August 20, 2011

64 திருவிளையாடல்

மதுரை நகரம் உருவான படலம் 



மதுரை மாநகரம் இயற்கையாக எழுந்ததல்ல. அது உருவாக்கப்பட்ட ஒரு நகரம். அதை உருவாக்கி அருளியவரும் ஆலவாய் அழகனான சொக்கநாதனே! ஒரு காலத்தில், பாண்டியநாடு கடம்பவனங்கள் நிறைந்த வனமாக இருந்தது. அந்த வனத்துக்குள் ஏராளமான அருவிகள் இருந்தன. வனவிலங்குகள் வாழ்ந்த கொடிய காடு அது. இந்திரன் நிர்மாணித்து  சென்ற சொக்கநாதர் திருச்சன்னதியை அஷ்டதிக்கஜங்கள் எனப்படும் எட்டு யானைகள் தாங்க, அந்தச் சன்னதி மட்டுமே காட்டுக்குள் இருந்தது. தனஞ்செயன் என்ற வணிகர் பாண்டியநாட்டில் வசித்து வந்தார். அவர் மாபெரும் சிவபக்தர். சிவனடியார்களை உபசரிப்பதில் ஆனந்தம் கொண்டார். வணிகம் செய்தததால், பெரும் செல்வந்தராகவும் திகழ்ந்தார். ஒருமுறை, அவர் வெளியூரில் வியாபாரத்தை முடித்து விட்டு, கடம்பவனத்துக்குள் புகுந்து வீடு நோக்கி நடந்தார். திடீரென வானம் இருண்டது. காட்டுக்குள் பாதை தெரியாத அளவு ஒளி சூழ்ந்தது. தனஞ்செயன் அசைவற்று நின்று விட்டார். என்ன செய்வதென தெரியவில்லை. அப்போது, மின்னல் வெட்டினாற்போல் ஓரிடத்தில் ஒளி தோன்றியது. தனஞ்செயன் ஒளி வந்த திசை நோக்கி நடந்தார். அங்கே, சொக்கநாதப் பெருமானின் விமானம் பளிச் சிட்டது.

உள்ளே பெருமான் ஜொலித்துக் கொண்டிருந்தார். இந்தக் கோயில் இங்கே எப்படி வந்தது? யார் கட்டியது? என்று தனஞ்செயனுக்கு குழப்பம். இந்திரனால் உருவான கோயில் அது என்பதை அவரால் எப்படி உணரமுடியும்? அருகில் இருந்த குளத்தில் பொற்றாமரைகள் பூத்துக் கிடந்தன? தங்கத்தில் தாமரையா? அவை தான் ஒளிக்கீற்றைச் சிந்தி இங்கே வெளிச்சமாக இருக்கிறதா? அவர், சொக்கலிங்கத்தைப் பக்தியோடு வணங்கினார். திடீரென வாத்தியங்கள் முழங்கும் ஒலி கேட்டது. தனஞ்செயன் ஆச்சரியத்துடனும், அதிர்ச்சியுடனும் சப்தம் வந்த திசை நோக்கி திரும்பினார். ஏராளமானோர் பட்டாடைகள் பளபளக்க, தலையில் கிரீடங்களுடன், பூஜை பொருட்களை தங்கத் தாம்பாளத்தில் சுமந்தபடி வந்து கொண்டிருந்தனர். சொக்கலிங்கப் பெருமானுக்கு அவர்கள் பூஜை செய்ய ஆரம்பித்தனர். அப்போது தான் தனஞ்செயனுக்கு அவர்கள் தேவர்கள் என்பது புரிந்தது. வானத்து தேவர்களைக் காணும் பாக்கியம் எனக்கு கிடைத்ததே! அதிலும், அவர்கள் சிவபூஜை செய்வதைக் காண என்ன பாக்கியம் செய்தேனோ! அவரது உடல் சிலிர்த்தது. சில தேவர்கள் பொற்றாமரைக் குளத்தில் இறங்கிப் பூப்பறித்தனர். தனஞ்செயனும் தன்னையறியாமல் குளத்துக்குள் இறங்கி, அவர்களுக்கு பூப்பறித்துக் கொடுத்து உதவினார். அவர்கள் அவரை வாழ்த்தினர். பூஜை முடிந்ததும் தேவர்கள் அங்கிருந்து கிளம்பிச் சென்று விட்டனர். இந்த அதிசயம் குறித்து, நாடாண்ட மன்னர் குலசேகரப் பாண்டியனிடம் தெரிவித்தார் தனஞ்செயன்.

மன்னா! தாங்களும் அத்தகைய பூஜையைக் காண வேண்டும். நான் அந்த பூஜையை சோமவாரத்தன்று (திங்கள்கிழமை) கண்டேன். தாங்களும் அடுத்த சோம வாரத்தன்று அதைக் காண வரவேண்டும், என்று கேட்டுக் கொண்டார். மன்னனின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அவனுக்கு தூக்கமே பிடிக்கவில்லை. அடுத்த சோமவாரம் எப்போது வருமென காத்து  கொண்டிருந்தான். முதல்நாள் இரவு, பரபரப்புடன் இருந்த அவன், தூக்கம் பிடிக்காமல் இருந்தான். அதிகாலையில் தூக்கம் வந்துவிட்டது. அப்போது எழுந்த கனவில், சொக்கநாதர் அவன் முன்னிலையில் தோன்றி, குலசேகரா! தனஞ்செயன் கண்டது உண்மையே. நீ கடம்பவனத்தை சீர்திருத்தி ஒரு நகரமாக மாற்று. என் கோயிலை அடையாளமாகக் கொண்டு, அது நடுவில் இருக்க நகரம் சிறப்புற அமைய வேண்டும். வீதிகள், வீடுகள், மாளிகைகள் அமைய வேண்டும், என்று கட்டளையிட்டார், திடுக்கிட்டு எழுந்த மன்னன், உடனடியாக அமைச்சர்கள், படைகள் புடைசூழ, தனஞ்செயன் வழிகாட்ட காட்டுக்குள் சென்றனர். அங்கே எட்டு யானைகள் விமானத்தை தாங்க, அதன் கீழ் சொக்கநாதர் அருள்பாலித்துக் கொண்டிருந்தார். அனைவரும் சொக்கநாதரைச் சேவித்தனர். உடனடியாக விக்னேஸ்வர பூஜை நடந்தது. 

