‘திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என்பது பழமொழி. மாணிக்கவாசகரின் மணிமொழிகள் திருவாசகத்தின் தேன் துளிகள். விண்ணோரும், மண்ணோரும், தென்னாட்டவரும், இந்நாட்டவரும், வெளிநாட்டவரும் எப்படி இவ்வெளிய நடையில், அழகு தமிழில் திருவாசகத்தைப் படைத்தார் என எண்ணி எண்ணி மனமுருகி, வாய்பிளந்த வண்ணம் இருக்கின்றனர்.
பேரருட்பெரியவர்
சைவத்திருமுறைகள் பன்னிரண்டு. அதில் திருவாசகம் எட்டாம் திருமுறையாகும். சிவனடியார்களில் நாயன்மார்கள் 63 பேர். சமயக்குரவர் நால்வர்-அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருநாவுக்கரசர் ஆவர். திருவாசகம் செந்தமிழுக்கு அன்பு மறையாகவும், உயிர்ப்பிணிக்கு மருந்தாகவும் உள்ளது. அப்பர் சரியைக்கும், சம்பந்தர் கிரியைக்கும், சுந்தரர் யோகத்திற்கும், மாணிக்கவாசகர் ஞானத்திற்கும் உரியவராக எண்ணப்படுவர்.
‘தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’
மாணிக்கவாசகர் மதுரைக்காரர். பெயர் வாதவூரர். மாணிக்கவாசகர் ஏறத்தாழ 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்பர். இவர் ஐப்பசி விசாகத்தில் பிறந்தாரென கீழ்க்கண்ட செய்யுள் மூலம் தெரியவருகிறது.
சித்திரையில் ஆதிரையில் திருஞானசம்பந்தர்
பக்திமிகும் அப்பர்பிரான் பங்குனி ரோகிணி
வித்துரிய ஐப்பசி விசாகத்தில் வாசகனார்
உத்திரத்தில் ஆவணியில் உதித்தார் நம்சுந்தரரே.
ஆதி சங்கரரைப் போல 32 ஆண்டுகளே வாழ்ந்தார் மாணிக்கவாசகர்.
அப்பருக்கெண் பத்தொன் றருள்வாத வூரர்க்குச்
செப்பிய நாலெட்டிற் றெய்வீகம்-இப்புவியிற்
சுந்தரர்க்கு மூவாறு தொன்ஞான சம்பந்தர்க்
கந்தம் பதினா றறி. – (மாணிக்கவாசகர் அகவல்)
அப்பருக்கு 81, வாதவூரர்க்கு 32, சுந்தரருக்கு 18, ஞான சம்பந்தருக்கு 16 வயதில் முக்தி.
வைகைகரையில் திருவாதவூரில் அமாத்தியர் எனும் அந்தணர் மரபில் சம்புபாதசிருதர், சிவஞானவதிக்குப் புதல்வராகத் தோன்றியவர். மன்னன் அரிமர்த்தன பாண்டியனின் முதல் அமைச்சர். தென்னவன் பிரமராயர் என்ற பட்டம் பெற்றவர்.
சோழநாட்டுக் கடற்கரையில் குதிரைகள் வந்துள்ள செய்தி கேட்ட மன்னன், வாதவூரரிடம் பணம் கொடுத்து வாங்கி வரச்சொன்னான். வாதவூரர் வழியில் திருப்பெருந்துறையில் தங்கினார். சோலை ஒன்றில் சிவாகமங்கள், வேதங்கள் ஒலிப்பதைக் கேட்ட வாதவூரர் அங்கே சென்று, சிவனே குருநாதர் தோற்றத்தில் மரத்தடியில் வீற்றிருக்க, கீழே அடியார்கள் கூடியிருக்கும் காட்சியைக் கண்டு, பசுவைத் தேடிய கன்று போல் விரைந்து சென்று காலடியில் வீழ்ந்து வணங்கி, அருள் தர வேண்டினார்.
