September 15, 2011

ஓம் நமசிவாய மங்களம்

மலையரசன் பொற்பாவை சமேத திருக்கயிலை நாதரின் மாப்பெரும் கருணையினால் அவரை அவர் நித்ய வாசம் செய்யும் திருக்கயிலாய மலையில் சென்று தரிசித்து வரும் பேறு கிட்டியது. அப்போது சிவபெருமானின் மூல மந்திரமான ஓம் நமசிவாய மந்திரத்திற்க்கும் அதன் மூலமாக அந்த ஆண்டவனுக்கும் மங்களம் பாடும் விதமாக அமைந்த பாடல். (ஹிந்தியில் அமைந்திருந்தாலும் யாவரும் எளிதாக புரிந்து கொள்ளலாம்).



திருவைந்தெழுத்து - ஓம் நமசிவாய

பரம கருணா மூர்த்தி, தியாகராஜன், மங்களங்களை அருளும் சிவபெருமானது மூல மந்திரம் " ஓம் நமசிவாய " மந்திரம். வேதங்களில் முதன்மையானது யஜுர் வேதம் அந்த வேதத்தின் நடு நாயகமானது சிவபெருமானுக்கு மிகவும் பிரீதியானதும் அவர் புகழ் பாடுவதும், சிவ பெருமானுக்கு அபிஷேக காலங்களில் ஓதப்படுவதுமான ஸ்ரீ ருத்ரம், அதன் நடு நாயகம் "ஒம் நமசிவாய " மந்திரம். தாயை சேய் அழைப்பது போல ஓம் நமச்சிவாய மந்திரத்தால் அந்த முக்கண் முதல்வனை, கொடிமேல் இடபமும், கோவண ஆடையும், ஒரு கொக்கிறகும், அடி மேல் வீரக்கழலும், உடல் முழுவதும் பால் வெண்ணிணிறும், நாகாபரணமும், முடி மேல் மதியும், மங்கையும், கொன்றையும், திருக்கரங்களில் திரிசூலமும் தாங்கிய தேவ தேவனை, முழு முதற் கடவுளை, அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகனை அழைக்க உடனே அவர் ஓடி வந்து நம் துன்பம் தீர்க்கும் மந்திரம்.

கற்றுணை பூட்டியோர் கடலினில் பாய்ச்சினும் நற்றுணையாகும் மந்திரம். வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆன மந்திரம். நம்முடைய காரிய சித்திக்காக இறைவன் அருளிய மந்திரம். பல கோடி வருடங்களில் கூட இந்த மந்திரத்தின் மகிமையை உரைக்க முடியாது. வேத சாரமாக விளங்குவது இந்த ஐந்தெழுத்து மஹா மந்திரம். மோட்சம் அளிக்கும் மந்திரம். சிவனுக்கும் சக்திக்கும் உரிய மந்திரம். மந்திரகளுக்கெல்லாம் தாயகமாக விளங்குகின்றது பஞ்க்ஷாரம். காயத்ரி தேவி தோன்றிய மந்திரம். இம்மை பலன்கள் மட்டும் அல்ல முக்தியும் அளிக்கும் மந்திரம். இந்த மந்திரத்தின் அதிர்வலைகள் அண்டம் முழுவதும் பரவி உள்ளதால் ஒரு தடவை ஜபித்தால் கூட அருமையான பலன் அளிக்கும் மந்திரம்.


சிவபுராணத்தில் இந்த மஹா மந்திரத்தின் தொடக்கம் பற்றி இவ்வாறு கூறப்பட்டுள்ளது. எம்பெருமானது வடக்கு திருமுகமாம் வாமதேவ முகத்தில் இருந்து 'அகாரம்' தோன்றியது. மேற்கு நோக்கிய சத்யோஜாத திருமுகத்திலிருந்து 'உகாரம்' தோன்றியது, தெற்கு நோக்கிய திருமுகமாம் அகோர முகத்திலிருந்து 'மகாரம்' தோன்றியது. கிழக்கு முகமாம் தத்புருஷ முகத்திலிருந்து பிந்துவும், மேல் நோக்கிய திருமுகமாம் ஈசான முகத்தில் இருந்து நாதம் தோன்றியது. ஐந்தும் இணைந்து ஓம் என்னும் பிரணவமாயிற்று. இந்த பிரணவத்துடன் சிவனை வணங்குகின்றேன் என்று பொருள்படும் சிவாய நம: சேர்ந்து இந்த சிவபெருமானுக்கும் சக்திக்கும் உரிய இந்த அற்புத மந்திரம் உருவானது.
ஜபிக்கும் முறை : உடல் முழுதும் திருநீறணிந்து, ருத்ராக்ஷம் அணிந்து பத்மாசனத்தில் அமர்ந்து எம்பெருமானை தாமரையில் அமர்ந்த கோலத்தில் . ஜடாமுடியில் கங்கை, சந்திரனுடன், வாம பாகத்தில் ஆதி சக்தி பகவதி உமையம்மையுடன், பூத கணங்கள் புடை சூழ, மான், மழு, திரிசூலம், அபய வரத கரங்களுடன் தியானம் செய்து இந்த மஹா மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.

108 ன் எண்ணிக்கைகளில் ஜபிப்பது உத்தமம். விரல்களால் என்ணி ஜபிப்பது ஒரு மடங்கு பலம் தரும் என்றால், சங்கு மாலைகளால் ஜபிப்பது பத்து மடங்கு பலனையும், பவள மாலையால் ஜபிப்பது நூறு மடங்கு பலனையும், ஸ்படிக மாலையால் ஜபிப்பது ஆயிரம் மடங்கு பலனையும், முத்து மாலையால் ஜபிப்பது லக்ஷ மடங்கு பலனையும், ருத்ராக்ஷ மாலையால் ஜபிப்பது அனந்த மடங்கு பலனையும் அளிக்கும். கட்டை விரலால் உருட்டி ஜபிப்பதால் மோட்சம் கிட்டும், ஆள் காட்டி விரலால் ஜபிப்பதால் சத்ரு விநாசனம், நடுவிரலால் தனம் கிடைக்கும், மோதிர விரலால் ஜபிப்பதால் சாந்தி கிட்டும் சுண்டு விரலை பயன் படுத்தக்கூடாது.

இம்மையில் எல்லா செல்வங்களையும் வழங்குவதுடன் மோக்ஷத்தையும் அளிக்கும் இந்த மந்திரத்தை ஜபிக்க நாள், நட்சத்திரம், லக்னம், திதி, வாரம், யோகம் எதுவும் பார்க்க வேண்டியதில்லை. நடந்து கொண்டோ , ஏதாவது செயல் செய்து கொண்டோ, நின்று கொண்டோ கூட ஜபிக்கலாம். ஐந்து கோடி முறை ஜபிப்பதால் சிவாலயம் நிர்மாணம் செய்த பலன் கிட்டும். ஒன்பது கோடி முறை இம்மந்திரத்தை ஜபிப்பதால் மனது தூய்மை அடையும், 18 கோடி முறை ஜபிப்பதால் நீரில் நடக்கலாம், 27 கோடி முறை ஜபிப்பதால் அக்னி தத்துவத்தையும், 36 கோடி முறை ஜபிப்பதால் வாயு தத்துவத்தையும், 45 கோடி முறை ஜபிப்பதால் ஆகாய தத்துவத்தையும், 54 கோடி முறை ஜபிப்பதால் ஐந்து குணங்களை வெல்லலாம், அகங்காரம் மாறும், 63 கோடி முறை ஜபிப்பதால் காரியத்தில் வெற்றி, 72 கோடி முறை ஜபிப்பதால் கோபத்தை வெற்றி கொள்ளலாம், 81 கோடி முறை ஜபிப்பதால் மோகத்தை வெல்லலாம், 90 கோடி முறை ஜபிப்பதால் லோபத்தை வெல்லலாம், 99 கோடி முறை ஜபிப்பதால் மதத்தை வெல்லலாம் 108 கோடி முறை ஜபிப்பவர் மோட்சம் அடைவர்.

