September 15, 2011

அப்பர் தேவாரம்: கடவுளைத் தம்பதிகளாகத் தான் துதிக்கணுமா?

பல வீட்டு விசேடங்களில் தம்பதி சமேதரா வாங்க-ன்னு சொல்லுவாய்ங்க! ஏன்? சில-பல பூசைகளில் தம்பதிகளாக மட்டுமே செய்ய முடியும்! இல்லீன்னா, "sorry, you are disqualified"- தான்! ஏன்??
வீட்டுல தங்கமணி வெளியூர் போயிருக்காங்களா? அப்போ நான் மட்டும் தனியா இதைச் செய்யக் கூடாதா? அட, என்னை விட்டுவிட்டு இப்போ தம்பியும் அவன் மனைவியையும் மனையில் உட்காரச் சொல்றாங்களே! என்னாங்க இது அநியாயமா இருக்கு? :)

சென்ற பதிவில் சம்பந்தரின் முதல் பாட்டைப் பார்த்தோம். இன்று அப்பரின் (கிட்டத்தட்ட) இறுதிப் பாட்டை, அவர் உறுதிப் பாட்டைப் பார்ப்போம், வாங்க!

அப்பர் சுவாமிகள் தொண்டில் பழுத்த சைவர்!
வெறுமனே வாயால் மட்டுமே பாடிக் கொண்டு இருக்காமல், கைகளாலும் உழவாரத் தொண்டு செய்தவர்! திருநாவுக்கரசர், அப்பர், வாகீசர், தருமசேனர் (சமணர் தந்தது) போன்ற பல பெயர்கள் அவருக்கு!
தன்னுடைய இறுதிக் காலத்தில், திருக்கயிலாயத்தில் வீற்றிருக்கும் ஈசனைக் காண, ஆவல் வந்து விட்டது! கிளம்பி விட்டார் வடநாட்டுக்கு!
அவருக்கு முன்பே காரைக்கால் அம்மையார் பட்ட கஷ்டங்கள், பாவம் தெரியலையா என்ன?

சென்னையில் திருமயிலை, திருவான்மியூர், திருக்காளத்தி, திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்) எல்லாம் கடந்து ஒரேயடியாக, வடக்கே காசி வரை வந்து விட்டார்!
கூட வந்தவர்களால் முடியவில்லை! அப்பரின் மனமோ ஒடியவில்லை!
அனைவருக்கும் விடைகொடுத்து விட்டு, தான் மட்டும் தனியாகக் கயிலை யாத்திரைக்கு நடக்கத் தொடங்கி விட்டார்!

இந்தக் காலத்தில் கைலாஷ்-மானசரோவர் யாத்திரை-ன்னு பல பேர் செல்கிறார்கள்; அவர்களைக் கேட்டால் முதலில் சொல்லுவது, "எக்காரணம் கொண்டும் தனியாகச் செல்லாதீர்கள்" என்பது தான்! - இத்தனைக்கும் பேருந்து, ஹெலிகாப்டர், உணவு கட்டித் தர ஆட்கள், ராணுவம் என்று சகல வசதிகள் இருக்கும் போதே நிலைமை இப்படி! ஆனால் அந்தக் காலத்தில் அப்பரின் நிலையைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்!

பங்கயம் புரை தாள் பரட்டளவும், பசைத் தசை தேயவும்
கைகளும் மணி பந்து அசைந்துறவே, கரைந்து சிதைந்து அருகவும்,
மார்பமும் தசை நைந்து, சிந்தி வரிந்த என்பு முரிந்திடவும்,
உடம்பு அடங்கவும், ஊன் கெடவும்,
சேர்வரும் பழுவம் புரண்டு புரண்டு செல்லவும்....
என்று ஓடாய்த் தேய்ந்தார் நாவுக்கரசர்!


பாவம்! நால்வரில், நாவுக்கரசர் மட்டுமே உடலால் அதிகம் வருந்த வேண்டி இருந்தது! மற்ற மூவருக்கும் இப்படி இல்லை! இது குறித்து அடியேன் பல முறை யோசித்தது உண்டு!
வயிற்று வலி, அதன் பின், சுண்ணாம்புக் காளவாய், விஷம் இட்டது, ஆனை இடறியது, கடலில் போட்டது....பின்பு உழவாரப் பணி என்று ஆரம்பம் தொட்டே இவருக்கு மட்டும் இப்படி உடலால் பாடுபடுதல் ராசியானது போலும்!