நகரம் கட்டும் பணியைத் துவங்கினான் மன்னன். அர்த்தமண்டபம், உற்சவ மண்டபம், வேள்வி மண்டபம், மடப்பள்ளி முதலானவை அமைத்தான். பின்னர் கோயிலைச் சுற்றி மாடமாளிகைகள், பெரிய வீடுகள், வீதிகள் ஆகியன அமைக்கப் பட்டன. பார்க்க  மிக அருமையாக இருந்தது அந்த நகரம். உடனடியாக, கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்து சிறப்பாக முடித்தான். சிவபெருமான் அங்கே எழுந்தருளினார். தனது ஜடாமுடியில் அணிந்திருந்த சந்திரனின் கலைகளில் (பிறை) ஒன்றை நகரத்தில் சிந்தினார். எனவே அது ஒளி பெற்றது. சந்திரனே மனதிற்கு அதிபதி. மனதிடத்தை வழங்குபவர். அதனால், நகரில் வசித்த மக்கள் மனோதிடம் பெற்றனர். சந்திரனை பார்த்தால் மனம் இனிக்கும். இனிப்பை மதுரம் என்றும் சொல்வர். மதுரம் சிந்திய அந் நகரத்துக்கு மதுரை என்று பெயர் சூட்டினான் குலசேகரப் பாண்டியன். பின்னர் பலகாலம் அந்நாட்டில் செங்கோல் ஆட்சி நடத்தினான்

64 திருவிளையாடல்

  தடாதகையாரின் திருமணப் படலம்!




உலகத்துக்கே ஒரு தாயை ஈன்றெடுத்துக் கொடுத்த காஞ்சனமாலையும், உலகத்தாயான தடாதகைபிராட்டியும் தங்கள் குல தலைமையை இழந்து அடைந்த கவலைக்கு அளவே இல்லை. அவருக்குரிய ஈமச்சடங்குகளை தடாதகையே முன்னின்று செய்தாள். தந்தையில்லாத வீடு... மகளுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டால் வீட்டுக்கு மருமகன் வந்துவிடுவார். தடாதகையை நல்லபடியாக பார்த்துக் கொள்வார். இவளுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டால் நல்லதென முடிவெடுத்து, மகளிடம் சொன்னாள் காஞ்சனமாலை. மகள் அவளிடம், அம்மா! ஒரு தாயாக இருந்து உனக்குரிய கடமையை நீ சொன்னாய். ஆனால், தந்தைக்கு கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவது எனது கடமை. தந்தையார் என்னிடம் சொன்னபடி நான் உலகமெங்கும் சுற்றி, அனைத்து தேசங்களையும் என் ஆட்சியின் கீழ் கொண்டு வரவேண்டியிருக்கிறது. நீ என்னை வாழ்த்தி வழியனுப்பு! திரும்பி வந்ததும், உன் விருப்பப்படியே திருமணம் நடக்கும், என்றாள். மகளின் விருப்பத்திற்கு தாயும் குறுக்கே நிற்கவில்லை. அமைச்சர் சுமதி போருக்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார். போர்க்கோலம் பூண்ட தடாதகை பிராட்டி, தாயிடம் நல்லாசி பெற்று புறப்பட்டாள். தாரை, தப்பட்டை ஆர்ப்பரிக்க, சங்குகள் முழங்க அவளது நால்வகைப் படையும் கிளம்பியது.

இவர்களது படையைப் பார்த்தவுடனேயே எதிரிகளெல்லாம் அஞ்சி, நடுங்கி அவளை சரணடைந்தனர். பூவுலகில் வெற்றிக்கொடி நாட்டி தடாதகை பிராட்டியார், தேவலோகத்திற்குச் சென்றாள். புத்திரகாமேஷ்டி யாகம் செய்தால், குழந்தை பிறக்குமென மலையத்துவஜனுக்கு வாக்களித்த இந்திரன், கலங்கிப் போனான். நமது யோசனையால் பிறந்த குழந்தையே, நம்மை நோக்கி படையெடுத்து வருகிறதே என அஞ்சி நடுங்கினான். பதவியை விட்டுவிட்டு, ஓடி ஒளிந்து கொண்டான். தடாதகை பிராட்டியார் தேவேந்திரனுக்குச் சொந்தமான சங்கநதி, பதுமநிதி, சிந்தாமணி, காமதேனு, கற்பகதரு போன்ற மிகப் பெரிய செல்வங்களையெல்லாம் தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டாள். தேவ கன்னியர்களை தனக்கு பணிபுரிவதற்காக தன்னோடு வரச்சொன்னாள். பிறகு, கயிலை மலையையும் தன் வசமாக்கிக் கொள்வதற்காக படைகளுடன் அங்கு புறப்பட்டாள். தடாதகை பிராட்டியார் வாழ்க! அமைச்சர் சுமதி வாழ்க! என்ற கோஷம் விண்ணைப் பிளந்தது.கயிலையை அவள் அடைந்ததும், சிவபெருமான் அவளை முகம் மலர வரவேற்றார். தடாதகை  பிராட்டியார் மதுரையிலிருந்து கிளம்பியபோதே, சுந்தரேஸ்வர பெருமானும் அவள் அறியாவண்ணம் அவளது தேரிலேயே அமர்ந்து வந்தார் என்பதை, அவளால் உணர முடியவில்லை. இதை அறியாத நந்திதேவர், பிராட்டியாரின் படை கண்டு நடுங்கி நின்றார். இப்படி ஒரு படை வந்திருக்கிறதே! நம்மையே அடிமைப் படுத்த வந்துள்ள இந்தப் பெண் மணியை நீங்கள் வரவேற்கிறீர்களே! என் கட்டுக்காவலை மீறி இவர்கள் உள்ளே வந்துள்ளார்கள். இப்போது நாம் என்ன செய்வது? என சிவனிடம் யோசனை கேட்டார்.

