சிவன் கோவில் பிரான்மலை
இம்மலையில் சிவன் பாதாளம், பூலோகம், கைலாயம் என மூன்று அடுக்குகளில் இருந்து காட்சி தருகிறார்.
பாதாளத்திலுள்ள கோயிலில் சிவன், கொடுங்குன்றநாதர் என்ற பெயரில் அருளுகிறார். இவருக்கான அம்பிகை, குயிலமுதநாயகி தனிச்சன்னதியில் இருக்கிறாள். மத்தியிலுள்ள கோயிலில் விசாலாட்சியுடன் விஸ்வநாதர், மேல் பகுதியில் அம்பிகையுடன் மங்கைபாகராக காட்சி தருகிறார்.
நந்தி இல்லாத சிவன்: கைலாயம் எனப்படும் மேலடுக்கிலுள்ள கோயில் குடவறையாக அமைந்துள்ளது. இந்த சன்னதியில் மங்கைபாகர், அம்பிகையுடன் இணைந்து, அகத்தியருக்கு திருமணக்காட்சி அருளிய கோலத்தில் காட்சி தருகிறார். இதை சிவனின், "அந்நியோன்ய கோலம்' என்கிறார்கள்.
இந்த சன்னதியின் முன்மண்டப மேற்சுவரில் கைலாயத்தில் சிவ,பார்வதி திருமணம் காணச்சென்ற முப்பத்து முக்கோடி தேவர்களும் இருக்கும் சிற்பம் வடிக்கப்பட்டிருக்கிறது.
மங்கைபாகர் சிலை, நவ மூலிகைச் சாற்றால் செய்யப்பட்டதாகும். எனவே, இவருக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. பவுர்ணமியன்று காலையில் புனுகு, சாம்பிராணி தைலம் மட்டுமே சாத்துகின்றனர். இவரது சன்னதியில் காசிராஜன் கொடுத்த, "உடையவர் லிங்கம்' என்ற சிறிய லிங்கம் இருக்கிறது. மங்கைபாகருக்கு அபிஷேகம் கிடையாது என்பதால், அவருக்குச் செய்ய வேண்டிய அபிஷேகம் அனைத்தும் இந்த லிங்கத்திற்கு செய்கின்றனர்.
குறிஞ்சி நிலத்தில் (குன்றில்) அமைந்த கோயில் என்பதால், இந்நிலத்திற்கு உரிய தேன், தினைமாவு மற்றும் பச்சரிசி மாவில் செய்த தோசையை நைவேத்யமாக படைக்கின்றனர்.
இவரது சன்னதியின் எதிரில் நந்தி கிடையாது. சிவன், அகத்தியருக்கு திருமணக்கோலத்தில் காட்சி கொடுத்தபோது, நந்திதேவர் மத்தளம் வாசித்துக் கொண்டிருந்தார். எனவே, சிவன் இங்கு நந்திதேவர் இல்லாமல் அம்பிகையுடன் காட்சி தந்தார். இந்த நிகழ்வின் அடிப்படையில் இவருக்கு எதிரில் நந்தி இல்லை என்கிறார்கள். மேலும் இவருக்கு கொடிமரம், பலிபீடமும் கிடையாது.
கைலாயத்தில் சிவன், பார்வதி திருமணம் நடந்தபோது தேவர்கள், மகரிஷிகள், முனிவர்கள் என அனைவரும் கைலாயம் சென்றனர். இதனால் வடதிசை தாழ்ந்து, தென்திசை உயர்ந்தது. உலகை சமப்படுத்த சிவன், அகத்தியரை தென்திசையில் பொதிகை மலைக்குச் செல்லும்படி கூறினார்.
அகத்தியருக்கோ, சிவனின் திருமணத்தைக் காண வேண்டுமென்ற ஆசை இருந்தது. தனது எண்ணத்தை சிவனிடம் முறையிட்டார். தென்திசையில் அவருக்கு தனது திருமணக்காட்சி கிடைக்கும் என்றார் சிவன். அப்போது அகத்தியர் சிவனிடம், தான் விரும்பும் இடங்களில் எல்லாம் அவரது திருமணக்கோல காட்சி கிடைக்க வேண்டும் என வேண்டினார்.
அதன்படி அகத்தியர் பொதிகை மலைக்குச் செல்லும் வழியில், பல இடங்களில் சிவனின் திருமணக்கோலத்தை தரிசித்தார். அவ்வாறு அவர் தரிசித்த தலங்களில் இத்தலமும் ஒன்று. இக்கோயில் குன்றக்குடி தேவஸ்தானத்தில் கட்டுப்பாட்டில் உள்ளது.
No comments:
Post a Comment