August 05, 2011

சிவவாக்கியம்

சிவவாக்கியம்

மிவ்வை - நற்குணம்

ஆதியான அஞ்சிலும் அனாதியான நாலிலும்
சோதியான மூன்றிலும் சொரூபம்அற்ற ரெண்டிலும்
நீதியான தொன்றிலே நிறைந்துநின்ற வத்துவை
ஆதியான தொன்றுமே அற்றதஞ் செழுத்துமே. 227
வானிலாதது ஒன்றுமில்லை வானுமில்லை வானிடில்
ஊனிலாதது ஒன்றுமில்லை ஊனுமில்லை ஊனிடில்
நானிலாதது ஒன்றுமில்லை நானுமில்லை நண்ணிடில்
தானிலாதது ஒன்றுமில்லை தயங்கி ஆடுகின்றதே! 228
சுழித்ததோர் எழுத்தைஉன்னி சொல்லுமுகத்து இருத்தியே
துன்ப்இன்ப முங்கடந்து சொல்லும்நாடி யூடுபோய்
அழுத்தமான அக்கிரத்தின் அங்கியை எழுப்பியே
ஆறுபங்க யம்கடந்து அப்புறத்து வெளியிலே. 229
விழுத்தகண் குவித்தபோ தடைந்துபோய் எழுத்தெலாம்
விளைந்துவிட்ட இந்திரசால வீடதான வெளியிலே
அழுத்தினாலு மதிமயங்கி அனுபவிக்கும் வேளையில்
அவனுமுண்டு நானுமில்லை யாருமில்லை ஆனதே. 230
நல்லமஞ் சனங்கள்தேடி நாடிநாடி ஓடுறீர்
நல்லமஞ் சனங்களுண்டு நாதன்உண்டு நம்முளே
எல்லைமஞ் சனங்கள்தேடி ஏகபூசை பண்ணினால்
தில்லைமேவும் சீவனும் சிவபதத்துள் ஆடுமே. 231
உயிர்அகத்தில் நின்றிடும் உடம்பெடுத்த தற்குமுன்
உயிர்அகாரம் ஆயிடும் உடல்உகாரம் ஆயிடும்
உயிரையும் உடம்பையும் ஒன்றுவிப்பது அச்சிவம்
உயிரினால் உடம்புதான் எடுத்தவாறு உரைக்கினேன். 232
அண்டம்ஏழும் உழலவே அனந்தயோனி உழலவே
பண்டைமால், அயனுடன் பரந்துநின்று உழலவே
எண்திசை கடந்துநின்ற இருண்டசத்தி உழலவே
அண்டரண்டம் ஒன்றதாய் ஆதிநட்டம் ஆடுமே. 233
உருவநீர் உறுப்புகொண்டு உருத்தரித்து வைத்திடும்
பெரியபாதை பேசுமோ பிசாசைஒத்த மூடரே,
கரியமாலம் அயனுமாக காணொணாத கடவுளை
உரிமையாக உம்முளே உணர்ந்துணர்ந்து கொள்ளுமே. 234
பண்ணிவைத்த கல்லையும் பழம்பொருள் அதென்றுநீர்
எண்ணமுற்றும் என்னபேர் உரைக்கிறீர்கள் ஏழைகாள்
பண்ணவும் படைக்கவும் படைத்துவைத்து அளிக்கவும்
ஒண்ணுமாகி உலகளித்த ஒன்றைநெஞ்சில் உண்ணுமே. 235
நாலதான போனியும் நவின்றவிந்தும் ஒன்றதாய்
ஆலதான வித்துளே அமர்ந்தொடுங்கு மாறுபோல்
சூலதான உற்பனம் சொல்வதான மந்திரம்
மேலதான ஞானிகாள் விரித்துரைக்க வேணுமே. 236
அருவமாய் இருந்தபோது அன்னைஅங்கு அறிந்திலை
உருவமாய் இருந்தபோது உன்னைநான் அறிந்தனன்
குருவினான் தெளிந்துகொண்டு கோதிலாத ஞானமாம்
பருவமான போதலோ பரப்பிரமம் ஆனதே. 237
பிறப்பதும் இறப்பதும் பிறந்திடாது இருப்பதும்
மறப்பதும் நினைப்பதும் மறைந்ததைத் தெளிந்ததும்
துறப்பதும் கொடுப்பதும் சுகித்துவாரி உண்பதும்
பிறப்பதும் இறப்பதும் பிறந்தவீடு அடங்குமே. 238
கண்ணிலே இருப்பனே கருங்கடல் கடைந்தமால்
விண்ணிலே இருப்பனே மேவிஅங்கு நிற்பனே
தன்னுளே இருப்பனே தராதலம் படைத்தவன்
என்னுளே இருப்பனே எங்குமாகி நிற்பனே. 239
ஆடுநாடு தேடினும் ஆனைசேனை தேடினும்
கோடிவாசி தேடினும் குறுக்கேவந்து நிற்குமோ?