சிவபெருமான் அவரிடம், போருக்கென வந்தவர்களிடம் மோதிப்பார்த்து விட வேண்டியதுதான். நீ நம் படைகளுடன் புறப்படு, என்றார். சக்திதேவியான தடாதகை பிராட்டியாரின் வீரத்தை உலகுக்கு உணர்த்துவதற்காக, சிவபெருமான் இப்படியொரு நாடகம் ஆடினார். நந்தி தேவரின் தலைமையில் புறப்பட்ட படைகள் அனைத்தும் தடாதகை பிராட்டியால் விரட்டியடிக்கப்பட்டன. சிவகணங்கள் ஓடி ஒளிந்து கொண்டனர். சூரியன், சந்திரன், அக்னி, வருணன் முதலான தேவர்களின் அஸ்திரங்களை எல்லாம் தடாதகை பிராட்டியார் அழித்தாள். பூதங்களின் வலிமை பிராட்டியின் வலிமை முன்னால் எடுபடவில்லை. வேறு வழியின்றி சிவபெருமானே அவளுடன் போர் செய்ய கிளம்பினார். அவர் அன்னையின் முன் வந்து நின்றதும், அந்த அதிசயம் நிகழ்ந்தது. அவளது தனங்களில் ஒன்று மறைந்தது. மன்மதனின் கணைகள் அவளைத் தாக்கியது போன்ற உணர்வு ஏற் பட்டது. ஆயுதங்களை கீழே போட்டு விட்டு, நாணத்தால் தலை குனிந்து நின்றாள் தடாதகை. அமைச்சர் சுமதி ஆச்சரியப் பட்டார். அவருக்கு தான் மீனாட்சியின் தன ரகசியம் தெரியுமே! எதிரே நிற்பது சிவபெருமான் என்பதும், அவளே அவரை மணந்து கொள்வார் என்பதும் தெரிந்து விட்டது. தடாதகை பிராட்டியார் குனிந்த தலைநிமிராமல், அவரது பாதத்தில் விழுந்தாள். அதுவரையில் இருந்த வீரம், காதலாக மாறிவிட்டது.

உலகையே வென்று நம் கைக்குள் கொண்டு வந்தாலும், மனிதன் இறைவனிடமே அடைக்கலமாக வேண்டும் என்பதை உணர்த்தியது இந்தக் காட்சி. சிவபெருமான் அவளைத் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்தார். பின்னர் மீனாட்சி மதுரை திரும்பினாள். தாய் காஞ்சனமாலை வெற்றிக்கனி பறித்து வந்த மகளை வரவேற்றாள். உலகை வென்றதுடன், ஈசனின் இதயத்தையும் தன் மகள் வென்று வந்தாள் என்ற செய்தியறிந்து, மகளுக்கு மணநாள் குறிக்க ஏற்பாடு செய்தாள். இறைவனுக்கே திருமணம் நடத்தி வைக்கும் பாக்கியம் கிடைத்தது குறித்து அமைச்சர் சுமதி ஆனந்தம் கொண்டார். திருமண பட்டோலை எழுதி, பல தேசத்து மன்னர்களுக்கும் அனுப்பினார். மதுரை மக்களுக்கு தடாதகை பிராட்டி யாருக்கு திருமணம் நடக்க இருப்பது குறித்து முரசறைந்து அறிவிக்க ஏற்பாடு செய்தார். மக்கள் மகிழ்ந்தனர். தங்கள் வீட்டு திருமணம் அல்லவா? நகரை அவர்கள் அலங்கரித்த விதம் அலாதியாக இருந்தது. தங்கள் வீடுகளை சுத்தம் செய்து வண்ண ஓவியங்களைத் தீட்டினர். நகர் முழுவதும் கமுகு, வாழை மரத்தோரணங்களைக் காண முடிந்தது.இறைவனுக்கு அம்பாளின் அவதாரமான தடாதகை பிராட்டியுடன் நடக்கப் போகும் திருமணத்துக்கு முனிவர்களும், தேவர்களும் வந்து சேர்ந்தனர். சிவபெருமானுக்கும், தடாதகை பிராட்டியாருக்கும் செய்யப் பட்ட அலங்காரத்தை சொல்லி மாளாது. தடாதகை பிராட்டி தன் மக்களை மீன் போல் பாதுகாத்தவள். அதாவது, மீன்கள் தங்கள் கண்களாலேயே குஞ்சுகளுக்கு உணவூட்டுபவை. சற்றும் இமைக்காதவை. இக்காரணத்தால், எங்கள் மீனாட்சிக்கு கல்யாணம் என மக்கள் ஆரவாரம் செய்தனர்.

