August 07, 2011

மாதவிப் பந்தல்

விராலிமலை முருகப்பெருமான் பிடிக்கும் சுருட்டு பீடி!

"அடங் கொக்க மக்கா! என்ன நடக்குது இங்க? முருகன் நைவேத்தியத் தட்டில் எதுக்குச் சுருட்டு பீடி? இவ்வளவு நேரம், உள்ளாறத் திரையப் போட்டு, தம் அடிச்சிக்கிட்டு இருந்தானா அந்தப் பால முருகன்? அடப் பாவி! பார்த்தா பால் வடியும் பால முகம்! முருகக் குழந்தையை அள்ளிக் கட்டிக்கணும் போல இருக்கு! முளைச்சி மூனு இலை விடல! அதுக்குள்ள உனக்குச் சுருட்டு கேக்குதா? OMG! I just can't believe this!..."

வாங்கப்பு வாங்க! "யார் தமிழ்க் கடவுள்"-ன்னு பதிவு போட்டு ஒரு மாசம் ஆச்சுல்ல? அதே போல தான் இந்தப் பதிவும்-ன்னு நினச்சிக்கிட்டு வர்றவங்க எல்லாருக்கும் ஆப்பு! :-) இன்னிக்கி எங்க குல தெய்வம் முருகப்பெருமானைப் பார்க்க விராலிமலைக்குப் போகப் போறோம்...வாரீங்களா?

நாலஞ்சு மாசத்துக்கு முன்னாடி நியூயார்க் நகரில் எனக்கு ஒரு விபத்து. சுரங்க ரயில் வண்டி ஏறும் போது, வண்டி இடுக்கில் கால் சிக்கிக் கொண்டு ஒரே களேபரம்! NYPD போலீஸ் மாமாக்கள் வந்து ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக்கிட்டுப் போயி அட்மிட் பண்ணாங்க. யாருக்காச்சும் சொல்லணுமா-ன்னு கேட்டாங்க. நன்றிங்க ஆபிசர், நான் பாத்துக்கறேன்னு சொல்லிட்டேன். கையில் செல்பேசியும் பிளாக்பெரியும் இருந்திச்சி.

யார் கிட்டயும் சொல்லலை! வார இறுதி - அலுவலகம் இல்லை என்பதும் ஒரு வகையில் நல்லதாப் போச்சு! பத்து மணி நேரக் காரோட்டும் தூரத்தில் இருக்கும் என் தம்பி-நண்பனுக்கு மட்டும் மருத்துவமனையில் இருந்து ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன், தகவலுக்காக! :-)

அனுப்பிட்டு, நாமளே சமாளிச்சிக்கலாம்-ன்னு தனியா இருந்தேனா? ராத்திரி ஆக ஆக வலியும் பயமும் சேர்ந்து கூடிக்கிச்சு!
இது போன்ற நேரங்களில் தனிமை கற்றுக் கொடுக்கும் வாழ்க்கைப் பாடங்களும் நட்புப் பாடங்களும் தான் எத்தனை எத்தனை? :-)

இதுக்கு மேல வேணாம்டா சாமீ-ன்னு, நியூயார்க்கிலேயே இருக்கும் என் ஈழத்து நண்பி ஒருத்தியை அழைத்தேன்! அவளும் அவள் கணவரும் பதறியடிச்சிக்கிட்டு ஓடியாந்தாங்க! அன்றைய இரவு, வலியிலும் கண்ணீரிலும் நட்பிலும் அமைதியாய்க் கழிய....

கொஞ்ச நாள் கழிச்சி இந்தியாவுக்குத் தொலைபேசும் போது, அம்மா கிட்ட உளறி விட்டேன்! அம்மாவிடம் அவ்வளவா எதையும் மறைச்சிப் பழக்கம் கிடையாது பாருங்க! (உங்களில் பல பதிவர்களின் பேரு கூட எங்கம்மாவுக்குத் தெரியும்! பொறுமையின் சிகரம்! என் பதிவு-பின்னூட்டம் பற்றிய மொக்கையைக் கூட பொறுமையாக் கேட்டுப்பாங்க! :-)

அம்மா பயந்தே போயிட்டாங்க! "ஏண்டா இப்படி எல்லாம் பண்றே-ன்னு?" ஒரே அழுகை! உடனே அவங்களுக்கு நன்கு தெரிந்த என் அமெரிக்க நண்பர்கள் கிட்ட போனைப் போட்டு அங்கேயும் ஒரு சீனைப் போட்டாங்க! போட்டதுமில்லாம என்னைப் போட்டும் கொடுத்தாங்க! பசங்க எல்லாரும் என்னைப் பிலுபிலுன்னு பிடிச்சிக்க...