கால்களால் நடக்க முடியாது, கைகளால் தவழ்ந்தார்!
அதுவும் முடியாது, தலையால், உடலால் ஊர்ந்தார்!
அதுவும் முடியாது, என்ன செய்வதென்றே தெரியவில்லை! கயிலை நாதனே முனிவனாய் அப்பரை ஆற்றுப்படுத்த வந்து விட்டான்!
"மானிடர்கள் உடலோடு திருக்கயிலாயம் சென்று ஈசனைக் காண்பது மிகவும் அரிது அப்பரே! உங்கள் தொண்டே போதும்! யாத்திரையைக் கைவிட்டு விடுங்கள்!" - நாவுக்கு அரசர்! இப்போது செவிக்கும் அரசர் ஆகி விட்டார் போலும்! செவி மடுத்தாரில்லை!

"அப்பரே, இப்படி ஒரு உறுதியா? கயிலை அடிவாரத்தில் வாழும் முனிவன் நான்! எனக்கே ஈசன் தரிசனம் அவ்வளவாகக் கிடைப்பதில்லை!"

"அப்பர் என்ற அடியேனின் பெயர், என் அப்பனை அல்லால், உமக்கு எப்படித் தெரியும்?"
வாக்கு ஈசரிடம் வகையாகச் சிக்கிக் கொண்டார் சிவபெருமான்! சிக்கெனப் பிடித்தேன் அல்லவா? சிக்கினான் சிவன்!

"அப்பரே, நான் திரிகால ஞானி! ஈசனே எம்மை உம்மிடம் அனுப்பி வைத்தார்! இதோ சூல-ரிஷப முத்திரை! இப்போதாவது நான் சொல்வதைக் கேட்பீர்களா?
இதோ, இந்தத் தூய ஏரியில் மூழ்குங்கள்! பஞ்ச நதி க்ஷேத்திரம் என்னும் திரு-ஐ-ஆற்றில் (திருவையாறு) எழுவீர்கள்! அது தட்சிண கைலாசம்! அங்கு இறைவனைத் திருச்சபை சூழக் காண்பீர்கள்!"
திருவையாற்றில், அப்பர் குளம்
அப்பர் மான சரோவரத்தில் மூழ்கினார்! ஊன உடற் புண்கள் எல்லாம் மறைந்தன! உடல் சிவ மங்களமாய் மின்னியது!
வட மலையில் மூழ்கியவர், தென் வயலில் எழுந்தார்!
காயங்கள் உடலில் ஆறின! கானங்கள் வாயில் ஊறின!


மாதர் பிறை கண்ணியானை மலையான் மகளொடும் பாடி
போதொடு நீர் சுமந்து ஏத்தி, புகுவார் அவர் பின் புகுவேன்!
யாதும் சுவடு படாமல், ஐயாறு அடைகின்ற போது
காதல் மடப் பிடியோடு, களிறு வருவன கண்டேன்!
கண்டேன் அவர் திருப்பாதம்!
கண்டறியாதன கண்டேன்!!

காந்தாரம் என்னும் அழகிய தமிழ்ப் பண்ணில் இந்தப் பாட்டு! அடியேன் குரலில் என்பதால் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க! :)
Gabcast! MadhaviPanthal #41


இதாங்க எளிமையான பொருள்:
தலையில் கங்கை, தலையில் பிறை, தலையில் கண்ணி என்னும் தலைமாலை!
இவனை இமவான் புதல்வியான பார்வதியோடு அடியேன் பாடினேன்!
கால் சுவடே படாமல் எப்படி இங்கு வந்தேன்? ஆகா, இது திருவையாறு என்னும் தலம் அல்லவா!
பூவும், நீரும் சுமந்து கொண்டு கோயிலுக்குச் செல்கிறார்கள் அடியார்கள்! அவர்கள் முன் புக, அடியேன் பின் புகுவேன்!