இல்லத்தில் செய்யும் ஓம் நமசிவாய மந்திர ஜபம் ஒரு மடங்கு பலனையும், கோசாலையில் செய்யும் ஜபம் நூறு மடங்கு பலனையும், வனம், நந்தவனம் ஆகியவற்றில் செய்யும் ஜபம் ஆயிரம் மடங்கு பலனையும், பவித்ர மலைகளில் செய்யும் ஜபம் பத்தாயிரம் மடங்கு பலனையும், நதிக்கரைகளில் செய்யும் ஜபம் லக்ஷ மடங்கு பலனையும், சிவாலயத்தில் செய்யும் ஜபம் பத்து லக்ஷ மடங்கு பலனையும் எம்பருமானுக்கு அருகில் செய்யப்படும் ஜபம் அனந்த கோடி பலனையும் தரும். ஓம் நமசிவாய மந்திரம் எழுதுவது ஜபிப்பதைப் போல நூறு மடங்கு பலன் தரும். இவ்வாறு இம்மந்திர ஜபம் செய்வதால் மோக்ஷம் கிட்டும்.



திருநல்லூர் திருத்தலத்தில் நம்பியாண்டார் நம்பிகளின் திருமகளைத் திருமணம் செய்து கொண்டபின், மனைவியின் கையைப் பிடித்துக் கொண்டு அங்குள்ள அனைவரையும் அழைத்துக்கொண்டு 'நல்லூர் பெருமணம்' என்ற பதிகத்தைப் பாடிக் கொண்டே கோயிலுக்குள் நுழைந்தவுடன், ஈசன் அருளால் கர்ப்பகிரகத்தில் ஒரு ஜோதி தோன்றியது . அப்பொழுது இந்த 'காதலாகிக் கசிந்து' என்ற நமச்சிவாயப் பதிகத்தைப் பாடிக்கொண்டே எல்லோரையும் அந்த ஜோதியில் இரண்டறக் கலக்கச் செய்தார் அப்போது ஆளுடையப்பிள்ளையாம் அம்மையின் ஞானப்பாலுண்ட திருஞான சம்பந்தர் பாடிய நமசிவாயப்பதிகம் .




காதல் ஆகிக் கசிந்து கண்ணிர் மல்கி ஓதுவார்தமை நன்னெறிக்கு உய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே. (1)


நம்புவார் அவர் நாவில் நவிற்றினால்
வம்பு நாண் மலர்வார் மது ஒப்பது
செம்பொனார் திலகம் உலகுக்கு எலாம் நம்பன் நாமம் நமச்சிவாயவே. (2)

நெக்குள் ஆர்வம் மிகப் பெருகி நினைந்து அக்கு மாலைகொடு அங்கையில் எண்ணுவார் தக்க வானவராத் தருவிப்பது நக்கன் நாமம் நமச்சிவாயவே. (3)


இயமன் தூதரும் அஞ்சுவர் இன்சொலால் நயம் வந்து ஓத வல்லார்தமை நண்ணினால் நியமந்தான் நினைவார்க்கு இனியான் நெற்றி நயனன் நாமம் நமச்சிவாயவே. (4)


கொல்வார் ஏனும் குணம் பல நன்மைகள்
இல்லார் ஏனும் இயம்புவர் அயிடின் எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால் நல்லார் நாமம் நமச்சிவாயவே. (5)


மந்தரம் அன்ன பாவங்கள் மேவிய
பந்தனை யவர் தாமும் பகர்வரேல் சிந்தும் வல்வினை செல்வமும் மல்குமால் நந்தி நாமம் நமச்சிவாயவே. (6)

நரகம் ஏழ்புக நாடினர் ஆயினும்
உரைசெய்வாயினர் ஆயின் உருத்திரர் விரவியே புகுவித்திடும் என்பரால்
வரதன் நாமம் நமச்சிவாயவே. (7)

இலங்கை மன்னன் எடுத்த அடுக்கல்மேல் தலங்கொள் கால் விரல் சங்கரன் ஊன்றலும் மலங்கி வாய்மொழி செய்தவன் உய்வகை நலங்கொள் நாமம் நமச்சிவாயவே. (8)

போதன் போதன கண்ணனும் அண்ணல்தன் பாதம் தான்முடி தேடியப் பண்பராய் யாரும் காண்பதரிதாகி அலந்தவர்
ஓதும் நாமம் நமச்சிவாயவே. (9)
கஞ்சி மண்டையர் கையில் உண் கையர்கள்
வெஞ்சொல் மிண்டர் விரவிலர் என்பரால்
விஞ்சை அண்டர்கன் வேண்ட அமுதுசெய் நஞ்சுண் கண்டன் நமச்சிவாயவே. (10)

நமச்சிவாயப்பதிகத்திற்க்குப்பின் ஓம் மங்களம் பாடல் கேட்டு இன்புறுங்கள் அன்பர்களே.
இனி பாடல் வரிகள் தமிழில்
ஓம் மங்களம் ஓங்கார மங்களம்
ஓம் நமசிவாய மங்களம்

மங்களம் நகார மங்களம்
நாத பிந்து கலா தீத வேத மங்களம் (ஓம்)

மங்களம் மகார மங்களம்
மஹா தேவ தயா சிந்து ஈச மங்களம் (ஓம்)

சி மங்களம் சிவாய மங்களம்
சித்த புத்தி ஆத்ம ரூப வேத மங்களம் (ஓம்)

மங்களம் வகார மங்களம்
வாத பேத ரஹ’த் பர பிரம்ம மங்களம் (ஓம்)

மங்களம் யகார மங்களம்
யதா தத்வ பரிக்ஞான வேத மங்களம் (ஓம்)

தேவாரம்: தமிழ் ஈழம் பற்றிப் பாடிய நாயன்மார்கள்!

இன்றைய சூழ்நிலையில், ஈழத்தில் வாழும் நம் சகோதர சகோதரிகளை அலைகழிக்கும் அல்லல்கள் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து.
ஈழ மக்களின் அமைதிக்கு உடன்பாடில்லாத எந்தவொரு செய்கைக்கும் பாரத தேசம் துணை செய்யாது என்று வாயால் சொல்லக் கூட இம்புட்டு தயக்கமா? இத்தனை அரசியலா? ஈழ அரசியல்/படையியல் ஒரு விநோதம் என்றால், இந்திய அரசியலும் எந்த வகையிலும் சளைத்தது இல்லை போலும்.

பக்தி இலக்கியங்களிலும் பெளத்த அரசியலை, அதுவும் ஈழத்து பெளத்த அரசியலைச் சிலர் கிழி-கிழின்னு கிழிச்சிருக்காங்க! :) யாருன்னு சொல்லுங்க பார்ப்போம்?
நம்ம சிறு பிள்ளை, ஆளுடைய பிள்ளை, நாளும் இன்னிசையால் நற்றமிழ் பரப்பும் ஞான சம்பந்தன் தான்! "புத்தராய்ச் சில புனை துகில் உடையவர், அவர்கள் எத்தராகி நின்று உண்பவர், அவர்கள் பேச்சைக் கேட்காதீங்க" என்று சீறுகிறார்!

