August 05, 2011

சித்தர் சிவவாக்கியர் சிந்தனைகள்

சித்தர் சிவவாக்கியர் சிந்தனைகள்



சிந்தனை 07



மை அடர்ந்த கண்ணினார் மயக்கிடும் மயக்கிலே
ஐ இறந்து கொண்டு நீங்கள் அல்லல் உற்றிருப்பீர்கள்
மெய் அறிந்த சிந்தையால் விளங்கு ஞானம் எய்தினால்
உய்யரிந்து கொண்டு நீங்கள் ஊழிகாலம் வாழ்விரே.

மைத் தீட்டிய அழகிய கண்களை உடைய இளம் பெண்கள் ஆடவரை காம வலை வீசி வீழ்த்தி மயக்கிடும் பாழ்வாழ்வெனும் இம்மையையில் அகப்பட்டு வீணான சந்தேகங்களிலும், எம வேதனை பயத்தினாலும் பிடிக்கப்பட்டு நீங்கள் துன்பப்பட்டு வாழ்ந்து உழன்று வருகின்றீர்கள். உங்கள் உடம்பிலேயே உள்ள உயிரை அறிந்து அதில் விளங்கும் மெய்ப்பொருளை உணர்ந்து அதையே சிந்தையில் நினைந்து தியானியுங்கள். இதுவே இப்பிறவி உய்வடையும் வழி என்பத அறிந்து ஞானத்தினால் நீங்கள் தவம் புரிந்து வந்தால் மரணமிலாப் பேரு வாழ்வைப் பெற்று இறைவனோடு எக்காலமும் நித்தியமாய் வாழ்வீர்கள்

சிந்தனை 06

கைவடங்கள் கொண்டு நீர் கண்சிமிட்டி நிற்கிறீர்
எவ்விடங்கள் கண்டு நீர் எண்ணி எண்ணிப் பார்க்கிறீர்
பொய் இறந்த சிந்தையை பொருந்தி நோக்க வல்லிரேல்
மெய் கடந்து உம்முளே  விரைந்து கூடல் ஆகுமே.

எவ்வளவோ கை முறைகள் கொண்டு யோக ஞானம் கற்றாலும் நம் மெய்யில் மெய்யான இடம் எதுவென அறியாமல் கண்களை சிமிட்டி நிற்கிறீர்கள். ஈசன் இருக்கும் இடம் எங்கே என்று தெரிந்து கொள்ளாமல் எவ்விடத்தில் மனதை இறுத்தி தியானம் செய்கிறீர்கள். பொய்யாயின யாவையும் ஒழித்து மெய்ப் பொருளை நன்கு உணர்ந்து, அங்கேயே சிந்தையைப் பொருத்தி அதையே நோக்கி தியானிக்க வல்லவர்கலானால் மெய்ப்பொருளில் சோதியாக விளங்கி எல்லாவற்றையும் கடந்து நின்ற ஈசனை உங்களுக்குள்ளேயே கண்டு விரைவில் சேர்ந்து கூடி இறவா நிலையைப் பெறுங்கள்.



சிந்தனை 05
பறைச்சி யாவது ஏதடா பணத்தியாவது ஏதடா
இறைச்சி தோல் எலும்பினும் இலக்கமிட்டு இருக்குதோ
பறைச்சி போகம் வேறதோ மனத்தி போகம் வேறதோ
பறைச்சியும் பணத்தியும் பகுத்து பாரும் உம்முள்ளே
 பறைச்சி என்பதும் பார்ப்பனத்தி என்பதும் ஏனாடா? அவர்கள் அனைவரும் பெண்கள்தானே. யாவருக்கும் தசை, தோல், எலும்பு யாவும் ஒரே மாதிரிதானே அமைந்துள்ளது. அதில் எதிலாவது இவள் தாழ்ந்த சாதி, அவள் உயர்ந்த சாதி என்று எழுதப்பட்டா  இருக்கிறது?  பெண்கள் பால் கிடைக்கும் சிற்றின்பம் யாவருக்கும் ஒன்றாகவே அனுபவம் கிடைக்கிறது. இவை யாவையும் நன்கு பகுத்தறிந்து உனக்குள்ளே இருக்கும் இறையை உணர்ந்து தியானம் செய்து பாருங்கள்.

சிந்தனை 04
அண்டர்கோன் இருப்பிடம் அறிந்து உணர்ந்த ஞானிகள்
பண்டறிந்த பான்மை தன்னை யார் அறிய வல்லரோ?
விண்ட வேதப் பொருளை அன்றி வேறு கூற வகையிலா
கண்டகோயில் தெய்வமென்று கையெடுப்பது இல்லையே.
அண்டங்கள் யாவினுக்கும் அரசனான ஈசனை, அவன் கோனாக அமர்ந்து தனக்குள் ஆட்சி செய்யும் இடம் இதுவென அறிந்து, உணர்ந்த ஞானிகள் அவனையே தியானித்து இருப்பார். அவர்கள் இந்த உண்மையை அறிவதற்காக பட்ட பாட்டினையும், இழந்த பொருளையும், யாராவது அறிய முடியுமா? வேதங்கள் வெளிப்படுத்தும் மெய்ப்பொருளை ஈசனாக அறிந்தவர்கள் தனக்குள்ளே இறைவனை, கண்டு கண்ட அதே தெய்வம் என உணர்ந்தவர்கள், காணுகின்ற கோயில்களிலெல்லாம் தெய்வம் இருப்பதாக எண்ணி கைதொழ மாட்டார்கள்.