இந்த விபத்தால் பயந்து போன அம்மா, விராலிமலைத் தெய்வம் முருகப் பெருமானுக்கு வேண்டிக் கொண்டாங்க போல!
இந்த முருகன் மருத்துவ முருகனாம்! பயந்த தனி வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமும் அல்லவா? விராலிமலையில் வேலும் உண்டு! எக்கச்சக்கமா மயூரமும் (மயில்) உண்டு! அதனால் இந்த முறை இந்தியப் பயணத்தின் போது விராலிமலையில் தரிசனம்!

திருச்சி-திருவரங்கம் வரை ரயிலில் சென்று, பின்னர் விராலிமலைக்கு வாடகைக் காரில் செல்லலாம்! பேருந்தும் நிறைய உண்டு! சுமார் முப்பது கிலோ மீட்டர்!
திருச்சி-மதுரை சாலையில், புதுக்கோட்டைக்கு அருகில் இருக்கும் சிற்றூர் விராலிமலை! சிறிய ஆனால் அழகிய ஊர்! அழகன் இருக்கும் ஊரல்லவா? அழகா இருக்காதா பின்ன?


அது என்ன விராலி மலை? விரலி மஞ்சள் தெரியும்! விரல் மாதிரி நீட்டு நீட்டா இருக்கும்! ஆனா அது என்னாங்க விராலி??

விறலி என்பது தான் விராலி என்று திரிந்து போனது-ன்னு சிலர் சொல்லுறாய்ங்க! விறலி-ன்னா நாட்டியப் பெண்! கோயில்களில் நடனமாடும் தேவதாசிகள் நிறைய பேரு விராலிமலையைச் சுற்றி இருந்தாங்களாம். இங்கு இசை வேளாளர் குடும்பங்களில், வீட்டில் பிறக்கும் முதல் பெண்ணை, வேலக் கடவுளுக்குக் கட்டி வைக்கும் வழக்கமும் இருந்ததாம்!

இதுக்குன்னே முக்கோண வடிவில், விராலிமலை முருகன் தாலி-ன்னு வழக்கத்தில் இருந்திருக்கு போல!

இவர்கள் ஆடுவது பரதநாட்டியம் இல்லை; சதிர் என்ற ஒரு வகையான ஆட்டம்! இவர்களுக்கு என்றே எழுதப்பட்ட விராலிமலைக் குறவஞ்சியை நடித்துக் காட்டுவார்கள் என்றும் கூறப்படுகிறது! ஆனால் கால மாற்றத்தாலும் அரசின் சட்டத்தாலும் இப்போது விறலியர்கள் அவ்வளவாக இல்லை-ன்னு அங்கிருந்த சிவாச்சாரியார்(அர்ச்சகர்) சொன்னாரு!
விராலி மலையில் கால் வைத்ததுமே நாம் காண்பது சிறு குன்று! சுமார் 200 படி இருக்கும் போல! கொஞ்சம் விராலி மரங்கள்! டிசம்பர் பூ மாதிரி ஒரு பூ...வில்வ இலை மாதிரி ஒரு இலை! இது ஏதோ மருத்துவச் செடியாம்-ல! கடம்பனே ஒரு மாமருந்து! அவன் மலையில் வளரும் செடிகளுமா மருந்து?

இந்தச் செடியெல்லாம் Analgesic, Pain Killer-ன்னு நம்ம டாக்டரம்மா - தங்கச்சியம்மா சொல்லிப் போர் அடிச்சிக்கிட்டே வந்தாங்களா? "உன் கூட வரேன்-ல? நெறைய Pain Killer தேவைப்படும்! கொஞ்சம் பறிச்சிப் போட்டுக்கவா"-ன்னு அவ புருசனைப் பக்கத்தில் வைத்துக் கொண்டே நானும் அவளை ஓட்டிக்கிட்டு வந்தேன்!:-)

குன்றில் இந்தப் பக்கம் திரும்பினா நிறைய மயில்கள்! அட, எங்கிட்டு தான் இம்புட்டு மயிலு இருக்கும்னே தெரியலை! பறபறன்னு ஓடியாருதுங்க!