சிவன் பாட்டு வலைப்பூவில், தேவாரப் பதிவுகளின் தொடர்ச்சியாக, இன்று ஈழத்து தேவாரங்கள்...
நாயன்மார்களால் தேவாரப் பாடல் பெற்ற தலங்கள், ஈழ நாட்டிலும் உண்டு! இரண்டே இரண்டு அழகிய தலங்கள்!
1. மாதோட்டம்-திருக்கேதீஸ்வரம்
2. திருக்கோண மலை

பாடியவர்களும் இரண்டே இரண்டு பேர் தான்!
1. ஞான சம்பந்தர்
2. சுந்தர மூர்த்தி நாயனார்

இவர்கள் இலங்கைக்குச் சென்று அங்கு ஈசனைச் சேவித்துப் பாடினார்களா, இல்லை இராமேஸ்வரம் திருக்கரையில் இருந்தவாறே தொழுது ஏத்தினார்களா என்பது குறித்து சைவ நூல்களில் வெவ்வேறு கருத்துக்கள் உள்ளன. ஆனால் ஈழத்துத் தேவாரங்கள், ஈழம் போலவே அத்துணை அழகு! பார்க்கலாம் வாரீயளா?
ஓம் ஓம் ஓம் ஓம் நமசிவாயா

ஓம் நமசிவாயா தங்க நிலாவினை அணிந்தவா
ஆடுகின்றேன் பூர்ணோதயா அருள் இல்லையா?

ஓம் நமசிவாயா ஓம் நமசிவாயா

பஞ்ச பூதங்களும் உன் முக வடிவாகும்
ஆறு காலங்களும் உன் ஆடைகள் ஆகும்

பஞ்ச பூதங்களும் உன் முக வடிவாகும்
ஆறு காலங்களும் உன் ஆடைகள் ஆகும்

மலை மகள் பார்வதி உன்னுடன் நடக்க
ஏழு அடிகளும் சுரங்கள் படிக்க

உன் பார்வையே எட்டு திசைகளே
உன் சொற்களே நவரசங்களே

கங்கையின் மணவாளா ஆ ஆ ஆ......

உன் மௌனமே...

ஓம் நமசிவாயா ஓம் நமசிவாயா


மூன்று காலங்களும் உந்தன் விழிகள்
சதுர் வேதங்களும் உந்தன் வழிகள்

கணபதி முருகனும் பிரபஞ்சம் முழுதும்
இறைவா உன்னடி தொழுதே துதிக்கும்

அத்வைதமும் நீ ஆதி அந்தம் நீ
நீ அங்கு இல்லை புவனம் முழுவதும்நீ

கயிலாய் மலை வாசா கலையாவும் நீ
புவிவாழ்வு பெறவே அருள் புரி நீ.

ஓம் நமசிவாயா ஓம் நமசிவாயா.
 

சிவபெருமானின் ஆயிரம் திருப்பெயர்கள்


லலிதா சஹஸ்ரநாமத்தையும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தையும் படித்திருக்கிறேன்; மற்றவர் சொல்லியும் கேட்டிருக்கிறேன். சிவ சஹஸ்ரநாமத்தைப் படித்தது மட்டும் உண்டு. இன்று அந்த குறையும் தீர்ந்தது. சிவபெருமானுடைய ஆயிரம் திருப்பெயர்களைக் கூறும் 'சிவ சஹஸ்ரநாமத்தை' இன்று கேட்டேன். அதனை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!
இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க!
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க!
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க!
துவங்குவதே திருவைந்தெழுத்தில் தான்! பஞ்சாட்சரம்! = நமசிவாய!
திருவாசகமே ஐந்தெழுத்தில் தான் துவங்குகிறது! வேறெந்த திருமுறைக்கும் இப்படி அமையவில்லை! இது தான் திருவாசகத்தின் சிறப்பு!

அதனால் தான் வாதவூரன் சொல்ல, நாம் எழுதியது என்று ஈசனே தன் கைப்படத் திருக்கடைக்காப்பிட்டு அருளினான்! அவனுக்கே தெரியும் தன்னை விடத் தன் நமசிவாய நாமம் தான் உயர்ந்தது என்று!
முன்னம் அவனுடைய நாமம் கேட்டேன்! மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டேன்! என்பார் அப்பர் சுவாமிகள்!
முதலில் நாமம், அப்புறம் தான் மூர்த்தி! அன்று நடுச்சபையிலே பெண்ணுக்குக் கை கொடுத்தது திருநாமம்! வராத இறைவனையும், வர வைத்தது திருநாமம்!

அடுத்து நாதன் தாள் வாழ்க = இறைவனின் திருவடிகள்! அதற்குத் தான் வாழ்த்து!
இன்னும் இறைவனை இவர் வாழ்த்தவே இல்லை பாருங்க! திருநாமமும், திருவடியும் தான் பாடிக்கிட்டு இருக்காரு!
திருப்பல்லாண்டில் பெரியாழ்வாரும் இப்படியே அருளிச் செய்துள்ளார்! பல்லாண்டு, பல்லாண்டு,...உன் செவ்வடி செவ்வித் திருக்காப்பு! - உனக்குக் காப்பு இல்லை! உனது திருவடிகளுக்குத் திருக்காப்பு!

பெரியாழ்வாரும் மாணிக்கவாசகரும் வெவ்வேறு கால கட்டங்கள்! இருந்தும் ரெண்டு பேரும் எப்படி ஒரே மாதிரி சிந்திக்க முடிந்தது?


கோகழி=திருப்பெருந்துறை என்னும் ஊர்! அங்கு தான் இறைவன் மெளன குருவாய் மாணிக்கவாசகருக்கு உபதேசம் காட்டி அருளினார்! நன்றி மறவாமல் ஊரைப் பாடுகிறார்! இநத ஊரு எங்கே இருக்கு, இக்காலப் பேரு என்னான்னு சொல்லுங்க பார்ப்போம்! இந்த ஊரில் லிங்கம் கிடையாது, அம்பாள் கூட சிலை இல்லை! பாதங்கள் மட்டுமே! எல்லாப் பூசையும் மாணிக்கவாசகருக்குத் தான்!

ஆகமம் ஆகிநின்று = ஆகமம் என்பதெல்லாம் தேவையா? என்று இன்னிக்கி மெத்தப் படித்தவர்கள், படிக்காமலேயே கேள்வி எழுப்புவார்கள்! :)
ஆனால் மணிவாசகர் அப்படியில்லை! இறைவன் எங்கும் இருக்கிறான் தான்! ஆனால் விளிம்பு நிலை மாந்தர்களான நாம் அவனை எப்படித் தரவிறக்கம் செய்து கொள்வது?

* அணுக்கள் எங்கும் இருக்குது தான்! ஆனா அணு உலையில் தானே மின்சாரம் வரும்?
** பசுவின் உடலில் பால் எங்கும் இருக்கு தான்! ஆனால் காம்பில் மட்டும் தானே பால் வரும்?

வீட்டில் இருக்கும் தெய்வமும், கருவறைத் தெய்வமும் ஒன்னு தான்! ஆனால் கருவறைத் தெய்வம், நாம் மட்டும் அல்லாது, பல அடியார்கள் சேவித்து உருகிய சான்னித்யம்! அதனால் தனிநலத் தெய்வ உருவத்தை விட, பொதுநல தெய்வ உருவத்துக்குச் சாந்நித்யம் அதிகம்!
அடுத்த முறை ஆகமங்களைக் கேலி செய்யாதீர்கள்! கருவறையில் ஃபோட்டா புடிக்க விடாத ஆகமம் எங்களுக்கு வேணாம்-னு எல்லாம் பேசாதீங்க! ஆகமத்தைப் புரிந்து கொண்டு அப்புறம் பேசுங்கள்!

