நடராஜர் உருவத்திருமேனி உணர்த்தும் தத்துவம்
ஜூலை 9, 2010
திருமுகம்:
எல்லையற்ற அழகும் இனிய தண்ணளித்திறனும் கொண்டு தலைமைப்பாட்டினைக் குறிக்கும்.
பனித்தசடை:
சடை சிவநெறிக்குரிய தவ ஒழுக்கச் சிறப்பையும் காட்டுகின்றது.
கங்கை:
இறைவன் பேராற்றலையும் வேகங்கெடுத்தாளும் வித்தகத்தையும் விளக்குவது.
பிறைசூடுதல்:
சரண் என அடைந்தவரைத் தாங்கித் தாழ்வு நீக்கிப் பாதுகாக்கும் வள்ளல்தன்மை.
குனித்த புருவம்:
பரதக் கலையின் மெய்ப்பாடு உணர்த்துவது. தன்பாற்போந்து குறையிரந்து முறையிடும் அடியார்களின் விண்ணப்பங்களைக் கூர்ந்து நோக்கி ஊன்றிக் கேட்டருளும் கருணைத் திறத்தினைக் காட்டுவது.
குமிண்சிரிப்பு:
அடைக்கலம் புகுந்தோரை, என்று வந்தாய் என்று அருளோடு வரவேற்று, பிழைபொறுத்து வாழ்வளித்து மகிழ்விக்கும் மாட்சியைக் குறிப்பது.
பவளமேனி:
இறைவன் நீ வண்ணத்தான் நெருப்பை யொத்தவன். நெருப்புத் தன்பால் எய்தும் பொருள்களை எல்லாம் தூய்மையாக்கிப் புனிதம் அடையச் செய்வது போல, இறைவனும் தன் அடியார்களின் மாசுக்களை நீக்கி – மலநீக்கி மாண்புறச் செய்யும் அருட்டிறத்தைக் குறிப்பது.
பால்வெண்ணீறு:
எப்பொருளும் இறுதியில் எய்தும் நிலை சாம்பல்தானே! நீறு மற்றொன்றாக மாறி அழியாது. ஆகவே பால்வெண்ணீறு தூய இயல்பினையும் அழியாத் தன்மையையும் குறிக்கின்றது. தொழுதெழுவார் வினைவளம் நீறெழ இறைவன் நீறு அணிகின்றார். மேலும் செந்நிற மேனியில் வெண்ணீறு அணிந்த கோலம் எவர் நெஞ்சையும் கவர்ந்து பிணிக்கும் பான்மையுடையது.
நெற்றிக்கண்:
மேல் நோக்கிய நிலையில் நிமிர்ந்து நிற்கும் நெற்றிக்கண் சிவபிரானின் தனிப்பெரும் முதன்மையை உணர்த்துவது. இது சிவபெருமானுக்குரிய சிறப்பு அடையாளம்.
நீலகண்டம்:
ஒருவரும் உண்ணாத நஞ்சு உண்டும் இருந்தருள் செய்யும் இறைவனின் நயத்தக்க நாகரிக நலனையும் பெருங்கருணைத் திறத்தையும் காட்டுவது.
உடுக்கை:
தமருகம் எனப்படும் உடுக்கை, இறைவன் உலகப் பொருள்களைப் படைக்கும் சிருஷ்டியைக் குறிப்பது. பரநாதத்தைப் பரமன் தோற்றுவிக்கும் பான்மையை இது காட்டுகிறது.
நெருப்பு:
இறைவன் இடக்கரத்தில் ஏந்தியுள்ள நெருப்பு. உயிர்களின் பிறவித் தளைகளின் இளைப்பினை நீக்கும் பொருட்டுச் செய்யும் சம்ஹாரத் தொழிலைக் காட்டுவது.
அபயகரம்:
அமைந்தகை காத்தல் தொழிலைக் குறிப்பது. அடியார்களுக்கு ஆறுதல் கூறித் தேற்றும் நிலை இது.
வீசியகரம்:
யானையின் துதிக்கையைப் போன்று திகழும் இவ்விடக்கை கஜஹஸ்தம் எனப்படும். இக்கையின் விரல், தூக்கிய திருவடியைக் காட்டுகின்றது. திருவடியை நம்பித் தொழுக. இது உம்மை ஈடேற்றும் என்பது குறிப்பு.