தோகை மயில்(ஆண்), தோகை இல்லாத மயில்(பெண்), வெள்ளை மயில்-ன்னு எக்கச்சக்கமான மயில்கள்!
நான் எந்த முருகன் கோயில்-லயும், ஏன் அறுபடை வீட்டுல கூட, இம்புட்டு மயிலைப் பார்த்தது கிடையாதுப்பா!
அதுங்க டொக்கு டொக்கு-ன்னு நடக்குற அழகே தனி! ஏதாச்சும் ஒரு மயிலு தோகையை விரிக்குமா-ன்னு நானும் கேமிராவை வச்சிக்கிட்டு அப்படியும் இப்பிடியும் குழந்தை மாதிரி திரும்பித் திரும்பிப் பார்த்தது தான் மிச்சம்! "வெண்ணை, யார் தமிழ்க் கடவுள்-ன்னு பதிவு போட்டல்ல? தோகையை விரிக்க மாட்டோம் போடா"-ன்னு சொல்லுதுங்க போல! :-)

மயில் போடுற சத்தம் தான் கொஞ்சம் கேட்க ஒரு மாதிரி இருக்கு!
மயில் கத்துது-ன்னு சொல்லக் கூடாதாமே? என்னன்னு சொல்லணும் சொல்லுங்க பார்ப்போம்?

விராலி மலையின் கீழ் சரவணப் பொய்கை! குளத்தில் கால் நனைத்துக் கொண்டு மலைப்படி ஏறினோம்! கீழே கிராம தேவதையான மைக் கண்ணுடையாள் சன்னிதி-ல கும்பிட்டுத் தான் மலை ஏறணுமாம்!
அரோகரா-ன்னு சொல்லச் சொன்னாங்க அம்மா! நானும் சொன்னேன்!
அம்மா என் கையில் சிறிய திருக்கை வேல் ஒன்னு கொடுத்தாங்க! நேர்த்திக் கடன் வேல்!

அட சக்தி வேல் வாங்கிட்டேனா? அப்ப நான் தேன் முருகன்! :-)
அப்படியே குழந்தை முகமா, பால் வடியும் பால முகமா, பழமா, அப்பாவியா வேற இருக்கேனா?
ஒரு முருக மிடுக்கோடு மலை ஏற ஆரம்பிச்சேன்! கெக்கெக்கே-ன்னு ஒரு சத்தம்!
அட நம்ம மயிலு தோகைய விரிக்கிறான்-டா!

படபட-ன்னு கீழே ஓடியாந்து காமிராவில் சுட்டேன்! ச்சே...ஒரே ஷேக்கு! "செல்லம், மனக் கொறையோட ஏன் மலை ஏறுற நீயி?
யார் தமிழ்க் கடவுள்-ன்னு பதிவுக்கு, ஒன்னும் புரியாத மனுசன் தான் கோச்சிப்பான்! ஒன்றே-ன்னு புரிந்த மருகன் கோச்சிப்பானா?

மாமனும் மருகனும் - இருவருமே தமிழ்க் கடவுள்-ன்னு உண்மையைத் தானே சொன்னே! இந்தா தோகை!"-ன்னு சொல்வது போல, நல்லா விரித்து விரித்து ஆடியது அந்த மயிலு! எனக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி! வாயெல்லாம் சிரிப்போட மீண்டும் படி ஏறினேன்!

படிகளுக்கு நடுவே அழகா மண்டபம் எல்லாம் இருக்கு! சின்ன மலைங்கிறதாலே சீக்கிரமாவே ஏறிடலாம்!
வழியில் இடும்பன், மீனாட்சி-சொக்கநாதர், வசிட்டர்-அருந்ததி, அகத்தியர், அருணகிரிநாதர் எல்லாருக்கும் சின்னச் சின்னச் சன்னிதிகள்! இதோ மலை உச்சிக்கு வந்தாச்சு! அழகான ராஜகோபுரம்!

