August 07, 2011

மாதவிப் பந்தல்

பக்தர்களில் சிறந்தவன் தேவனா? அசுரனா??

உங்க பிறந்தநாள் அரை மணி நேரத்திலேயே முடிஞ்சி போனா உங்களுக்கு எப்படி இருக்கும்?
ச்சே அவன் பரிசு கொடுக்கறதாச் சொன்ன அந்த ஐபாடும் வரல, PIT போட்டிப் ட்ரைபாடும் வரல! அதுக்குள்ள பிறந்த நாள் முடிந்து விட்டால் எப்படி?-ன்னு மனசு கிடந்து அலை பாயாதா?

உலகத்திலேயே மிகவும் குறுகிய நேரப் பிறந்தநாள் கொண்டாடியது யாரு? சொல்லுங்க பார்ப்போம்! இருங்க...கேள்வியைச் சற்றே மாற்றிப் போடுகிறேன்!
அவதாரங்களிலேயே மிகக் குறுகிய காலமே நடைபெற்ற அவதாரம் எது?


இறைவன்: குழந்தையே! உன் அசைக்க முடியாத நம்பிக்கைக்கும், உன் எல்லையில்லா அன்புக்கும் மெச்சினோம். என்ன வரம் வேண்டும் கேள்?

குழந்தை: இறைவா...உன் மீது அன்பாக இருப்பது என்னுடைய சுபாவம் தானே! இதுக்குப் போய் நான் என்னவென்று பதிலுக்குக் கேட்பேன்?

இறைவன்: பரவாயில்லை! மனத்தில் தோன்றுவதைக் கேள்! இல்லையென்றால் உனக்கு உடனே புனித வேடம் கட்டி விடுவார்கள்! உறவு என்றால் அதில் ஏதாவது எதிர்பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது தான் அவர்கள் நடைமுறை!
அவர்களால் முடியாததை இன்னொருவர் செய்தால், உடனே அதற்குப் புனித வார்த்தை கொடுத்து, பீடத்தில் ஏற்றி ஒதுக்குவது தான் மானிட சூட்சுமம்! :-)

குழந்தை: அப்படி என்றால் தங்களைக் கணப்பொழுதும் மறக்கக் கூடாது; காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி, ஓதும் வரத்தை எனக்குத் தாருங்கள் சுவாமி!

இறைவன்: இதெல்லாம் ஒரு வரமா? நானே உன்னை மறந்தாலும், உன்னால் என்னை மறக்க முடியாதே!
ஏன்னா உன் குணம் அப்படி! வேறு ஏதாவது கேள்! என் திருப்திக்காக ஏதாவது கேள்!

குழந்தை: அப்படி என்றால் செய்யும் பக்திக்குப் பிரதிபலனாக வரம் கேட்கலாம் என்ற வியாபர எண்ணமே தோன்றக் கூடாது!
வரம் கேட்காமல் இருக்கும் வரத்தை அடியேனுக்கு அருளுங்கள்!
இறைவன்: அட, இப்படி ஒரு அப்பாவியா இருக்கியேப்பா!
வரம் கொடுத்துத் தான் இது போன்ற எண்ணமெல்லாம் உனக்குச் சித்திக்க வேண்டும் என்பதில்லை!
ஏதாவது கேள், ஏதாவது கேள் என்று, என்னையே கெஞ்ச வைக்கிறாய் பார்த்தாயா? கேள், என் திருப்திக்காக ஏதாவது கேள்!

குழந்தை: சரி...என் தந்தை பொன்வண்ணர் (ஹிரண்ய கசிபு) நற்கதி அடைய வேண்டும்! அவருடைய ஆணவம் தான் அவருக்கு பெரிய பகையாய் போய்விட்டது. ஆணவம்-கன்மம்-மாயை அல்லவா?
ஆணவம் தொலைந்தால் தானே, தான் நம்புவது மட்டுமே சரியானது என்கிற விடாப்பிடி எண்ணம் தொலையும்? பிறர் என்ன தான் சொல்கிறார்கள் என்று காது கொடுத்து கேட்கும் எண்ணம் வளரும்!