காதல் செய்யும் பிறவிகள் எல்லாம் இணை இணையாய், ஜோடி ஜோடியாய் வருகின்றனவே!
அதோ...இறுதியில்...பிடியும், களிறுமாய் (பெண் யானையும, ஆண் யானையுமாய்) அசைந்து அசைந்து...ஈஸ்வரியும், ஈசனும்!
கண்டாலும் அறிந்து கொள்ள முடியாத ஒன்றையும் இதோ காண்கிறேனே!
கண்டேன் அவர் திருப்பாதம்!!!
மும்மூர்த்திகளும் சூழ்ந்திருக்க, தேவரும், மூவரும், ஏவரும் துதிக்க,
நடன மாதர் நடங்கள் புரிய, கங்கை முதலான ஆறுகள் வணங்க,
நந்தி தேவர் திருக்கடைக்காப்பில் நிற்க,
மின்னிடும் வெள்ளிப் பனி மலையாய் அம்மையும் அப்பனும்...அப்பருக்குத் திருக்கைலாயம் காட்சி ஆகிறது!


பாடலைக் கொஞ்சம் பிரிச்சி மேயலாமா? :)
மாதர், பிறை, கண்ணி = மூன்றையும் தலையில் காண்கிறார் முதலில்!
திருப்பாதம் காண்கிறார் முடிவில்! கேசாதி பாத சேவை என்பார்கள்! முடி-அடி சேவை!

மாதர் பிறை கண்ணியானை மலையான் மகளொடும் பாடி =
கண்ணி என்பது ஒரு விதமான மாலை தொடுப்பு! ஒத்தை ஒத்தையாத் தான் கட்டுவாங்க! வீட்டில் அம்மாவோ இல்லை மனைவியோ தொடுக்கும் போது பார்க்கலாம்!
(இப்பல்லாம் யாராச்சும் பூ தொடுக்கறாங்களாப்பா? இல்லை flower gripping techniques-ன்னு அதுக்கும் online tutoring இருக்கா? :))

பொதுவாகப், பூவை ரெண்டு ரெண்டா தான் எடுத்துத் தொடுப்பாய்ங்க! ஒரு காம்பு, இன்னொரு காம்பின் மேல் படும்! வாழை நார் இரண்டையும் கட்ட, பூக்கள் வெளியில் இரு பக்கமும் துருத்திக் கிட்டு நிக்கும்! பூ இரு பக்கமும் இருந்தால் தான் மாலைக்கு அழகு!

ஆனால் கண்ணியில் அப்படி இல்லை! ஒரு பக்கம் மட்டும் காம்பு சேரும்படி கட்டுவாங்க! அதனால் பொதுவா கண்ணியைத் தலைக்கு மட்டுமே சூடுவார்கள்! பராபரக்-கண்ணி, கண்ணி-நுண்-சிறுத்தாம்பு எல்லாம் கண்ணி என்று வரும் தமிழ் நூல்கள்!

கண்ணி, மாலை, தொங்கல், தொடையல் எல்லாம் விதம் விதமான மாலை அமைப்புகள்!
இன்னிக்கி சூடிக் கொடுத்தாள் ஆண்டாளின் பிறந்த நாள்! திரு-ஆடிப் பூரம்! கோதையின் நாள் அதுவுமா, மாலை விளக்கம் தானா வந்திரிச்சி பாருங்க! பூமாலை சூடிக் கொடுத்தாளைச் சொல்லு! :)


போதொடு நீர் சுமந்து ஏத்தி, புகுவார் அவர் பின் புகுவேன் =
போது=அரும்பு மலர்! முழுக்க விரியாத மலர்! அதாச்சும் வண்டின் எச்சில் படும் முன்னரே மலரைப் பறிப்பது தான் பூசைக்கு வழக்கம்! அரும்பாகவே மாலை தொடுத்து விடுவார்கள்! சார்த்தும் போது, அது அழகாய் மலர்ந்து இருக்கும்!