மகாமண்டபம் தாண்டினாக் கருவறை! மகாமண்டபத்தில் மாணிக்க விநாயகருக்கு ஒரு சல்யூட் அடிச்சிட்டு உள்ளே முருகனைப் பார்க்கலாம்-ன்னு திரும்பிப் பாக்குறேன்.....
அடடா! அந்த அழகனைப் பாக்கலாம்-னு வந்தாக்கா, இந்த அழகன் எங்கேப்பா இங்க வந்தான்?
இது என்ன இன்ப அதிர்ச்சி? கருப்பன்-கள்ளச் சிரிப்பன் நிற்கிறான்!
என்னப்பன்,
பொன்னப்பன்,
முத்தப்பன்,
மணியப்பன்,
தன் ஒப்பார் இல் அப்பன்,
தாயார் உடனுறை திருமகள் கேள்வன் (ஸ்ரீநிவாசன்) = மருகனும் மாமனும் சைடு கேப்புல ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கிட்டு இருக்காங்க!

எனக்குச் சிரிப்பு தான் வந்தது! நான் பாட்டுக்குச் சிவனே-ன்னு முருகன் கோயிலுக்கு வந்தாக் கூட, இவன் என்னைய சும்மா வுட மாட்டான் போல இருக்கே! இவனைப் பார்த்துட்டு தான் அவனைப் பார்க்க முடியும் போல இருக்கே! இது என்னடா கொடுமை? வேறு வழியில்லை!

கேஆரெஸ் என்னும் போவான் போகின்றாரை...
போகாமல் காத்து,
உன்னைக் கூவுவான் வந்து நின்றோம்! - என்கிறானோ?

தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால், ஆ! வா! என்று ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்!
தீர்த்தம் பெற்றுத் துளசி மணக்க, முருகனைத் திரும்பிப் பார்க்கிறேன்! ஆகா...யார் சொன்னா அந்த சிக்கல் சிங்காரவேலன் தான் அழகு-ன்னு?


இதோ...விராலி மலையான்! சண்முக நாத சுவாமி என்னும் திருப்பெயர்!
மயில் மீது அமர்ந்த ஒய்யார வடிவம்! இடக்கால் மடித்து, வலக்கால் தொங்கவிட்டு,
மூவிரு முகங்கள், முகம் பொழி கருணை,
ஏவரும் துதிக்க நின்ற ஈராறு தோள்கள்,
மாவடி வைகும் செவ்வேள் மலரடி!

தோளில் ஓர் கூர் வேலலைத் தாங்கி நிற்கும் திருக்கோலம்!
சேவல் கொடியில் என் ஆவல் கொடி பறக்கும் திருக்கோலம்!

வலப்புறம் வள்ளியாள் - அவள் கரத்திலோ தாமரைப்பூ - அவன் வலக்கண் சூரியன் அல்லவா?
இடப்புறம் அத்தியாள் - அவள் கரத்திலோ அல்லிப்பூ - அவன் இடக்கண் சந்திரன் அல்லவா?
சாயரட்சை என்னும் மாலை நேரப் பூசையில் அடுக்கு விளக்குகள் எல்லாம் கருவறையில் ஜொலிக்கின்றன! ஆறுமுகத்தில் பின் மூன்று முகங்கள் கண்ணாடியில் பளிக்கின்றன! கூட்டமே இல்லை! இனிது இனிது ஏகாந்தம் இனிது! என்னையும் அறியாமல் என் வாய் மெல்லிசா, மென் குரலில் கூவத் தொடங்குகிறது!

மயூ ராதி ரூடம், மகா வாக்ய கூடம்!
மனோ ஹாரி தேகம், மகா சித்த கேஹம்!
மகீ தேவ தேவம், மகா வேத பாவம்!
மகா தேவ பாலம், பஜே லோக பாலம்!

என்று சரவணன் சதிராடுவது போலவே பாடலும் ஏற்ற இறக்கம் காட்ட.......

ஐயோ, இது என்ன? பாத்துக்கிட்டே இருக்கும் போதே இவங்க திரையைப் போடுறாங்க???


பொதுவா சன்னிதியில் எனக்கு வடமொழி சுலோகங்கள் வராது! தமிழ் அருளிச் செயல்கள் தான் பெரும்பாலும் வரும்! ஆனா இன்னிக்கு என்னமோ தெரியலை, ஆதிசங்கரர் வாயில தானா வந்துட்டாரு! நான் என்னத்த சொல்ல!