ஆணவத் திரை அகன்றால் தேடல் என்னும் வெளிச்சம் வரும்!
தேடினால் தானே மாயை அகலும்!
இப்படிச் செய்யாமல் ஆணவத்தினால் அழிவு தேடிக் கொண்டார் என் தந்தை! அவர் உஜ்ஜீவிக்க நீங்கள் தான் அருள வேண்டும்!

இறைவன்: உஜ்ஜீவனமா? உன் தந்தையின் ஜீவனை மறுபடியும் கொடுக்கச் சொல்கிறாயா?
விதி முடிந்த ஒருவன் உயிரைக் கேட்டு என்னைச் சங்கடத்தில் ஆழ்த்தலாமா நீ?

குழந்தை: அச்சோ! மன்னியுங்கள் சுவாமி! உடலைக் காப்பது ஜீவனம்! ஆன்மாவைக் காப்பது உஜ்ஜீவனம்!
அடியேன் கேட்டது உஜ்ஜீவனம் அல்லவா! தங்களுக்குத் தெரியாததா? சிறுபிள்ளையிடம் தங்கள் விளையாட்டா? அவருக்கு உங்கள் திருவடியைக் காட்டி நற்கதி அருளுங்கள்!

இறைவன்: ஆகா...ஒருவன் என்னிடம் சரணாகதி செய்தால் அவனின் முன்னேழு தலைமுறையும் பின்னேழு தலைமுறையும் ஈடேறும்! இது நானே கொடுத்த வாக்கல்லவா?
இதை நீ வரம் என்று ஏன் தனியாகக் கேட்கிறாய் குழந்தாய்? உன் சரணாகதிக்கு அது தானாகவே நடந்து விடுமே!
மேலும் உன் தகப்பன் = என் ஜய விஜயன்! அவன் இந்நேரம் வைகுந்த வாசலில் மீண்டும் பணிக்குப் போய் நின்றிருப்பான்!

அட என்னடா இது! இவன், எதுவும் கேட்கக் கூடத் தெரியாதவனாக இருக்கிறானே? என்னையே திகைப்பில் ஆழ்த்தும் இவனை என்ன செய்து அடக்கலாம்?
எல்லாம் அற என்னை இழந்த நலம் என்றல்லவா ஆகி விட்டது!
"இழந்த" என்பது எப்படி ஒருவனுக்கு நலமாகும்? வரவு அல்லவோ நலம்?
இழப்பை நலமாகக் கருதும் அறியாச் சிறுவனோ இவன்?

இவனுக்கு என்ன வரம் கொடுத்து விட்டு மறையலாம்? இன்னும் சில நாழிகை தான்! அதற்குள் மிகக் குறுகிய கால அவதாரம் பூர்த்தி ஆக வேண்டுமே! (இறைவனே கவலையுடன் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்து விட்டான்)

இவனுக்கு என்ன தரலாம்?
* பூமண்டல அதிபதி? - வேண்டாம்!
* சொல்லாய், சுர பூபதி? தேவர்கள் தலைவன்? - வேண்டவே வேண்டாம்!
* அசுரர் தலைவன்? - இப்போது தந்தைக்குப் பின் அதான் அவனே ஆகி விட்டானே!
* சரி, பிரம்ம பதவி? - அதுவும் இவன் பக்திக்கு முன் நிற்காதே?

சரி...
* வைகுண்டபதி? = அது கூட இவனுக்குச் சமானம் ஆகுமா தெரியலையே?
இவன் நம் பேரில் காட்டும் அன்பில் ஒரு பாதியாவது, நாம் பக்தர்கள் பேரில் காட்ட முடியுமா? திருமகள் கூடப் பொதுவாகக் கருணை உள்ளவள்! ஆனால் அவளும் பல வேளைகளில் சினந்துள்ளாளே!

ஆனால் இவனோ கருணையைத் தவிர வேறு எதுவும் தெரியாமல் இருக்கிறானே! கொல்ல வரும் சூலத்தைக் கூட நாராயண உருவமாகக் கண்டதால், அதுவும் இவனுக்கு அப்படியே அல்லவா ஆகிப் போனது! இவனுக்கு என்ன தான் தர முடியும்?