அண்ணிப்பான் = இனிப்பான்! அண்ணிக்கும் அமுது ஊறும் என் நாவினுக்கே என்பார் மதுரகவியாழ்வார்! அப்படி ஆகமம் ஆகி நின்று இனிப்பவன் தாள் வாழ்க!
ஏகன் அநேகன் = ஒன்றாய், பலவாய் இருப்பவன் ஈசன்! அந்த இறைவன் அடி வாழ்க!



வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க!
பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய் கழல்கள் வெல்க!
புறத்தார்க்குச் சேயோன் தன் பூங் கழல்கள் வெல்க!
கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க!
சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க!


வேகமாய் அலைபாயும் மனத்தை அடக்கி ஆண்ட வேந்தன் அடி வெல்க!
பிஞ்ஞகன் = பீலி அணிந்தவன்! பினாகம் என்னும் வில், பிஞ்ஞகமானது என்றும் எடுத்துக் கொள்ளலாம்! பினாகம் வில்லை உடையவன் ஈசன்! அருள் பெய்யும் கழல்கள் வெல்க!

புறத்தார்க்குச் சேயோன் = அண்மை x சேய்மை = அருகில் x தொலைவில்!
புறத்தார்க்குத் தொலைவில் தான் நிற்பானாம்! இது மணிவாசகர் கருத்து!
கை குவித்து வணங்குபவர்! கைகளைத் தலை மேல் குவித்து வணங்குபவர்! இவர்கட்கு மகிழ்வும், ஓங்கு பெருமையும் தரும் திருவடிகள் போற்றி!

ஈசன் அடி போற்றி! எந்தை அடி போற்றி!
தேசன் அடி போற்றி! சிவன் சேவடி போற்றி!
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி!
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி!
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி!
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி!

தேசன்=தேசு/ஒளி பொருந்தியவன்! நிமலன்=குற்றமில்லாதான்!
ஆராத இன்பம்=பசி ஆறிடும்! செல்வமும் ஒரு நாள் ஆறிப் போகும்! எது ஆறாது? சிவ மங்கள இன்பம் ஆறாது! ஏன்? அது ஆராத ஒன்று! அதாச்சும் தெவிட்டாத ஒன்று! அது நித்ய விபூதி!

மாணிக்கவாசகர் இந்த அர்ச்சனைப் பாட்டை, வெண்பாவில்-செப்பல் ஓசையில் அமைக்காமல், கலிப்பாவில்-துள்ளல் ஓசையில் அமைத்துள்ளார்! மந்திரம் ஓதுவதற்கு என்றே இப்படி!
இதை விட என்னாங்க ஒரு அர்ச்சனை பண்ணிற முடியும்! பேசாம இதையே அரசு எடுத்து வெளியிட்டு இருக்கலாம்!

எங்கே, கோயில் அர்ச்சனை போலவே, நல்லா நீட்டி முழக்கி, ஒரு முறை ஓதுங்கள் பார்ப்போம்!
நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!
இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க! வாழ்க!!
ஈசன் அடி போற்றி! எந்தை அடி போற்றி!
தேசன் அடி போற்றி! சிவன் சேவடி போற்றி! போற்றி!


சீரார் பெருந்துறை சிவபெருமான் திருவடிகளே சரணம்! - திருச்சிற்றம்பலம்!

Sunday, August 10, 2008

சுந்தரர் தேவாரம்: நண்பனை மறந்தாயோ? பொன்னியின் செல்வனில் எங்கே வருகிறது?

ஒருத்தர் அமெரிக்காவில் இருந்து புறப்பட்டு, திடீரென்று சென்னை வருகிறார்! வேலை மிகுதி! சென்னையில் இருக்கும் தன் ஆருயிர் நண்பனைக் கூப்பிடக் கூட முடியவில்லை! ஆனால் சென்னை நண்பருக்கோ ஞான மூக்கு இருக்கு! :)
நண்பன் நம்ம ஊருக்குத் தான் வந்துள்ளான் என்பதை எப்படியோ ஞான மூக்கில் மோப்பம் பிடித்து விட்டார்! உடனே என்ன செய்வார், சொல்லுங்க?

"டேய், எங்களை எல்லாம் கண்டுக்க மாட்டீங்களோ?" என்று கெஞ்சலாம் - இது ஒரு வழி!
நண்பன் வீட்டுக்குப் போயி "பளார்" என்று கன்னத்தில் கொஞ்சலாம் - இது இன்னொரு வழி! :)
ஆனால் சங்கரன் அன்று ஏனோ கொஞ்சவில்லை! கெஞ்சிக் கொண்டு இருந்தான்!
எந்த சங்கரனா? ஹிஹி! தஞ்சை மாவட்டம், திருமழபாடி என்னும் ஊரில் குடியிருக்கும் ஒரு சங்கரன் தான்!
ஈசனுக்கே தோழன், அந்தரங்க விஷயங்களைக் கூட ஈசனிடம் பேசக் கூடிய பக்தர்! அடிச்சுக்குவாங்க, அணைச்சிக்குவாங்க!
இப்படி எல்லாம் நட்பு கொள்ளக் கூடிய தம்பிரான் தோழர்கள் = சிவபெருமானும்-சுந்தர மூர்த்தியும்!
சுந்தரர் அப்போது கொள்ளிடக் கரையின் சிவத் தலங்களை எல்லாம் தரிசிக்கப் பயணம் மேற்கொண்டு இருந்தார். திருவையாறு மற்றும் அதன் சுற்றியுள்ள ஊர்கள்.
அன்று இரவு திருவாலம்பொழில் என்னும் ஊரில் ராத்தங்கல் (நைட் ஸ்டே)! அடுத்த நாள் கொள்ளிடக் கரையைக் கடந்து போக வேண்டும்! சுந்தரருக்கு ராத்தூக்கம் வரவே இல்லை!



நள்ளிரவில் திடீர் என்று ஒரு குரல்! கெஞ்சு குரல்!
"சுந்தரா, என்னை மறந்தனையோ? மழபாடிக்கு வர மறந்தனையோ??"
சுந்தரர் அலறி அடித்துக் கொண்டு எழுந்து விட்டார். உடன் வந்த பக்தர்கள் குழாம் எல்லாம் என்னவோ ஏதோ என்று விழித்துக் கொண்டனர்.
"இங்கே மழபாடி என்று ஏதாச்சும் ஊர் இருக்கா?" - ஊர் மக்களிடம் சுந்தரர் வினவுகிறார். மக்கள் திருமழபாடியில் உள்ள வயிரத்தூண் நாதரைப் பற்றிச் சொல்கிறார்கள்!

ச்சே நண்பனையா மறந்தோம்? வெட்கம் பிடுங்கித் தின்கிறது! பொழுது பொல பொலவென்று புலர்கின்றது...நண்பனைக் காண ஓடோடிச் செல்கிறார் சுந்தரர்!