எடுத்த திருவடி:
இறைவனின் இடது திருவடி இது; அம்பிகைக்கு உரியது. துன்பக் கடலிடைத் தோணித் தொழில் பூண்டு தொண்டர் தம்மை இன்பக் கரை முகந்து ஏற்றும் திறத்தைக் காட்டுவது.
ஊன்றிய திருவடி:
இறைவனின் வலது திருப்பாதம் இது. முயலகனை மிதித்து அவன் மீது ஊன்றிய நிலை மலத்தை முழுதாக அழித்து விடாமலும், மலத்தால் உயிர்கள் பெரிதும் வருந்தாமலும், வினைப் பயன்களை உயிர்கள் நுகர இறைவன் இயற்றும் மறைத்தல் தொழிலைக் குறிப்பது.
முயலகன்:
இது ஆணவ மலத்தைக் குறிப்பது. முத்தி நிலையில் உயிர்கள் மாட்டு ஆணவமலம் அடங்கிக் கிடப்பதைப் போன்று. முயலகனும் இறைவன் திருவடியின் கீழ், மாயாதே தன் சத்தி மாய்ந்து கிடக்கின்றான்.
தெற்குநோக்குதல்:
ஆடவல்லான் தெற்கு நோக்கியே ஆடுகின்றார். யமபயத்தை நீக்கியருளி நம்மை உய்விப்பதற்காக தென்றற்காற்றின் மீதும் தென் தமிழின் மீதும் உள்ள விருப்பாலும் தெற்கு நோக்கி இறைவன் ஆடுகின்றார் என நயம்படக் கூறுவார் திருவிளையாடற் புராண ஆசிரியர் பரஞ்சோதி முனிவர்.
இறைவனின் உடுக்கை – ஆக்கல்(சிருட்டி), அமைத்தகை – காத்தல் (ஸ்திதி), ஏந்திய அனல் – அழித்தல்(சம்ஹாரம்), ஊன்றிய திருவடி – மறைத்தல் (திரோபாவம்), எடுத்த திருவடி – முத்தி (அனுக்கிரகம்)
சிந்து சமவெளி திராவிடர்களின் கடவுள் முருகர் அஸ்கோ பர்போலா தகவல்
ஜூன் 27, 2010
கோவை செம்மொழி மாநாட்டில் திராவிக் கடவுளான சிவனின் மைந்தன் முருகனையும், சிவனை ருத்திரன் எனவும் வழிபட்டிருப்பதை அறிஞர்கள் வெளியிட்டார்கள். அதைப் பற்றிய தொகுப்பு.
சிந்து சமவெளி எழுத்துக்களை ஆய்வு செய்ததில், முருகன், ஆரிய கடவுள் ருத்ரா -ஸ்கந்தா ஆகியோர் திராவிடர் வணங்கிய கடவுள்களாக இருந்தார்கள் என்று ஆய்வில் தெரியவருகிறது, என்று “செம்மொழி தமிழ்’ விருது பெற்ற பின்லாந்து பேராசிரியர் அஸ்கோ பர்போலா, சிந்துசமவெளி எழுத்துக்கள் குறித்த ஆய்வு கட்டுரையில் கூறியுள்ளார். கோவையில் நடைபெறும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் வெளிநாட்டு அறிஞர்கள், பேராசிரியர்கள் பங்கேற்று, தமது ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிக்கின்றனர். பின்லாந்து நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் அஸ்கோ பர்போலா, சிந்து சமவெளி நாகரிகம், திராவிடர்களின் நாகரிகம் பற்றி ஆய்வு செய்து வருகிறார். இவருக்கு மாநாட்டு முதல் நாள் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் “செம்மொழி தமிழ்’ விருது வழங்கினார். இவர் “சிந்து சமவெளி எழுத்துக்களுக்கான திராவிட தீர்வு’ என்ற தலைப்பில் 35 பக்கம் ஆங்கிலத்தில் எழுதிய ஆய்வுக் கட்டுரையை, முதல்வர் கருணாநிதி முன்னிலையில் மாநாட்டில் சமர்ப்பித்தார்.