 அந்த மீனாட்சிக்கு சரஸ்வதியும், லட்சுமியும் வந்திருந்து அலங்காரம் செய்தனர். ஊர் மகிழ்ந்திருந்த வேளையில், காஞ்சனமாலைக்கு மட்டும் கண்ணீர் வழிந்தது. இதையெல்லாம் பார்க்க தன் கணவர் மலையத்துவஜன் இல்லையே என்று! தந்தையில்லாத மீனாட்சிக்கு தந்தையாயும், தமையனாயும் இருந்து திருமணத்தை நடத்தி வைக்க அந்த மகாவிஷ்ணுவே வந்துவிட்டார். ஈசனுக்கு பட்டு அங்கவஸ்திரம், விதவிதமான நகைகள் அணிவிக்கப்பட்டு மிக அழகாக இருந்தார். இவரல்லவோ சுந்தரன் என்று மக்கள் ஆனந்தமாகப் பேசினர். சுந்தர ஈஸ்வரன் எங்கள் மீனாட்சியின் கரம் பற்ற வந்துள்ளான், என புகழ்ந்தனர். இதனால் சிவபெருமானுக்கு சுந்தரேஸ்வரன் என்ற பெயர் உண்டாயிற்று. அமைச்சர் சுமதி ஆனந்தக் கண்ணீர் வழிய நின்றிருந்தார். மணமேடைக்கு மணமக்கள் வந்தனர். அவர்கள் மாலை மாற்றி  கொண்டனர். பிரம்மா வேதமந்திரம் முழங்க, திருமால் தாரை வார்த்துக்கொடுக்க, மணமகளுக்கு திருமாங்கல்யத்தை அணிவித்தார் சுந்தரேசர். அவளது பாதத்தில் மெட்டி அணிவித்தார். எங்கும் பூ மழை பொழிந்தது. மீனாட்சி அம்மியில் கால் வைக்கவும், திருமணத்துக்கு வந்திருந்த வசிஷ்டரின் மனைவி அருந்ததி தேவி, மீனாட்சியின் முன்னால் வந்து நின்று, தங்களின் பார்வை என் மீது பட நான் இங்கே காத்திருக்கிறேன், என்று தலை வணங்கி கைகூப்பி நின்றாள். அருந்ததிக்கு ஈசனும், பிராட்டியும் அருள் செய்தனர். மதுரையிலேயே தங்கி, தன் மகளுடன் நல்லாட்சி செய்ய வேண்டுமென காஞ்சனமாலை இறைவனிடம் வேண்டிக் கொண்டாள். இறைவனும் அந்தக் கோரிக்கையை ஏற்றார். மீனாட்சியுடன் இணைந்து மதுரை நகரை அரசாள முடிவெடுத்தார்.

கடவுளைக் காண என்ன செய்ய வேண்டும்?





ஒரு மனிதனுக்கு கடவுளைக் காண வேண்டும் என்று ஆசை அவரை எப்படி சந்திப்பது ? கோவிலுக்குப் போ ! என்றார்கள். உடனே புறப்பட்டான். போகும் வழியில் ஒரு ஞானியை சந்தித்தான். அவர் கேட்டார். எங்கே போகிறாய் ? கடவுளைக் காண போகிறேன் ! எங்கே ? கோவிலில் ! அங்கே போய்... ? அவரை வழிபடப் போகிறேன் ! அவரை உனக்கு ஏற்கனவே தெரியுமா ? தெரியாது ! எந்த வகையிலும் நீ கடவுளை அறிந்திருக்கவில்லை. அப்படி இருக்கும்போது எப்படி நீ அவரை வழிபட முடியும் ? அப்படியென்றால் ... ? உன்னுடைய வழிபாடு வெறும் சடங்காகத்தான் இருக்க முடியும் ! மனிதன் குழம்பிப் போனான். ஞானி தெளிவுபடுத்தினார். ஏ, மனிதனே... நீ செய்யப் போவது உண்மையான வழிபாடு அல்ல. இன்றைக்கு மனிதர்கள் வழிபாடு என்கிற பெயரில் ஆண்டவனிடம் தங்கள் ஆசைகளைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.


 தங்களது கோரிக்கைகளைக் குரல் மூலம் பட்டியலிட்டுச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தங்களது புகார்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவ்வளவுதான். நான் கடவுளிடம் அன்பு செலுத்த விரும்புகிறேன். நீ அறியாத கடவுளிடம் எப்படி அன்பு செலுத்த முடியும் ? அப்படியானால்... ஆண்டவனை சந்திக்க என்னதான் வழி ? அவரை நீ சந்திக்க முடியாது. உணர முடியும் ! அதற்கு வழி ?


தியானம்.  தியானத்துக்கும் கடவுளுக்கும் சம்பந்தம் உண்டா ? இல்லை ! மனிதன் வியப்போடு நிமிர்ந்தான். அவர் சொன்னார் : தியானம் உன் மனத்தோடு சம்பந்தப்பட்டது. அது உனக்குள் ஓர் ஆழ்ந்த மௌனத்தை உண்டு பண்ணும், அப்படிப்பட்ட ஒரு மௌன நிலையில், கடவுள் இருப்பதை நீ உணரத் தொடங்குவாய். உண்மையான தியானத்தின் பின்விளைவே வழிபடுதல் ஆகும். தியானம் செய்பவன் மட்டுமே கடவுளை உணர முடியும். அந்த மனிதனும் ஞானியும் இப்படிப் பேசிக் கொண்டிருக்கும் போதே, வெளிநாட்டுக்காரர் ஒருவர் அங்கே வந்தார். ஞானியின் முன்னால் வந்து பணிபோடு நின்றார். தன்னுடைய தேவையைச் சொன்னார். நான் விரும்புவது அமைதி , ஞானி சொன்னார்.