"டேய், உன்னை மறப்பேனாடா? என்ன பேச்சு பேசற நீயி? வைரத்தூண்-னு உனக்குப் பேரு! உன் வைராக்கியமும் வைரம் போலவே தான் இருக்கு!
என் மேலே கோபம்-ன்னா, இந்தா, நாலு அறை அறைஞ்சிரு! அதுக்காகப் பேசாம எல்லாம் இருக்காதே!
ஒரு முறை என்னை நேருக்கு நேராத் தான் பாரேன்! அப்புறம் தெரியும் உன் வீம்பு எல்லாம்!
உன்னை அல்லால் வேறு யாரைடா நினைக்கப் போகிறேன்? அன்னே உன்னை அல்லால், இனி யாரை நினைக்கேனே?"

திருச்சிற்றம்பலம்!
பொன்னார் மேனியனே புலித் தோலை அரைக்கு அசைத்து
மின்னார் செஞ்சடை மேல் மிளிர் கொன்றை அணிந்தவனே
மன்னே மா மணியே மழ பாடி உள் மாணிக்கமே
அன்னே உன்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே!
திருச்சிற்றம்பலம்!

இதாங்க எளிமையான பொருள்:பொன் போல் சிவப்பா இருக்கும் என் சிவப்பா!
புலிதோலை இடையில் கட்டிக்கிட்டு இருக்காய்! உன் தலையில் உள்ள சடாமுடியில், கொன்றைப் பூ மின்னுகிறது!
வாராது வந்த நட்பின் மாமணியே! மழபாடியில் குடியிருக்கும் மாணிக்கமே!
உன்னை அல்லாமல் வேறு யாரை நினைக்கப் போகிறேன்? எந்நாளும் என் மனத்துக்கினிய நண்பன் நீ தான்! நீ தான்!



சரி, புதிருக்கு வருவோம்!1. பொன்னார் மேனியனே என்ற பாடல், கல்கியின் பொன்னியின் செல்வனில், பல இடங்களில் வரும்! எந்தக் கதாபாத்திரத்தின் அறிமுகப் படலத்தில் இந்தப் பாடல் வருகிறது?

2. இந்த "மழபாடி மறந்தனையோ" கதையும் பொன்னியின் செல்வனில் வரும். யார் யாருக்குச் சொல்வாங்க? எந்தக் கட்டத்தில்?

திருமழபாடியை ஒரு ரவுண்டு வரலாமா?
பாடி என்றால் தங்குமிடம்; பாசறை!
கங்கபாடி-ன்னு ஊரு இருக்குல்ல? அதே போல், மழபாடி = மழவர்கள் தங்கும் பாடி! காவிரியின் வடகரைத் தலங்களுள் ஒன்று! திருவையாற்றுக்கு அருகில்!
இறைவன்: வயிரத் தூண் நாதர், வஜ்ர ஸ்தம்ப ஈஸ்வரர் இறைவி: அழகம்மை
நந்திகேஸ்வரர் திருமணம் நிகழ்ந்த தலம்! சுயசை என்னும் நங்கை நல்லாளுக்கும் நந்தியம்பெருமானுக்கும் இன்றும் பங்குனி மாதம் திருமண விழா எடுப்பிக்கிறார்கள்!

பாடலுக்கு நன்றி: பாலராஜன் கீதா (பாகீ இன்னும் சில தலங்களுக்கு தேவாரப் பாடல் ஒலிப்பத்திகளை அனுப்பியுள்ளார்) ; சில படங்களுக்கு நன்றி: சதீஷ் குமார்

திருமழபாடி ஆலயம்
பதிகத்தைக் கொஞ்சம் பிரிச்சி மேயலாமா?
நண்பன் நம்மிடம் கோபித்துக் கொண்டால் முதலில் என்ன செய்வோம்?
மன்னிச்சோக்கோ என்று முதலில் கெஞ்சல்!
சூடு தணிந்தவுடன், அவனையே கலாய்த்து சிறு கொஞ்சல்!
அதே தான் இங்கும் நடக்கிறது!

அன்னே......உன்னை அல்லால், இனி யாரை நினைக்கேனே?
அன்னே = அன்னையே, அம்மா, அம்மே!
சில நெருங்கிய நண்பர்கள் ஒருவொருக்கொருவர் பேசிக் கொள்ளும் போது பார்த்திருக்கலாம்; "என்னம்மா, சொல்லும்மா, அப்பிடி இல்லம்மா" என்றும் பேசிக்குவாங்க! நண்பன் எப்படி அம்மா ஆக முடியும்? ஆக முடியுமா?
வீட்டுல அன்னிக்கி சங்கரா மீன் வறுவல்; மதியம் சாப்பிட்டாச்சி; இன்னும் ரெண்டு மூனு துண்டு தான் பாக்கி இருக்கு! அப்பாவுக்கு ஒரு துண்டை வைத்த அம்மா, தனக்கு மட்டும் படக்கென்று மோர் ஊத்திக்கறாங்க!
அட, என்னாம்மா-ன்னு கேட்டா, ஏதோ ஒரு சாக்கு போக்கு சொல்லுறாங்க! அப்படியே ரெண்டு மீன் துண்டையும் பையனுக்கு வச்சிடறாங்க! நீ ஒன்னு வச்சிக்கோம்மா-ன்னு சொன்னா, அடடா நான் மோர் ஊத்திக்கிட்டேனே! சரி, நீயே சாப்பிடுப்பா-ன்னு ஒரு பொய் நாடகம்! இதே மாதிரி நாடகங்கள் சில நெருங்கிய நட்பிலும் உண்டு! :)

அம்மாவிடம் ஆயிரம் சண்டை போட்டாலும், திரும்பியும் போயி அங்கேயே தான் நிற்போம்! பேசிக்க மாட்டோம், ஆனால் ஏதோ ஒரு இழை மட்டும் ஓடிக் கொண்டே இருக்கும்!
நாம தப்பே செஞ்சாலும் கூட, அம்மா மட்டும் நம் பக்கம் தான் இருக்கணும் என்கிற ஒரு கண்மூடித்தனமான எண்ணம்! இது போல சில நட்பும் உண்டு!
இவர்கள் தான் "என்னம்மா, சொல்லும்மா, அப்பிடி இல்லம்மா" என்று பேசிக் கொள்பவர்கள் :)

சுந்தரர்-ஈசன் நட்பும் அப்படித் தான்! ஈசனையே பொய் சாட்சி சொல்ல அழைப்பார்! அதான் அன்னே! அம்மா! என்று நண்பனை விளிக்கிறார்!டேய், உன்னை விட்டா வேற யாரும்மா? அன்னே, உன்னை அல்லால், இனி யாரை நினைக்கேனே!


ஓதுவா மூர்த்திகள், தேவாரம் இசைக்கிறார்கள்!
பொன்+ஆர்+மேனியனே = ஆர்-ன்னா அழகு!
சிவபிரான் தகதக என்று காய்ச்சின பொன் நிறத்தைக் கொண்டவன்! செம்பொன் மேனி என்பார்கள்! அதாச்சும் சிவப்பாகவும் இருக்கும், பொன் போலவும் இருக்கும்!

காய்ச்சின பொன்னை எப்படி வேண்டுமானாலும் உருக்கி விடலாம்! எந்த வடிவத்திலும் தட்டி நகை செய்து விடலாம்!
அதே போல் சிவபிரானைத் தவத்தால் உருக்கி விடலாம்! வரப் பிரசாதி! பக்த கோலாகலன்! தவத்தில் சோதனைகள் கொடுத்தாலும், உருகி விடுவதில் எளியன்! வரங்களை அள்ளி அள்ளிக் கொடுத்து விடுவான்!