ஓடிஇட்ட பிச்சையும் உகந்துசெய்த தர்மமும்
சாடிவிட்ட குதிரைபோல் தர்மம்வந்து நிற்குமே. 240
எள்இரும்பு கம்பளி இடும்பருத்தி வெண்கலம்
அள்ளிஉண்ட நாதனுக்கோர் ஆடைமாடை வத்திரம்
உள்ளிருக்கும் வேதியர்க்கு உற்றதானம் ஈதிரால்
மெள்ளவந்து நோய் அனைத்தும் மீண்டிடும் சிவாயமே. 241
ஊரிலுள்ள மனிதர்காள் ஒருமனதாய்க் கூடியே
தேரிலே வடத்தைவிட்டு செம்பைவைத்து இழுக்கிறீர்
ஆரினாலும் அறியொணாத ஆதிசித்த நாதரை
போரிலான மனிதர்பண்ணும் புரளிபாரும் பாருமே. 242
மருள்புகுந்த சிந்தையால் மயங்குகின்ற மாந்தரே
குருக்கொடுத்த மந்திரம் கொண்டுநீந்த வல்லீரேல்
குருக்கொடுத்த தொண்டரும் முகனொடித்த பிள்ளையும்
பருத்திபட்ட பன்னிரண்டு பாடுதான் படுவரே. 243
அன்னைகர்ப்ப அறைஅதற்குள் அங்கியின்பிர காசமாய்
அந்தறைக்குள் வந்திருந்து அரியவந்து ரூபமாய்
தன்னைஒத்து நின்றபோது தடையறுத்து வெளியதாய்
தங்கநற் பெருமைதந்து தலைவனாய் வளர்ந்ததே. 244
உன்னையற்ப நேரமும் மறந்திருக்க லாகுமோ
உள்ளமீது உறைந்தெனை மறைப்பிலாத சோதியைப்
பொன்னவென்ற பேரொளிப் பொருவில்லாத ஈசனே
பொன்னடிப் பிறப்பில்லாமை என்றுநல்க வேணுமே. 245
பிடித்ததண்டும் உம்மதோ பிரமமான பித்தர்காள்
தடித்தகோலம் அத்தைவிட்டு சாதிபேதங் கொண்மினோ,
வடித்திருந்த தோர்சிவத்தை வாய்மைகூற வல்லீரேல்
திடுக்கமுற்ற ஈசனைச் சென்றுகூட லாகுமே. 246
சத்திநீ தயவுநீ தயங்குசங்கின் ஓசைநீ
சித்திநீ சிவனும்நீ சிவாயமாம் எழுத்துநீ
முத்திநீ முதலும்நீ மூவரான தேவர்நீ
அத்திபூரம் உம்முளே அறிந்துணர்ந்து கொள்ளுமே. 247
சட்டையிட்டு மணிதுலங்கும் சாத்திரச் சழக்கரே
பொத்தகத்தை மெத்தவைத்துப் போதமோதும் பொய்யரே
நிட்டைஏது ஞானமேது? நீரிருந்த அட்சரம்
பட்டைஏது? சொல்லீரே பாதகக் கபடரே? 248
உண்மையான சுக்கிலம் உபாயமாய் இருந்ததும்
வெண்மையாகி நீரிலே விரைந்துநீர தானதும்
தண்மையான காயமே தரித்துஉருவம் ஆனதும்
தெண்மையான ஞானிகாள் தெளிந்துரைக்க வேணுமே. 249
வஞ்சகப் பிறவியை மனத்துளே விரும்பியே
அஞ்செழுத்தின் உண்மையை அறிகிலாத மாந்தர்காள்
வஞ்சகப் பிறவியை வதைத்திடவும் வல்லீரேல்
அஞ்செழுத்தின் உண்மையை அறிந்துகொள்ள லாகுமே. 250
காயிலாத சோலையில் கனியுகந்த வண்டுகள்
ஈயிலாத தேனையுண்டு இராப்பகல் உறங்குறீர்
பாயிலாத கப்பலேறி அக்கரைப் படுமுனே
வாயினால் உரைப்பதாகு மோமவுன ஞானமே. 251
பேய்கள்பேய்கள் என்கிறீர் பிதற்குகின்ற பேயர்காள்,
பேய்கள்பூசை கொள்ளுமோ பிடாரிபூசை கொள்ளுமோ
ஆதிபூசை கொள்ளுமோ அனாதி பூசை கொள்ளுமோ
காயமான பேயலோ கணக்கறிந்து கொண்டதே. 252
மூலமண்ட லத்திலே முச்சதுரம் ஆதியாய்
நாலுவாசல் எம்பிரான் நடுஉதித்த மந்திரம்
கோலிஎட்டு இதழுமாய் குளிர்ந்தலர்ந்த தீட்டமாய்
மேலும்வேறு காண்கிலேன் விளைந்ததே சிவாயமே. 253
ஆதிநாடி நாடிஓடிக் காலைமாலை நீரிலே
சோதிமூல மானநாடி சொல்லிறந்த தூவெளி
ஆதிகூடி நெற்பறித்தது அகாரமாதி ஆகமம்
பேதபேதம் ஆகியே பிறந்துடல் இறந்ததே. 254
பாங்கினோடு இருந்துகொண்டு பரமன்அஞ் செழுத்துளே
ஓங்கிநாடி மேல்இருந்து உச்சரித்த மந்திரம்
மூங்கில்வெட்டி நார்உரித்து முச்சில்செய் விதத்தினில்
ஆய்ந்தநூலில் தோன்றுமே அரிந்துணர்ந்து கொள்ளுமே. 255
புண்டரீக மத்தியில் உதித்தெழந்த சோதியை
மண்டலங்கள் மூன்றினோடு மன்னுகின்ற மாயனை
அண்டரண்டம் ஊடறுத்து அறிந்துணர வல்லீரேல்
கண்டகோயில் தெய்வம்என்று கையெடுப்ப தில்லையே. 256

புண்டரீகம் - தாமரை

அம்பலங்கள் சந்தியில் ஆடுகின்ற வம்பனே
அன்பனுக்குள் அன்பனாய் நிற்பதுஆதி வீரனே
அன்பருக்குள் அன்பராய் நின்றஆதி நாதனே
உம்பருக்கு உண்மையாய் நின்றஉண்மை உண்மையே. 257
அண்ணலாவது ஏதடா? அறிந்துரைத்த மந்திரம்
தண்ணலாக வந்தவன் சகலபுராணம் கற்றவன்
கண்ணனாக வந்ததன் காரணத் துதித்தவன்
ஒண்ணதாவது ஏதடா? உண்மையான மந்திரம்? 258
உள்ளதோ புறம்பதோ உயிர்ஒடுங்கி நின்றிடம்
மெள்ளவந்து கிட்டிநீர் வினவவேணும் என்கிறீர்?