 முதல் இரண்டு வார்த்தைகளை விட்டு விலகு. மூன்றாவது வார்த்தையை நெருங்கலாம் எனக் கூற, வந்தவர் யோசித்தார். நான் என்கிற அகங்காரத்தை விலக்குங்கள். நான், என்னுடையது என்கிற ஆசைகளை விலக்குங்கள். அமைதி என்கிற இறைநிலையை நீங்கள் நெருங்கிவிடுவீர்கள். வெளிநாட்டுக்காரருக்கு விளக்கம் கிடைத்தது. மனநிறைவோடு திரும்பிச் சென்றார். அந்த அளவுக்கு வேறே யாருக்கும் கிடைச்சிருக்காது!


பின் இவனிடம் கேட்டார் கடவுளுக்கு அருகில் இருப்பது போல் உணர்ந்து இருக்கிறாயா , அவன் உணர்ந்து என்ன பக்கத்தில் அமர்ந்தே இருக்கிறேன் 
அப்படியா! ஞானி ஆச்சர்யமாய் கேட்க வந்தவன் தொடர்ந்தான் ஆமாம் ! 
ஸ்பெஷல் தரிசனம் ! 50 ரூபாய் டிக்கெட் ! சுவாமிக்கு நெருக்கமா போய் சந்நிதியிலே கொஞ்சநேரம் உட்கார முடிஞ்சிது ! அவன் முகத்திலே கடவுளை நெருங்கிவிட்ட பெருமிதம் ! ஞானி கேட்டார் : அப்படின்னா உனக்கும் கடவுளுக்கும் எவ்வளவு தூரம் ? ஒரு பத்தடி தூரம் இருக்கும் அவ்வளவுதான் ! உன் அளவுக்கு வேற யாரும் நெருங்கலையா ? இல்லை ! அந்த வகையில் பார்த்தால் உன்னைவிட கடவுளுக்கு நெருக்கமானவர் வேறொருவர் உண்டு ! யார் அவர் ? அங்கே இருக்கிற அர்ச்சகர் ! வந்தவன் முகத்தில் ஒரு சிறு மாற்றம். சரி சுவாமி, நான் வர்றேன் ! சோர்வோடு நடந்து போனான். அதன் பிறகும் விவாதம் தொடர்ந்தது. 


 இறுதியில் மனிதன் எழுந்தான். திரும்பி நடந்தான். ஞானி கேட்டார். எங்கே போகிறாய் ? வீட்டுக்கு ! கோவிலுக்குப் போகவில்லையா ? இல்லை ! அங்கே போக வேண்டும் என்றுதானே புறப்பட்டு வந்தாய் ? ஆண்டவனை உணர்ந்தபிறகுதான் அவரை வழிபட முடியும் என்பதைப் புரிந்து கொண்டேன். நான், என்னிடம் இருந்து விலகினால் இறைவனை நெருங்கலாம் என்கிற உண்மையை தெரிந்து கொண்டேன். ஞானி கைகளை உயர்த்தினார். ஆன்மிகம் என்பது நெருங்குவது அல்ல, விலகுவது ! எவ்வளவு தூரம் நம்மிடமிருந்து விலகியிருக்கிறீர்களோ, அவ்வளவு தூரம் கடவுளை நெருங்கியிருக்கிறீர்கள் என்பது பொருள் !


இறை அருளைப்பெற என்ன செய்ய வேண்டும்?



வாழ்க்கைக்கு ஒழுக்கம் மிக அவசியம். ஒழுக்கமே ஒவ்வொருவரது வாழ்க்கையையும் மேம்படுத்தும். ஒழுக்கமுள்ள வாழ்வு வாழ இறைவனின் அருளும் நமக்குத் தேவை. ஓரிடத்தில் விளக்கு இருப்பது நமக்குத் தெரிந்தால் தானே, அந்த விளக்கை ஏற்றி வைத்து நம்மால் வெளிச்சத்தைப் பெற முடியும். விளக்கு எங்கே இருக்கிறது என்பதை நாம் அறிந்து கொள்ளவும் நமக்கு ஒரு வெளிச்சம் தேவைப்படுவதைப் போல, இறைவனை வணங்கவும், வாழவும் இறைவனின் அருள் நமக்குத் தேவை. இதை மாணிக்கவாசப் பெருமான் தமது சிவபுராணத்தில்,


அவனருளாலே அவன்தாள் வணங்கி
சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை
முந்தைவினை முழுதும் ஓய உரைப்பன் யான்