ஆங்...அதுவே சரி!
சாம்ராஜயத்தின் சக்ரவர்த்தி ஆக்கி விடுவோம்! - பக்த சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தி!
அதுவே இவனுக்கு உரிய பட்டாபிஷேகம்! அதுவே இவனுக்கு உரிய வரம்!
பக்த சாம்ராஜ்ய சக்ரவர்த்தி - அடியார்க்கு அரசன்! அடியார்க்கு நல்லான்!இதையே கொடுத்து விடுவோம்!



இறைவி: பெருமாளே! ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய் என்று எதையும் ஆராய்ந்து தானே நீங்கள் அருளுவீர்கள்?
உங்கள் புதல்வன் பிரம்மனைப் போலவோ, மைத்துனர் சிவனாரைப் போலவோ வரங்களை உடனே உடனே தூக்கிக் கொடுத்துவிட மாட்டீர்களே!

வரத்தால் அவனுக்கு நன்மையா? அவன் எதிர்காலத்துக்கு நன்மையா? அவன் சமூகத்துக்கு நன்மையா? என்றெல்லாம் ஆராய்ந்து அருளும் நீங்களா இவனுக்கு இவ்வளவு பெரிய பட்டத்தைத் தூக்கிக் கொடுப்பது?

இறைவன்: ஆகா, கருணைக் கடலான அலர்மேல் மங்கையா இப்படிச் சொல்வது? வயிற்று வலி உள்ள குழந்தை பலாப் பழத்துக்கு அழுதால் அப்போது ஆராய்ந்து அருளலாம்! ஆனால் இவன் வலி உள்ள குழந்தை அல்ல, திருமகளே!

இறைவி: அதில்லை சுவாமி! இவனுக்கு இப்படிக் கொடுத்து விட்டால் நம் மற்ற பக்தர்களின் கதி எல்லாம் என்னாவது? அவர்கள் எல்லாரும் முனிவர்கள், தேவர்கள், மானிடர்கள் - ஓரளவு நல்லவர்கள்! என்ன இருந்தாலும் இவன் ஒரு அசுரன் ஆயிற்றே!
இறைவன்: ஹிஹி. அசுரன் என்பதாலா உனக்கு இந்தத் தயக்கம் தேவி? தேவர்களிடமோ முனிவர்களிடமோ இல்லாத அசுரத்தனமா? ஹா ஹா ஹா! வேண்டுமென்றே தானே இந்தக் கேள்வியைக் கேட்கிறாய்? இவர் வாயால் அசுரர்களைப் பற்றி என்ன சொல்கிறார் என்று ஆவலா?

இறைவனைக் காலால் எட்டி உதைக்கவில்லையா ஒரு முனிவன்? நீ கூட அதற்குக் கோபித்துக் கொண்டாயே!
தன்னலத்துக்காக பழி பாவங்கள் செய்யாதவர்களா என்ன தேவர்கள்? நீயே தேவர்களைப் பலமுறை தண்டித்துள்ளாயே!

குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள்
மிகை நாடி மிக்க கொளல்
- இது தான் சூட்சுமம்! குணமோ, குற்றமோ, எது மிகையோ - அதை நாடி அருள வேண்டும்!

கண்ணாடி முன் நின்று பார்த்துள்ளாய் அல்லவா?
அது நீ எப்படி இருக்கிறாயோ, அப்படியே தான் காட்டும்!
உடுத்திக் கொண்டிருந்தால், உடுத்தியதாகத் தெரிவார்கள்!
அலங்கோலப் பட்டிருந்தால், அலங்கோலமாகத் தான் தெரிவார்கள்!
இறைவனும் அந்தக் கண்ணாடி போலத் தானே!