”அறை கூவி ஆட்கொண்டருளி
மறையோர் கோலம் காட்டி அருளலும்
உளையா அன்பென்பு உருக ஓலமிட்டு” என்பார் மாணிக்கவாசகர்.
விண்ணவர் தேவர் மற்றவரிருக்க, குதிரை வாங்க வந்த வாதவூரரைத் திருப்பெருந்துறையில் சிவபெருமான் குருவாய்த் தோன்றி குருந்த மரத்தினடியில் அமர்ந்து தடுத்தாட்கொண்டு, தன் நீள் கழல்களைக் காட்டி ஸ்பர்ச, நயன, மந்திர தீட்சைகளை அளித்து மறைந்தார். வாதவூரரரை இறைவன் ‘மாணிக்கவாசக’ என அன்புடன் அழைத்தார்.
ஆண்டவனால் ஆட்கொள்ளப்பட்ட, வாதவூரர், பாடிய முதல் அடி
“நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க” .
அவ்விடத்தில், மதுரை மன்னன் குதிரை வாங்கக் கொடுத்த பணத்தில் இறைவனுக்கு ஆலயத்தைக் கட்டினார். பணத்தைத் திருப்பணிகளுக்கும், சிவனடியார்களுக்கும், மனத்தை சிவ வழிபாட்டிலும் கொடுத்த செய்தி கேட்ட மன்னன், மாணிக்கவாசகரைத் திரும்பி வருமாறு பணித்தான். மாணிக்கவாசகர் சிவன் கொடுத்த மதிப்பில்லா மாணிக்கமொன்றை அரசனிடம் அளித்து, “ஆவணித் திங்கள் மூல நாளில் குதிரைகள் வரும்” என்றார்.
பின்னர் அது பொய்யென்றறிந்த மன்னன், அவரைச் சிறையிலடைத்தான். சிவபெருமான் குதிரை வணிகனாகச் சென்று, நரிகளைப் பரிகளாக்கி அரசனிடம் கொடுத்தார். அவை, இரவில் மீண்டும் நரிகளாகி, மற்ற குதிரைகளையும் கடித்தன. இதனால் கோபம் கொண்ட மன்னன், மாணிக்கவாசகரை சுடுமணலில் கல்லேற்றி நிறுத்தினான்.
ஆண்டவன் வாங்கிய பிரம்படி
இதையறிந்த இறைவன் வைகையைப் பெருக்கி, மதுரையை வெள்ளத்தில் அமிழ்த்தி அச்சுறுத்த, அரசன் கரையை அடைக்க மக்களை ஏவினான். சிவபெருமான் கூலியாளாக, வந்தி எனும் பிட்டு வாணிச்சிக்கு உதவ வந்து, பிட்டை வாங்கிக் கொண்டு, கரையை அடைக்காமல், உறங்கியதால் அரசனிடம் பிரம்படி பட்டார். அடித்த அடி, அண்ட சராசரங்கள் மற்றும் அனைத்து உயிர்களின் மீதும் பட்டது. அடியாருக்காக அடி வாங்கிய இறைவன் வெள்ளத்தைக் குறைத்து மாணிக்கவாசகரின் பெருமையை உணர்த்தி, மறைந்தருளினார்.
உண்மையை உணர்ந்த மன்னனிடம் விடைபெற்ற அடிகள், மதுரையிலிருந்து புறப்பட்டு, பல திருத்தலங்களைத் தரிசித்து, மனம் கசிய திருப்பதிகங்கள் பல பாடினார். திருவாசகத்தில் 51 பகுதிகள் உள்ளன. இவற்றுள் 20 பகுதிகள், திருப்பெருந்துறையில் பாடப் பட்டன. இலங்கையிலிருந்து வந்த புத்தர்களை வாதில் வென்று, இலங்கை மன்னனின் ஊமை மகளைப் பேசச் செய்தார். அவள் வாயிலாகப் புத்தன் கேள்விகளுக்குப் பதில் சொல்லவைத்தார்.