எனப் பாடி பரவசப்படுகிறார். இறைவனை வழிபடவும் இறைவனின் அருள் இருந்தால் தான் முடியும். அப்படிப்பட்ட இறையருளைப் பெற ஒழுக்கம் நிறைந்த வாழ்வு நமக்கு வழிகாட்டுகிறது. அதற்கு நாள்தோறும் நல்ல செயல்களைச் செய்ய வேண்டும். நல்லனவற்றையே எண்ணி, நல்லனவற்றையே பேச வேண்டும். அப்படிச் செய்யும் போது மனம் இறைவன் அருள்பெற ஏதுவாகிறது. மனம் பண்பட்டவுடன் இறையருள் அங்கே உதயமாகிறது. பண்பட்ட நிலம் பயிர்த்தொழிலுக்கு ஏற்றதாகிற மாதிரி, பண்பட்ட உள்ளம் வழிபாட்டுக்கு ஏற்றதாகிறது. அப்படி பண்பட்ட உள்ளத்தினை உடையவர்கள் தினந்தோறும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி, அந்த நேரத்தில் இறைவனை வழிபட வேண்டும். இறைவனிடம் இடைவிடாத பக்தி செலுத்த வேண்டும். நல்ல மனத்தையும் நல்ல சிந்தனையையும் அருளும்படி இறைவனிடம் நாம் வேண்டிக்கொள்ள வேண்டும். ஒழுக்கம் அவரவர் நிலைக்கு ஏற்றபடி மாறும்.
முனிவர்களின் ஒழுக்கம் துறவறம் மேற்கொள்வது; பண்டிதனின் ஒழுக்கம் தான் கற்றதை பிறருக்கு கற்றுக் கொடுப்பது; மாணவர்களின் ஒழுக்கம் குருவின் சொல்படி நடத்தல். இப்படி ஒழுக்கம் மனிதனுக்கு மனிதன் வேறுபடுகிறது. ஒழுக்கமான வாழ்வுக்கு மனம் அடங்கப் பெறல் வேண்டும். இறைவனை நினைக்கும்போது மட்டும் மனம் அடங்குகிறது. மனம் அடங்கினால் நம் அகங்காரத் துடிப்புகள் அடங்கி இறைவனுடன் ஒன்ற முடிகிறது. இறைவன் மட்டுமே இன்ப துன்பங்கள், விருப்பு வெறுப்புகள், லாப நஷ்டங்கள் நல்லது தீயதுகள் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டவன். வேறு உலகப் பொருள்களும், பந்தங்களும் அவற்றின் மீது பிரியம் வைக்கும் மனிதனையும் பந்தப்படுத்தி விடுகின்றன. அதனால் பிறவித் தளையில் சிக்கிக் கொண்டு தவிக்கிறான். எனவே, பற்று அற்றவனாகிய இறைவன் மீதே நாம் பற்று வைக்க வேண்டும். இறைவன் தன்னிடம் வந்து சேர்கின்ற இறையடியார்களைத் தன்னுடைய அருள் என்னும் தீயால் எரித்து, பாவங்களைப் போக்கி, தூய்மைப்படுத்துகிறான். அவனால் மட்டுமே அது முடியும். இறைவனை நினைப்பதால் இறைவனைப் போலவே ஆகிவிட முடியும். இறைவனைப் போன்று பேரானந்தமயமாய் விளங்க முடியும். இறைவன் நித்தியானந்தனாய் விளங்குபவன், அழிவு என்பதே இல்லாதவன்; அழியும் இயல்பு உடைய நம்மை அழியாமல் காக்க அவனால் மட்டுமே முடியும். அவன் தூய்மையே வடிவெடுத்தவன். வினைப்பயனால் விளைந்த பாவங்களைச் சுமந்து கொண்டிருக்கும் நம்மை பரிசுத்தமாக்க அவனால் மட்டுமே முடியும். அவன் மீது பக்தி செலுத்தி அவன் மயமாக மாற வாய்ப்பிருக்கும் போது ஏன் நாம் உலக விவகாரங்களில் சிக்கிக் கொண்டு திணற வேண்டும்? ஒழுக்கம் நிறைந்த வாழ்க்க வாழ்ந்து, மனத்தைத் தூய்மைப்படுத்தி அதனை இறைவன் உறையும் ஆலயமாக ஆக்குவோம்

சிந்திக்க ஒரு கதை


                                                                சிவமே ஜெயம் 
                          ஒரு துறவி தனது சீடர்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருந்தார் . உபதேசம் முடிந்தவுடன் தியானத்திற்கான நேரம் அனைவரும் ஆயத்தமாகி கொண்டிருக்கும் வேளையில் ஒரு பூனை அங்கு வந்தது அது மிகவும் பசியுடன் காணப்பட்டது . இளகிய மனம் படைத்த அந்த துறவி அந்த பூனைக்கு உணவு கொடுத்தார் . அந்த பூனை அது முதற்கொண்டு அந்த ஆசிரமத்தையே தனது இருப்பிடமாக கருதி அங்கேயே இருந்தது.ஒரு நாள் அனைவரும் தியானம் செய்துக்கொண்டிருக்கும் வேளையில் பூனை அவர்களுக்கு இடையூறு செய்தது இதை பார்த்த துறவி அந்த பூனையை பிடித்து தூணில் கட்டுமாறு உத்தரவிட்டார் .பூனை கட்டப்பட்டது . பின்பு ஒவ்வொரு நாளும் தியானத்திற்கு முன்பாக அதை கட்டிப்போடும் பழக்கம் ஆனது .அந்த துறவி இறந்து விட்டார் .பின்பு வந்த குருவும் அந்த பூனையை அங்கே இருக்கும் நாலாவது தூணில் கட்டிபோடுங்கள் அப்போதுதான் தியானம் கைகூடும் என தனது சீடர்களுக்கு கூறினார். பூனையும் இறந்து விட்டது . இப்போது பூனை இருந்தால் தான் தியானம் செய்ய முடியும் என்கிற நிலை உருவானது . உடனே அனைவரும் வெளியே சென்று ஒரு பூனையை தேடி பிடித்துக் கொண்டு வந்து நாலாவது தூணில் கட்டிய பின் தியானத்தை தொடர்ந்தனர் .  