"அப்பா தமிழ்க் கடவுளே! தமிழில் பாடாததற்கு எனக்குப் பாதியில் திரையா? இது என்ன கொடுமைன்னு" மனசு பரபரக்குது!
திரும்பிப் பாத்தா அம்மா என்னைப் பார்த்து ஒரு லுக்கு வுடறாங்க!
வாயில் நுழையாத பாஷையை எல்லாம் இவன் எங்கிட்டுப் போயி படிச்சான்-ன்னு அவங்களுக்கு எப்பமே என் மேல ஒரு பயம் தான்! :-)

ஒரு வட்டத் தட்டு, துணி மூடிக் கொண்டு, உள்ளாற போறாங்க சில குருக்கள்! ஓ நைவேத்தியமா? அதான் திரை போட்டாங்களா?
அதானே பார்த்தேன்! என் முருகனுக்கு எம்மேல கோபமோ-ன்னு நினைச்சிட்டேன்! அப்படியே அவன் கோவப்பட்டாலும் நாங்களும் பதிலுக்குக் கம்புச் சண்டை, அன்புச் சண்டை எல்லாம் போடுவோம்-ல? :-)

கொஞ்ச நேரத்துக்குப் பின், உள்ளாற போன தட்டு தொறந்தபடி வெளியே வருது!
அதைப் பார்த்த உடனே நான் மயக்கம் போட்டு விழாத குறை தான்!

ஆகா...இது என்ன தட்டில் சுருட்டு பீடி?

"அடங் கொக்க மக்கா! என்ன நடக்குது இங்க? முருகன் நைவேத்தியத் தட்டில் எதுக்குச் சுருட்டு பீடி?
இவ்வளவு நேரம், உள்ளாறத் திரையப் போட்டு, தம் அடிச்சிக்கிட்டு இருந்தானா அந்தப் பால முருகன்?
அடப் பாவி! பார்த்தா பால் வடியும் பால முகம்! முருகக் குழந்தையை அள்ளிக் கட்டிக்கணும் போல இருக்கு! முளைச்சி மூனு இலை விடல! அதுக்குள்ள உனக்குச் சுருட்டு கேக்குதா? OMG! I just can't believe this!..."

என் வியப்பும் திகைப்பும் மூஞ்சிலயே எழுதி ஒட்டி இருக்கு போல! பக்கத்தில் இருந்த அர்ச்சகரே அதைப் பார்த்துவிட்டு விளக்கம் சொன்னாரு!

குமாரவாடி குறுநில மன்னனின் அமைச்சர் பேரு கருப்பமுத்துப் பிள்ளை. முருக பக்தர். அதே சமயம் சரியான சுகபோகி. தொடர் புகையாளர் (Chain Smoker). ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தரிசனத்துக்கு மலைக்கு வருவாராம்.

ஆனால் ஒரு முறை வெள்ளம் பெருக்கெடுத்து வர முடியாமல் போனது. கரையில் உணவு கூடக் கிடைக்காமல் தவித்தார் அமைச்சர்.
உணவை விட அவர் விரும்பிப் புகைக்கும் சுருட்டு தடைபட்டது தான் அவருக்குத் தவிப்பாகிப் போனது.

முருகன் அந்த நள்ளிரவிலும் அவர் முன் தோன்றி, சுருட்டு அளித்து, மலைக்கு அழைத்து வந்தான் = எதை நினைக்கிறாயோ அதாகவே ஆவாய்!
வேண்டியவர்க்கு வேண்டியதை "ஆராய்ந்து" பின்னரே அருளும் வழக்கமா என்ன கருணைக் கந்தனுக்கு? = சுருட்டு அளித்தான் சுப்ரமணியன்!!!

கருப்பமுத்துப் பிள்ளை அன்று முதல் பூசை வேளயில் சுருட்டும் சேர்த்து சண்முக நாதனுக்கு நிவேதனத்தில் தர வேண்டும் என்ற அரசாங்க உத்தரவு பிறப்பித்து விட்டார்! இன்றும் அதுவே நடைமுறையில் உள்ளது! இந்த நாட்டு பீடிக்குச் சுருட்டுக் களஞ்சி என்றே பெயர்!