ஆன்மிக வரலாற்றுச் சிறப்புகள்
* இறைவன் மனிதனுக்குச் சொன்னது ‘பகவத்கீதை’ – பகவான் கிருஷ்ணன் அருச்சுனனுக்கு அருளியது.
* மனிதன் இறைவனுக்குச் சொன்னது ’திருவாசகம்’ – மாணிக்கவாசகரிடம் சிவபெருமான் வேண்டி எழுதியது.
* மனிதன் மனிதனுக்குச் சொன்னது – திருக்குறள் – திருவள்ளுவர் படைத்தது.
இத்தருணத்தில் வேழமுகத்தோன் விநாயகப்பெருமான், தன்னுடைய தந்தத்தை உடைத்து வேத வியாசருக்காக, மகாபாரதத்தை எழுதியதையும் நினைவு கொள்க.
கைச்சாத்து
திருவாசகப் பாடல்கள் அதுவரை ஏட்டில் எழுதப்படாமலிருந்தன. திருவாசகத்தின் தேனினுமினிய தீந்தமிப் பாக்களைக் கேட்டு சொக்கிய மதுரைக் கடவுள் சொக்கநாதர், இப்புண்ணிய பூமியில் அந்தணனாய் உருக்கொண்டு மணிவாசகரைக்கண்டு, பாடல்களை எழுதிக்கொள்ள வேண்டினார். மாணிக்கவாசகர் இசைந்தருள, அட்சர லட்சம் பெறும் ஒவ்வொரு பாக்களையும் தம் அருள்புரியும் திருக்கரங்களால் ஓலைச்சுவடியில் எழுதினார். பாவை பாடிய வாயால் கோவை பாடுமாறு மீண்டும் இறைவன் வேண்ட, அவரும் பாடினார். இறைவன் விடைபெற்று, ’மாணிக்கவாசகர் சொற்படி அழகிய சிற்றம்பலவன் எழுதியது’ எனக் கையொப்பமிட்டு, ஓலைச்சுவடிகளைத் தில்லைப் பொன்னம்பலத்தின் கருவறையில் பஞ்சாட்சரப்படியில் வைத்தார். மறுநாள் அடியார்கள் ஏட்டைக்கண்டு மாணிக்கவாசகரை அழைத்து பொருள் விளக்க வேண்ட, ”அம்பலவாணரே இதன் பொருள்” என்றருளினார். இறைவன் அருட்பேரொளியாகத் தோன்றி, அத்தாட்சி அளித்து மாணிக்கவாசகரைத் தம்மோடு சோதியில் இணைத்துக்கொண்டார். அன்று ஆனி மாமக நன்னாள்.
எவ்வுலகிலும், எக்காலத்திலும், எவருக்கும் இறைவன், தில்லைக்கூத்தன், இதுவரை கைச்சாத்து அளித்ததில்லை. சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நிற்கும் திருவாசகத்தைக் கறந்த பால் கன்னலொடு, நெய் கலந்தாற்போல நமக்களித்த மாணிக்கவாசகர் ஒருவர் மட்டுமே, தாயிற்சிறந்த இறைவனால் கைச்சாத்துடன் நற்சான்றிதழ் பெற்ற மகாத்மா.