                 இந்த கதையில் இருக்கும் கருத்து என்ன ? யாரை குற்றம் சொல்வது இயல்பாய் நடந்த நிகழ்வு கட்டாயமாக்கப்பட்டது .இதே போல்தான் நாமும் பிறரை பின்பற்றுவதில் தான் கவனம் செலுத்துவோமே தவிர உண்மை என்ன என்பதை யோசிக்க மாட்டோம் . கடவுளுக்கு நாம் புரோக்கர்களை வைத்துள்ளோம் நாம் கடவுளை அடைய அவர்களுக்கு கமிஷன் கொடுத்து சிபாரிசு செய்ய சொல்வது போல் அவர்கள் பின்னால் போகிறோம் . நாம் நம்மை உணர்ந்தால் இது போல் நடக்காது . என் குருநாதர் சொல்வார் சிவத்தை தவிர அனைவரும் (அனைத்து தெய்வங்களும் ) வணக்கத்திற்குரியதே தவிர வணங்கப்பட வேண்டியவை அல்ல . ஆகவே உண்மையான சிவபதம் தேடுவோம் ..இதைத்தான் திருமூலரும் தன்னுடைய திருமந்திரத்தில் 

சிவனோடொக்கும் தெய்வம் தேடினும் இல்லை 
அவனொடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை
புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும் 
தவனச் சடைமுடி தாமரையானே 


குதம்பை சித்தர் 

செத்துப்பிறக்கின்ற தேவைத்துதிப்போர்க்கு
 முத்தி தான் இல்லையடி - குதம்பாய் 
முத்தி தான் இல்லையடி 

என்று தனது பாடல்களில் சொல்லி இருக்கிறார் 

இதே கருத்தை ஒத்து அகப்பேய் சித்தரும் சிவபதம் அடைவதற்கு எந்த கஷ்டமும் வேண்டாம் யாருடைய சிபாரிசும் வேண்டாம் தன மனம் எனும் பேயிடம் சொல்கிறார் .
         
நஞ்சுண்ண வேண்டாவே ......அகப்பேய் 
நாயகன் தாள் பெறவே
நெஞ்சு மலையாதே .....அகப்பேய்
நீ ஒன்றுஞ் சொல்லாதே.



கடுவெளி சித்தர் தனது பாடல்களில்  

மெய்குரு சொற்கட வாதே - நன்மை
மென்மேலுஞ் செய்கை மிகவடக்காதே
பொய்க்கலை யால்நடவாதே - நல்ல
புத்தியைப் பொய்வழி தனில் நடத்தாதே. 

வஞ்சகமாம் வாழ்வைநம்பிச் சஞ்சலங்கள் அடையோம்
மகத்தான மகரிடிகள் பதங்காணச் சடையோம் 
பஞ்சமா பாதகரை ஓர்நாளும் பாரோம் 
பாவவினை பற்றருத்தோர் சிநேகிதங்கள் மறவோம் .

மௌன சித்தர் தனது பாடல்களில் இவ்வாறு கூறுகிறார் . இதைத் தொடர்ந்து தடங்கண் சித்தர் தனது பாடல்களில் உண்மை நிலையை குறிப்பிடுகிறார் 
    
மெய்யுணர் வெய்தித் தனைமுதல் உணர்ந்து 
       மெய்ம்மைகள் விளங்குதல் வேண்டும் 
பொய்மிகு புலன்கள் கடந்து பேருண்மை 
        புரிதலே இறையுணர் வன்றோ !
செய்கையால் வழக்கால் அச்சத்தால் மடத்தால் 
       செய்பொருள் இறைஎனத் தொழுவார் ?
உய்வரோ இவர்தாம் ?இதுகொலோ சமயம்?
          உணர்விலார்க் குழலுமென் நெஞ்சே !!

கொங்கன சித்தர் தனது பாக்களில் 


சாத்திரம் பார்த்திருந்தாலுந் தானுமென்ன? வேதம்
தானுமே பார்த்திருந் தாலுமென்ன?
சூத்திரம் பார்த்தல்லோ ஆளவேணு மஞ்சு
சொல்லை யறிந்தல்லோ காணவேணும்?

காணாது கிட்டாதே எட்டாதே அஞ்சில்
காரிய மில்லையென் றேநினைத்தால்
காணாதுங் காணலா மஞ்செழுத் தாலதில்
காரிய முண்டுதியானஞ் செய்தால்
      

ஆகவே பொய்யான ஆன்மீகவாதிகளின் பின்னால் செல்லாமல் 

                                    உண்மை நிலை அறிவோம் !!




 சிவத்தை போற்றுவோம் !!! சித்தர்களை போற்றுவோம் !!!
                      
                              சிவமே ஜெயம் !!!

சிவ நாம மகிமை

இமயம் முதல் குமரி வரை பரந்து விரிந்துள்ள இந்த புனிதமான பாரத நாட்டில் உள்ள தமிழ்நாட்டில் எத்தனை எத்தனையோ சிவாலயங்களும், விஷ்ணு ஆலயங்களும் உள்ளன. 108 திருப்பதிகள் அல்லது 108 வைஷ்ணவ திவ்ய தேசங்கள் என்று போற்றப்படும் விஷ்ணு ஆலயங்களில் 84 ஆலயங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளது. அதே போன்று இந்தியாவில் பல சிவன் கோயில்கள் இருந்தாலும், குறிப்பாக பாடல் பெற்ற சிவஸ்தலம் என்று போற்றப்படும் 274 ஆலயங்களில் 264 கோயில்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளன. இந்த கோயில்கள் ஒவ்வொன்றும் தனிச்சிறப்பும், தொன்மையும், பெருமையும் உள்ளவை.

கலியுகத்தில் பிறவி எடுத்தோர் உய்யும் மார்க்கத்தைப் பெறுவதற்குத் துணையாக இருப்பது சிவ மந்திரம், சிவ தரிசனம், சிவ வழிபாடு முதலியனவாகும். இவை மூன்றும் வாழ்வில் இன்றியமையாதவை. சிவமே எல்லா உலகங்களுக்கும், எல்லா உயிர்களுக்கும் முதலானவன். எல்லாம் சிவமயம்! எங்கும் சிவமயம்! எதிலும் சிவமயம்!