அதனால் தான் அசுரர்கள் சிவபிரானை நோக்கியே பெரும்பாலும் தவம் இருப்பார்கள்! மாறாகப் பெருமாளோ தேவனாகட்டும் சரி, அசுரனாகட்டும் சரி...ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய் தான்! அவ்வளவு சீக்கிரம் கறந்து விட முடியாது! :)

புலித்தோலை அரைக்கு அசைத்து = அரை என்றால் இடை, இடுப்பு
(அரை-ஞாண் கயிறு-ன்னு சொல்றோம்-ல! எத்தினி பேரு இந்தக் காலத்திலும் அரைஞாண் கயிறு கட்டிக்கிட்டு இருக்கீங்க? கையைத் தூக்குங்க! :)
புலித்தோலை இடையில் அசைத்துக் கொண்டு உள்ளான்! ஒழுங்கா மடிப்பு எல்லாம் வச்சிக் கட்டினா, அதுக்குப் பேரு கட்டுதல்! ஆனால் இங்கோ பரபரவென்று புலித்தோலை ஒரு இழுத்து இழுத்து இருக்கான்; அம்புட்டு தான்! அதனால் அசைத்து என்கிறார்!

கர்மங்களைச் செய்தாலே போதும்; இறைவனைத் தனியாகப் பணிய எல்லாம் தேவையில்லை என்ற கொள்கை உடையவர்கள் கர்ம மீமாம்சை ரிஷிகள்!
தாருகா வனத்தில் அவர்கள் சிவபெருமானை எதிர்த்து ஆபிசார ஹோமம் என்ற ஒன்றினைச் செய்கிறார்கள்! அப்போது ஏவி விடப்பட்டவை தான் புலி, மான் போன்றன! புலியைக் கொன்று அதன் தோலை அரைக்கு அசைத்துள்ளான் ஈசன்!
மின்னார் செஞ்சடை மேல், மிளிர் கொன்றை அணிந்தவனே =
செம்மையாக இழுத்துக் கட்டப்பட்ட ஜடாமுடி! அது மின்னுகிறது! எதனால்? சந்திர மெளலி அல்லவா? கறையில்லாப் பிறையால் மின்னுகிறது! அதான் மின்னார் செஞ்சடை!

சடையின் மேல் கொன்றை மலர் சூடி உள்ளான்! கொன்றை மலர் ஈசனுக்கு மிகவும் உகந்த மலர்! மஞ்சள் நிறத்தில் அதுவும் தததக-ன்னு மின்னும்!
தாழம்பூ அவனுக்கு ஆகவே ஆகாது! கொன்றையோ அவனை விட்டுப் போகவே போகாது!
கொன்றை பற்றி யோகன் அய்யா இட்ட சிறு பதிவு இங்கே!

மன்னே, மாமணியே, மழபாடி உள் மாணிக்கமே =
மன்னுதல் = நிலைத்து இருத்தல்! மன்னும் இமயமலை என்பார்களே, அது மாதிரி!
மற்ற செல்வங்கள் எல்லாம் செல்வம், செல்வம், செல்வோம்...என்று சென்று விடும்!
ஆனால் சிவச்செல்வம் எப்போதும் மன்னி நிற்கும்!

விபூதி என்பதற்கே செல்வம் என்று தான் பொருள்!
நித்ய விபூதி என்று வைணவமும் விபூதியைப் பேசும்! அது போல, நட்புச் செல்வமும் என்றும் நிலைத்து இருக்க வேண்டித் தான் மன்னே என்கிறார்!

டேய், உன்னை விட்டா வேற யாரும்மா? அன்னே! உன்னை அல்லால், இனி யாரை நினைக்கேனே?

உயிர் நண்பர்கள் யாரேனும் பிரிந்து இருந்தால், அவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்து மகிழ, இந்தத் தோழமைத் திருப்பதிகத்தை அடியேன் வாசித்து அர்ப்பணிக்கிறேன்!

அடுத்த திங்கட்கிழமை, ஒரு வாசகத்துக்கும் உருகாதவர்கள், திருவாசகத்துக்கு உருகப் போறோம்! அதுக்கு முன்னாடி பொன்னியின் செல்வன் புதிருக்குப் பதில் சொல்லுங்க மக்கா! :)


நான் இலங்கைக்குச் செல்ல வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியதே கதிர்காமமும், கோணேஸ்வரமும், கேதீஸ்வரமும் தான்.

திருச்செந்தூரைத் தானே அலைவாய் என்கிறோம்?
ஆனால் உண்மையில் ஒரு மலையையே அலைத்து அலைத்துத் தாலாட்டும் இயற்கை அழகு, திரிகோணமலைக்கு உண்டு. படங்களில் பார்க்கும் போதே சொக்கிப் போவீர்கள்.
காபி அண்ணாச்சி சொல்லி இருக்காரு, என்னை அங்கிட்டு அழைத்துப் போகிறேன்-ன்னு. ரிஷான் ஷெரீப்பும் சொல்லி இருக்கார். பார்க்கலாம். ஈழத்துக்கு ஒரு சிறு விடிவு காலமாச்சும் தோன்றி, இறைவன் திருவுள்ளம் கனிய, பாலாவிக் கரையில் கேதீஸ்வரரையும், கதிர்காமத்து முருகனையும் அடியேன் கண்ணாரக் கண்டு சேவிக்க வேண்டும்!

திருக்கேதீஸ்வரம் என்னும் திருக்கேதீச்சரம், மன்னாருக்கு அருகே பாலாவி ஆற்றின் கரை மேல் உள்ளது. மாதோட்டத்துக்கு அருகில்.

கேதீச்சரத்துக்குக் காசிக்கு இணையான சிறப்பு! சிவ பெருமானுக்குக் காவடி எடுப்பது இங்கு மட்டுமே! தீர்த்தக் காவடி!
சிவலிங்கத்துக்கு நாமே திருமுழுக்காட்ட (அபிஷேகம்) முடியும்!
எப்படிக் காசியில் கங்கை நீரை முகந்து உலகநாதரை முழுக்காட்டலாமோ, அதே போல் பாலாவியில் நீர் முகந்து, தீர்த்தக் காவடி எடுத்து, கேதீஸ்வரருக்குத் திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்யலாம்!

படத்துக்கு நன்றி: சிவத்தமிழோன் ஐயா; அவரின் திருக்கேதீஸ்வரம் பதிவு இங்கே!
இறைவன் = கேதீசுவரர். இறைவி = கெளரியம்மை.சம்பந்தர் பதிகம் ஒன்று. அதில் பதினோரு பாடல்கள்! சுந்தரர் பதிகம் ஒன்று. அதில் பத்து பாடல்கள்! ஆக மொத்தம் இருபத்தியோரு பாடல்கள்!

தீபாவளிக்கு மறுநாள் கேதார-கெளரி விரதம் என்று எங்கள் ஊர் வாழைப்பந்தல் பக்கமும், இன்னும் வடார்க்காடு முழுதும், அதிரசம் சுட்டு, நோன்பு எடுப்பார்கள். இந்தக் கெளரி-கேதார தம்பதிகளைத் தான் இருத்தி நோன்பெடுக்கும் வழக்கம்!

எப்படி ராகு தோஷங்களுக்கு கும்பகோணம் ஒப்பிலியப்பன் கோயில் அருகில் உள்ள திருநாகேஸ்வரமோ, அதே போல் கேது தோஷங்களுக்கு, திருக்கேதீஸ்வரம்!