திருப்பெருந்துறை எனும் ஆவுடையார் கோவில்
இறைவன் அமர்ந்த இடம் குருந்த மரத்தடி. குருந்த மரத்தின் இலைகள் ஒவ்வொரு கொத்திலும் மூன்று வகை இலைகளுடன் காணப்படும். அவ்விடமே, கோவிலாகியது. இறைவன் திரு உருவச்சிலைகள் இங்கு இல்லையே தவிர, இக்கோவில், சிற்பக்கலையின் உன்னத சிகரமாக இருக்கின்றது. பூத கணங்களே இக்கோவிலைக் கட்டினர் என்பர். சிற்பிகள் தங்களது பணி ஒப்பந்தங்களில் “தாரமங்கலம் தூணும், திருவலஞ்சுழி பலகணியும், ஆவுடையார் கோவில் கொடுங்கையும் நீங்கலாக” என்று எழுதுவர் எனக் கேள்வி. கோவில் கணக்குகளில், ஆளுடையார் கோவில் என்று காணப்படுகின்றது. இலக்கியங்களில், அநாதி மூர்த்தித் தலம், சதுர்வேதபுரம், யோகபீடபுரம் என்றும், கல்வெட்டுகளில் சதுர்வேதமங்கலம் என்றும், திருவாசகத்தில், சிவபுரம் என்றும் வழங்கப் பெற்றுள்ளது. தற்போது கோவிலின் பெயராலேயே, ஊரும் அழைக்கப்பட்டுவருகிறது.
கோவிலின் சிறப்பு
தலம்: திருப்பெருந்துறை
மூர்த்திகள்: ஆத்மநாதர், யோகாம்பிகை
தீர்த்தம்: ஒன்பது- சிவ தீர்த்தம், அக்கினி தீர்த்தம், தேவ தீர்த்தம், முனிவர் தீர்த்தம், அசுர தீர்த்தம், வாயு தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம், நாராயண தீர்த்தம், பிரம தீர்த்தம்
புனித மரம்: குருந்த மரம்
கோவிலின் மூலவர் ஆத்மநாதர் ஸ்வாமி ஆவார். சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது. சிவபெருமானுக்கு ஆவுடையாரும் (சக்தி பீடப்பகுதி) எதிரில் ஒரு மேடையும் (அமுத மண்டபம்) மட்டுமே உள்ளன. ஆவுடையாருக்குப் பின் சுவரில் 27 நட்சத்திரத் தீபங்களும், அதற்கு மேல் சூரிய, சந்திர, அக்கினி தீபங்களும் ஒளிர்கின்றன. அம்மன் யோகாம்பிகை சந்நிதியில் யோக பீடமும், அதன் மேல் அம்மன் பாதங்களும் மட்டும் உள்ளன. அதுவும் பலகணி வழியே மனத்தை ஒருமுகப்படுத்தினால் மட்டும் தரிசிக்க முடியும். மாணிக்கவாசகருக்கு தனிச் சந்நிதி இருக்கிறது. கோவிலில் கொடிமரம், நந்திக்கடவுள், சண்டேசர் ஆலயம் கிடையாது. இங்கே நடராஜர், விநாயகர், முருகர் தவிர பரிவார மூர்த்திகள் இல்லை. தீபாராதனை கருவறையை விட்டு, வெளியே வராது. புழுங்கல் சோறு, கீரை, பாகற்காய் ஆகியவற்றின் ஆவியே நிவேதனம். அடியார் மாணிக்கவாசகருக்காக மட்டும், வருடந்தோறும் ஆனித்திருமஞ்சனத் திருவிழா நடக்கிறது.
ஏனைய கோவில்கள் சரியை, கிரியை வழிபாட்டிற்கும், இக்கோவில் மட்டும் யோக, ஞான மார்க்க வழிபாட்டிற்கும் உரியதாக உள்ளது. அதனால் இக்கோவில் அமைப்பு மற்ற கோவில்களிலிருந்து பெரிதும் மாறுபட்டுள்ளது. மூலாதாரம் முதலாக ஆறு ஆதாரங்களின் வடிவாகவும், சிவனை அரூபமாகவும் நிர்மாணித்து, யோகிகளும், ஞானிகளும் வழிபடும் வகையில் இக்கோவில் கட்டப்பட்டுள்ளது என்பர்.
பஞ்சாட்சர மண்டபம்
மூன்றாம் பிராகாரத்தில், இரண்டாம் கோபுர வாசலை ஒட்டி, பஞ்சாட்சர மண்டபம் உள்ளது. இம்மண்டபத்தின் மேல் தளத்தில் மந்திரம், பதம், வன்னம், புவனம், தத்துவம், கலை எனும் ஆறு அத்துவாக்கள் கட்டங்களாக அமைக்கப்பட்டுள்ளன.
