September 17, 2011




இயற்கை அன்னையின் அழகை ஒட்டு மொத்த குத்தகைக்கு எடுத்து கொண்ட மலை அழகிகளில் கொல்லிமலை சிறப்பு பெற்றது. தன் அழகை 17 மைல் தூரத்திற்கு விரித்திருக்கும் இந்த மலை ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையும், வரலாற்று சிறப்பும் உடையது.
கொல்லிமலையின் புகழுக்கு வசந்த முலாம் பூசியது “கொல்லிப்பாவை’ தான். அசுரர்கள் வருகையை தடுத்து நிறுத்த மாயன் என்ற தெய்வ சிற்பி, பார்ப்போரை தன் அழகால் காமம் உண்டாக செய்து, மயக்கி கொல்லும் தன்மை உடைய பெண் படிமத்தை உருவாக்கியதால் இதற்கு “கொல்லிப்பாவை’ என்ற பெயர் அமைந்தது.
இந்த கொல்லிமலை சேர வேந்தர்களால் ஆளப்பெற்ற பெருமையும், பழமையும் கொண்டதாகும். சேர மன்னர்களில் வள்ளலாக விளங்கியவன் வல்வில் ஓரி. ஒரே அம்பில் காட்டு யானை, புலி, புள்ளிமான், காட்டுப்பன்றி, உடும்பு போன்றவற்றை வீழ்த்திய வலிமை பெற்ற இவன், ஆட்சிபுரிந்த கொல்லிமலையின் ஒரு பகுதிக்கு அறப்பள்ளி என்று பெயர்.
இந்த அறப்பள்ளியில் ஈஸ்வரர் எழுந்தருளியதால் அங்கு அறப்பளீஸ்வரர் கோயில் தோன்றியது. இதனால் இங்கு வல்வில் ஓரிக்கு சிலை எழுப்பப்பட்டுள்ளது.

“கொல்லி குளிர் அறைப்பள்ளி’ என்றும், “கள்ளால் கமழ் கொல்லி அறைப்பள்ளி’ என்றும் திருநாவுக்கரசர் இந்த கோயிலை தனது பாடல்களில் குறிப்பிட்டுள்ளார். திருஞான சம்பந்தர் தனது திருத்தல கோவையில் அறைப்பள்ளியை போற்றியுள்ளார்.
கோயிலின் அருகில் பஞ்சநதியில் மீன்களுக்கு பக்தர்கள் உணவு பொருட்களை வழங்கியும், மீனை பிடித்து மூக்கு குத்தியும் மகிழ்வது வழக்கம். ஒரு சமயம், பக்தர் ஒருவர் அறியாமையால் மீனைப்பிடித்து அறுத்து சமைக்க ஆரம்பித்தார். மீன் குழம்பு கொதிக்க ஆரம்பித்தது. அப்போது கொதிக்கும் குழம்பில் இருந்து மீன்கள் தாவிக்குதித்து ஓட ஆரம்பித்தன. எனவே, இந்த கோயில் ஈஸ்வரனுக்கு, “”அறுத்த மீனை பொருத்தி உயிர்ப்பித்த அறப்பளீஸ்வர்” என்ற பெயர் வழங்கலானது.
இத்தனை சிறப்பு மிக்க அறப்பளீஸ்வரர் கோயில் கொல்லிமலையின் வளப்பூர் நாடு என்னும் பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் அறப்பளீஸ்வரர், தாயம்மை எனும் அறம் வளர்த்த நாயகியுடன் எழுந்தருளியுள்ளார். இவர்களுடன் வினை தீர்க்கும் விநாயகரும், முருகனும் சன்னதி கொண்டுள்ளனர். ஒரே இடத்தில் நின்று ஒரே நேரத்தில் அறப்பளீஸ்வரர், தாயம்மை, விநாயகர், முருகன் ஆகிய நான்கு தெய்வங்களையும் ஒரு சேர தரிசித்து மகிழும் அரிய அமைப்பு இக்கோயிலின் தனிச்சிறப்பாகும்.
தஞ்சை பெரிய கோயிலை தந்த, ராஜராஜசோழனின் பெரிய பாட்டியும், சிவஞான கண்டராதித்த சோழ தேவரின் மனைவியுமாகிய மாதேவி, இந்த கோயிலுக்கு வந்து தரிசித்தும், விலையுயர்ந்த அணிகலன்களை அணிவித்தும் சென்றுள்ளது போன்ற ஏராளமான கல்வெட்டுக்கள் கோயிலில் உள்ளன.
இந்த கோயிலுக்கு சென்று வணங்கி, அருவியில் குளித்து உடலும் உள்ளமும் சிலிர்க்க இறைவனின் அருளையும், இயற்கையின் வனப்பையும் ஒருங்கே அனுபவிக்கலாம்.
கோயிலின் வடபுறத்தில் வற்றாத ஐந்து ஜீவநதிகள் ஒன்றாக கலந்து வந்து 150 அடி உயரத்தில் இருந்து பூத்தூவலாய் விழுகின்றன. கொல்லிமலையின் ஆயிரமாயிரம் அபூர்வ மருத்துவ குணங்களை எல்லாம் அள்ளி வந்து கொட்டும் நீர் அருவியாகி பின் ஆறாக ஓடுகிறது. இந்த ஆற்றில் ஏராளமான மீன்கள் உள்ளன.

அறப்பளீஸ்வரர் மீன் வடிவில் இருப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். இதனால் கோயிலுக்கு செல்வதற்கு முன்னரே பக்தர்கள் ஆற்றில் உள்ள மீன்களுக்கு சாதம், பலவகை தின்பண்டங்களை அளித்து வழிபாடு செய்கின்றனர். அதன்பின்பே அவர்கள் கோயிலுக்கு சென்று வணங்குகின்றனர்.
மழையில்லாத காலங்களிலும் ஆற்றில் தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும். ஆடிமாதம் 18ம் பெருக்கு இந்த கோயிலின் விசேஷமாகும். ஆண்டு தோறும் ஆடி 17, 18, 19 ஆகிய மூன்று நாட்களுக்கு இந்த விழா சிறப்பாக நடந்து வருகிறது.
பக்தர்களோடு பழங்குடியின மக்களும், தங்களின் பாரம்பரிய சிறப்புடன் விழாவை கொண்டாடுகின்றனர். அவர்கள் ஆற்றில் உள்ள பெரிய மீன்களை பிடித்து அதற்கு மூக்குத்தி அணிவித்து வழிபட்டு பின்னர் அந்த மீனை மீண்டும் ஆற்றில் விடுகின்றனர். இந்த புனித தன்மை பெற்ற ஆறு, கொல்லிமலையில் இருந்து இறங்கி, துறையூர், முசிறி வழியாக சென்று காவிரியில் ஐக்கியமாகிறது.

No comments:

Post a Comment