64 திருவிளையாடல்
மதுரை நகரம் உருவான படலம்
மதுரை மாநகரம் இயற்கையாக எழுந்ததல்ல. அது உருவாக்கப்பட்ட ஒரு நகரம். அதை உருவாக்கி அருளியவரும் ஆலவாய் அழகனான சொக்கநாதனே! ஒரு காலத்தில், பாண்டியநாடு கடம்பவனங்கள் நிறைந்த வனமாக இருந்தது. அந்த வனத்துக்குள் ஏராளமான அருவிகள் இருந்தன. வனவிலங்குகள் வாழ்ந்த கொடிய காடு அது. இந்திரன் நிர்மாணித்து சென்ற சொக்கநாதர் திருச்சன்னதியை அஷ்டதிக்கஜங்கள் எனப்படும் எட்டு யானைகள் தாங்க, அந்தச் சன்னதி மட்டுமே காட்டுக்குள் இருந்தது. தனஞ்செயன் என்ற வணிகர் பாண்டியநாட்டில் வசித்து வந்தார். அவர் மாபெரும் சிவபக்தர். சிவனடியார்களை உபசரிப்பதில் ஆனந்தம் கொண்டார். வணிகம் செய்தததால், பெரும் செல்வந்தராகவும் திகழ்ந்தார். ஒருமுறை, அவர் வெளியூரில் வியாபாரத்தை முடித்து விட்டு, கடம்பவனத்துக்குள் புகுந்து வீடு நோக்கி நடந்தார். திடீரென வானம் இருண்டது. காட்டுக்குள் பாதை தெரியாத அளவு ஒளி சூழ்ந்தது. தனஞ்செயன் அசைவற்று நின்று விட்டார். என்ன செய்வதென தெரியவில்லை. அப்போது, மின்னல் வெட்டினாற்போல் ஓரிடத்தில் ஒளி தோன்றியது. தனஞ்செயன் ஒளி வந்த திசை நோக்கி நடந்தார். அங்கே, சொக்கநாதப் பெருமானின் விமானம் பளிச் சிட்டது.
உள்ளே பெருமான் ஜொலித்துக் கொண்டிருந்தார். இந்தக் கோயில் இங்கே எப்படி வந்தது? யார் கட்டியது? என்று தனஞ்செயனுக்கு குழப்பம். இந்திரனால் உருவான கோயில் அது என்பதை அவரால் எப்படி உணரமுடியும்? அருகில் இருந்த குளத்தில் பொற்றாமரைகள் பூத்துக் கிடந்தன? தங்கத்தில் தாமரையா? அவை தான் ஒளிக்கீற்றைச் சிந்தி இங்கே வெளிச்சமாக இருக்கிறதா? அவர், சொக்கலிங்கத்தைப் பக்தியோடு வணங்கினார். திடீரென வாத்தியங்கள் முழங்கும் ஒலி கேட்டது. தனஞ்செயன் ஆச்சரியத்துடனும், அதிர்ச்சியுடனும் சப்தம் வந்த திசை நோக்கி திரும்பினார். ஏராளமானோர் பட்டாடைகள் பளபளக்க, தலையில் கிரீடங்களுடன், பூஜை பொருட்களை தங்கத் தாம்பாளத்தில் சுமந்தபடி வந்து கொண்டிருந்தனர். சொக்கலிங்கப் பெருமானுக்கு அவர்கள் பூஜை செய்ய ஆரம்பித்தனர். அப்போது தான் தனஞ்செயனுக்கு அவர்கள் தேவர்கள் என்பது புரிந்தது. வானத்து தேவர்களைக் காணும் பாக்கியம் எனக்கு கிடைத்ததே! அதிலும், அவர்கள் சிவபூஜை செய்வதைக் காண என்ன பாக்கியம் செய்தேனோ! அவரது உடல் சிலிர்த்தது. சில தேவர்கள் பொற்றாமரைக் குளத்தில் இறங்கிப் பூப்பறித்தனர். தனஞ்செயனும் தன்னையறியாமல் குளத்துக்குள் இறங்கி, அவர்களுக்கு பூப்பறித்துக் கொடுத்து உதவினார். அவர்கள் அவரை வாழ்த்தினர். பூஜை முடிந்ததும் தேவர்கள் அங்கிருந்து கிளம்பிச் சென்று விட்டனர். இந்த அதிசயம் குறித்து, நாடாண்ட மன்னர் குலசேகரப் பாண்டியனிடம் தெரிவித்தார் தனஞ்செயன்.