சிந்தனை 03

அண்ணலே அனாதியே அனாதிமுன் அனாதியே
பெண்ணும் ஆணும் ஒன்றலோ பிறப்பதற்கு முன்னெலாம்
கண்ணில் ஆணின் சுக்கிலம் கருவில் ஓங்கும் நாளிலே
மண்ணுளோரும் விண்ணுளோரும் வந்தவாறு எங்ஙனே.
 நம் ஆருயிரில் ஆதி, அனாதி, அந்தமாக உள்ளவன் சிவனே. அவனே அனாதிக்குமுன் தோன்றிய அனாதியாக என்றும் நம் ஆன்மாவில் உறைகின்றான். பிறப்பதற்கு முன் எல்லா ஆன்மாக்களும் ஒரேழுத்தாக ஒன்றாகவே இருந்தது. அவைகளுக்கு ஆண், பெண் என்ற பேதம் ஏதும் கிடையாது. அது கண்ணில் நினைவாகத் தோன்றி ஆணிடம் சுக்கிலமாக உற்பத்தியாகி உருவாகின்றது. அப்போதே ஆன்மாவில் ஆண்டவன் நுழைந்து விடுகின்றான். பின்னரே உருவாகி ஆன்மா வளர்கின்றது. இப்படித்தான் மண்ணில் வாழும் மனிதர்களாகவும், விண்ணில் சேரும் தேவர்களாகவும், அனைவரும் வந்தனர் அன்பத அறிந்து கொள்ளுங்கள்.

சிந்தனை 02  ஓடம் உள்ள போதலோ ஓடியே உலாவலாம்
ஓடம் உள்ள போதலோ உறுதி பண்ணிக் கொள்ளலாம்
ஓடமும் உடைந்த போது ஒப்பிலாத வெளியிலே
ஆடுமில்லைகோலுமில்லை யாருமில்லையானதே.
ஓடமாகிய இவ்வுடம்பு இருந்தால்தான் அங்கும் இங்கும் ஓடி உலாவலாம். இந்த உடம்பில்தான் உயிர் உள்ளது என்பதையும் அதிலேதான் இறைவன் இருக்கிறான் என்பதையும் அறிந்து பிராணாயாமம், வாசியோகம், தியானம், தவம் போன்றவைகளை அறிந்து புரிந்து இவ்வுடம்பை உறுதியான கல்பதேகமாக மாற்றிக் கொள்ளலாம். இதை உணராது இவ்வுடலை விட்டு உயிர் போய் ஆகாயத்தில் மறைந்துவிட்டால், அப்போது இவ்வுடலில் ஆடிக்கொண்டிருந்த உயிரும் இல்லை, அதனை மேய்த்துக் கொண்டிருந்த ஈசனுமில்லை, என்றாகி தம் மனைவி மக்களோ, சொந்த பந்தஙகளோ, யாரும் இல்லாது போய்விடும். ஆகவே இவ்வுடம்பில் உயிர் இருக்கும் போதே இறைவனை அறிந்து தியானம் செய்யுங்கள், பிறவிப் பெருக்கடலை கடந்து கரை சேரலாம்.

சிந்தனை 01 


சங்கிரண்டு தாரை ஒன்று சன்னல் பின்னல் ஆகையால்
மங்கி மாளுதே உலகில் மானிடங்கள் எத்தனை
சங்கிரன்டையும் தவிர்த்து தாரையூத வல்லிரேல்
கொங்கை மங்கை பங்கரோடு கூடி வாழல் ஆகுமே.
 நமது மூக்கு ஒன்று, வாசல்கள் இரண்டு. அவைகளில் நம் காற்றானது இடகலை, பிங்கலை, சுழுமுனை எனும் நாடிகளில் சன்னல் பின்னலாக ஓடி நடந்துக் கொண்டிருக்கிறது. இப்படியாக ஒவ்வொரு சுவாசத்திலும் பிராணனில் இருந்து நாலு அங்குலம் நஷ்டமடைகிறது. அதனால் பிணி மூப்பு ஏற்பட்டு ஆயுளும் மங்கி, மாண்டு போகும் மனிதர்கள் கோடானு கோடி. இப்படியாக ஓடிக் கொண்டிருக்கும் மூச்சை சந்திரகலை, சூரியக்கலை, வழியாக கட்டுப்படுத்தி பிரனாயமத்தினால் பிராண வாயுவைப் பெருக்கி ரேசகம், பூரகம், கும்பகம், செய்து உடம்பையும், உயிரையும் வளர்க்கவேண்டும். இதனை நன்கு அப்பியாசித்து இடபிங்களைகளை ஒழுங்குபடுத்தி சுழுமுனை எனும் வாசலைத் திறந்தது வாசியினால் தாரை ஊதுவதைப் போல் ஊதி மூலாதாரத்தில் மூண்டெழும் கனலை மேலேற்றி அனலுடன் கூட்டி சோதியில் சேர்க்க வல்லவர்கள் ஆனால் அழகில் சிறந்த அம்மையை இடபாகம் கொண்ட ஈசருடன் கூடி வாழலாம்.

No comments:

Post a Comment