குற்றாலநாதர் திருக்கோயில்
கயிலாயத்தில் சிவன் பார்வதியை மணந்தபோது, உலகை சமப்படுத்த அகத்தியரை தென்திசைக்கு அனுப்பினார். குற்றாலம் வந்த அகத்தியர் சிவலிங்க பூஜை செய்ய விரும்பினார். ஓரிடத்தில் பெருமாள் கோயில் இருந்ததைக் கண்டார். மூலஸ்தானத்தில் இருந்த பெருமாளின் தலை மீது கை வைத்து, ‘குறு குறு குற்றாலநாதா!’ என்றார். பெருமாள் குறுகி, சிவலிங்கமாக மாறினார். இவரே இங்கு, ‘குற்றாலநாதர்’ என்ற பெயரில் அருளுகிறார். ‘ஹரியும், சிவனும் ஒன்று!’ என்பதை உணர்த்தும்விதமான இரு மூர்த்திகளும் அகத்தியர் மூலமாக இவ்வாறு ஒரு திருவிளையாடலை இத்தலத்தில் நிகழ்த்தினார்.
குற்றாலநாதர் கோயிலுக்கு அருகில் நடராஜர் நாட்டியமாடும் பஞ்சசபைகளில் ஒன்றான சித்திரசபை இருக்கிறது. ஒரு கோயிலின் அமைப்பிலுள்ள இந்த இடம் தாமிரத் தகடால் வேயப்பட்டுள்ளது. இந்த சபையில் நடராஜர், ஓவிய வடிவில் திரிபுரதாண்டவ மூர்த்தியாக காட்சி தருகிறார். பெருமாளை சிவனாக மாற்றிய வரலாறு, மதுரையில் சிவன் நிகழ்த்திய திருவிளையாடல்கள், தட்சிணாமூர்த்தியின் பல்வேறு வடிவங்கள் என பல சித்திரங்கள் மூலிகைளால் வரையப்பட்டுள்ளது.
மார்கழி திருவாதிரையின்போதும், சித்திரை பிரம்மோற்ஸவத்தின் போதும் நடராஜர் சன்னதியில் விசேஷ தீபாராதனையுடன் பூஜை நடக்கும். இவ்வேளையில் நடராஜரின் நடனத்தைப் போலவே தீப தட்டை நளினமாக அசைத்து சுவாமிக்கு ஆராதனை செய்வர். இதை, ‘தாண்டவ தீபாராதனை’ என்கின்றனர். சிவன், ஜோதி ரூபமானவர் என்பதை உணர்த்தும்விதமாக இவ்வாறு செய்யப்படுகிறது.
பிரகாரத்தில் மகாவிஷ்ணு, ‘நன்னகரப் பெருமாள்’ என்ற பெயரில் அருளுகிறார். தன்னை வேண்டும் பக்தர்களுக்கு நன்மைகள் தருபவர் என்பதால் இவருக்கு இப்பெயர். அருகில் கிருஷ்ணரும் இருக்கிறார். ரோகினி நட்சத்திர நாட்கள், புரட்டாசி சனிக்கிழமைகளில் இவருக்கு விசேஷ பூஜை நடக்கிறது. முற்காலத்தில் சிவன் சன்னதியில் இருந்த பெருமாளே, இங்கு எழுந்தருளியிருப்பதாகச் சொல்கிறார்கள்.
பல வித உணவு வகைகளை சுவாமிகளுக்கு நைவேத்யம் படைப்பதை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், இங்கு மூலவருக்கு கஷாய நைவேத்யம் செய்யப்படுகிறது. தினமும் அர்த்தஜாம பூஜையின் போது சிவனுக்கு, கடுக்காய் கஷாயம் நைவேத்யம் படைக்கின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் கஷாயத்தை ‘குடினி’ என்பர். எனவே இதற்கு ‘குடினி நைவேத்யம்’ என்று பெயர் சூட்டியுள்ளனர். அருவி விழும் இடத்தில் இருப்பதால் சிவனுக்கு ஜுரம், குளிர் காய்ச்சல் உண்டாகாமல் இருக்க சிவன் மீதான அன்பின் காரணமாக இவ்வாறு செய்யப்படுகிறது. சுக்கு, மிளகு, கடுக்காய் உள்ளிட்ட மூலிகைகள் சேர்த்து ‘குடினி’ தயாரிக்கப்படுகிறது.