உள்ளதும் புறம்பதும் ஒத்தபோது நாதமாம்
கள்ளவாச லைத்திறந்து காணவேணும் மந்திரம். 259
ஆரலைந்து பூதமாய் அளவிடாத யோனியும்
பாரமான தேவரும் பழுதிலாத பாசமும்
ஓரொணாத அண்டமும் உலோகலோக லோகமும்
சேரவெந்து போயிருந்த தேகம்ஏது செப்புமே? 260
என்னகத்துள் என்னைநான் எங்குநாடி ஓடினேன்?
என்னகத்துள் என்னைநான் அறிந்திலாத தாகையால்
என்னகத்துள் என்னைநான் அறிந்துமே தெரிந்தபின்
என்னகத்துள் என்னைஅன்றி யாதுமொன்று மில்லையே. 261
விண்ணினின்று மின்னெழுந்து மின்னொடுங்கு மாறுபோல்
என்னுள்நின்றும் எண்ணும்ஈசன் என்னகத்திருக் கையால்
கண்ணினின்று கண்ணில்தோன்றும் கண்ணிறி விலாமையால்
என்னுள்நின்ற என்னையும் யானறிந்தது இல்லையே. 262
அடக்கினும் அடக்கொணாத அம்பலத்தின் ஊடுபோய்
அடக்கினும் அடக்கொணாத அன்பிருக்கும் என்னுளே
கிடக்கினும் இருக்கினும் கிலேசம்வந்து இருக்கினும்
நடக்கினும் இடைவிடாத நாதசங் கொலிக்குமே. 263
மட்டுலாவு தண்துழாய் அலங்கலாய் புனற்கழல்
வீட்டுவீழில் தாகபோக விண்ணில்மண்ணில் வெளியினும்
எட்டினோடு இரண்டினும் இதத்தினால் மனந்தனைக்
கட்டிவீடி லாதுவைத்த காதலின்பம் ஆகுமே. 264
ஏகமுத்தி மூன்றுமுத்தி நாலுமுத்தி நன்மைசேர்
போகமுற்றி புண்ணியத்தில் முத்திஅன்றி முத்தியாய்
நாகமுற்றி சயனமாய் நலங்கடல் கடந்ததீ
யாகமுற்றி ஆகிநின்ற தென்கொலாதி தேவனே. 265
மூன்றுமுப்பது ஆறினோடு மூன்றுமூன்று மாயமாய்
மூன்றுமுத்தி ஆகிமூன்று மூன்றுமூன்று மூன்றுமாய்த்
தோன்றுசோதி மூன்றுதாய் துலக்கமில் விளக்கதாய்
ஏன்றெனாவின் உள்புகுந்த தென்கோலோ நம்ஈசனே. 266
ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய் அல்லவற்றுள் ஆயுமாய்
ஐந்துமூன்றும் ஒன்றுமாகி நின்றஆதி தேவனே
ஐந்தும்ஐந்தும் ஐந்துமாய் அமைந்தனைத்து நின்றநீ
ஐந்தும்ஐந்தும் ஆயநின்னை யாவர்காண வல்லரே. 267
ஆறும்ஆறும் ஆறுமாய் ஓர்ஐந்தும்ஐந்தும் ஐந்துமாய்
ஏறுசீர் இரண்டுமூன்றும் ஏழும்ஆறும் எட்டுமாய்
வேறுவேறு ஞானமாகி மெய்யினோடு பொய்யுமாய்
ஊறும்ஓசை யாய்அமர்ந்த மாயமாம் மாயனே. 268
எட்டும்எட்டும் எட்டுமாய் ஓர்ஏழும் ஏழுமாய்
எட்டும் ஒன்றும் மூன்றுமாகி நின்றஆதி தேவனே
எட்டுமாய பாதமோடு இறைஞ்சி நின்றவண்ணமே
எட்டெழுத்தும் ஓதுவார்கள் அல்லல்நீங்கி நிற்பரே. 269
பத்தினோடு பத்துமாய் ஓர்ஏழினோடு ஒன்பதாய்
பத்துநாற் திசைக்குள்நின்ற நாடுபெற்ற நன்மையால்
பத்துமாய கொத்தமோடும் அத்தலமிக் காதிமால்
பத்தர்கட் கலாதுமுத்தி முத்திமுத்தி யாகுமே. 270
வாசியாகி நேசம்ஒன்றி வந்தெதிர்த்த தென்னுக
நேசமாக நாளுலாவ நன்மைசேர் பாவங்களில்
வீசிமேல் நிமிர்ந்ததோளி யில்லையாக்கி னாய்கழல்
ஆசையாய் மறக்கலாது அமரர்ஆகல் ஆகுமே. 271
எளியதாக காயமீதில் எம்பிரான் இருப்பிடம்
அளிவுறாது நின்றதே அகாரமும் உகாரமும்
கொளுகையான சோதியும் குலாவிநின்றது அவ்விடம்
வெளியதாகும் ஒன்றிலே விளைந்ததே சிவாயமே. 272
அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் என்றுரைக்கும் அன்பர்காள்
அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் அல்லகாணும் அப்பொருள்
அஞ்செழுத்தை நெஞ்சழுத்தி அவ்வெழுத்தை அறிந்தபின்
அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் அவ்வுமாம் சிவாயமே. 273
பொய்யுரைக்க போகமென்று பொய்யருக் கிருக்கையால்
மெய்யுரைக்க வேண்டுதில்லை மெய்யர்மெய்க் கிலாமையால்
வையகத்தில் உண்மைதன்னை வாய்திறக்க அஞ்சினேன்
நையவைத்தது என்கொலோ நமசிவாய நாதனே! 274