ஆம். நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை தினமும் ஜபித்து வந்தாலே வாழ்வில் எல்லா கஷ்டங்களும் நீங்கிவிடும். சிவன் கோவிலுக்கு சிறிதளவு பணி செய்தாலும் மகத்தான பலன் கிடைக்கும். சிவலிங்கத்திற்கு வலை கட்டி பாதுகாத்த சிலந்தி மறு பிறவியில் கோட்செங்கட் சோழனாகப் பிறந்து தமிழகத்தில் பல மாடக்கோயில்களைக் கட்டி சிவன் திருப்பணி செய்து புகழ் பெற்றான். சிவன் கோயில் விளக்கு எரிய திரியை தூண்டி விட்ட எலி மறு பிறவியில் சிவன் அருளால் மகாபலி சக்ரவர்த்தியாகப் பிறந்தான். சிவ நாமத்திற்கு அப்படியொரு மகிமை. சிவசிவ என்று தினமும் மனதால் நினைத்து உச்சரித்தாலே போதும். பாவங்கள் நீங்கும். மனம் தூய்மை அடையும்

சிவ சிவ திருவே! சிவந்தது ஏனோ?

சிவ சிவ என்றோம் சிவந்தன மேனி
பவபவ என்றிடப் பாய்ந்தன படைகள்
நமநம என்றோம் நம்மையழித்தார்
இறைஇறை என்றிட இறந்துமே வீழ்ந்தோம்

கரகர என்றிடக் கரமதில் விலங்கும்
சிரபுர என்றிடச் சிரசதும் நீக்கி
தரதரவென்றுமே தரையிலிழுத்து
கொரகொரவென்றே கொலைகள்புரிந்தார்

தொழுதோம் ஆயின் தொலைந்தன வாழ்வு
அழுதோம் ஆயின் அழிந்தன ஊரே
தழுவும் தமிழின் தந்தையென் இறைவா
எழுதும் விதியில் எதைநீ வைத்தாய்

அரசன் என்றொரு அசுரனை வைத்து
சரமென வீழ்ந்திட சடபுட இடியாய்
பறந்தே வானிற் பாவிகள் சுட்டும்
கருக இரசாயனக் குண்டுகள் வீசி

உருவம் அழித்து அருவமுமாக்கி
பெருவெளிவானில் திரி எனவிட்டோர்
குருபரனே இக் கொடியவர் தன்னை
இருஎனக்கூறி எமை யழித்தாயே

கலகல என்றும் களிப்புறு பெண்கள்
மலை மலையென்று மதமெடு ஆண்கள்
தளதள வென்று தவழ்ந்திடு குழந்தை
அழஅழக் கொன்று அழித்தனர் கண்டீர்

கூடியே சுற்றிக் கொலைப்படை சூழ
ஓடியேசென்று உயிர்தனைக் காக்கும்
குழிகளி லோடிக் குழுமிய மாந்தர்
புழுவாய்த் துடித்தே பேச்சுமழிந்து

இறைவா தொழுதே இருவிழிபார்க்க
உறைந்திடநெஞ்சும் உணர்வுமயக்க
கெஞ்சிய முகமும் கூப்பிய கையும்
வஞ்சகர் கண்டும் நெஞ்சமிரங்கா

மண்ணதைமூடி மானிடம்கொல்ல
விண்ணுறைதேவா வெள்ளிடைமலையில்
எண்ணியதென்ன ஏதும்செய்யாப்
புண்ணியபூமி பெருந்தீ  எரிக்க

விட்டது என்ன? கத்திடும் மழலை
தொட்டணை கொள்ளும் தூயவளன்னை
கட்டிளங்காளை கன்னியர் மூதோர்
ஒட்ட நசுக்க உருளும் வண்டி

வா வா சிவனென் றுனையேவணங்கி
நீயே  கதியென்  றழுதோர் தம்மை
காப்பாயென்றே கைதனைக் கூப்ப
சா! போ! என்றே சாற்றி யிருந்தாய்

பூவாய் உடல்கள்  புதைகுழிமூட
நீயோ கண்டும் நெஞ்சம்மிரங்கி
தீதே செய்தோன் தணலாய் எரிய
தீயைச் சொரிகண் திறவாதேனோ

ஆதிசிவாஉன் அருந்தமி ழென்னில்
அழியும் மொழியைக் காப்பதுவிட்டு
போதி மரத்தடி புத்தன் பார்த்து
புதிதாய் ஞானம் பெற்றனைதானோ

வானம் ஏறும் வெய்யோ னன்ன
மானத் தமிழன் மாண்பும்காத்து
ஈன மனத்து இழியோர் கொட்டம்
தானுமடக்கி தனியொரு பெண்ணே

வீதியில் சென்று விடிவது வரையும்
போதிய நகைகள் பொன்னு மணிந்து
ஊரினைச் சுற்றி உறைவிடம் சேரும்
பேரரும்வாழ்வைப் பெற்றுத் தருவான்!

நீதியைநெஞ்சும் நேர்மையைசெயலும்
நினைவில்தமிழும் கொண்டொரு தலைவன்
பாதியில் விட்டுப் பகலவன்போல
போனதை மீண்டும் புலரச் செய்வாய்

அவனே சக்தி அவனே சுடராம்
அவனே வானம் அவனேமண்ணும்
அவனே கடலும் ஆளுமை கொண்டோன்
அவனேவந்தால் ஆகும் (தமி)ழீழம்