பத்தொன்பதாம் நூற்றாண்டில், ஆறுமுக நாவலர் அவர்களின் முயற்சியில், தமிழர்கள் பலரை ஒன்று திரட்டி, ஆலயம் மீண்டும் செப்பனிடப்பட்டது!
போரில், இலங்கை அரசின் சிங்களப் படைகள் கோயிலைக் கையில் எடுத்துக் கொண்ட பின், மீண்டும் வழிபாடுகள் நின்று போயின. கோயிலும் நாசமடைந்து இருந்தது!
தமிழர்கள் மீட்புக் குழுவினரின் முயற்சியால், இப்போது ஓரளவுக்கேனும் வழிபாடுகள் நடைபெறுகின்றன. ஆனால் படைகள் இன்னும் முழுமையாக அங்கிருந்து வெளியேறவில்லை போலும்!
ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த இடத்துக்குத் தொல்பொருள் ஆராய்ச்சி என்னும் மரியாதை கூடவா இல்லை ஒரு அரசுக்கு? :((



சரி, தேவாரத்தைப் பார்க்கலாமா?
புத்தராய்ச் சில புனை துகில் உடையவர் புறன் உரைச் சமண் ஆதர்
எத்தராகி நின்று உண்பவர் இயம்பிய ஏழைமை கேளேன் மின்
மத்த யானையை மறுகிட வுரி செய்து போர்த்தவர் மாதோட்டத்
தத்தர் மன்னு பாலாவியின் கரையிற் கேதீச்சரம் அடைமின்னே!

- சம்பந்தர்

மேலோட்டமான பொருள்:
புனைந்த துகிலை ஆடையாய்க் கொண்ட பெளத்தர்கள் புறம் பேசுவதே கொண்டுள்ளார்கள். அவர்களுடன் சில சமணர் ஏமாற்று வேலையும் செய்கிறார்கள். அவர்கள் நின்று கொண்டே உண்பவர்கள். அவர்கள் பேச்சை யாரும் கேட்கவே கேட்காதீர்கள்!
மத யானையைத் தோலுரித்துப் போர்த்தியவர் ஈசன். அவர் மாதோட்ட நகரிலே, பாலாவியின் கரையில் கேதீச்சுரத்தில் அருள் செய்கின்றார். அங்கு சென்று அடையுங்கள்!

என்ன பெளத்தர் மீதும், சமணர் மீதும், சின்னப் பிள்ளையான சம்பந்தர் இப்படி வார்த்தையைக் கொட்டுகிறாரே-ன்னு தோனும்! ஆனால் அந்தக் காலகட்டத்துக்குச் சென்று வந்தால் தான் சற்றே உண்மை புலப்படும்.

அரசாங்கத்தைக் கைக்குள்ளே போட்டுக் கொண்டு, சமயம் வளர்க்காமல், சமயம் பார்த்து சமயம் வளர்க்கும் வித்தையில் பெளத்தர்கள் மித மிஞ்சினார்கள்.
அரசு அலுவல்களில் நேரடி ஈடுபாடு. மக்கள் பிரச்சனைகளில் குளறுபடிகள்.
இவர்கள் துறந்தவர்களின் கடமைகளைச் செய்வதால், அதையே அரசாணை மூலமாக அனைவரும் செய்ய வேண்டும் என்ற கட்டளைகள் சரி வருமா? அதான் ஒரு கட்டத்தில் இவ்வளவு வெறுப்பு தலை தூக்கியது!

பாலகுமாரனின் உடையார் நாவலில், இராஜராஜனின் மகள் சந்திரமல்லிலையை, மருத்துவம் செய்கிறேன் பேர்வழி என்று, நாகைப் புத்த விகாரத்தில் மூளைச் சலவை செய்து, அரசியல் காய்களை எப்படியெல்லாம் நகர்த்தினார்கள்-னு வரும். அது போல ராஜரீக விஷயங்களில் ஏற்பட்ட பல கசப்புகள் தான் சம்பந்தரை இப்படிப் பேச வைத்தது போலும்!

மகான் புத்தரை வெறுத்தாரில்லை! சமயங்களுக்குள் என்றைக்கும் பிணக்கு இருந்ததுமில்லை! சமயத்தைப் பின்பற்றுவதாக கூறிக் கொள்ளும் மக்களின் அடாவடிகளால் தான் சமயப் பிரச்சனைகளே தலைதூக்குகின்றன!
இறைவன் தங்களைக் காப்பாற்றும் நிலை போய், மானிட ஜென்மங்கள் தாங்களே, தங்கள் தங்கள் இறைவனைக் காப்பாற்ற வேண்டும் என்று மடமையால் தோன்றுவது தான் இத்தனை அடாவடிகளும்!

சுந்தரமூர்த்தியும் திருக்கேதீஸ்வரத்தைப் பாடுகிறார். ஆனால் சம்பந்தர் காலத்தில் இருந்தது போல் இவ்வளவு பெளத்த வெறுப்பு அவர் காலத்தில் இல்லாமல் போனது! நல்லது தான்!
இதோ சுந்தரரின் ஈழத்து தேவாரம்!

மூவர் என இருவர் என
முக் கண்ணுடை மூர்த்தி
மாவின் கனி தூங்கும் பொழில்
மாதோட்ட நன் னகரில்
பாவம் வினை அறுப்பார் பயில்
பாலாவியின் கரை மேல்
தேவன் எனை ஆள்வான் திருக்
கேதீச்சரத் தானே!


மேலோட்டமான பொருள்:
முத்தொழில் என்றாலும் அதில் நீ உள்ளாய்! இரு தெய்வங்கள் என்றாலும் அதில் நீ உள்ளாய்! முக்கண்ணப்பா!
மாம்பழங்கள் தூங்கும் சோலைகள் நிறைய உள்ள மாதோட்டம்!
அங்கு பாவங்களைப் போக்க வல்ல நெறியாளர்கள் பல பேர் பயில்கிறார்கள், புழங்குகிறார்கள்.
பாலாவியின் கரை மேல் இருக்கும் தேவரே! என்னை ஆட்கொள்வீர் கேதீஸ்வரா!

மாவின் கனி தூங்கும் பொழில் = மாதோட்டத்தில் மாம்பழங்கள் பிரபலமா என்ன?

சரி, அது எப்படி மாம்பழம் தூங்கும்?
நல்ல தூக்கத்தில் அசைவே இருக்காது. அடித்து போட்டது போல் தூங்குவார்கள்.
மாதோட்ட மாம்பழங்கள் ஒவ்வொன்னும் பெரிது பெரிதாகப் பழுத்து இருக்கு! அதனால் காற்றில் ஆடக் கூட முடியாமல், அப்படியே அசைவில்லாமல் தொங்குகின்றனவாம்.
அதான் மாவின் கனி தூங்கும் பொழில் (சோலை) என்றார் சுந்தரமூர்த்தி நாயனார்!


அடுத்து என் உள்ளம் கவர்ந்த கோணேஸ்வரம்; திரு கோணமலை, திரிந்து திரிகோணமலை ஆனது. கடலோர மலையில் உள்ள அழகான ஆலயம்!

திருகோணமலை வடகிழக்கு மாகாணத்தின் தலைநகர். கிழக்குக் கரைத் துறைமுகம். தட்சிண கைலாசம்-தென் கயிலாயம் எனவும் சிறப்பு உண்டு!
இறைவர் = கோணேசுவரர். இறைவி = மாதுமையாள்.