ஒன்றைஒன்று கொன்றுகூட உணவுசெய்து இருக்கினும்
மன்றினூடு பொய்களவு மாறுவேறு செய்யினும்
பன்றிதேடும் ஈசனைப் பரிந்துகூட வல்லீரேல்
அன்றுதேவர் உம்முளே அறிந்துணர்ந்து கொள்ளுமே. 275

மன்று - கடை

மச்சகத் துளேஇவர்ந்து மாயைபேசும் வாயூவை
அச்சகத்துளே இருந்து அறிவுணர்த்திக் கொள்விரேல்
இச்சைஅற்ற எம்பிரான் எங்கும்ஆகி நிற்பனே
அச்சகத் துளேயிருந்து அறுவுணர்த்திக் கொண்டபின். 276
வயலிலே முலைத்தநெல் களையதான வாறுபோல்
உலகினோரும் உண்மைகூறில் உய்யுமாறது எங்ஙனே
விரகிலே முளைத்தெழுந்த மெய்யலாது பொய்யதாய்
நரகிலே பிறந்திருந்து நாடுபட்ட பாடதே. 277

விரகு - விரகதாபம்

ஆடுகின்ற எம்பிரானை அங்குமிங்கும் என்றுநீர்
தேடுகின்ற பாவிகாள், தெளிந்தஒன்றை ஓர்கிலீர்;
காடுநாடு வீடுவீண் கலந்துநின்ற கள்வனை
நாடிஓடி உம்முளே நயந்துணர்ந்து பாருமே. 278
ஆடுகின்ற அண்டர்கூடும் அப்புறம திப்புறம்
தேடுநாலு வேதமும் தேவரான மூவரும்
நீடுவாழி பூதமும் நின்பதோர் நிலைகளும்
ஆடுவாழின் ஒழியலா தனைத்துமில்லை இல்லையே. 279
ஆவதும் பரத்துளே அழிவதும் பரத்துளே
போவதும் பரத்துளே புகுவதும் பரத்துளே
தேவரும் பரத்துளே திசைகளும் பரத்துளே
யாவரும் பரத்துளே யானும் அப்பரத்துளே. 280
ஏழுபார் எழுகடல் இடங்கள்எட்டு வெற்புடன்
சூழுவான் கிரிகடந்து சொல்லும் ஏழுலகமும்
ஆழிமால் விசும்புகொள் பிரமாண்டரண்ட அண்டமும்
ஊழியான் ஒளிக்குளே உதித்துடன் ஒடுங்குமே. 281
கயத்துநீர் இறைக்குறீர் கைகள்சோர்ந்து நிற்பதேன்?
மனத்துள்ஈரம் ஒன்றிலாத மதிஇலாத மாந்தர்காள்;
மனத்துள்ஈரம் கொண்டுநீர் அழுக்கறுக்க வல்லீரேல்
நினைத்திருந்த சோதியும் நீயும்நானும் ஒன்றலோ? 282
நீரிலே பிறந்திருந்து நீர்சடங்கு செய்கிறீர்
ஆரைஉன்னி நீரெலாம் அவத்திலே இறைக்கிறீர்
வேரைஉன்னி வித்தைஉன்னி வித்திலே முளைத்தெழும்
சீரைஉன்ன வல்லீரேல் சிவபதம் அடைவிரே. 283
பத்தொடொத்த வாசலில் பரந்துமூல வக்கரம்
முத்திசித்தி தொந்தமென்று இயங்குகின்ற மூலமே
மத்தசித்த ஐம்புலன் மாகரமான கூத்தையே
அத்தியூரர் தம்முளே அமைந்ததே சிவாயமே. 284
அணுவினோடும் அண்டமாய் அளவிடாத சோதியைக்
குணமதாகி உம்முளே குறித்திருக்கில் முத்தியாம்
முணமுணென்று உம்முளே விரலைஒன்றி மீளவும்
தினந்தினம் மயக்குவீர் செம்புபூசை பண்ணியே. 285
மூலமான அக்கரம் முகப்பதற்கு முன்னெலாம்
மூடமாக மூடுகின்ற மூடமேது *முடரே
காலனான அஞ்சுபூதம் அஞ்சிலே ஒடுங்கினால்
ஆலயோடு கூடுமோ அனாதியோடு கூடுமோ? 286
முச்சதுர மூலமாகி முடிவுமாகி ஏகமாய்
அச்சதுரம் ஆகியே அடங்கியோர் எழுத்துமாய்
மெய்ச்சதுர மெய்யுளே விளங்குஞான தீபமாய்
உச்சரிக்கும் மந்திரத்தின் உண்மையே சிவாயமே. 287
வண்டுலங்கள் போலும்நீர் மனத்துமாசு அறுக்கிலீர்
குண்டலங்கள் போலுநீர் குளத்திலே முழுகுறீர்
பண்டும் உங்கள் நான்முகன் பறந்துதேடி காண்கிலான்,
கண்டிருக்கும் உம்முளே கலந்திருப்பர் காணுமே. 288
நின்றதன்று இருந்ததன்று நேரிதன்று கூறிதன்று
பந்தமன்று வீடுமன்று பாவகங்கள் அற்றது.
கெந்தமன்று கேள்வியன்று கேடிலாத வானிலே
அந்தமின்றி நின்றதொன்றை எங்ஙனே உரைப்பதே. 289
பொருந்துநீரும் உம்முளே புகுந்துநின்ற காரணம்
எருதிரண்டு கன்றைஈன்ற ஏகமொன்றை ஓர்கிலிர்
அருகிருந்து சாவுகின்ற ஆவையும் அறிந்திலீர்
குருவிருந்து உலாவுகின்ற கோலம்என்ன கோலமே? 290
அம்பரத்துள் ஆடுகின்ற அஞ்செழுத்து நீயலோ?
சிம்புகளாய்ப் பரந்துநின்ற சிற்பரமும் நீயலோ?
