August 30, 2011

ஆன்மிக கதை

பயமுறுத்த பழகிக்கொள்

 
ஒரு கிராமத்தில் வசித்த 17 வயது இளைஞன் மகாகெட்டவன். வயதுக்கு மீறிய பேச்சு, நடத்தை... அவனைப் பார்த்தால் இளம்பெண்கள் நடுங்கி ஓடுவார்கள். இருந்தாலும், அவர்களை விரட்டிச் சென்று துன்புறுத்துவான்.
ஒருமுறை, ஒரு முனிவர் அவ்வூருக்கு வந்தார். இளைஞன் வசித்த தெருவுக்குள் சென்றார். ஊர் மக்கள் அவரை மறித்து, ""சுவாமி! அங்கே போகாதீர்கள். அங்கே ஒரு துஷ்டன் வசிக்கிறான். அவனைக் கண்டு பயந்து, அந்தத் தெருவையே காலி செய்துவிட்டு வேறு தெருக்களில் நாங்கள் குடியிருக்கிறோம். ""நான் வேறு தெரு வழியாக சுற்றி செல்வதானால், நேரம் அதிகமாகும். என்னிடம் என்ன இருக்கிறது! இம்சை செய்ய, நான் அவ்வழியிலேயே போகிறேன்,'' என்று சொல்லிவிட்டு நடந்தார். இளைஞன் அவரை மறித்தான்.
""யோவ், சாமி! ஊருக்குப்புதுசா! இந்த இடம் எனக்கு மட்டும் சொந்தம். நீர் சுற்றிச்செல்லும்,'' என்று சொல்லி கையை ஓங்கினான்.
""தம்பி! ஒன்றே ஒன்று கேட்பேன். நீ பதிலளித்து விட்டால் நீ சொன்னபடி செய்கிறேன்,'' என்றவர், ""நான் வழிமாறி சொல்வதால் உனக்கென்ன லாபம்!'' எனக்கேட்டார்.
"ஒன்றுமில்லை' என்றான் அவன்.
""எந்த லாபமும் இல்லாத ஒன்றைச் செய்யாதே. இறைவனை வணங்கு, நல்லதைச் செய்ய முயற்சி செய்,'' என்றார் முனிவர். இளைஞன் மனதில் எப்படியோ இந்த வார்த்தைகள் ஆழமாகப் பதிய, அன்றுமுதல் அவனும் சாந்தமாகி விட்டான்.
இதைப்பயன்படுத்தி ஊர்மக்கள் அவனைத் துன்புறுத்த ஆரம்பித்தனர். சிலர் அடிக்கவும் செய்தனர். உடலெங்கும் காயம் ஏற்பட்டாலும் அவன் அமைதி காத்தான். முனிவர் திரும்ப வந்தார்.
""என்னாச்சு உனக்கு?'' என்றார். நடந்ததை விளக்கிய அவனிடம்,""பிறரை நீ அடிக்க வேண்டாம் என்று தான் சொன்னேன். உன்னைத் தாக்க வந்தால் பயமுறுத்த வேண்டாம் என சொல்லவில்லையே!'' என்றார். அதன்பின் மீண்டும் அவன் பயமுறுத்தலை துவங்க மக்கள் விலகிச் செல்ல ஆரம்பித்தனர்.
நல்லவனாய் இருக்கலாம்; ஆனால், ஆபத்து வந்தால், அதைத்தடுக்கும் விதத்தில் பயமுறுத்துவதில் தவறில்லை.

No comments:

Post a Comment