக்கும் உட்படாத சிறப்பம்சத்தைக் கொண்ட சிவபகவான் மானுடரைப் போன்றது அல்லாது, மிகவும் தெய்வீகத் தனித் தன்மை பொருந்திய பிறப்பையும், பிறப்பின் பின் தெய்வீகக் கைங்கரியங் களையும் கொண்டிருத்தலானது ஆச்சரியமற்ற விடயமே.

ஆயினும் பிறவிகள் பலவற்றில் தான் பின்பற்றிய உண்மையான ஆன்மீகச் சாரத்தை மானுடம் எப்போதும் கொண்டு இருக்கின்றது. கடவுள், அவரது வசிப்பிடமான பரலோகம் போன்ற விடயங்கள் பெரும் சர்ச்சைக் குரியவையாக இருப்பினும், அவை பற்றிய புரிந்துணர் வில் மனிதனுக்கு இன்னமும் நாட்டம் மீதமிருப்பதற்குக் காரணமே இதுதான் என்றால் அது மிகையாகாது.

அனைத்து சக்திகளும் நிரம்பியவராகிய இறைவன், மனிதனைத் தடுத்தாட்கொள்ளும் காருண்யத்தினை வெறும் மாயஜால வித்தை போலன்றி, அறியாமை இருளைப் போக்கிட ஞானமென்ற ஒளியைத் தந்து ஈடேற்றுகிறார். தான் யார், தன் தந்தை யார், சூழவுள்ளோர் யாவர், விதி என்றால் என்ன என, சகல விதமான ஆன்மீகத்தையும் உணர்ந்துகொண்டு bவி=rஜிரிu அடையும் மனிதன் மூர்ச் சித்து விழுந்து கிடந்தவன், மயக்கம் தெளிந்து எழுந்தாற் போல, புத்துணர்ச்சியுடன் புது வேகம் பெறுகின்றான்.

எனவே மங்களகரமான இந் நன்னாளாகிய எமது ஆத்ம தந்தையின் அவதாரத் தினத்திலே சரீர தாரிகளாகிய நாம் அனைவருமே அத் தந்தையின் தெய்வீகக் குழந்தைகளாகையால் ஒருவருக்கொருவர் சகோதரர்களாகின்றோம். அச்சகோதர நேசத்தை எமக்குள் வித்திட்டு வேரூன்றி, இறை சிந்தனையுடன் வாழ்வாங்கு வாழ்வோமாக

நன்றி!.

No comments:

Post a Comment