எம்பிரானும் எவ்வுயிர்க்கும் ஏகபோகம் ஆதலால்
எம்பிரானும் நானுமாய் இருந்ததே சிவாயமே. 291
ஈரொளிய திங்களே இயங்கிநின்றது தற்பரம்
ஏரொளீய திங்களே அஃது யாவரும் அறிகிலீர்
காரொளிப் படலமும் கடந்துபோன தற்பரம்
தாரொளிப் பெரும்பதம் ஏகநாத பாதமே. 292
கொள்ளொணாது மெல்லொணாது கோதாறக் குதட்டடா
தள்ளொணாது அணுகொணாது ஆகலான் மனத்துளே
தெள்ளொணாது தெளியொணாது சிற்பரத்தின் உட்பயன்
விள்ளொணாது பொருளைநான் விளம்புமாறது எங்ஙனே? 293
வாக்கினால் மனத்தினால் மதித்தகார ணத்தினால்
நோக்கொணாத நோக்கையுன்னி நோக்கையாவர் நோக்குவார்
நோக்கொணாத நோக்குவந்து நோக்கநோக்க நோக்கிடில்
நோக்கொணாத நோக்குவந்து நோக்கைஎங்கண் நோக்குமே. 294
உள்ளினும் புறம்பினும் உலகமெங்கணும் பரந்து
எள்ளில்எண்ணெய் போலநின்று இயங்குகின்ற எம்பிரான்
மெள்ளவந்து என்னுட்புகுந்து மெய்த்தவம் புரிந்தபின்
வள்ளலென்ன வள்ளலுக்கு வண்ணமென்ன வண்ணமே? 295
வேதமொன்று கண்டிலேன் வெம்பிறப்பு இலாமையால்
போதம்நின்ற வடிவதாய்ப் புவனமெங்கும் ஆயினாய்,
சோதியுள் ஒளியுமாய்த் துரியமோடு அதீதமாய்
ஆதிமூலம் ஆதியாய் அமைந்ததே சிவாயமே. 296
சாண்இரு மடங்கினால் சரிந்தகொண்டை தன்னுளே
பேணிஅப் பதிக்குளே பிறந்திறந்து உழலுவீர்,
தோணியான ஐவரைத் துறந்தறுக்க வல்லீரேல்
காணிகண்டு கோடியாய்க் கலந்ததே சிவாயமே. 297
அஞ்சுகோடி மந்திரம் அஞ்சுளே அடங்கினால்
நெஞ்சுகூற உம்முளே நினைப்பதோர் எழுத்துளே
அஞ்சுநாலு மூன்றதாகி உம்முளே அடங்கினால்
அஞ்சும்ஓர் எழுத்ததாய் அமைந்ததே சிவாயமே. 298
அக்கரந்த அக்கரத்தில் உட்கரந்த அக்கரம்
சக்கரத்து சிவ்வைருண்டு சம்புளத் திருந்ததும்
எள்கரந்த எண்ணெய்போல் எவ்வெழுத்தும் எம்பிரான்
உள்கரந்து நின்றநேர்மை யாவர்காண வல்லரே. 299
ஆகமத்தின் உட்பொருள் அகண்டமூலம் ஆதலால்
தாகபோக மின்றியே தரித்ததற் பரமும்நீ
ஏகபாதம் வைத்தனை உணர்த்தும் அஞ்செழுத்துளே
ஏகபோகம் ஆகியே இருந்ததே சிவாயமே. 300
மூலவாசல் மீதுளேஓர் முச்சரம் ஆகியே
நாலுவாசல் எண்விரல் நடுஉதித்த மந்திரம்
கோலம்ஒன்றும் அஞ்சுமாகும் இங்கலைந்து நின்றநீ
வேறுவேறு கண்டிலேன் விளைந்ததே சிவாயமே. 301
சுக்கிலத் தடியுளே சுழித்ததோர் எழுத்துளே
அக்கரத் தடியுளே அமர்ந்தஆதி சோதிநீ
உக்கரத் தடியுளே உணர்ந்த அஞ்செழுத்துளே
அக்கரம் அதாகியே அமர்ந்ததே சிவாயமே. 302
குண்டலத்து ளேயுளே அறுத்தகத்து நாயகன்
கண்டவந்த மண்டலம் கருத்தழித்த கூத்தனை
விண்டலர்ந்த சந்திரன் விளங்குகின்ற மெய்ப்பொருள்
கண்டுகொண்ட மண்டலம் சிவாயமல்லது இல்லையே. 303
சுற்றும்ஐந்து கூடமொன்று சொல்லிறந்த தோர்வெளி
சத்தியும் சிவனுமாக நின்றதன்மை ஓர்கிலீர்
சத்தியாவு தும்முடல், தயங்குசீவ னுட்சிவம்
பித்தர்காள் அறிந்திலீர் பிரான்இருந்த கோலமே. 304
மூலம்என்ற மந்திரம் முளைத்த அஞ்செழுத்துளே
நாலுவேதம் நாவுளே நவின்றஞான மெய்யுளே
ஆலம்உண்ட கண்டனும் அரிஅயனும் ஆதலால்
ஓலம்என்ற மந்திரம் சிவாயமல்லது இல்லையே. 305
தத்துவங்கள் என்றுநீர் தமைக்கடிந்து போவீர்காள்
தத்துவம் சிவமதாகில் தற்பரமும் நீரல்லோ?