கற்சிலை ஓவியங்கள்
சிற்ப வேலைகளைப் பற்றிச் சொல்லி மாளாது. நேரில் கண்டால் பிரமிப்பு அடங்காது. வல்லப கணபதி, உக்கிர நரசிம்மர், பத்திரகாளி, ஊர்த்துவ தாண்டவர், பிட்சாடனர், வில் பிடித்த முருகன், ரிஷபாரூடர், சங்கரநாராயணர், குதிரைச்சாமி, குறவன், குறத்தி, வீரபத்திரர்கள், குதிரைக்காரர்கள், நடன மங்கைகள், விலங்குகள், உயிரோட்டத்துடன் ரத்த நாளங்கள் தெரிய மிளிர்கின்றன. தவிர டுண்டி விநாயகர், உடும்பும் குரங்கும், இரண்டே தூண்களில் ஓராயிரம் கால்கள், 1008 சிவாலய இறைவன், இறைவியின் உருவங்கள், பல நாட்டுக் குதிரைகள், நடனக்கலை முத்திரைகள், சப்தஸ்வரக் கற்தூண்கள், போன்ற அற்புதங்கள் மற்றும் நட்சத்திர மண்டலம், பச்சிலை ஓவியங்கள், கூரையிலிருந்து தொங்கும் கற்சங்கிலிகள் ஆகியன நம்மைப் பிரமிக்க வைக்கின்றன. மேற்கூரையான கொடுங்கை மிகச்சன்னமாக இழைக்கப்படுள்ளது. மரச்சட்டங்களில் குமிழ் ஆணி அடித்தது போல நுட்பமான வேலைகள் கல்லில் அடிக்கப்பட்டுள்ளன. அதில் நிஜக் கம்பிகள் போன்ற அமைப்பு உள்ளது. இதை நம்பாத ஒரு ஆங்கிலேயன் துப்பாக்கியால் சுட்டதால் ஏற்பட்ட ஓர் ஓட்டையும் கொடுங்கையில் உள்ளது. மொத்தத்தில் சிற்ப வேலைப்பாடுகள், கண்ணில் ஒற்றிக்கொள்ளும்படி மிக மிக நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளன.
இக்கோவில், திருவாவடுதுறை ஆதீனத்தால் சிறப்பாகப் பராமரிக்கப்படுகிறது. புதுக்கோட்டையிலிருந்து, 45 கி.மீ தொலைவில் உள்ளது. அறந்தாங்கியிலிருந்து, 14 கி.மீ தூரம்.
மாணிக்கவாசகர் தீந்தமிழைத் தேனில் தோய்த்தெடுத்து, பக்தியால் உருக்கி, அன்பினால் வார்த்து, எளிய நடையெனும் உளியால் பதமுடன் பக்குவமாய்ச் செதுக்கி, என்றென்றென்றும் நிலைத்திருக்கும் சிலைபோல் திருவாசகத்தைப் படைத்தார். ஆவுடையார் கோவிலைக் கட்டிய சிற்பிகளோ, தமது கலைத்திறமையால் இக்கோவிலைக் கட்டிச் சிலைகளை உருவாக்கிக் காலத்தால் அழியாத ஒரு பெரும் காவியமாகப் படைத்தார்கள்.
நூலின் மகிமை
மற்றெந்த நூலையும் படித்து, சிந்தித்து அவ்வாசிரியரின் மனத்தைப் படம் பிடித்து ஒரு கட்டுரை எழுதிவிடலாம். திருவாசகத்தை மட்டும் படித்துக் கொண்டே இருக்கத்தான் மனம் விழைகிறது. திருவாசகத்தைப் படித்தலும் கேட்டலும் எப்போதுமே ஒரு இனிய அனுபவமாக இருந்துவருகிறது. திருவாசகத்தைப் பற்றி ஆழ்ந்து அனுபவித்து எழுதினால் பல புத்தகங்களாக நிரம்பிவிடும். பானை சோற்றுக்கு ஒரு சோறுதான் இக்கட்டுரை.
“வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை
நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே
தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்தென்
ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே” -
-வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகளின் ஆளுடைய அடிகள் அருள்மாலை
மாணிக்கவாசகரின் உயர்ந்த பக்குவம்
மாணிக்கவாசகர் எவ்வளவு உயர்ந்த நிலையை அடைந்தாலும், தன்னை மிகவும் தாழ்த்திக் கொண்டார். பணிவு, தன்னடக்கம், எளிமை ஆகியவற்றின் மறு உருவமாக இருந்தார். தன்னை நாயினும் கீழாகக் காட்டிக் கொண்டார்.
உதாரணங்கள்:
‘நாயினேனை நலமலி தில்லையுட்’
‘நாய்ச்சிவிகை ஏற்றினார்ப் போல’
“பிழைப்பு வாய்ப்பொன்று அறியா நாயேன்
குழைத்தசொல் மாலை கொண்டருள் போற்றி”
மேலும் ஒரு சாதாரண மனிதனுக்குரிய ஆசாபாசங்களைப் வெளிக்காட்டி, பசி, தூக்கம், பெண் மயக்கம், ஆகியவற்றிலிருந்து தன்னை எப்படி இறைவன் காத்து, அருளினார் என்பதையும், மாயையிலிருந்து தன்னை விடுவிக்கும் படியும் மனமுருகி வேண்டிக் கொண்டார்.
“நாடகத்தால் உன்னடியார் போல் நடித்து நானடுவே”
“அரவன் ஆண்டுதன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டோமே.”
“மண்ணி லேபிறந்(து) இறந்துமண் ஆவதற்(கு)
ஒருப்படு கின்றேனை
அண்ணல் ஆண்டுதன் அடியரில் கூட்டிய
அதிசயம் கண்டாமே”
அதேபோல், மறுபிறவியைக் கொடுத்து விடாதே எனவும் மறவாமல் கேட்டுக்கொண்டார். ஞானத்தைக் கொடுக்கும்படி கெஞ்சினார்.
கற்பனைக்கெட்டா வர்ணனை வளம் பெற்றவர் மாணிக்கவாசகர். இறைவனின் கருணையை வாழ்த்தும் அவருடைய பிரபலமான பாடல்:
“வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யானெனதென் றவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே”
பொதுவாக, கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்பர். மாணிக்கவாசகர், அதற்கு மாறாக, ஞானம் கிடைத்தவுடன் அப்பேரின்பத்தை அனைவருடனும் பகிர்ந்து கொண்டார்.
“அருளதறிய தறியேன் பருகியும் ஆரேன்
விழுங்கியும் ஒல்ல கில்லேன்
செழுந்தண் பாற்கடல் திரை புரை வித்து
உவாக்கடல் நள்ளுநீர் உள்ளகம் ததும்ப
வாக்கிறந்து அமுதம் மயிர்க்கால் தோறும்
தேக்கிடச் செய்தனன் கொடியேன் ஊந்தழை
குரம்பை தோறும் நாயுடல் அகத்தே
குரம்பைகொண்டு இன்தேன் பாய்ந்து நிரம்பிய
அற்புத மான அமுத தாரைகள்
எற்புத் துளைதொறும் ஏற்றினன் உருகுவது”
வீட்டுக்கொரு திருவாசகம் இருக்க வேண்டும். அன்பர்கள், மெய்யுருக்கும் திருவாசகத்தைப் படித்தின்புற்று மனம்கசிந்து மெய்ஞானப்பாதையில் முன்னேற தில்லைக்கூத்தன் அருள்புரிவாராக.
நன்றி -
அம்மன் தரிசனம்.