* குழந்தையாய்ப் பார்த்தால் குழந்தை! = தேவகி, யசோதை, பெரியாழ்வார், சபரி போன்றவர்களுக்கு!
* காதலனாய்ப் பார்த்தால் காதலன்! = மீரா, ஆண்டாள், கோபியருக்கு!
* தலைவனாய்ப் பார்த்தால் தலைவன்! = விபீஷணன், விதுரன், அக்ரூரன், அப்பர் போன்றவர்களுக்கு!
* நண்பனாய் பார்த்தால் நண்பன்! = குசேலன், அர்ச்சுனன், சுந்தரர் போன்றவர்களுக்கு!
* எதிரியாய்ப் பார்த்தால் எதிரி! = இராவணன், துரியோதனன், சூரபத்மன் போன்றவர்களுக்கு!
* நண்பன் தான்; ஆனால் அவனுடன் உரிமையாகச் சண்டை போட வேண்டும் என்று பார்த்தால் சண்டையிடும் நண்பர்கள்! = விருஷபாசுரன், குபேரன் போன்றவர்களுக்கு

இதில் அசுரன் தேவன் மனிதன் விலங்கு என்ற பாகுபாடே இல்லை! எனக்கு என்று தனியாக ஒரு குணம் கிடையாது!
யார் யார் எப்படி எப்படிப் பார்க்கிறார்களோ அப்படி அப்படிப் பெற்றுக் கொள்கிறார்கள்!
இவன் அசுரனாகத் தான் இருக்கட்டுமே! ஆனால் ஆத்மார்த்தமான பக்தியில் இவனுக்குப் பின்னே தான் எல்லாரும்!

பிரகலாத நாரத பராசர புண்டரீக
வயாச அம்பரீச சுக சௌனக பீஷ்மதால்பியான்
ருக்மாங்கத அர்சுன வசிஷ்ட விபீஷணாதீன்
புண்யானிமான் பரம பாகவதாம் ஸ்மராமி


என்று சுலோகங்களில் கூட அனைவருக்கும் முன்னால்,ஏன் வியாசர், சுகப் பிரம்ம மகரிஷிக்கும் முன்னால்
இந்தப் பிரகலாதன் என்னும் அசுரனே இனி முன் நிற்பான்!
இப்போது என்ன சொல்கிறாய் மகாலக்ஷ்மீ?

இதோ பட்டாபிஷேகம்!
பிரகலாதனே பக்த சாம்ராஜ்ய சக்ரவர்த்தி!அடியார்க்கு நல்லான்!
அருளினோம்! அருளினோம்! அருளினோம்!

மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும் சீரிய சிங்கம் சிலீர் என்று மறைந்தது! அன்று முதல் எந்த ஒரு வழிபாட்டிலும், அடியார்களை முன்னிறுத்திச் செய்யும் பூசைகளில் எல்லாம்....
பிரகலாதன் என்னும் அசுரனே முதலில் முன்னிறுத்தப்படுகிறான்!

நான் சிவ பக்தன், பெருமாள் பக்தன், முருக பக்தன், அம்பிகை பக்தன், புத்த பக்தன், இயேசு பக்தன் என்று நாம் எவ்வளவு வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம்! பதிவு எழுதி ஆடலாம்! ஆனால்...

ஆனால் "இவன் என் பக்தன்" என்று இறைவன் சொல்ல வேண்டுமே?
நம்மைப் பார்த்து அப்படிச் சிவனோ பெருமாளோ முருகனோ அம்பிகையோ புத்தரோ சொல்வார்களா? :-)

அப்படி, "இவன் என் பக்தன், இவன் என் பக்தன்" என்று இறைவனே தன் வாயால் சொல்லிச் சொல்லிச் சொந்தம் கொண்டாடியது இரண்டு பேரை மட்டுமே!

அந்த இருவரில்...
ஒருவர் கூட முனிவர் இல்லை, தேவர் இல்லை, மனிதர் இல்லை!

* ஒருவன் அசுரன்!
* இன்னொருவன் விலங்கு!


பிரகலாதன் திருவடிகளே சரணம்!
அனுமன் திருவடிகளே சரணம்!

முடிந்தால் யோசித்து, மனத்தளவில் இந்த அசுரன் ஆகப் பார்ப்போம்! இல்லை இந்த விலங்காகப் பார்ப்போம்! :-)
ஆடி ஆடி அகம் கரைந்து - இசை
பாடிப் பாடிக் கண்ணீர் மல்கி - "ஏங்கும்"
நாடி நாடி நரசிங்கா என்று
வாடி வாடும் இவ் வாள் நுதலே!
(நரசிம்ம ஜெயந்தி வரும் ஞாயிறு 18th May 2008. அதற்காக இட்ட சிறு பதிவு)

No comments:

Post a Comment