முத்திசீவன் நாதமே மூலபாதம் வைத்தப்பின்
அத்தனாரும் உம்முளே அறிந்துணர்ந்து கொள்ளுமே. 306
மூன்றுபத்து மூன்றையும் மூன்றுசொன்ன மூலனே
தோன்றுசேர ஞானிகாள் துய்யபாதம் என்தலை
என்றுவைத்த வைத்தபின் இயல்பும் அஞ்செழுத்தையும்
தோன்றஓத வல்லீரேல் துய்யசோதி காணுமே. 307
உம்பர் வானகத்தினும் உலகபாரம் ஏழினும்
நம்பர்நாடு தன்னிலும் நாவலென்ற தீவினும்
செம்பொன் மாடம் மல்குதில்லை அம்பலத்துள் ஆடுவான்
எம்பிரான் அலாதுதெய்வம் இல்லைஇல்லை இல்லையே. 308
பூவலாய் ஐந்துமாய் புனலில்நின்ற நான்குமாய்
தீயிலாய மூன்றுமாய்ச் சிறந்தகால் இரண்டுமாய்
வேயிலாய தொன்றுமாய் வேறுவேறு தன்மையாய்
நீயலாமல் நின்றநேர்மை யாவர்காண வல்லரே? 309
அந்தரத்தில் ஒன்றுமாய் அசைவுகால் இரண்டுமாய்
செந்தழலில் மூன்றுமாய்ச் சிறந்தஅப்பு நான்குமாய்
ஐந்துபாரில் ஐந்துமாய் அமர்ந்திருந்த நாதனைச்
சிந்ததையில் தெளிந்தமாயை யாவர்காண வல்லரே. 310
மனவிகாரம் அற்றுநீர் மதித்திருக்க வல்லீரேல்
நினைவிலாத மணிவிளக்கு நித்தமாகி நின்றிடும்;
அனைவர் ஓதும் வேதமும் அகம்பிதற்ற வேணுமேல்
கனவுகண்டது உண்மைநீர் தெளிந்ததே சிவாயமே. 311
இட்டகுண்டம் ஏதடா? இருக்கு வேதம் ஏதடா?
சுட்டமண் கலத்திலே சுற்றுநூல்கள் ஏதடா?
முட்டிநின்ற தூணிலே முளைத்தெழுந்த சோதியைப்
பற்றிநின்றது ஏதடா பட்டநாத பட்டரே. 312
நீரிலே முளைத்தெழுந்த தாமரையின் ஓரிலை
நீரினோடு கூடிநின்றும் நீரிலாத வாறுபோல்
பாரிலே முளைத்தெழுந்த பண்டிதப் பராபரம்
பாரினோடு கூடிநின்ற பண்புகண்டு இருப்பீரே. 313
உறக்கிலென், விழிக்கிலென், உணர்வுசென்று ஒடுங்கிலென்
சிறந்த ஐம்புலன்களும் திசைத்திசைகள் ஒன்றிலென்?
புறமும்உள்ளும் எங்ஙனம் பொருந்திருந்த தேகமாய்
நிறைந்திருந்த ஞானிகாள் நினைப்பது ஏதும் இல்லையே. 314
ஓதுவார்கள் ஓதுகின்ற ஓர்எழுத்தும் ஒன்றதே
வேதம் என்ற தேகமாய் விளம்புகின்றது அன்றிது,
நாதம்ஒன்று நான்முகன் மாலும்நானும் ஒன்றதே!
ஏதுமின்றி நின்றதொன்றை யான்உணர்ந்த நேர்மையே 315
பொங்கியே தரித்தஅச்சுப் புண்டரீக வெளியிலே
தங்கியே தரித்தபோது தாதுமா துளையதாம்
அங்கியுள் சரித்தபோது வடிவுகள் ஒளியுமாய்க்
கொம்புமேல் வடிவுகொண்டு குருஇருந்த கோலமே. 316
மண்ணுளோரும் விண்ணுளோரும் வந்தவாறது எங்கெனில்
மண்ணினோடு சோதிபோல் கலந்தநாத விந்துவும்
அண்ணலோடு சத்தியும் அஞ்சுபஞ்சு பூதமும்
மண்ணினோடு கொடுத்தழிப் பாரொடேழும் இன்றுமே. 317
ஒடுக்குகின்ற சோதியும் உந்திநின்ற ஒருவனும்
நடுத்தலத்தில் ஒருவனும் நடந்துகாலில் ஏறியே
விடுத்துநின்ற இருவரோடு மெய்யினோடு பொய்யுமாய்
அடுத்துநின்ற அறிமினோ அனாதிநின்ற ஆதியே. 318
உதித்தமந் திரத்தினும் ஒடுங்கும் அக்கரத்தினும்
மதித்தமண் டலத்தினும் மறைந்துநின்ற சோதிநீ,
மதித்தமண் டலத்துளே மரித்துநீ இருந்தபின்
சிரித்தமண் டலத்துளே சிறந்ததே சிவாயமே. 319
திருத்திவைத்த சற்குருவைச் சீர்பெற வணங்கிலீர்
குருக்கொடுக்கும் பித்தரே கொண்டுநீந்த வல்லீரோ?
குருக்கொடுக்கும் பித்தரும் குருக்கொள்வந்த சீடனும்
பருத்திபட்ட பாடுதான் பன்னிரண்டும் பட்டதே. 320
விழித்தகண் துதிக்கவும் விந்துநாத ஓசையும்,
மேருவும் கடந்தஅண்ட கோளமும் கடந்துபோய்
எழுத்தெலாம் அழிந்துவிட்ட இந்திரசால வெளியிலே
யானும்நீயு மேகலந்த தென்னதன்மை ஈசனே. 321
ஓம்நமோ என்றுமுளே பாவையென்று அறிந்தபின்,
பானுடல் கருத்துளே பாவையென்று அறிந்தபின்,
நானும்நீயும் உண்டடா நலங்குலம் அதுஉண்டடா,
ஊணும்ஊணும் ஒன்றுமே உணர்ந்திடாய் உனக்குளே. 322
ஐம்புலனை வென்றவர்க்கு அன்னதானம் ஈவதால்
நன்புலன்க ளாகிநின்ற நாதருக்கது ஏறுமோ
ஐம்புலனை வென்றிடாது அவத்துமே உழன்றிடும்
வம்பருக்கும் ஈவதும் கொடுப்பதும் அவத்தமே. 323
ஆணியான ஐம்புலன்கள் அவையும்மொக்குகள் ஒக்குமோ?
யோனியில் பிறந்திருந்த துன்பமிக்கு மொக்குமோ?
