சித்தன்னவாசல் - மடிந்த ஓவியம் - பாகம் இரண்டு
சித்தன்னவாசல் பற்றிய எந்தன் முதல் பதிவுக்கு ஆதரவு தந்த அத்தனை நெஞ்சங்களுக்கும் நன்றி! சித்தன்னவாசலின் சோகக்கதையை கலையுள்ளம் கொண்ட யாரால்தான் பொறுத்துக் கொள்ள முடியும்? இதோ இன்னொரு பதிவு. கடைசியாகக் காணப்படும் கோலங்கள் கலைப் பார்வைக்காக மட்டுமே என்பதனை முன்னமேயே சொல்லிவிடுவது நல்லது.
நான் இந்த அழகியை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கு முன், சில தெளிவுகள்.
நீங்கள் காண்பது ஒரு மதத்தினர் சம்பந்தப்பட்டது என எண்ணாமல் வரைந்தவர் தம் கலைத் திறனைக் காண்பிக்கும் சித்திரமாகவே மனதில் கொள்ளவேண்டும். நிர்வாணம் என்பதே அலங்கோலம், அருவருப்பு, கவர்ச்சியின் உச்சகட்டம் என்பதெல்லாம் தற்போதைய கணிப்புதானே தவிர பழைய காலங்களில் அதனை அழகாகக் காட்டும்போது வெகுவாகவே ரசித்ததாகவே தெரிகிறது. நாகரீகம் உலகில் எங்கெல்லாம் வெகுவாக போற்றப்பட்டதோ அங்கெல்லாம் கூட நிர்வாணக் கலையும் வெகு அழகாக ரசிக்கப்பட்டு போற்றப்பட்டது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். கலை வெளிப்பாடு என்பது கலைஞனின் ஆழ் உள்ளத்தில் எழுந்து அது தூய்மையான எண்ணமாக வெளிக் கொணரும்போது அங்கு அருவருப்பு என்று சொல்லுக்கே இடமில்லை. கலைஞனின் கைவண்ணம் காவியம் போலவே நம் கண்களுக்கு விருந்தாகப் படுகிறது. அந்தக் கலை ஒரு நிர்வாணமான ஆணோ அல்லது பெண்ணோ யாராக இருந்தாலும் அந்தக் கலைஞனின் கையிலிருந்து பெறப்படும்போது அவன் திறமையை நாம் போற்ற வேண்டும். அப்படிப்பட்ட கலைஞன் யுகத்துக்கு ஒருவனாகக் கூட தென்படலாம்.
சித்தன்னவாசலும் இந்த வகையைச் சேர்ந்ததுதான். கலைஞனின் ஞானத்தை நாமும் போற்றலாமே.
வழக்கம் போல தொலைவில் இருந்து நாம் அருகில் செல்வோம்.
“என்னடா ஒண்ணுமே தெரியலை?” என்று உங்கள் குரல் கேட்கிறது , இன்று நீங்கள் அங்கு சென்றால் இப்படி தானே இருக்கும். சரி சற்று அருகில் செல்வோம்.
பெரிய பில்ட் அப் கொடுத்துட்டு வெட்டி சுவரை காட்டுகிறானே இவன் என்று நினைக்காதீர்கள் . இந்த அவல நிலைதான் இவளின் நிலை.
கொஞ்சம் வண்ணம் தீட்டுவோம். கையில் முதலில் தீட்டி பிறகு கணினியில் (திரு அசோக் அவர்களுக்கு நன்றி.) இப்போது ..
பாருங்களேன்.. அந்த அழகியின் ஒயிலான இடை, கவர்ச்சியால் தன்னை நோக்கி அழைக்கும் கண்கள், ஒரு பக்கம் சற்றே சாய்ந்த நிலையில் ‘என்னைப் பாராயோ’ என்பது போல அந்த அழகியின் முகம், வலது கையை மூடிய அழகு, ஒன்றைப் புகழ்ந்தால் இன்னொன்று கோபிக்குமோ என்ற நிலையில் அவள் ஒவ்வொரு உயிர்த் துடிப்பான அங்கமும் எந்த கலை ரசிகனையும் எங்கெங்கோ அழைத்துச் செல்லுகிறதே..
எனினும் இந்த அழகு ஓவியம் கலைந்த சிதைந்த நிலையை பார்க்கும் பொது நெஞ்சில் ஒரு சோகம், கண்களின் ஓரத்தில் சிறு கண்ணீர்த் துளிகள் … இந்த அற்புத வடிவங்களை அழிய நாம் விட்டுவிட்டோமே !
No comments:
Post a Comment