இதோ திரை விலகி, மேளங்கள் முழங்க, ஆறுமுகனுக்கு ஆரத்தி! முன்பு சங்கரர் பாடிய அதே புஜங்க நடையில் அழகு ஜொலிக்க நிற்கிறான் என் ஆணழகன்! விராலிமலைத் திருப்புகழ் அடியேன் வாயில் சன்னமாய் ஒலிக்கிறது. செய்ப் பதியும் வைத்து உயர் திருப்புகழ் விருப்பமொடு...செப்பு என எனக்கு அருள்கை மறவேனே! (பாடலை இங்கு கேட்கலாம்!)சீரான கோல கால நவமணி
மால் அபிஷேக பார வெகுவித
தேவாதி தேவர் சேவை செய்யும் முக - மலர்ஆறும்

சீர் ஆடு வீர மாது மருவிய
ஈர் ஆறு தோளும் நீளும் வரி அளி
ஸ்ரீ ராகம் ஓதும் நீப பரிமள - இருதாளும்

....
....
கூர் ஆழியால் முன் வீய நினைபவன்
ஈடேறும் ஆறு பாநு மறைவுசெய்
கோபால ராயன் நேயம் உள திரு - மருகோனே

கோடாமல் ஆரவார அலை எறி
காவேரி ஆறு பாயும் வயலியில்
கோனாடு சூழ் விராலி மலை உறை - பெருமாளே!

(திருப்புகழ் வித்தகர் நம்ம SK ஐயாவை, இந்த அழகிய சந்தப் பாட்டுக்குப் பொருள் சொல்லுமாறு அன்போடு அழைக்கிறேன்!)


அனைவரும் தரிசனம் கண்ட மகிழ்ச்சியில் திளைத்திருந்தோம். அங்கிருந்த சிவாச்சாரியார்கள் அடியேன் பாடலை மிகவும் சிலாகித்து அன்புடன் பேசினார்கள். அம்மா என் கால் குணமானதற்கு உண்டான வேண்டுதலை நிறைவேற்றினார்கள்! திருக்கை வேலினைக் காணிக்கை அளித்தார்கள்! திருச்சி நகருக்குத் திரும்பி வந்தோம்.

எங்கள் மால் ஈசன் கிடந்ததோர் கிடக்கையாம், பச்சை மாமலை போல் மேனியைக் காண மனசு துடிக்குது.
திருவரங்கம் செல்ல மெள்ளப் பேச்செடுத்தேன். அம்மாவோ "ஊருக்குப் போகலாம்-பா, ரொம்ப லேட்டாயிடிச்சி" என்று சொல்லி விட்டார்கள்!
பாவம் மிகவும் களைத்துப் போய் இருந்தார்கள்! என் பொருட்டு இவ்வளவு தூரம் வந்ததே பெருசு! சரிம்மா-ன்னு சொல்லிட்டேன்.

திருச்சியில் ரயிலேறிச் சென்னைக்குக் கிளம்பி விட்டோம். ஆற்றுப் பாலம் வரும் போது ரயிலின் கதவோரம் போய் நின்று கொண்டேன். அரங்கனின் நெடிதுயர்ந்த கோபுர மாமலை கண் சிமிட்டுகிறது!
"போய், பின்னொரு நாள் வருகிறேன் ரங்கா!" என்று சொன்னேன்! கால்வலித் துடிப்பில் மருத்துவமனைத் தனிமையில் இருந்தது நினைவுக்கு வந்து...கண்கள் பனிக்க...

"பயந்த தனி வழிக்குத் துணை நான் அல்லவா? அதான் மருகன் வீட்டில் மாமனைக் கண்டாயே!
மை வண்ணம் இங்கு கண்டாய்!
மால் வண்ணம் அங்கு கண்டாய் அல்லவா?"
என்று சொன்னான் போலும் அரங்கன்! அகண்ட காவேரியின் மை வானத்து இருளில்...ஒரு மின்னல் பளிச்ச...

கோபாலராயன் நேயம் உள திரு - மருகோனே
காவேரி ஆறு பாயும் வயலியில்,
கோனாடு சூழ் விராலி மலை உறை - பெருமாளே!

No comments:

Post a Comment