வீணர்காள் பிதற்றுவீர் மெய்மையே உணர்திரேல்
ஊண்உறக்க போகமும் உமக்கெனக்கும் ஒக்குமே. 324
ஓடுகின்ற ஐம்புலன் ஒடுங்கஅஞ் செழுத்துளே
நாடுகின்ற நான்மறை நவிலுகின்ற ஞானிகாள்
கூடுகின்ற பண்டித குணங்கள்மூன்று எழுத்துளே
ஆடுகின்ற பாவையாய் அமைந்ததே சிவாயமே. 325
புவனசக்க ரத்துளே பூதநாத வெளியிலே,
பொங்குதீப அங்கியுள் பொதிந்தெழுந்த வாயுவைத்
தவனசோமர் இருவரும் தாம்இயங்கும் வாசலில்
தண்டுமாறி ஏறிநின்ற சரசமான வெளியிலே. 326
மவுனஅஞ் செழுத்திலே வாசிஏறி மெள்ளவே
வானளாய் நிறைந்தசோதி மண்டலம் புகுந்தபின்
அவனும்நானும் மெய்கலந்து அனுபவித்த அளவிலே
அவனுமுண்டு நானுமில்லை யாருமில்லை யானதே. 327
வாளுறையில் வாளடக்கம் வாயுறையில் வாய்வடக்கம்
ஆளுறையில் ஆளடக்கம் அருமைஎன்ன வித்தைகாண்!
தாளுறையில் தாளடக்கம் தன்மையான தன்மையும்
நாளுறையில் நாளடக்கம் நானும் நீயும் கண்டதே. 328
வழுத்திடான் அழித்திடான் மாயரூபம் ஆகிடான்
கழன்றிடான் வெகுண்டிடான் காலகால காலமும்
துவண்டிடான் அசைந்திடான் தூயதூபம் ஆகிடான்
சுவன்றிடான் உரைத்திடான் சூட்சசூட்ச சூட்சமே. 329
ஆகிகூவென் றேஉரைத்த அட்சரத்தின் ஆனந்தம்
யோகியோகி என்பர்கோடி உற்றறிந்து கண்டிடார்
பூகமாய் மனக்குரங்கு பொங்கும்மங்கும் இங்குமாய்
ஏகம்ஏக மாகவே இருப்பர்கோடி கோடியே. 330
கோடிகோடி கோடிகோடி குவலயத்தோர் ஆதியை
நாடிநாடி நாடிநாடி நாளகன்று வீணதாய்த்
தேடிதேடி தேடிதேடித் தேகமும் கசங்கியே
கூடிகூடி கூடிகூடி நிற்பர்கோடி கோடியே. 331
கருத்திலான் வெளுத்திலான் பரன்இருந்த காரணம்
இருத்திலான் ஒளித்திலான் ஒன்றும்இரண்டும் ஆகிலான்
ஒருத்திலான் மரித்திலான் ஒழிந்திடான் அழிந்திடான்
கருத்தில்கீயும் கூவும்உற்றோன் கண்டறிந்த ஆதியே. 332
வாதிவாதி வாதிவாதி வண்டலை அறிந்திடான்
ஊதிஊதி ஊதிஊதி ஒளிமழுங்கி உளறுவான்
வீதிவீதி வீதிவீதி விடைஎருப் பொறுக்குவான்
சாதிசாதி சாதிசாதி சகாரத்தைக் கண்டிடான். 333
ஆண்மைஆண்மை ஆண்மைஆண்மை ஆண்மைகூறும் அசடரே
காண்மையான வாதிரூபம் காலகால காலமும்
பாண்மையாகி மோனமான பாசமாகி நின்றிடும்
நாண்மையாகி நரலைவாயில் நங்குமிங்கும் அங்குமே. 334
மிங்குஎன்ற அட்சரத்தின் மீட்டுவாகிக் கூவுடன்
தூங்கமாகச் சோமனோடு சோமன்மாறி நின்றிடும்
அங்கமா முனைச்சுழியில் ஆகும்ஏகம் ஆகையால்
கங்குலற்றுக் கியானமுற்றுக் காணவாய் சுடரொளி. 335
சுடரெழும்பும் சூட்சமும் கழிமுனையின் சூட்சமும்
அடரெழும்பி ஏகமாக அமர்ந்துநின்ற சூட்சமும்
திடரதான சூட்சமும் திரியின்வாலை சூட்சமும்
கடலெழும்பு சூட்சமும் கண்டறிந்தோன் ஞானியே. 336
ஞானிஞானி என்றுரைத்த நாய்கள் கோடிகோடியே
வானிலாத மழைநாளென்ற வாதிகோடி கோடியே
தானிலா சாகரத்தின் தன்மைகாணா மூடர்கள்
மூனிலாமல் கோடிகோடி முன்னறிந்த தென்பரே. 337
சூட்சமான கொம்பிலே சுழிமுனைச் சுடரிலே
வீச்சமான வீயிலே விபுலைதங்கும் வாயிலே
கூச்சமான கொம்பிலே குடிஇருந்த கோவிலே
தீட்சையான தீவிலே சிறந்ததே சிவாயமே. 338
பொங்கிநின்ற மோனமும் பொதிந்துநின்ற மோனமும்
தங்கிநின்ற மோனமும் தயங்கிநின்ற மோனமும்
கங்கையான மோனமும் கதித்துநின்ற மோனமும்
திங்களான மோனமும் சிவனிருந்த மோனமே. 339
மோனமான வீதியில் முனைச்சுழியின் வாலையில்
பானமான வீதியில் பசைந்தசெஞ் சுடரினில்
ஞானமான மூலையில் நரலைதங்கும் வாயிலில்,
ஓனமான செஞ்சுடர் உதித்ததே சிவாயமே. 340
உதித்தெழுந்த வாலையும் உயங்கிநின்ற வாலையும்
கதித்தெழுந்த வாலையும் காலையான வாலையும்