சுடுநீர்ச் சுனைகள் உள்ள தலம். ஆலயத்தின் தீர்த்தமான மகாபலி கங்கை, குகையில் சுரந்து, மலையைப் பிரதிட்சணமாகச் சுற்றி, கடலில் விழுகிறது.
மகாபலி கங்கை திருகோணேஸ்வரத்திலும், மாணிக்க கங்கை திருக்கேதீஸ்வரத்திலும், காவிரிக் கங்கை கதிர்காமத்திலும் பாய்கிறது.

ஈசனின் ஆணையின் பேரில், கயிலை போன்ற மாதிரி மலையை, நான்முகன் உருவாக்கித் தர, அங்கு ஈசன் குடி கொண்டான்! வாயு, ஆதிசேடன் மேல் கொண்ட பொறாமையில், இம்மலைகளை அபகரிக்க...ஈசன் தண்டித்து, திருத்தி அருளினார். மும்மலைகளை காளத்தி, திருச்சிராப்பள்ளி, திரிகோணமலை என்று மூவிடங்களில் வைக்கச் சொன்னார் என்பது தல வரலாறு! இதனால் இது தட்சிண கைலாசம் ஆனது!

இராவணன் வணங்கிய ஈசனும் திருகோணமலை ஈசன் தான்!
தன் தாயாருக்குப் பூசை செய்ய ஒரு சிவலிங்கம் தேவைப்பட்ட போது, கயிலையில் இருந்தே நேரடியாக உங்களுக்கு எடுத்துத் தருகிறேன் என்று ஆணவம் பொங்கப் பேசினான்.
தவத்தால் கயிலை லிங்கம் பெறாது, பலத்தால் பெற்று விடலாம் என்று இறுமாந்தான்.

நந்தியம்பெருமானைக் குரங்கே என்று எள்ளி நகையாடி குரங்கால் நகர் அழியச் சாபம் பெற்றான். அப்போதும் பணியாது, பலத்தால் மலையைத் தூக்க எண்ணிய போது தான், ஈசன் தன் கால் சுண்டு விரலால் அவனை செருக்கைச் சற்றே அடக்கினார். சிவலிங்கமும் கொடுத்து அனுப்பினார். அப்போதும் கர்வம் விட்டபாடில்லை!

அந்த லிங்கத்தை வைத்து, மற்ற சிவாலயங்களை எல்லாம் திருகோணமலைக்குக் கீழ்ப்படிய வைக்க எண்ணினான். விநாயகப் பெருமான் சற்றே விளையாட, அது பாரதத்தில் திருக் கோகர்ணத்திலேயே தங்கி விட்டது! பெயர்த்து எடுக்க முடியாமல் வெறுங்கையுடன் இலங்கை திரும்பினான்.

பின்னர் அன்னையின் அறிவுறுத்தல் பேரில், சாட்டை சொடுக்கி, சிவாலயம் அமைக்க முடியாது என்று உணர்ந்து வேண்ட, ஈசன் அவனுக்கு மூன்று லிங்கங்களைக் கொடுத்து அருளினார். திருகோண மலையின் மூன்று கோணங்களிலும் நிறுவிட, இராவணன் நிறுவிய சிவலிங்கங்கள் ஆனது!

இதோ சம்பந்தர் திருகோணமலையைப் பாடும் தேவாரம்:
குற்றம் இலாதார் குரைகடல் சூழ்ந்த, கோண மாமலை அமர்ந்தாரைக்
கற்றுணர் கேள்விக் காழியர் பெருமான், கருத்துடை ஞான சம்பந்தன்
உற்ற செந்தமிழார் மாலை ஈர்-ஐந்தும் உரைப்பவர் கேட்பவர் உயர்ந்தோர்
சுற்றமும் ஆகித் தொல் வினை அடையார் தோன்றுவர் வானிடைப் பொலிந்தே.

மேலோட்டமான பொருள்:
குற்றம் இல்லாத குடிமக்கள் வாழ்கின்ற ஊர். ஒலிக்கும் கடல் சூழ்ந்த ஊர். கோணேஸ்வரம் என்னும் இந்தத் திருக்கோணமலை. அங்கு அமர்ந்துள்ள சிவ பெருமானை, கற்ற ஞானமும், கேள்வி ஞானமும் கொண்ட இருவருமே வந்து வணங்குகிறார்கள்.

அவர்களின் தலைவனான காழியர் கோன் ஞானசம்பந்தன் என்னும் நான், செந்தமிழில் பதிகம் பாடினேன். கோணமலை என்பது செந்தமிழ் மலை! அந்த மலை மீதான இப்பதிகத்தை உரைப்பவர், கேட்பவர் என்று அத்தனை பேரும் உயர்வு காண்பார்கள்! அவர்களுடைய சுற்றமும் நலம் பெறும்! தொல் வினை நீங்கப் பெறுவர். பொலிவுடன் விளங்குவார்கள்!
கேதீஸ்வரர்-கெளரி அம்மை
சம்பந்தர் நற்றமிழால் பதிந்த இந்த பதிகம் பொய்யாகாமல், ஈழத்தில் பொலிவு தோன்றும் நாள் எந்நாளோ?

தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா என்பதால்....
இலங்கைக்கும் இறைவா போற்றி!

சிவோஹம்!
திருச்சிற்றம்பலம்!



இந்த ஆலயங்களுக்கு நான் நேரில் சென்றதில்லை. சென்றவர்கள் சிலாகித்துச் சொல்லக் கேட்டிருக்கேன். தேவாரம் படித்துள்ளேன். அவ்வளவே! அதனால் ரசித்துச் சொல்ல முடியுமா என்ற தயக்கம்.
உடனே பல விவரணங்களையும், படங்களையும் இந்தப் பதிவுக்காகத் தந்துதவினாள் என் தோழி! தமிழ்நாட்டு மருமகள் ஆகும் சதாயினி நடேசபெருமானுக்கு என் நன்றி! :)


ஓம் நமசிவாயா

நாம் எல்லோரும் உய்ய அம்மையும் அப்பனும் திருக்கயிலை மலையிலே யோகத்திலே அமர்ந்து புவனம் முழுவதையும் இயக்கிக்கொண்டிருக்கின்றனர். அவரது மந்திரமே திருவைந்தெழுத்தாகிய ஓம் நமசிவாய மந்திரம், இம்மந்திர உச்சாடனத்துடன் துவங்கும் இப்பாடல் அவனே எல்லாம் ஆனவர் என்பதை சுட்டிக் காட்டுகின்றது.

மூன்று காலங்கள் அவரது முக்கண்கள்.

நான்கு வேதங்களும் அவரது வழி

ஐந்து பூதங்களும் ஐயனின் முகங்கள்,

ஆறு காலங்கள் அவரது ஆடைகள்.

திருக்கயிலாய் மலையில் மலையரசன் பொற்பாவையை ஐயன் மணந்த போது எடுத்த எழு அடிகளும் ஏழு சுரங்கள்.

எட்டு திசைகளும் ஐயனின் பார்வை.

ஐயன் சொற்களே நவ ரசங்கள்.

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருந்ஜோதியான திருக்கயிலை நாதரை கணபதி, முருகன்முதல், முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பதெண்ணாயிரம் ரிஹிகளும், மற்றுமுள்ள எண்பத்து நாலு லெட்சம் ஜீவராசிகளும் அவரது திருவடிகளில் விழுந்து அவர் அருள் பாலிக்க வேண்டுகின்றது என்பதை அருமையாக சொல்லும் பாடல்.


பாடல் இடல் பெற்ற திரைப்படம் சலங்கை ஒலி , பாடலையும் கேட்டும், சைலஜாவின் நடனத்தையும் பார்த்து மகிழுங்கள் அன்பர்களே.

No comments:

Post a Comment