September 01, 2011

மலைகளின் மாவட்டம் நாமக்கல்

கோயில் மாநகர் மதுரை, மாங்கனி மாநகர் சேலம் என்பதைப் போல மலைகளின் மாநகராக நாமக்கல் விளங்குகிறது.

எந்த மாவட்டத்தில் இருந்து இந்த மாவட்டத்துக்கு நுழைந்தாலும் ஒரு மலையைத் தொட்டுத்தான் நுழைய முடியும் என்கிற அளவுக்கு மலைகளும், மலைக் குன்றுகளும் நிறைந்ததாக உள்ளது நாமக்கல் மாவட்டம்.

சித்தர்கள், பக்தர்கள், மலைவாசிகள், திருடர்கள் (!) என பலருக்கும் அடைக்கலமாக இருந்த ஒவ்வொரு மலையும் ஒரு பெயர்க் காரணம் கொண்டுள்ளது.

மலைக்கோட்டை:

ராமாயண காலத்தில் நரசிம்மமூர்த்தி அமர்ந்த கல் பாறையை எடுத்துக் கொண்டு அனுமன் வரும்போது நாமக்கல் கமலாலயக் குளத்தில் மகாலட்சுமி தவம் செய்து கொண்டிருந்தார்.

அனுமனும் நரசிம்மர் சிலை அமைந்த பாறையை அங்கு வைத்துவிட்டு காலைக்கடன்களை முடித்துத் தவம் செய்தான். பின்னர், பாறையைத் தூக்கி முயன்றபோது அனுமனால் அதைத் தூக்கமுடியவில்லை. பின் நரசிம்ம மூர்த்தி வேண்டுகோளின்படி அக் கல்லை அங்கேயே அனுமன் விட்டுச் சென்றான்.

சாலி கிராமத்திலிருந்து அனுமன் எடுத்துவந்த கல்தான் நாமக்கல் மலைக்கோட்டை என்பது தலபுராணச் செய்தி. பின்னர், பல்லவ மன்னன் காலத்தில் குடவறைக் கோயில், அனுமன் கோயில் ஆகியவை கட்டப்பட்டதாகவும் தகவல்.

பின்னர், திப்புசுல்தான் காலத்தில் இம் மலைக்கோட்டைதான் நகர எல்லைக் கண்காணிப்புத் தலமாகவும் இருந்தது.

கொல்லி மலை:

நாமக்கல் மாவட்டத்திலேயே மிகப் பெரிய மலையாக கொல்லிமலை உள்ளது. 50 கி.மீ., சுற்றுப் பரப்பளவுள்ள இம்மலையில் ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி, அறப்பளீஸ்வரர் கோயில் ஆகியவை மிகவும் பிரசித்தி பெற்றவை.

நூற்றாண்டுகளுக்கு முன் இங்கு கொல்லிவாய்ப் பறவைகள் அதிகம் வசித்ததால் இது கொல்லிமலை என்று பெயர்பெற்றது என பெயர்க் காரணம் கூறப்படுகிறது.

இங்குள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்குச் செல்ல 500-க்கும் அதிகமான படிக்கட்டுகள் உள்ளன. இந்த படிக்கட்டுகளில் ஏறி இறங்கவே குறைந்தது 2 மணிநேரம் ஆகும். மூலிகைகள் நிறைந்தது இம்மலை.

அர்த்தநாரீஸ்வரர் மலை: திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருமலை இம் மாவட்டத்திலேயே மிகவும் பிரசித்தி பெற்றது. குழந்தையில்லாதோர் இம் மலை உச்சியில் உள்ள கோயிலைச் சுற்றி வந்தால் குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம்.

இங்குதான் சிவனும், சக்தியும் ஒரே உருவில் இடது, வலமாக இருப்பர். இங்கு பார்வதி வழிபட்ட கெüரி விரத சிவலிங்கம் உள்ளது. பெண்கள் கூட்டம் இங்கு எப்போதும் அலைமோதும்.

நைனா மலை: நாமக்கல்லை அடுத்த சேந்தமங்கலத்தில் இருந்து புதன்சந்தை செல்லும் வழியில் 5 கி.மீ. தொலைவில் உள்ளது நைனா மலை.

இம் மலை உச்சியில் உள்ள பெருமாள் கோயில் மிகவும் புகழ்பெற்றது. ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் முழுவதும் இங்கு விழாக் கோலம்தான். புரட்டாசி மாத சனிக்கிழமை தோறும் பக்தர்கள் நடந்தே மலையேறிச் சென்று சாமி தரிசனம் செய்வர்.

தலை மலை: எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம் செவிந்திப்பட்டியை அடுத்துள்ளது இந்த தலைமலை. இம் மலையில் தானாக வளர்ந்த சஞ்சீவிராயன் பெருமாளுக்குக் கோயில் உள்ளது.

மலைக்குச் செல்ல நடைபாதை மட்டுமே உண்டு. இம் மலையை தொலைவில் இருந்து பார்த்தால் ஒரு மனிதன் படுத்திருப்பது போன்று தோற்றமளிக்கும். மனிதன் தலையுடன் கூடிய அமைப்பாக உள்ளதால் தலைமலை என்ற பெயர் வந்ததாகக் கூறப்படுவதுண்டு.

ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் இத் திருக்கோயிலில் விஷேசம் நடைபெறும். இம் மலையைச் சுற்றியுள்ள கிராமங்களில் எங்கு விழா நடந்தாலும் தலைமலைப் பெருமாளுக்கு படையல் வைப்பது வாடிக்கை. மழைவேண்டி பூஜை செய்த மறுவிநாடியே இங்கு இடி, மின்னல் விழும் என்கின்றனர் இப் பகுதியினர்.

சித்தர் மலை: ராசிபுரத்திலிருந்து 5 கி.மீ., தொலைவில் உள்ளது சித்தர் மலை. நூற்றாண்டுகளுக்கு முன் இங்கு சித்தர்கள் வாழ்ந்த காரணத்தினால் சித்தர் மலைபெயர் ஏற்பட்டுள்ளது. மூலிகைகள் அடங்கிய மலையாக உள்ள இங்கு மலைவாழ் மக்கள் 100-க்கும் அதிகமானோர் வசிக்கின்றனர்.

போத மலை: இம் மலையும் ராசிபுரத்தில் இருந்து 5 கி.மீ., தொலைவில் உள்ளது. ஞானிகள், சித்தர்கள், போதர்கள் என பலரும் வந்து வசித்த மலை போத மலை. தற்போது, இம் மலையில் 2 கிராமங்களே உள்ளன.

சிவன் மலை: நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ளது சிவன் மலை. ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் இங்கு திருவிழா நடைபெறும். இங்குள்ள சிவன் கோயிலுக்கு வரும் பெண்கள், பக்தர்கள் அனைவரும் மணலில் சாதம் பரப்பி மண்சோறு சாப்பிடுவது வாடிக்கை. இந்த நேர்த்திக் கடன் செலுத்துவோருக்கு கேட்டது கிடைக்கும் என்பது ஐதீகம்.

இவைதவிர ஒவ்வொரு தாலுகா, ஒவ்வொரு கிராமம் அருகேயும் சிறு சிறு மலைக்குன்றுகளும், மலைகளுமாக மலை மாவட்டமாகத் திகழ்கிறது நாமக்கல்.

No comments:

Post a Comment