மதித்தெழுந்த வாலையும் மறைந்துநின்ற ஞானமும்
கொதித்தெழுந்து கும்பலாகி கூவும்கீயும் ஆனதே. 341
கூவும்கீயும் மோனமாகி கொள்கையான கொள்கையை
மூவிலே உதித்தெழுந்த முச்சுடர் விரிவிலே
பூவிலே நறைகள்போலப் பொருந்திநின்ற பூரணம்
ஆவிஆவி ஆவிஆவி அன்பருள்ளம் உற்றதே. 342
ஆண்மைகூறும் மாந்தரே அருக்கனோடும் வீதியை
காண்மையாகக் காண்பீரே கசடறுக்க வல்லீரே
தூண்மையான வாதிசூட்சம் சோபமாகும் ஆகுமே
நாண்மையான வாயிலில் நடித்துநின்ற நாதமே. 343
நாதமான வாயிலில் நடித்துநின்ற சாயலில்
வேதமான வீதியில் விரிந்தமுச் சுடரிலே
கீதமான கீயிலே கிளர்ந்துநின்ற கூவிலே
பூதமான வாயிலைப் புகலறிவன் ஆதியே. 344
ஆவிஆவி ஆவிஆவி ஐந்துகொம்பின் ஆவியே
மேவிமேவி மேவிமேவி மேதினியில் மானிடர்
வாவிவாவி வாவிவாவி வண்டர்கள் அறிந்திடார்
பாவிபாவி பாவிபாவி படியிலுற்ற மாந்தரே. 345
வித்திலே முளைத்தசோதி வில்வளையின் மத்தியில்
முத்திலே ஒளிவதாகி மோனமான தீபமே
நத்திலே திரட்சிபோன்ற நாதனை அறிந்திடார்
வத்திலே கிடந்துழன்ற வாலையான சூட்சமே. 346
மாலையோடு காலையும் வடிந்துபொங்கும் மோனமே
மாலையோடு காலையான வாறறிந்த மாந்தரே
மூலையான கோணமின் முளைத்தெழுந்த செஞ்சுடர்
தாலையோடு பானகன்று தங்கி நின்ற மோனமே. 347
மோனமான வீதியில் முடுகிநின்ற நாதமே
ஈனமின்றி வேகமான வேகம்என்ன வேகமே
கானமான மூலையில் கனிந்திருந்த வாலையில்
ஞானமான செஞ்சுடர் நடந்ததே சிவாயமே. 348
உச்சிமத்தி வீதியில் ஒழிந்திருந்த சாதியில்
பச்சியுற்ற சோமனும் பரந்துநின்று லாவவே
செச்சியான தீபமே, தியானமான மோனமே,
கச்சியான மோனமே, கடந்ததே சிவாயமே. 349
அஞ்சுகொம்பில் நின்றுநாதம் ஆலைபோல் எழும்பியே
பிஞ்சினோடு பூமலர்ந்து பெற்றியுற்ற சுத்தமே
செஞ்சுடர் உதித்தபோது தேசிகன் கழன்றுடன்
பஞ்சபூதம் ஆனதே பறந்துநின்ற மோனமே. 350
சடுதியான கொம்பிலே தத்துவத்தின் இயலிலே
அடுதியான ஆவிலே அரன்இருந்த ஊவிலே
இடுதிஎன்ற சோலையில் இருந்தமுச் சுடரிலே
நடுதிஎன்று நாதம்ஓடி நன்குற அமைந்ததே. 351
அமையுமாலின் மோனமும் அரன்இருந்த மோனமும்
சமையும்பூத மோனமும் தரித்திருந்த மோனமும்
இமையும்கொண்ட வேகமும் இலங்கும்உச்சி மோனமும்
தமையறிந்த மாந்தரே சடத்தைஉற்று நோக்கிலார். 352
பாய்ச்சலூர் வழியிலே பரன்இருந்த சுழியிலே
காய்ச்சகொம்பின் நுனியிலே கனியிருந்த மலையிலே
வீச்சமானது ஏதடா? விரிவுதங்கும் இங்குமே
மூச்சினோடு மூச்சைவாங்கு முட்டிநின்ற சோதியே. 353
சோதிசோதி என்றுநாடித் தோற்பவர் சிலவரே
ஆதிஆதி என்றுநாடும் ஆடவர் சிலவரே
வாதிவாதி என்றுசொல்லும் வம்பரும் சிலவரே
நீதிநீதி நீதிநீதி நின்றிடும் முழுச்சுடர். 354
சுடரதாகி எழும்பியங்குத் தூபமான காலமே
இடரதாய்ப் புவியும்விண்ணும் ஏகமாய் அமைக்கமுன்
படரதாக நின்றஆதி பஞ்சபூதம் ஆகியே
அடரதாக அண்டம்எங்கும் ஆண்மையாக நின்றதே. 355
நின்றிருந்த சோதியை நிலத்தில்உற்ற மானிடர்
கண்டறிந்து கண்குளிர்ந்து காதலுற்று உலாவுவோர்
கண்டமுற்ற மேன்முனையில் காட்சிதன்னைக் காணுவார்
கன்றிஅற்று நாலைபொங்கி நாதமும் மகிழ்ந்திடும். 356
வயங்குமோனச் செஞ்சுடர் வடிந்தசோதி நாதமும்
கயங்கள்போலக் கதறியே கருவூரற்ற வெளியிலே
பயங்கொடின்றி இன்றியே படர்ந்துநின்ற பான்மையை
நயங்கள்கோவென் றேநடுங்கி நங்கையான தீபமே. 357
தீபஉச்சி முனையிலே திவாகரத்தின் கழியிலே
கோபமாறு கூவிலே கொதித்துநின்ற தீயிலே
தாபமான மூலையில் சமைந்துநின்ற சூட்சமும்
சாபமான மோட்சமும் தடிந்துநின்று இலங்குமே. 358

No comments:

Post a Comment