ஈசனுக்கு அரும்பும், அபிடேக நீரும் கொண்டு செல்கின்றார்கள் அடியவர்கள்! அடியவர் முன் புக, அடியேன் பின் புகுவேன்! இது தான் பக்திக்கு அடிப்படை! தன்னையும், தன் டாம்பீகத்தையும் முன்னிறுத்திப் புகுவது இறைவனுக்குப் பிடிக்காத ஒன்று! ஏன்? இங்கே!

யாதும் சுவடு படாமல், ஐயாறு அடைகின்ற போது =
வட கயிலை அடிவாரத்தில் இருந்து, கால் சுவடே படாமல், இதோ திருவையாற்றுக்கு வந்தாகி விட்டது!
திருவையாறு மிகப் பழமையான சிவத்தலம்!
இறைவன்: பஞ்ச-நதீஸ்வரர் = ஐயாறப்பர்!
இறைவி: தர்ம சம்வர்த்தினி = அறம் வளர்த்த நாயகி!


திருவையாறு மொத்தம் ஐந்து ஆறுகள் பாயும் தலம்! = காவிரி, குடமுருட்டி, வடவாறு, வெண்ணாறு, வெட்டாறு!
சத்குரு தியாகராஜ சுவாமிகளின் இசை ஆறும் இப்போது பாய்கிறது அல்லவா? ஐயாறு, ஆறாறு ஆகி விட்டது! :)


திருவையாறு, அறம் வளர்த்த நாயகி-ஐயாறப்பர் ஆலயம்
காதல் மடப் பிடியோடு, களிறு வருவன கண்டேன்!=
களிறு=ஆண் யானை=களித்திருப்பதால் களிறு!
பிடி=பெண் யானை=களிறைத் தன் பிடியில் பிடித்து வைத்திருப்பதால் பிடி! :)
இப்படி இறைவனே காதல் மயமாகத் தான் காட்சி அளிக்கின்றான்! சிவ-சக்தி தத்துவமாய் நிற்பதால் தான் சிருஷ்டி-சங்கார ரகசியங்கள்!

சக்தி இல்லையேல் சிவம் என்னும் பதமே இல்லை! அன்னை இல்லையேல் அப்பன் என்னும் பதமே இல்லை!
மான், மயில், கிளி, அன்னம், மனிதர், என்று ஜோடி ஜோடியாக வருவதைப் பார்க்கிறார் அப்பர்! இறுதியில் பிடியோடு, களிறுமாய், அம்மையும் அப்பனும் ஜோடியாகவே வருகிறார்கள்!

பதிவின் முதல் பத்தியில் கேட்ட கேள்விக்கு, //சில-பல பூசைகளில் தம்பதிகளாக மட்டுமே செய்ய முடியும்!// இப்போது விடை சொல்லப்போவதில்லை! அறிந்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!:)
கண்டேன் அவர் திருப்பாதம்! = முக்தி நிலையில் இருந்த அப்பருக்கு ஒன்றே ஒன்று மட்டும் தான் தெரியுதாம்? மோட்சத்தைத் தருவது எது? ஒன்றே ஒன்று தானே! எம்பெருமானின் திருவடி! = கண்டேன் அவர் திருப்பாதம்!
கண்டறியாதன கண்டேன்!! = கண்டாலும் அறிய முடியாதது எது?
அதான் கண்டாச்சே! கண்டால், அறிந்த மாதிரி தானே-ன்னு கேட்டா, இல்லை! கண்டாலும் அறிவுக்கு எட்டாது! அன்புக்கு ஒட்டும்!
கண்டு, அறியாதன "கண்டேன்"-ன்னு தான் சொல்லுறார்! கண்டு, அறியாதன "அறிந்தேன்"-ன்னு சொல்லலை பாருங்க!

திருவடிகள் அறிவுக்கு எட்டுமா? ...அன்புக்கு ஒட்டுமா?
கண்டு அறியாதன "கண்டேன்"! அவ்வளவு தான்! நாடினேன்! நாடி நான், "கண்டேன்", "கண்டு" கொண்டேன்! சிவ சிவ! திருச்சிற்றம்பலம்!!

(அடுத்த திங்கட்கிழமை, சுந்தர நண்பனின் தேவாரத்தைப் பார்ப்போமா?....)

No comments:

Post a Comment