மன்னா! தாங்களும் அத்தகைய பூஜையைக் காண வேண்டும். நான் அந்த பூஜையை சோமவாரத்தன்று (திங்கள்கிழமை) கண்டேன். தாங்களும் அடுத்த சோம வாரத்தன்று அதைக் காண வரவேண்டும், என்று கேட்டுக் கொண்டார். மன்னனின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அவனுக்கு தூக்கமே பிடிக்கவில்லை. அடுத்த சோமவாரம் எப்போது வருமென காத்து கொண்டிருந்தான். முதல்நாள் இரவு, பரபரப்புடன் இருந்த அவன், தூக்கம் பிடிக்காமல் இருந்தான். அதிகாலையில் தூக்கம் வந்துவிட்டது. அப்போது எழுந்த கனவில், சொக்கநாதர் அவன் முன்னிலையில் தோன்றி, குலசேகரா! தனஞ்செயன் கண்டது உண்மையே. நீ கடம்பவனத்தை சீர்திருத்தி ஒரு நகரமாக மாற்று. என் கோயிலை அடையாளமாகக் கொண்டு, அது நடுவில் இருக்க நகரம் சிறப்புற அமைய வேண்டும். வீதிகள், வீடுகள், மாளிகைகள் அமைய வேண்டும், என்று கட்டளையிட்டார், திடுக்கிட்டு எழுந்த மன்னன், உடனடியாக அமைச்சர்கள், படைகள் புடைசூழ, தனஞ்செயன் வழிகாட்ட காட்டுக்குள் சென்றனர். அங்கே எட்டு யானைகள் விமானத்தை தாங்க, அதன் கீழ் சொக்கநாதர் அருள்பாலித்துக் கொண்டிருந்தார். அனைவரும் சொக்கநாதரைச் சேவித்தனர். உடனடியாக விக்னேஸ்வர பூஜை நடந்தது.
நகரம் கட்டும் பணியைத் துவங்கினான் மன்னன். அர்த்தமண்டபம், உற்சவ மண்டபம், வேள்வி மண்டபம், மடப்பள்ளி முதலானவை அமைத்தான். பின்னர் கோயிலைச் சுற்றி மாடமாளிகைகள், பெரிய வீடுகள், வீதிகள் ஆகியன அமைக்கப் பட்டன. பார்க்க மிக அருமையாக இருந்தது அந்த நகரம். உடனடியாக, கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்து சிறப்பாக முடித்தான். சிவபெருமான் அங்கே எழுந்தருளினார். தனது ஜடாமுடியில் அணிந்திருந்த சந்திரனின் கலைகளில் (பிறை) ஒன்றை நகரத்தில் சிந்தினார். எனவே அது ஒளி பெற்றது. சந்திரனே மனதிற்கு அதிபதி. மனதிடத்தை வழங்குபவர். அதனால், நகரில் வசித்த மக்கள் மனோதிடம் பெற்றனர். சந்திரனை பார்த்தால் மனம் இனிக்கும். இனிப்பை மதுரம் என்றும் சொல்வர். மதுரம் சிந்திய அந் நகரத்துக்கு மதுரை என்று பெயர் சூட்டினான் குலசேகரப் பாண்டியன். பின்னர் பலகாலம் அந்நாட்டில் செங்கோல் ஆட்சி நடத்தினான்