பிரகாரத்திலுள்ள முருகன், கையில் வில்லேந்தியபடி காட்சி தருகிறார். இவருடன் வள்ளி, தெய்வானை இருவரும் ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் பார்த்தபடி இருக்கின்றனர். ஆடிஅமாவாசையன்று கோயில் முழுவதும் 1008 தீபம் ஏற்றும், ‘பத்ர தீப’ விழா இங்கு வெகு விமரிசையாக நடக்கும்.
சிவன், மணக்கோலநாதர் என்று பெயரில், அம்பிகையை மணம் முடித்த கோலத்தில் பிரகாரத்தில் காட்சி தருகிறார். அருகில் திருமணத்தை நடத்தி வைத்து பிரம்மா, தாரை வார்க்கும் கோலத்தில் விஷ்ணு, மகாலட்சுமி, திருமணக்காட்சி பெற்ற அகத்தியர் மற்றும் பிருங்கி உள்ளனர். திருமணத்தடை உள்ளவர்கள் இவர்களுக்கு மஞ்சள், பன்னீர் அபிஷேகம் செய்து பாயசம் நைவேத்யம் செய்து வழிபடுகிறார்கள்.
சக்தி பீடங்கள் 64ல் இது, ‘பராசக்தி பீடம்’ ஆகும். அகத்தியர் திருமால் தலத்தை சிவத்தலமாக மாற்றியபோது சுவாமிக்கு வலப்புறம் இருந்த ஸ்ரீதேவியை, குழல்வாய்மொழி நாயகியாகவும், பூதேவியை, பராசக்தியாகவும் மாற்றினார். குரல் வளம் சரியாக இல்லாதவர்கள், பிறப்பிலேயே பேசாதிருப்பவர்கள் அம்பிகை, குழல்வாய்மொழி நாயகிக்கு சர்க்கரைப் பொங்கல், வடை படைத்து வழிபடுகிறார்கள். ஐப்பசி பூசத்தன்று நடக்கும் திருக்கல்யாண சிவன், அம்பாள் இருவரும் அகத்தியர் சன்னதி அருகில் எழுந்தருளி திருமணக்காட்சி கொடுக்கும் வைபவம் நடக்கிறது.
லிங்க வடிவமான குற்றாலநாதர் மீது, அகத்தியரின் விரல் பதிந்த தடம் இருக்கிறது. அது சிவனுக்கு வலிக்குமே என்ற ரீதியில், மனம் நெகிழ்ந்த பக்தர்கள் அன்பின் காரணமாக லிங்கத்தின் தலையில், குற்றால மலையில் கிடைத்த மூலிகைகளால் ஆன தைலம் செய்து தேய்த்தனர். இவ்வழக்கம் இப்போது இருக்கிறது. தினமும் காலை 9.30 மணி பூஜையில், லிங்கத்தின் உச்சியில் தைலம் தடவுகின்றனர். பசும்பால், இளநீர், சந்தனம் மற்றும் 42 விதமான மூலிகைகள் சேர்த்து 90 நாட்கள் தொடர்ச்சியாக வேக வைப்பார்கள். இந்த மருந்து கலவையில், செக்கில் ஆட்டிய சுத்தமான நல்லெண்ணெய் சேர்த்து தைலம் தயாரிக்கின்றனர். இதை பக்தர்களுக்குபிரசாதமாகவும் தருகின்றனர். தலைவலி உள்ளவர்கள் இத்தைலத்தை தடவுகிறார்கள்.
இக்கோயிலில் பராசக்தி ஸ்ரீசக்ர அமைப்பிலுள்ள பீட வடிவில் காட்சி தருகிறாள். பூமாதேவியாக இருந்து மாறிய அம்பிகை என்பதால் இதற்கு ‘தரணி பீடம்’ (தரணி - பூமி) என்று பெயர். இவள் உக்கிரமானவன் என்பதால், இவளுக்கு எதிரே சிவலிங்க பிரதிஷ்டை செய்துள்ளனர். இவர், ‘காமகோடீஸ்வரர்’ என்றழைக்கப்படுகிறார். ஒன்பது அம்பிகையரின் அம்சமாக இந்த அம்பிகை இருப்பதால், பவுர்ணமியன்று இரவில் இப்பீடத்திற்கு ‘நவசக்தி’ பூசை செய்கின்றனர் அப்போது, பால், வடை படைக்கப்படும். பவுர்ணமி, நவராத்திரி நாட்களில் இந்த பீடத்திற்கு, பன்னீர் கலந்த குங்கும அர்ச்சனை செய்கின்றனர்.