அவர் தமது ஆய்வு குறித்து பேசியதாவது: சிந்து சமவெளி நாகரிகம் நிலவிய ஹரப்பா பகுதியில், 1870 மற்றும் 1890ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், எந்த மொழி என்று அறிதியிட்டு கூற முடியாத, கற்களில் பொறிக்கப்பட்ட எழுத்து வடிவங்கள் கண்டெடுக்கப்பட்டன. மேலும் அகழாய்வு செய்ததில் மெசபடோமியா பகுதியில் பல எழுத்து வடிவங்கள் கண்டெடுக்கப்பட்டன. அதன் அடிப்படையில் சிந்து சமவெளி நாகரிக காலம் கி.மு. 2600 -1900 என்பதை ஆய்வுகள் மூலம் உறுதியானது. இக்கல்வெட்டு, எழுத்துக்கள் வளைகுடா கடல் வாணிபர்களால் அந்த பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. ஆனால் அவர்களால் அந்த எழுத்துக்களை புரிந்து கொள்வதில் சிரமம் இருந்துள்ளது. சிந்து சமவெளி நாகரிகம் அழிந்தபோதே, சிந்து சமவெளி எழுத்து வடிவங்கள் சேர்ந்து அழிந்து விட்டது. ஆனாலும் பாதுகாக்கப்பட்ட சில எழுத்து வடிவங்கள் ஆய்வுக்கும், ஹரப்பாவில் பயன்படுத்தப்பட்ட மொழியினை அறிய உதவுவது திராவிட மொழிகளேயாகும், அவற்றின் மூலம் பல்வேறு தகவல்களை தெரிந்து கொள்ள முடிகிறது. மத்திய மற்றும் தென்னிந்தியாவில் 26 திராவிட மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. எனினும், கி.மு. 1100 -600ம் ஆண்டுகளில், வடமேற்கு பகுதியில் காணப்பட்ட இந்தோ-ஆரிய உருவ வடிவ எழுத்துக்களில்,முகம்,பலம், காணா, கியாம்பு ஆகிய திராவிட மொழி எழுத்துக்கள் இருப்பதை அறிய முடிகிறது.
வரலாற்று மொழிகள் வாயிலாக நாம் அறிய முடிவது என்னவென்றால், சிந்து சமவெளி பகுதி மக்கள் (ஹரப்பா) திராவிட மொழியைத்தான் பேசியிருக்க வேண்டும் என்று தெரியவருகிறது. சிந்து சமவெளி மதங்களை பற்றி படிக்க பழந்தமிழ் இலக்கியங்கள் உதவிக்கு வருகின்றன. போர் மற்றும் காதலில் சிறந்து விளங்கிய “இளமை’ கடவுளை வணங்கினர். அக்கடவுள் வடஇந்தியர்கள் வணங்கிய போர்க்கடவுளான “ஸ்கந்தா’வோடு ஒத்து காணப்படுகிறது. அக்கடவுளுக்கு இளமை, இளைஞன் எனும் பொருள்பட முருகு அல்லது முருகன் என்ற திராவிட பெயர்கள் வழங்கப்பட்டன. வேதங்களில் ஸ்கந்தாவுக்கு முன்னோராக குறிப்பிடப்படும் “ருத்ரா’ என்னும் கடவுள், பச்சிளங்குழந்தையாக உருவாக்கப்பட்டும், சமஸ்கிருதத்தில் “குமாரா’ என்றும் அழைக்கப்படுகிறார். முருகனும், ஸ்கந்தாவும், சிவப்பு நிறம் அல்லது உதிக்கும் சூரியன் எழுத்துவடிவ குறியீடுகளால் குறிப்பிடப்படுகிறார்கள்.
இதன் மூலம் திராவிட கடவுள் முருகன் மற்றும் ஆரிய கடவுள் ருத்ரா-ஸ்கந்தா ஆகியோர், திராவிடர் வணங்கிய கடவுள்களாக இருந்தார்கள் என்று தெரியவருகிறது. சிந்துசமவெளி நாகரிக காலத்தைய எழுத்து வடிவங்கள் திராவிட மொழியே பின்னணியில் உள்ளதை தெளிவாகி உறுதியுடன் கூறமுடிகிறது. உருவக எழுத்துக்களின் அர்த்தங்களை கண்டுபிடிக்க, திராவிட மொழியாற்றல் மிக்க பேச்சாளர்கள் தேவையில்லை. இந்திய கலாசாரம் மற்றும் தெற்காசிய தன்மையை பற்றி நன்கு அறிந்திருந்தாலே போதும். இவ்வாறு பேராசிரியர் பர்போலோ பேசினார்.
No comments:
Post a Comment